மெல்லத்தமிழினி சாகும்??


‘Emirates only தமிழ் radio station’ இப்படியான அறிமுகத்தோடு ஆரம்பிக்கப்படுகிறது ஹலோ 89.5 FM. இதையே ‘அமீரகத்தின் ஒரே தமிழ் வானொலி’ என்று அறிமுகப்படுத்தினால் என்ன குறைந்துவிடப் போகிறார்களா? அல்லது தமிழர்களுக்குத்தான் பிடிக்காமல் போய்விடுமா? சரி, முழுவதுமாகத் தமிழிலேயே பேசுவது FM-ன் கலாசாரமில்லையென்றால் ‘அமீரகத்தின் முதல் தமிழ் radio station’ என்றாவது சொல்லிவிட்டுப் போகட்டுமே.

தமிழுக்காகவென்று ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு ஊடகமும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் ’தமிழைப் பருக தரவே கூடாது’ என்ற முடிவோடு. ஏன் இப்படி? இதற்குக் காரணம் யார்? இரசிகர்களா? கண்டிப்பாக இருக்க முடியாது. கேட்பவர்களையும் பார்ப்பவர்களையும், ரசிப்பவர்களையும் கெடுப்பதே ஏன் சொல்லப்போனால் அவர்களின் ரசிப்புத் தன்மையைச் சிதைப்பதே இப்படியான கலப்படமான ஊடகம்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நாங்கள் என்ன செந்தமிழிலா நிகழ்ச்சி வழங்கக் கேட்கிறோம்? அல்லது ஆங்கிலமே கலக்காமல் முழுக்கத் தமிழில் இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறோமா?

ஒரு வாக்கியத்தில் ஒரு வார்த்தை மட்டும் தமிழைப் புகுத்துவதற்குப் பதிலாக 80% தமிழும் 20% ஆங்கிலமும் போனாப் போகுது என்று இருக்கட்டும் என்று விட்டது போக இப்போது நிலை தலைகீழாக 25% தமிழ் 75% ஆங்கிலமென்று பேசிக்கொண்டு ’ஒரே தமிழ் வானொலி’ என்று நாக்கூசாமல் சொல்வதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இவர்கள் பி.எச். அப்துல் ஹமீத்தின் நிகழ்ச்சிகளை கேட்டதில்லையா? இல்லை பி.எச். அப்துல் ஹமீத்தின் நிகழ்ச்சிகள் வெற்றிப்பெறதான் இல்லையா? இன்னும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட வேண்டாம். அவரோடு ஒப்பிட இவர்கள் தகுதியற்றவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும் ஆனால் அவ்வாறான சிறு முயற்சிக் கூடயில்லையே!?

மலையாள அலைவரிசையை இவர்கள் கேட்டுப் பார்க்கட்டும் எவ்வளவு அழகாக தன் மொழி சிதைவு இருக்காத வகையில் கவனமாகக் கையாளுகிறார்கள் என்று. அவர்களிடமிருந்து படிக்கட்டும். ஹிந்தி 101.6 கேட்க இனிமையாக உள்ளது. ஆரோக்கியமான நல்ல நிகழ்ச்சிகள் தருகிறார்கள். வண்டி ஓட்டுபவர்கள்தான் அதிக அளவில் கேட்கிறார்கள் என்பதைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப தகவல் பரிமாறுகிறார்கள். அவர்கள் மொழியில் இனிமையில்லாததாலோ என்னவோ ஆங்கிலம் கலக்கிறார்கள் அதுவும் ஆங்கிலத்தை அழகாக உச்சரிக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு அப்படியான அவசியமில்லையே.

நம் மொழியில் ஒரு வகை ஓசையிருக்கிறது. அழகான ஒலியிருக்கிறது, ஆங்கிலமே கலக்கத் தேவையில்லைதான் இருப்பினும் சுலபமாக்கிக் கொள்ளக் கொஞ்சம் ஆங்கிலம் கலந்தால் இருந்துவிட்டுப் போகுது என்று சொல்லலாம் அதற்காக இப்படியா? சென்னையில்தான் ‘தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்’ என்று தத்திகினத்தோமோடு பேசுவதை நவநாகரீகமாகக் கருதுகிறார்கள். தமிழர்களிடம் தமிழில் பேசுவதை மரியாதை குறைவாகவோ, முகசுளிப்போடு பார்க்கிறார்கள் தமிழின் அருமை தெரியாதவர்கள். இருந்துவிட்டுப் போகட்டும்.

