Kavithai 2017-03-25T16:44:52+00:00

வாழ்வே உனக்காக

கால காலமாக இயற்கையோடு
வளர்ந்த நான்
அதை இரசிக்க மறந்ததேனோ?
உன்னுடன் காலம் கடந்த போது
எல்லாம் புது உலகமாக மாறியதேனோ?
புல் நுனியில் பனிதுளியில் இருந்து
பூத்து குலுங்கும் பூக்கள் வரை
புதிதாக தோன்றியது ஏனோ?
புத்தம் புது பூமியாக
உன்னுடன் மட்டும் தோன்றுவதேனோ?

பிரிவென்றால் புரியாது இருந்தேன்
பெற்றோரை விட்டு பிரிந்து
உன்னிடம் ஒப்படைக்கும் போது கூட
எனக்கு அது பிரிவாக வலிக்காததேனோ?
உன்னை பிரிந்த நாள் முதல்
என்னைவிட்டு எல்லாம்
தூரம் சென்றதாக
உணரும் உணர்வுதான் ஏனோ?

உன்னுடன் வாழ்ந்த சில நாட்கள்
பல சந்ததியை கடந்ததாக
பிறவிகள் பல கழித்தவளாக
பல நாட்கள் பழகிய சிநேகிதமாக
பலநூறு ஜென்மம் பேசியதாக
நூற்றாண்டுகள் மகிழ்ந்து வாழ்ந்ததாக
பிரியாத உன் பந்தம் வேண்டி
நிற்பதுதான் ஏனோ?

பூ தளிர்த்து விரியும் முன்பே
பூங்காற்று பூ பறித்து சென்றதேனோ?
இசைக்கு மட்டும் தலையசைத்த நான்
இசையோடு ஒன்றி உன்னோடு
இளைப்பாருவதேனோ?
பாட்டை கேட்டும் கேட்காத நான்
மகுடிக்கு மயங்கும் பாம்பாக
பாடல் வரிகளை உனக்காக
உச்சரிப்பது ஏனோ?

இமயம் கூட சுமையாக தோன்றாது
என் இதயத்தில்
உன் பிரிவின் சுமை
சொல்ல வார்த்தை தொலைத்ததேனோ?

நீ இருக்கும் இடத்தில் நான் வந்து
அவரை பார்க்க ஒரு வாய்ப்பு தருவாயா
என நிலவை கெஞ்சுவதேனோ?
தொட்டு விட்டு போகும் தென்றலை
ஆடையாக நான் அணிந்து
உன்னை தொட்டு செல்ல
தவம் செய்வதேனோ?
பறவைக்கு உணவளித்து
நான் பசியாறாமல் இருப்பதை
உன்னிடம் உணர்த்த கூறுவதேனோ?

நெஞ்சில் வலி இருந்தாலும்
அது அதிகமாவது
அப்படி உனக்கும் வலிக்கும் என
எண்ணும்போதுதானே.
கண்ணீர் துளிகள்
என் கன்னங்களை கழுவினாலும்
நிற்காது வழிவது
உன் கண்ணில் நீர் கண்டபோதுதானே

கனவுகளே இல்லை
உறக்கம் இல்லாததால்
கற்பனையில் வாழ்கிறேன்
உன் நினைவுகளே என் நேர போக்கு
தொலைபேசியே என் தெய்வம்
இது தொடர வேண்டாம்
நமது காதல் காவியமாக வேண்டாம்
காப்பியங்களாக கைமாற வேண்டாம்
நீண்ட ஆயுளும் வேண்டாம்
நிறைய செல்வமும் வேண்டாம்
இனி இந்த பிரிவு வேண்டாம்
சிறிது காலமாவது சேர்ந்து வாழ்வோமே?

By | June 4th, 2006|Categories: கவிதை|7 Comments

பெட்டிக்குள் அடங்காதது

ஆண்கள் இயல்பு கொண்ட
ஆண் வண்டுகள்
மலர் விட்டு மலர் தாவி
மூங்கில்களுக்கு அருகே வளர்ந்திருக்கும்
காட்டு பூக்களின்
தேனை மட்டும் உண்ணாமல்
துளைக்கவும் துடங்கியது
மூங்கிலை.

தூது போன தென்றல்
புல்லாங்குழலென எண்ணி
மூங்கில் துளையில் நுழைந்து
ராகம் எழுப்பியது.

மரங்கொத்தி ராகத்திற்கேற்ப
மரத்தை தட்டி தாளம் துவங்கியது.

குயில் சூழலுக்கேற்ப
பாடி மகிழ்ந்தது

மர பொந்துக்கள் ஒலிப்பெறுக்கியாக மாற
புல்வெளி மேடையாக இருக்க
நேற்று பெய்த மழையின் சாரல் துளிகள்
புல்நுனியின் ஓரம் நாட்டியம் ஆட
வண்ண வண்ண விளக்காக
வானவில் வந்து நிற்க
எழிலகத்தை காண
இரண்டு கண்கள் போதாதே

என் புகைப்பட பெட்டி கூட
இவ்வழகிய காட்சியை அதனுள்
பூட்ட நினைத்ததை எண்ணி
ஏலனமாக புன்னகையித்தது.

