உறவில்லாத உறவு
பிறந்தவுடன்
பெற்ற உறவில்லை
பின்னாளில்
உற்ற உறவும் இல்லை
உன் சந்திப்பே
என் சந்தோஷமானது
மலிவாக மகிழ்ச்சி என்றால்
அதன் மறுபெயர் நீ என்பேன்
என் பிரச்சனைகளுக்கு
யோசனை கிடங்கானாய்
பாதிப்பில் பாசி படிந்தால்
பூசி தேற்றுபவன் நீ தானே
என் அறிவு வறுமையிலும்
ஆதரவாய் நீ நின்றாய்
நீயே என்
இன்பத்தின் ஆரம்பம்
தவிப்பின் துணை
தனிமையின் தீர்வு
துன்பத்தின் தேடல்
என் உளறல்களையும்
காது கொடுத்து கேட்டாய்
பதிலாக கனிவாய் மொழி பேசினாய்
கருணை பார்வை வீசினாய்
தேவைக்கு தோள் கொடுத்தாய்
என் ஐம்புலனையும் ஆட்சி செய்யும்
புதிய பிரதிநிதியே
நீ என்
சாதியோ, மதமோ, மொழியோ, ஊரோ,
காதலோ, உடன்பிறப்போ, இரத்த பந்தமோ
இல்லாதபோது
உணர்வால் உணர்த்திய
உறவில்லாத உறவாக
எங்ஙனம் முளைத்தாய்?
நெஞ்சு பொறுக்குதில்லையே…
போடும் பருக்கைகளை
பகிர்ந்து உண்டு பழகிவிட்டது
பறவை இனம்
நாய் பூனையும் கூட
சேர்ந்து உண்ண
கற்றுக் கொண்டது
மனிதர்களாகிய நாம்தாம்
தவித்தாலும் தாகத்தை
தொலைக்க தவிர்க்கிறோம்
நதிநீரை
லேசா லேசா…
பூக்களின்
வேர்வை
பனித்துளிகள்
**
அலை அடித்து
கலைந்த கற்பனை
மணல் வீடு
**
விலைப்போகாத
வேதனைக்குரிய விளைச்சல்
முதிர்க்கன்னி
**
காக்கை பயந்ததோ இல்லையோ
குழந்தையின் வயிறு நிறைந்தது
சோலைக்காட்டு பொம்மை
**
என் பெயர்
கரைந்தது
அவள் நாக்கில்
**
இந்த அனாதையுடன்
விளையாட வந்துவிடு
தாயில்லா பறவையே!
**
குஞ்சு பறவையே
பறந்து போய்விடு
பூனை வரும் நேரம்
**
உயரத்திலிருந்து விழும்
உனக்கு வலிக்கவில்லையோ
அருவி
**
ஆதங்கம்!
புது வண்டியில்
முதல் விபத்து
எலுமிச்சை
**
பால் அபிஷேகம்
பட்டினியில் அழுதது
பச்சிளங்குழந்தை
**
உடையாமல் இருக்க
உடைத்தார்கள்
பூசனிக்காய்
**
நீ தூங்கினாலும்
சிணுங்கி எழுப்பியது
கொலுசு
**
மழையில் நனையாத
பூ
முழுநிலா
**
மழையில் நனையாமல் இருக்க
நான் நனைந்தேன்
குடை
**
உபசரித்து விரித்தது
முடிந்த பின்
எச்சில் இலை
**
காலி பணப்பை
வெதும்பும் திருடன்
கடன் அட்டை
**
உச்சரிப்பு சிதைவு
இந்திப் பாடகர்
பிரபலமானது தமிழ்பாட்டு
**
நூறுநாள் ஓட்டம்
தமிழ்படம்
ஆங்கிலத்தில் தலைப்பு
**
குருதி வியர்வை
விவசாயின் காயம்
மருந்து
உழவு மண்
**
செத்தால்தான்
சோறு
சாவு கூத்தாடி
**
கடன்பட்டவனின்
இரத்த வாடை
வட்டிப்பணம்
**
பிணம் எரிந்தால்தான்
எரியும் வயிற்றுக்கு சோறு
வெட்டியான் வாழ்க்கை
**
நிலத்தில் வயிற்றை கழுவ
வானத்தை நோக்கினர்
விவசாயிகளின் வறுமை
**
உயர்ந்தது உன் கொள்கையென
கைத்தட்டி உயர்த்தி விட்டோம்
உயர்ந்தது விலைவாசியும்.
**
எச்சிலை சேர்த்து
தாகத்தை தொலைத்தனர்
தண்ணீர் பஞ்சம்
**
பழைய சன்னல் திரையில்
புது பாவாடை
ஏழை குடியாள்
**
மரணப் போட்டி

அடக்கம் செய்தனர் எனை
ஆடம்பரமில்லை, கூட்டமில்லை
கண்ணீருமில்லை, கவலையும் தென்படவில்லை
நான் நிழலாக சுவற்றில் மட்டும்
நிசப்தத்திலும் நித்திரையில்லை
இறந்த பின்பும் நிம்மதியில்லை
செத்தும் சாகடித்திருந்தேன்
குழந்தையை, அவள் தகப்பனுடன்
குடித்து வண்டி செலுத்தினேன்
இடித்து மரணித்தோம்
யார் முந்தி, அதிலும் போட்டி
என்னால் இரண்டு விதவைகள்
நேற்று இருந்த நண்பர்கள்
இன்று இருக்கவில்லை
சந்தோஷத்தில் ஊற்றி திளைத்தனர்
சடங்கில் எங்கோ தொலைந்தனர்
நிறுவனம் நிரப்பியிருந்தது
என் இடத்தை
குடும்பத்தில் ஈடுகட்டமுடியுமா
என் இடத்தை?
இறந்த இதயமும்
வெட்கத்தில் அழுதது
‘அப்பா’ என்று அழுபவனை
அணைத்துக் கொள்ள துடித்தது
இறப்பில் தெளிந்தது
என் போதை மட்டுமல்ல
என் பேதமையும்தான்
கடந்த பின் விடிந்து பயன்?
மணமற்ற மலர் படத்திற்கு
மீண்டும் பிறக்க பிடிக்கவில்லை
வாழ பிடிக்காமலல்ல
மீண்டும் மரிக்க பிடிக்காமல்.