Kavithai 2017-03-25T16:44:52+00:00

உன் நினைவுகளோடு….

மெளனம் பேச்சாகும்
தனிமையில்
தூக்கம் எழுப்பும்
இரவுகளில்
வேட்கை நிரம்பிய
வெறுமையில்
கதகதப்பாய் அரவணைப்பது
உன் நினைவுகள்
மட்டும்தான்

By | September 5th, 2007|Categories: கவிதை|13 Comments

சக பயணிகள்


எப்பா இதெல்லாம் கவிதையான்னு கேட்டுடாதீங்க. மேடைக்கு வாசிக்கப்படும் கவிதைகள் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமென்பதற்காக உரைநடையாக எழுதப்பட்டது. பகிர்ந்துக் கொள்ள பதிக்கிறேன். [** கவியரங்கில் பாடிய கவிதைக்காக ஜெஸிலாவுக்கு 10,000 ரூபாய் பணமுடிப்பும், மேத்தா விருதும் வழங்கப்படும் என சென்னை குளத்தூரில் பெண்கள் கல்லூரி நடத்தும் சேது குமணன் அறிவித்தார். ‘விருதிற்காக மகிழ்வதாகவும் பணத்தை கவிஞர்கள் பேரவைக்கே அன்பளிப்பாக வழங்குவதாகவும்’ மேடையில் ஜெஸிலா அறிவித்தார். – அப்படின்னு ஆசிப் வலைப்பதிவில் படித்திருப்பீர்கள்] இதுதான் அந்த பரிசுப் பெற்ற கவிதை.
————————
விரகம் எழுப்பிய இரவுகளில்
மூடிய அறையின்
மெட்டியொலியும்
சக தோழியின் கடைசி மழலையின்
அழும் குரலும்
மறுநாள் வரை மண்டைக்குள் குடைந்து
உள்ளங்கை வியர்வைக்குள்
எண்ணங்களை அசைப் போட்டு
பயணச்சீட்டை கசக்கும்
நம்பிக்கையற்ற முப்பது

தாய்மைப் பெற தவமிருந்து
வரம் கிடைக்காமல் போனதற்கு
காரணம் இவள் இல்லை
என்று சான்று தந்தும்
இவள் இளமையையெல்லாம்
அள்ளித் தின்ற பிறகு
இவளை ஒதுக்கி வைத்து
அவன் புது மாப்பிள்ளையாகிப் போனான்
புது பொண்டாட்டியும்
‘மலடி’யென இவளைப் போலவே
பெயரெடுப்பாளென
ஏளனச் சிரிப்பில் வேடிக்கை பார்த்தாலும்
பயண மிகுதியில் விட்டுச் சென்ற
ஒற்றைச் செருப்பாய் தன்னை உணரும்
ஓடாய் தேய்ந்தவள்

ஓடிப் போன கணவன் தந்த
ஒற்றைப் பிள்ளையை வீதியில் விட்டு
தனக்கென வாழ்வதற்காக
புது தாம்பத்தியத்தில் காலூன்றாமல்
பிள்ளை வளர்ப்பில்
அகம் மகிழ்ந்து
அவனுக்காக
தொண்டைக்குழியில் ஈரம் வற்ற
காய்கறிகளைக் கூவி விற்று
பிள்ளையின் எதிர்காலத்திற்காக
தமது நிகழ்காலத்தை மறக்கும்
கண்ணியத் தாய்

சீழ் வடியும் புண்ணில்
ஈபோல மொய்க்கும்
பணியிடத்து நிர்வாகிகள்
வறுமையை
உடுத்தும் ஆடையிலும்
எதிர்பார்க்கும்
சபலப் பார்வைகள்
சல்லடையாய் உடம்பை துளைக்கும்
நகைச்சுவை என்ற பெயரில்
கேட்கவே கூசும் சொற்களையும்
செவிமடுத்து வெளிவந்தால்.
பேருந்திலும்
கூடையிலிருந்து விழும் தக்காளி போல
மேலே விழுந்து உரசும்
பயண மன்மதன்களின்
நசுக்கல்கள்
வேறு வழியில்லாமல்
வலியோடு
இவற்றை
தாங்கிக் கொள்ளும்
பொறுமைசாலி-

கொட்டிக் கொடுத்து
கரை சேர்த்து
வாழும் முன்னே
வண்ணமிழந்து
மூளியாக முடக்கி விட்டு
‘கைம்பெண்’ என்றெழுதி
பொட்டு வைத்துக் கொண்டு
துருப்பிடித்த பிடிமானமும் தராமல்
அமங்கலியென ஒதுக்கி வைக்கப்படும்
சமூகக் கட்டுக்குள் அடைபட்டவள்-

ஒரே இடத்தில் நின்று
சிறகடித்துச் சுழலும்
மின்விசிறியைப் போல
கருவுற்ற களிப்பையும்
மனதில் அடக்கி
பக்குவமாக இருந்து
மாதங்கள் பல சுமந்து
பெற்றெடுத்தாள்
கண்ணிலும் காட்டாமல்
கள்ளிப் பாலுக்கு
கருகத் தந்த பெண்சிசுவை
கண்ணுக்குள்ளே வைத்து
கன்னங்களைக் கண்ணீரால்
தினம் கழுவி
மனதை கல்லாக்கி
கணவன் வீடு திரும்பும்
கதியற்ற மருமகள்