’சென்னை தமிழில்’ நிகழ்ச்சியென்று மிக நாராசமான நிகழ்ச்சியும் போகத்தான் செய்கிறது ரசிப்பவர்களும் இருக்கிறார்கள், அப்படியான மட்டமான ரசனையையும் அவர்கள் மூளைக்குப் பழக்கியதில் இவர்களுக்குப் பெரும்பாலான பங்குள்ளது என்பதை இவர்கள் மறக்க வேண்டாம். தமிழ்நாட்டில் தமிழுக்கு மரியாதை அவ்வளவுதான், ஏனெனில் தாய்மடி சுலபமாக கிடைக்கும் போது கசக்கத்தான் செய்யும்

எங்களுக்கு அப்படியல்ல அன்னிய நாட்டில், பல மொழிக் கலாசாரத்தில் வாழும் எங்களுக்கு எப்பவாவது தாயின் அரவணைப்பு கிடைக்கும் போது அதில் அலாதி சுவையிருப்பதாக நம்புகிறோம். தமிழ் நிகழ்ச்சியைத் தேடி கூட்டம் கூடுகிறது. ஊருக்குச் சென்றால் தவறாமல் தமிழ்ப் புத்தகம் வாங்கி வருகிறோம். புதிய தமிழர்களை பார்க்கும் போது புது உறவு கிடைத்ததாகக் கொண்டாடுகிறோம். தமிழ் வானொலி வருகிறது என்று சந்தோஷப்படுகிறோம், தமிழ் பாடல் கேட்டு ஆனந்தத்தில் திளைக்கிறோம். நடுநடுவே பேச ஆரம்பித்துவிட்டார்கள் அதில் தமிழை எங்கே என்று தேடுவதாக உள்ளது! ஏன் இப்படி? யார் இந்த கலாசாரத்தை உருவாக்கியது? சக்தி FM இப்படி பாடாவதியான நிகழ்ச்சி நடத்தி காணாமலே போய்விட்டார்கள். சென்னையில் தருவது போன்ற நிகழ்ச்சியை இங்கு தர வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, இங்குள்ளவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு, அணுகுமுறைக்கேற்றவாறு, தேடலுக்கேற்றவாறு நிகழ்ச்சியை மாற்றிக் கொள்ள முனைவார்களா? எங்களைப் புரிந்துக் கொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம் அல்லது Hello கூடிய சீக்கிரத்தில் Bye Bye சொல்லிவிடும்.

32 Comments

  1. கஷ்டம்தான்

  2. Barari March 25, 2010 at 9:59 am - Reply

    நல்ல சவுக்கடி.இதன் பிறகாவது ஆங்கில கலப்பை விடுகிறார்களா என்று பார்ப்போம்.

  3. "உழவன்" "Uzhavan" March 25, 2010 at 11:03 am - Reply

    //எங்களுக்கு அப்படியல்ல அன்னிய நாட்டில், பல மொழிக் கலாசாரத்தில் வாழும் எங்களுக்கு எப்பவாவது தாயின் அரவணைப்பு கிடைக்கும் போது அதில் அலாதி சுவையிருப்பதாக நம்புகிறோம்//
     
    உண்மை.. உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டீர்கள்.. நிலை மாறும் என நம்புவோம்

  4. ஆயில்யன் March 25, 2010 at 11:57 am - Reply

    ///எங்களுக்கு அப்படியல்ல அன்னிய நாட்டில், பல மொழிக் கலாசாரத்தில் வாழும் எங்களுக்கு எப்பவாவது தாயின் அரவணைப்பு கிடைக்கும் போது அதில் அலாதி சுவையிருப்பதாக நம்புகிறோம்//

    கண்டிப்பாக – துபாயில் தமிழ் ரேடியோ வந்து விட்டது என்று இங்க நாங்களும் கூட கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் 🙂

    ஏசியா நெட் போன்று பிரபலமடையவேண்டும் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் !