By | May 21st, 2006|Categories: கவிதை|2 Comments

புல்வெளியில் பனிதுளி

விடியல் விடியல்
எனக்கோ குளிரின் நடுக்கம்.
உன் மேல் ஏந்தான்
வேர்வையோ?

பாவம் நீ என்று நான் விசுற
வேர்வைகள் உன்னுடன்
உறவாடி ஒட்டிக்கொள்ள
விரல்களால் உன் வேர்வை
துடைக்க அச்சம்
உன் துயில் கலைந்து விட்டால்?

உற்று நோக்கி கொண்டிருக்கையில்
சூரியன் எழுந்தான்
உன் வேர்வைகளும் மறைந்தன
வேர்வைகள் என்னை பற்றிக் கொண்டன

By | May 13th, 2006|Categories: கவிதை|0 Comments

குமுறல்

பிறந்த உனை
திறந்த மேனியாய் விடா
சிறந்த துணியால் பொதித்தோம்

வளரும் பருவத்தில்
எமக்கு பிடித்ததெல்லாம்
உடுத்தி பார்த்தோம்

நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
அஞ்சா மடமும் பயிற்றுவித்தோம்

வளர்ந்த பின்னே
மறைக்க வேண்டியதை மூடவில்லை
அறிவுரைகளை கேட்கவில்லை

பாராட்டும் பத்திரமும்
புகழும் பெயரும்
பொருளோடு சேர்த்துக் கொண்டாய்

அழகிப் போட்டியில் அலங்கரித்தாய்
விளம்பரங்களில் வெளிக்காட்டினாய்
வெட்கத்தை வாடகைக்கு விட்டாய்

எனக்கு பெருமையும் இல்லை
உன் மீது வெறுப்பும் இல்லை
உன்னை பெற்றவளாய் மகிழ்ச்சியும் இல்லை

மன குமுறல்கள் பல இருந்தாலும்
உன் மகிழ்ச்சிக்காக
என் வாய் வளைந்தது புன்னகையாக

By | April 12th, 2006|Categories: கவிதை|0 Comments

வேலை பளு

வயிற்றில் கருச்சுமை சுமந்து
மனதில் பாரத்துடன்
அரை வயிற்றுடன்
கண்களில் மகிழ்ச்சியுடன்
தலையில் கற்களை சுமக்கும்
சித்தாளை கண்ட போது
வெட்கப்பட்டேன் எனக்குள்,
அலுவலகத்தில் வேலை பளு எனக்கு
என்று சொல்லிக் கொள்ள.

மார்ச் 2005 ‘திசைகள்’ மகளிர் சிறப்பு இதழில் வெளிவந்த கிறுக்கல்

By | April 10th, 2006|Categories: கவிதை|3 Comments

சுனாமி அழிவு

கடலோரம் கடக்கும் போது
கிடைத்த சங்கை காதில் வைத்தால்
ஓ என்று எழும் சத்தம்
ஓராயிரம் குடும்பத்தின் மரண ஓலம்
என்று அறியாது இருந்து விட்டோம்.

வான நிறத்தை எடுத்துக் கொண்டு
நீலமாக தெரிகிறாய் என்று எண்ணி இருந்தோம்
கொடிய எண்ணத்தை கொண்டதனால்
அது உனக்கு கிடைத்த நிறம்
என்று அறியாது இருந்து விட்டோம்

உன்னிடம் உள்ள கடலினங்களை
நாங்கள் கொன்று தின்றோமென்றால்
உன் பாரம் குறையும் என்று நினைத்திருந்தோம்
அது பொறுக்க முடியாமல் பொங்கி எழுவாய்
என்று அறியாது இருந்து விட்டோம்

உணர்வுகள் நாங்கள் அறிய
உப்பை தந்தாயென நாங்கள் உள்ளம் மகிழ்ந்தோம்
நீ விழுங்கிய சந்ததியின் கண்ணீரினால்தான்
நீ உப்பாக கரிக்கின்றாய்
என்று அறியாது இருந்து விட்டோம்

தாய் மடியாக நினைத்து உன்னுடன்
விளையாடிய குழந்தைகளையும்
விட்டுவைக்கவில்லை நீ

வங்கியாக நினைத்து உன்னிடம்
வாழவை என்று கையேந்தி நின்றவர்களையும்
விட்டுவைக்கவில்லை நீ

மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு
உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு
உடலை ஓரம்கட்டும் வித்தையை
எங்கே கற்றுக் கொண்டாயோ?

ஆழி பேய்க்கடலாய்
ஆட்களை அழித்துவிட்டாய்
பலி தீர்க்கும் பாவத்தை
இனியாவது செய்யாமல் இருப்பாயோ?

http://www.thisaigal.com/jan05/poem_jazeelabanu.html

By | April 9th, 2006|Categories: கவிதை|2 Comments