இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதாலும் அவர்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென விருப்பப்பட்டார்கள். அப்போது ‘நீர் வானத்தை நோக்கி உம்முடைய முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிவோம்’ என்ற இறை வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே கஅபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தார்கள். தொழும் திசை கஅபா நோக்கியதான பின் நபிகளார் தொழுத முதல் தொழுகை அஸர் தொழுகையாகும். அவர்களுடன் மற்றவர்களும் தொழுதார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்தது யூதர்களுக்கும் ஏனைய வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது. தொழுகையில் தம் முகத்தை நபி(ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் திருப்பிக் கொள்ள ஆரம்பித்ததும் யூதர்களும் மற்றவர்களும் அதை வெறுக்க ஆரம்பித்தார்கள். யூதர்களில் சில அறிவீனர்கள் நேரடியாகவே, “முன்னர் நோக்கியிருந்த கிப்லாவைவிட்டு உங்களைத் திருப்பிவிட்டது எது?” என்று நபிகளாரிடம் கேட்டனர். அதற்கு, “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்துவான்” என்ற இறைவசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) எடுத்துரைத்தார்கள்.
இவர்கள் முஸ்லிம்களின் அணியில் இருந்து கொண்டே நயவஞ்சகம் செய்ய இருந்தவர்கள், இந்தத் தொழும் திசையின் மாற்றத்தினால் தங்களது சுயத்தை வெளிப்படுத்தி, பழைய கொள்கைக்கே திரும்பிச் சென்றனர். முஸ்லிம்களின் அணியைத் தூய்மைப்படுத்துவதற்காகவே இறைவன் செய்த ஏற்பாடாக இது அமைந்தது.
“பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்துவிட்டனர், நாங்கள் அவர்களைப் பற்றி என்ன கூறுவது?” என்று சிலர் சந்தேகத்தை எழுப்பினர். அப்போது, ‘உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்க மாட்டான்’ என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்!
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் படையின் மூலம் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்த்த மக்காவைச் சேர்ந்த இறைமறுப்பாளர்கள் பயந்து நடுங்கியதோடு, அதன் தொடர்ச்சியாகப் போர் பற்றிய வசனங்களும் தொழும் திசையின் மாற்றமும் குறைஷிகளைப் பீதியடையச் செய்தது. அவர்கள் போருக்குத் தயாராக நின்றனர். முஸ்லிம்களும் அடுத்த வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து (சிரியா) மக்காவிற்குத் திரும்பும் நாளை எதிர்பார்த்து மக்காவாசிகளுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்த காத்திருந்தனர்.
ஸஹீஹ் புகாரி 1:8:399, 1:2:40, திருக்குர்ஆன் 02:142-144
Leave A Comment