    கருத்துக்களினை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி 🙂

  5. அளவுகடந்த கோபத்தோடு எழுதி இருக்கிறீர்கள் ஜெஸிலா. நான் உங்கள் கருத்தோடு முரண்படவில்லை. ஆனால் கோபத்தோடு முரண்படுகிறேன்.

    தமிழில் நிகழ்ச்சி நடத்தினாலும் தமிழ்ப்பட பாடல்கள்தானே போட்டாகவேண்டும் – பி எச் அப்துல் ஹமீதே இன்று ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் பாடல்களில் ஆங்கிலக் கலப்பில்லாதது எங்கே கிடைக்கிறது? மொழிக்கலப்பு என்பது தொகுப்பாளர் பேசும் 1 நிமிடத்தில் இல்லாமல், பாடல் வரும் 5 நிமிடத்தில் இருந்தால் பரவாயில்லையா?

    சென்னையில் வெளிவரும் எந்தப் பண்பலை வானொலியில் மொழிக்கலப்பின்றி இருக்கிறது? இவர்களுடைய நோக்கம் தமிழ்வளர்ப்பு அல்ல, தமிழர்களுக்கு நாலுபாட்டு போட்டு காசு தேத்துவதுதானே? சொல்லப்போனால் எல்லாம் பண்பலைக்குமே நோக்கம் அதுதானே? இவர்களை மட்டும் ஏன் குறை சொல்லவேண்டும்?

    மலையாளத்திலும் ஹிந்தியிலும் மொழிக்கலப்பு இல்லை என்பது அவர்கள் சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் – எனக்குத் தெரியவில்லை.

    சக்தி எஃப் எம் மூடப்பட்டதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது எனக்குப் பிடிக்காததற்கான காரணம் 7 மணிக்குத் தொடங்கி 9 மணிக்குள் 3 முறை எனக்குப் பரிச்சயமில்லாத்தமிழில் வரும் செய்திகள். கலப்பில்லா மொழிதான். ஆனால் வானொலியை நான் துவக்குவது பொழுதுபோக்குக்காக மட்டுமே, செய்தி அறிய அல்ல, அதுவும் எனக்குப் பழக்கமில்லாத பிரதேசச் செய்தி.

    ஆரம்பிக்கட்டும், திட்டித் தீர்க்கலாம். முதலில் 24 மணிநேரமும் தமிழ் நிகழ்ச்சிகள் என்பதே கிடைக்காத நிலையில்.

    தமிழைச் சாகடிப்பது இந்தச் சிறு சமூகத்தில் ஒரு பண்பலையால் முடியும் என்றால் இப்போதே மரணப்படுக்கையில் உள்ளதாகத்தான் அர்த்தம்.

    இவ்ளோ சுத்தமா மொழிக்கலப்பில்லாம பின்னூட்டம் இருந்துடக்கூடாதுன்றதுக்காக: சியர்ஸ் 🙂

  6. நல்லாச் சொன்னீங்கக்கா…. அது என்னமோ தெரியல… ஊடகத்துக்குள்ள போனாலே இப்பிடி பேசினாத்தான் மக்கள் ரசிப்பாங்கன்னு அவங்களா நினைச்சுக்கிட்டு.. என்னன்னமோ பேசறாங்க… இனிமேலாவது இவங்க மாறுவாங்களா ……

  7. ஜெஸிலா March 25, 2010 at 2:03 pm - Reply

    அண்ணாமலையான் – ரொம்பவே கஷ்டம் 😉

    பராரி, ம்ம் பார்க்கலாம். நான் சொன்னா திருந்திடுவாங்களா என்ன? என் ஆதங்கம் அவ்வளவே.