வீட்டு வேலை செய்வதற்கும்
படுக்கையில் வேசியாய் இருப்பதற்கும்
வரதட்சணையில் வெந்து வதங்குபவளை
பேருந்திலும் தன் முன்
உட்கார அனுமதிக்காமல்
மருமகளின் கால் கடுப்பில் இன்புறும்
முன்னால் மருமகளான
இந்நாள் மாமியார்

பெண்ணியவாதம்
பெண் விடுதலை
இந்த வார்த்தைகளையெல்லாம்
விசித்திரமாகப் பார்த்து
தங்கள் முகத்திரைகளை எடுக்கவும்
பழகிய வட்டத்திலிருந்து வெளிவரவும்
தயங்கும்
பல்முகம் கொண்ட
இதுபோன்ற பெண்கள்தான்
பெரும்பாலும்
பேருந்தில் மட்டுமின்றி
சமூகத்திலும்
என் சக பயணிகள்!

By | June 19th, 2007|Categories: கவிதை|26 Comments

கிறுக்கல்கள்

கவிப் பகைவர்களுக்காக அடக்கி வைத்திருந்தாலும் எனக்குள் இருக்கும் ஆர்வம் அவ்வப்போது துளிர்விடத்தான் செய்கிறது. வெளிவரும் அத்தனையும் குறும்பாக்கள், துளிப்பாக்கள், கவிதைகள் என்று பெயரிட முடியாததால் கிறுக்கலாக…

மர நிழலில் ஒதுங்கினேன்
மர அசைவில்
நேற்று சேகரித்ததிலிருந்து
எனக்கு மட்டும் மழை
***

வானத்தின் ஜன்னலில்
எட்டிப்பார்க்கும் சூரியன்
நட்சத்திரம்
***

செத்தும்
முகத்தில் எச்சில்
சிலை
***

எதிர்பாராமல்
எதிர்கொண்டு முடிந்தது
கூச்சம்
***

ஒட்டக நிழலில்
தொழுகை
பாலைவனம்
***

வெளிநாட்டு வேலை
தள்ளிப்போடப்பட்டது
தாம்பத்யம்
***

நாட்டின் மானம்
பந்தயத்தில் அடமானம்
கிரிக்கெட்
***

நாய்களுடன் போட்டி
எச்சில் இலைக்கு
மனிதன்
***

என்னையே தொடர்ந்தாலும்
நெருங்கி வர முடியாத
நிழல்
***

வீசிவிட்டு
அழுதது குழந்தை

சாமி ஊர்வலத்தில்
திடீர் ஜாதி கலவரம்
பலர் காயம்
சிலர் மரணம்

வீசப்பட்ட
அப்பாவின் ஒற்றைச்செருப்பு
ஒன்றுமறியாமல் வீதியில்.

***

By | April 6th, 2007|Categories: கவிதை, நட்சத்திரம்|31 Comments

வலி

செப்டம்பர் 2006 மாத ‘திசைகளில்’ வெளிவந்த என் கவிதை:

அடித்தே இன்புறுகிறாய்
நல்ல விஷயமோ
கெட்ட விஷயமோ
வாழ்க்கையின் ஆரம்பமோ
வாழ்க்கையின் முடிவோ
அடிக்காமல் அடங்காதா
விசேஷம்?
இருக்கும் போதுதானென்றால்
இறந்த பிறகுமா?

By | December 19th, 2006|Categories: கவிதை|0 Comments

நட்பு

தேர்வில் எட்டிப் பார்த்து
எழுதும் போதும்

ஆபாச படத்தை
பார்க்க கூடாத வயதில்
பார்க்கத் துணிந்த போதும்

கல்லூரி மறந்து
ஊர் சுற்றும் போதும்

சுருட்டு, மது, மாது
என்ற போதும்

காதலியுடன்
ஓடிப் போக நினைக்கையிலும்

தடுத்து நிறுத்தி
எடுத்துரைக்காமலிருக்க
முடியவில்லை என்னால்

உளியாகத்தான் எனை
நினைத்திருந்தேன்
உடைப்பேன் நட்பையென்று
அறியாமல்

By | December 17th, 2006|Categories: கவிதை|0 Comments

சுதந்திர தினம்

வலைப்பூ பக்கம் வந்து நாளாச்சே அதான் எட்டிப்பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன். எட்டிப்பார்த்துட்டு பதிவுப் போடாம சும்மா போனா எப்பட,ி அதான் ஏற்கெனவே ‘திசைகள்’ மின்னிதழில் வந்த கவிதையை இடுகிறேன்.


மாதம் முழுவதும்
சிறை பிடித்து
சாகும் நிலையில்
ஆலிவ் இலை தந்து
திறந்து விட்டு
பறக்க செய்து
கைத்தட்டி
இனிப்பு வழங்கி
கொண்டாடினர்
சுதந்திர தினம்

By | October 15th, 2006|Categories: கவிதை|3 Comments