பத்ருப் போரில் முஸ்லிம்களை எதிர்க்க முடியாமல் போனதை கேள்விப்பட்டு, குதிரை வீரர்களை வானவர்களென்று அபூராஃபியா சொன்னதும் அபூலஹப் கோபத்தில் அபூராஃபியைத் தாக்கியபோது மற்றவர்கள் வந்து விலக்கினர். சில நாட்களில் அல்லாஹ் அபூலஹபின் உடலில் அம்மையைப் போன்ற கொப்பளங்களை ஏற்படுத்தினான். அது அவன் உடலெங்கும் பரவியது.
அரேபியர்கள் அந்நோயை ஒரு துர்க்குறியாகக் கருதி யாரையும் அவன் அருகில் நெருங்கவிடவில்லை. அந்நோயே அவனைக் கொன்றது. அவன் இறந்த பிறகும் அவனைத் தொடாமல், அவன் கிடந்த படுக்கையோடு சேர்த்துத் தூக்கி ஒரு குச்சியால் அவனை ஒரு பெரும் குழியில் தள்ளி, கற்களை எறிந்து மூடினர்.
இப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது மக்காவாசிகள்தான். மக்காவாசிகளும், இணைவைப்பவர்களும், யூதர்களும் முஸ்லிம்களின் மீது கடும் கோபத்திலிருந்தனர்.
பத்ருப் போரை குறித்து, குர்ஆனில் ‘அல் அன்ஃபால்’ என்ற அத்தியாயத்தில் போருக்கான சட்டத்திட்டங்கள் மற்றும் அதனைச் சார்ந்த விஷயங்களே அடங்கியுள்ளன. அதனைப் பின்பற்றி மக்களும் சிறப்பாகச் செயல்பட்டனர்.
“நீங்கள் பூமியில் மக்காவில் சிறு தொகையினராகவும், பலம் இல்லாதவர்களாகவும் இருந்த நிலையில், உங்கள் மீது எந்நேரத்திலும் மனிதர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்தபோது அல்லாஹ் உங்களுக்கு மதீனாவில் புகலிடம் தந்து தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தினான். இன்னும் நல்ல உணவுகளையும் உங்களுக்கு அளித்தான். அதையெல்லாம் நினைவு கூர்ந்து அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!” என்று இறைவசனத்தை இறைக்கட்டளையாக அருளினான்.
பத்ருப் போரில் கிடைத்த வெற்றியால், இஸ்லாம் சித்தாந்தமாகப் பார்க்காமல் வாழ்க்கை நெறியாகப் பார்க்கப்பட்டாலும் இப்போரினால் முஸ்லிம்களைப் பல தரப்பினர் பகைத்துக் கொள்வதற்கும் அதுவே காரணமாக அமைந்தது. வெவ்வேறு பிரிவினரும் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத் துடித்தனர்.
ஸுலைம் மற்றும் கதஃபான் கிளையினர் மதீனாவின் மீது போர் தொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் நபிகளார் தமது படையுடன் வருவதை அறிந்து அந்தக் குலத்தவர்கள் அங்கிருந்து ஓடி மறைந்தனர். மதீனாவாசிகள் 500 ஒட்டகத்தை மட்டும் கைப்பற்றி மறு வெற்றியுடன் திரும்பினர்.
எல்லாப் பொருட் சேதத்திற்கும் அவமானங்களுக்கும் காரணமான முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வேண்டுமென்று மக்காவைச் சேர்ந்த உமர் இப்னு வஹப் மற்றும் ஸஃப்வான் இப்னு உமைய்யா திட்டம் தீட்டினர்.
“நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்” என்ற இறைவசனம் அருளப்பட்டது.
திருக்குர்ஆன் 8:26, 5:82, அர்ரஹீக் அல்மக்தூம், இப்னு ஹிஷாம்
Leave A Comment