    உழவன், நம்பிக்கையில்தானே வாழ்க்கையின் ஜிவிதமே 😉

    ஆயில்யன், புரியுது நீங்க யாரை சொல்றீங்கன்னு 😉

    சுரேஷ், நான் ஆங்கிலம் கலக்கவே வேண்டாமென்று சொல்லவில்லையே. செந்தமிழில் நிகழ்ச்சிகள் கேட்கவில்லையே. நீங்கள் பதிவை மீண்டும் படித்தால் புரியும். நான் கேட்பதெல்லாம் அவர்கள் பேசும் அந்த ஒரு நிமிடத்தில் 80% தமிழில் அவ்வளவுதான். தமிழ் பாடல்களும் இதில் விதிவிலக்கல்ல. எல்லா ஊடகத்தையும் ஒட்டுமொத்தமாகத்தான் சாடியிருக்கிறேன். ‘Emirates Only Thamiz Radio Station' என்று சொல்லும் போதெல்லாம் எரிச்சல் வருகிறது. அதன் வெளிப்பாடே இந்த பதிவு. சக்தி எஃப் எம் காணாமல் போனதற்கு ‘’கலப்பில்லா மொழிதான்” ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதிலும் சாகடிக்கும் ஆங்கில உச்சரிப்பில் ஆங்கிலத்தை தேவையற்ற இடத்தில் புகுத்திப் பேசுபவர்களும் இருந்தார்கள் அவர்களையும் திட்டி நான் ஒரு பதிவும் எழுதியிருக்கிறேன். //பொழுதுபோக்குக்காக மட்டுமே, செய்தி அறிய அல்ல// இங்கும் உடன்படமுடியவில்லை. காலையில் பத்திரிகை வாசிக்க பலருக்கு நேரமில்லை அதனால் வண்டி ஓட்டும் போதே முக்கிய செய்தியோடு எங்கே போக்குவரத்து நெரிசல், அங்கே விபத்து என்பதெல்லாம் பற்றியான குறிப்புகள் கிடைக்கும் போது பயன்பெறவே செய்கிறோம்.

    சிம்மபாரதி, மாறவேண்டும் என்று பலருக்கு எண்ணம் இருக்கும் போது வருங்காலத்தில் முழுவதுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது மாற்றம் வரவேண்டும்.

  8. /சக்தி எஃப் எம் காணாமல் போனதற்கு ‘’கலப்பில்லா மொழிதான்” / இப்படி நான் சொல்லவில்லையே!

    /செய்தி அறிய அல்ல/ என்பது என் சொந்தக் கருத்து மட்டுமே. ஒரு நாளைக்கு காலை 10 நிமிஷம், மாலை 20 நிமிஷம் மட்டுமே வண்டியோட்டும் எனக்கு தேவையில்லை என்றுதான் சொன்னேன். சக்தி எஃப் எம்மில் துபாய் தெருக்களின் போக்குவரத்து நிலவரம் கேட்டதாக எனக்கு நினைவில்லை.

    மற்றபடி, நாம் இருவரும் ரொம்ப வேறுபடுவதாக எனக்குத் தோன்றவில்லை 🙂

  9. ஜெசீலாக்கா மலையாளம் மற்றும் இந்தி பண்பலைகளில் ஆஙகிலம் கலக்கவில்லை என்பது தவறு… பாதிக்கு பாதி இரண்டையும் கலந்துதான் பேசுகிறார்கள். அதைத்தான் நாகரிகமாகவும் நினைக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் வரும் பண்பலைகளில் ஆங்கிலத்தை கலக்க தவறாதவர்கள் துபாய் போன்ற நாடுகளில் ஆங்கிலம் கலந்துத பேசவில்லையென்றால் பெரிய தெய்வ குற்றமாகிவிடும்…. ஒண்ணும் பண்ணமுடியாது…

    வெட்டித்தனமாக வளவளவென்று பேசிக்கொண்டிருக்குபண்பலைகள் பக்கம் போகாம இருக்கறதே உத்தமம்

  10. செல்வநாயகி March 27, 2010 at 3:59 pm - Reply

    good post.

  11. ஜெஸிலா March 31, 2010 at 7:16 am - Reply

    சுரேஷ் நீங்க ஷார்ஜாவில் இருக்கீங்க அதனால் 20 நிமிடத்தில் ஷார்ஜாவிலுள்ள உங்க அலுவலகத்திற்கு போய்விடுவதால் வானொலிகளிலிருந்து தப்பிவிட்டீர்கள் :-).

    பிரதாப், அதெப்படி அந்தப் பக்கம் போகாமல் இருக்க முடியும்? தெய்வகுத்தத்தை மாற்றிக்காட்டுவோம்.

    நன்றி செல்வநாயகி.

    89.5க்கு இந்த பதிவு ஒரு இலவச விளம்பரமாக அமைந்திருந்தாலும் அவர்கள் ஒரே ஒருவரின் கருத்தை வைத்துக் கொண்டு எந்த வித மாற்றத்தையும் நிறைவேற்ற முடியாது என்பதனால் அமீரகவாழ் மக்களே உங்களிடம் ஒரு வேண்டுகோள், நீங்கள் ஒரு தமிழ் வானொலியின் நிகழ்ச்சிகள் அதுவும் கடல் கடந்து வந்திருக்கும் நம்மைப் போன்றவர்கள் நம் மொழியை விரும்பி கேட்கும் போது, ஊடகதாரர்கள் மொழி சிதைவை நவநாகரீகம் என்று கருதுவது சரியா? நாமும் அதைத்தான் விரும்புகிறோமா? குறைந்த பட்சம் நல்ல தமிழில் பேசினால் தெய்வகுத்தமாகாது என்று இவர்களுக்கு உரக்க சொல்வோமா? உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

  12. Leo Suresh March 31, 2010 at 10:57 am - Reply

    உடன்படுகிறேன், நானும் உங்கள் பழைய பதிவில் என் வெறுப்பை சொல்லி இருக்கிறேன்

    லியோ சுரேஷ்

  13. ஹுஸைனம்மா March 31, 2010 at 10:58 am - Reply

    //என்ன செந்தமிழிலா நிகழ்ச்சி வழங்கக் கேட்கிறோம்? //

    பேச்சுத்தமிழில் இருப்பதுதான் நல்லது. ரொமபவும் சுத்தத்தமிழில் பேசினாலும் ஏதோ வித்தியாசமாக இருக்கேன்னு நினைக்கத் தோணுது (காலத்தின் கோலம்).

    மலையாள, ஹிந்தி எஃப்.எம்.களிலும் ஆங்கிலக் கலப்பு அதிகம்தான்.

    மற்றபடி, பினாத்தலாரின் பெரும்போலான கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன். முதல்ல ஆரம்பிச்சு நடக்கட்டும், அப்புறம் குறைநிறைகளைச் சொல்லித் திருத்தலாம். இதுவும் சக்தி எஃப்.எம் மாதிரி காணாமப் போயிடக்கூடாதேன்னு இருக்குது.

  14. ☀நான் ஆதவன்☀ March 31, 2010 at 11:14 am - Reply

    இத்தனை காலம் இல்லைன்னு கவலை பட்டுகிட்டுருந்தோம். இப்ப இருந்தும் இந்த மாதிரி கவலை பட்டுகிட்டுருக்கோம்.

    நியாயமான கவலை இது. முடிந்தவரை அழகு தமிழில் அல்லது பேச்சுத் தமிழிலாவது நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஆரம்பத்திலேயே இது போன்ற கோரிக்கைகளை வைப்பது நல்லது தான்.

    பண்பலை வரிசையினை வெறும் அமீரகத்தமிழர்களின் நலனுக்காக மட்டும் நடத்தினால் சில குறைகளை பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் முக்கியமாக வருமான நோக்கத்தோடு செயல்படுவதால் ஆரம்பத்திலயே சில தவறுகளை சுட்டி காட்டுவதில் தவறில்லை.

    இப்பதிவுக்கு என் ஆதரவுகள் ஜெஸிலா.

  15. சுல்தான் March 31, 2010 at 11:32 am - Reply

    தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும்தான் இந்த பண்பலை அதிக ஆர்வம் தருவதாயிருக்கும். அவர்கள் கேட்கத்தான் இந்த விளம்பரமெனில் அதை தமிழில்தானே தர வேண்டும். ''Emirates only Tamil radio station' என்று முழுதாய் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய அவசியமென்ன?. அமீரகத்தின் முதல் தமிழ் வானொலி நிலையம் என்று சொன்னால் தெய்வ குத்தமாயிடுமா என்ன?. அவனை முதலில் திருந்தச் சொல் என்பதை விட நல்ல மாற்றத்துக்கு வழியமைக்க ஓரளவுக்காவது தமிழில் சொல்ல நாம் வற்புறுத்த வேண்டும்.

    தமிழகத்திலிருந்து அமீரக நிகழ்சிக்கு வருபவர்கள் அண்ணாச்சி ஆசீப் மீரான் அவர்களின் உரையைக் கேட்டு நல்ல தமிழில் அழகாக உரையாற்றுகிறார் என்று பாராட்டுவதை பலமுறை கேட்டிருக்கிறோம். இதுபோலவே நல்ல தமிழ் வானொலியைக் கேட்டால் 'தமிழ் அமீரகத்தில் வாழ்கிறது' என்று தமிழகத்தில் போய் சொல்ல மாட்டார்களா? அதிலே இந்த பண்பலைக்காரர்களுக்கு பெருமையும் விளம்பரமும் கிடைப்பதோடு தமிழகத்தில் சில நல்ல மாற்றங்களும் கூட நிகழ வாய்ப்பிருக்கிறதே.

  16. அகமது சுபைர் March 31, 2010 at 11:34 am - Reply

    நல்ல சிந்தனை…

    இவனுக மண்டைல எப்ப ஏறப்போகுது…

  17. சென்ஷி March 31, 2010 at 11:47 am - Reply

    நல்ல பதிவு. இனியாவது தமிழ் பண்பலையினர் இனியத்தமிழில் தங்கள் நிகழ்ச்சியினை நடத்தும் ஒரு ஆர்வ நோக்கு மிகட்டும்.

    இவண்..

    சென்ஷி
    ஷார்ஜா.

  18. சென்ஷி March 31, 2010 at 11:52 am - Reply

    //பொறுத்திருந்து பார்ப்போம் அல்லது Hello கூடிய சீக்கிரத்தில் Bye Bye சொல்லிவிடும்.//

    🙁

    விரைவில் தமிழுக்கான சிறப்பான பண்பலையாக உருவெடுக்க நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    தமிழ் பண்பலைகளின் ரசிகன்
    சென்ஷி

  19. தமிழ் 20 சதவீதமும் ஆங்கிலம் 80 சதவீதமும் கலந்து தமிழ் வானொலி என்று கூறுவது தமிழை அவமானம் படுத்துவதற்கு சமம்.
    வியாபார நோக்கத்தில் துவங்கி இருக்கும் ஹலோ ஒரு சதவீதமாவது தமிழ் மீது பற்றுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  20. ஜீவன்பென்னி March 31, 2010 at 12:04 pm - Reply

    துபையில் தமிழ் வானொலி இருக்கா?
    சக்தி வானொலி அலைவரிசையை நிறுத்தியவுடன் வானோலி கேட்பதேயில்லை. இது எனக்கு புது செய்தியாகவே உள்ளது

    மற்றபடி நிகழ்ச்சிகளை முடிந்த அளவிற்கு தமிழில் வழங்கினால் நன்றாக இருக்கும்.

  21. படிச்சா / நாகரீகம் தெரிஞ்சவனா இருக்கனும்னா …. இங்க்ளிபீசில் தான் பேசனும் , இல்லானா , அதோட கலப்படம் நிறைய இருக்கணும்னு ஒரு மாதிரி பிம்பத்தை உண்டாக்கி விட்டார்கள் …. அதை முகுந்த முயற்சி எடுத்து ஒழிக்கணும் ..அதில் இரண்டு கருத்துக்கு இடமே இல்லை….நம்ப தான் அந்த FM க்கு பேசும் பொழுது / உரையாடலில் பங்கு பேரும் பொழுது தமிழை முன் நிறுத்தி பேச வேண்டும் … தோழி ஜெசிலாவுக்கு தோள் கொடுப்போம்

    சுந்தர்

  22. கோபிநாத் March 31, 2010 at 12:59 pm - Reply

    ஜெஸிலாக்கா இப்பதிவுக்கு என்னோட ஆதரவுகள்.

    இந்த மாதிரி இல்லையே மத்த மொழிக்காரங்க மட்டும் என்னமா என்ஜாய் பண்றாங்க பாட்டு கேட்டுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கும் போது சக்தி வந்தாங்க….அப்புறம் என்பாடா இவுங்க போவாங்கங்கிற அளவுக்கு போன்ல கடலை வருத்தாங்க.

    அப்படியே ஆதவன் சொன்ன கருத்தை நானும் மற்றொரு முறை சொல்லிக்கிறேன்

    நியாயமான கவலை இது. முடிந்தவரை அழகு தமிழில் அல்லது பேச்சுத் தமிழிலாவது நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஆரம்பத்திலேயே இது போன்ற கோரிக்கைகளை வைப்பது நல்லது தான்.

  23. மொழிக்கலப்பற்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளைக் கொடுக்க வலியுறுத்துவது நம் உரிமை. அந்த வகையில் தேரிழுக்க என் கைகளும் கூட வரும்.

  24. R.Gopi April 1, 2010 at 5:56 am - Reply

    ஆங்கில கலப்பு என்பது இப்போது ஒரு ஃபேஷனாகவே மாறிவிட்டது…

    ஊருக்கெல்லாம் தமிழ் பற்றி பேசுபவர்கள் வாரிசுகள் எல்லாம் தமிழ் பாடமே இல்லாத பள்ளிகளில் படிப்பது போல…

    சுத்தமான தமிழில் பேச பெரும் பயிற்சி வேண்டும்… அது இப்போது இது போன்ற வானொலிகளுக்கு தேவையே இல்லையோ என்று தோன்ற வைக்கிறது…

    நான் நினைக்கிறேன்… தமிழில் பேசினால் தமிழ் வானொலி அறிவிப்பாளர் (RJ) வேலை கிடைக்காதோ என்னவோ!!!

  25. ppage April 1, 2010 at 5:56 am - Reply

    மிக நல்ல பதிவு. அமீரகத்தில் வாழும் அத்தனை தமிழ் நெஞ்சங்களின் கருத்தை சொன்னதுக்கு மிக்க நன்றி.

    பாரம்பரியமும், மொழி வன்மையுமுள்ள நம் தாய் மொழி சிதைந்து வழக்கொழிவதை ரத்தக் கண்ணீர் விடும் தங்கள் உணர்வு புரிகிறது.

    என்றாலும் ஒரு மாற்றுக் கருத்து உண்டு. இருளை பழிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தி ஏற்றலாமே.

    நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா என யோசிப்போமே.

  26. அபுஅஃப்ஸர் April 1, 2010 at 8:12 am - Reply

    சிங்கப்பூரில் உள்ள பண்பலை வரிசை கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும் பாட்டுக்கூட தேவை யில்லை என்று தோன்றும் அளவிற்கு கலப்படமில்லா தமிழ் பேச்சால் அனைவரையும் கட்டிப்போட்டிருப்பார்கள், அதுவே அதன் வெற்றி என்று கூட சொல்லலாம். அதுபோல் இங்கேயும் தொடர வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா

  27. அக்பர் April 1, 2010 at 9:14 am - Reply

    துபாயில் தமிழ் ரேடியோவா அருமை.

    //சிங்கப்பூரில் உள்ள பண்பலை வரிசை கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும் பாட்டுக்கூட தேவை யில்லை என்று தோன்றும் அளவிற்கு கலப்படமில்லா தமிழ் பேச்சால் அனைவரையும் கட்டிப்போட்டிருப்பார்கள்,//

    அப்போ துபாயில் தமிழ்நாட்டின் ஸ்டைலை பின்பற்றுகிறார்கள் என நினைக்கிறேன் அபுஅப்ஸர்.

  28. ஜெஸிலா April 6, 2010 at 1:41 pm - Reply

    நினைவிலிருக்கிறது லியோ. மிக்க நன்றி.

    ஹுசைனம்மா, ஆரம்பிக்கும் போதே திருத்திக்கிட்டாத்தான் உண்டு அல்லது மாற்றுவது அவர்களுக்கு கடினமாகிவிடுமே. கருத்துக்கு நன்றி.

    மிக்க நன்றி ஆதவன் உங்களின் ஆதரவிற்கு.

    சரியான சொன்னீங்க சுல்தான் பாய். உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

    தெரியலையே சுபைர். தலையில் ஏறாவிட்டாலும் காதிலாவது ஏறுமா? 🙂

    பண்பலைகள் பண்புள்ளதாக அமீரகத்தில் மட்டுமாவது மாறினால் சரி சென்ஷி.

    நன்றி இஸ்மத் அண்ணே. கோரிக்கையை நிறைவேற்றுகிறார்களான்னு பார்ப்போம்.

    நன்றி சுந்தர்ஜி. இந்த பிம்பத்தை தகர்க்க வேண்டும்.

    நன்றி கோபி. நீங்க சொன்னது முழுக்க உண்மை.

    பினாத்தலரே, தேரிழுப்போம் நகர்கிறதா என்று பார்ப்போம்.

    //நான் நினைக்கிறேன்… தமிழில் பேசினால் தமிழ் வானொலி அறிவிப்பாளர் (RJ) வேலை கிடைக்காதோ என்னவோ!!!// ஆமாம் கோபி அப்படித்தான் போலிருக்கு. தமிழ் தந்தை ஆத்தனார் அவர்களின் வாரிசுகள் தலைமையின் கீழ் வருகிறது ‘ஹலோ’ அதற்காகவாவது ஒரு பெரும் முயற்சியெடுத்து நல்ல அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கலாமே.

    பிபேஜ், நம்மால் ஏதேனும் செய்ய முடியுமென்றால் செய்யலாம் தான். மெழுகுவத்திதானே ஒரு வத்திக்குச்சி தாங்க ஏத்திடுவோம் 🙂

    ஜீவன்பென்னி 89.5 கேளுங்க.

    அபுஅப்ஸ்ர், சிங்கப்பூர் வானொலி கேட்டதில்லை. இணையத்தில் கிடைக்கிறதா?

    சரியா சொன்னீங்க அக்பர். பார்க்கலாம் ஸ்டைல் மாறுதான்னு 🙂

  29. ஜெய்லானி April 8, 2010 at 5:35 am - Reply

    ################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
    http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
    ###########

  30. www.bogy.in April 14, 2010 at 5:51 am - Reply

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    http://www.bogy.in

  31. மிகவும் அருமையான பதிவு… ஆனால், நான் அபுதாபியின் கடைசியில் உள்ளேன்…. இதன் அலைவரிசை இங்கே கிடைப்பதில்லை… மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும்… நீங்கள் சொல்வதுபோல நமது மண்ணைவிட்டு வந்தபிறகுதான் நமது மொழியின் மீது ஈர்ப்பு அளவிலடங்காததாகிறது…என்னைப்பொறுத்தவரை தமிழ்மொழியின் அழிவு தமிழ்நாட்டில் சென்னைக்கே முதலிடம்…. மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கும், அம்மக்களாக மாறுவதற்கும் தமிழ்மொழி தடையாக இருக்கிறதுபோல…. எத்தனையோ தமிழ் நண்பர்கள் வலைப்பதிவாகட்டும், முகப்புத்தகமாகட்டும் தமிழ் தெரிந்தும்…. தங்களுடைய கருத்துக்களை தமிழிலோ அல்லது தங்கிலிஷ்லோ எழுதுவதில்லை… ஆங்கிலத்தில் மட்டுமே எழுதுகிறார்கள்.. அது எனக்கு வருத்தமளிக்கிறது…

  32. Karthik Gopal July 27, 2010 at 5:56 am - Reply

    வணக்கம் ஜெஸிலா

    நான் சென்னைவாசி.

    மொழி மீதான ஈடுபாடு என்பதே தேவையற்றது போன்ற எண்ணம் தமிழர்களில் பல பேருக்கு உள்ளது.

    ஒரு தமிழ் தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியின் போது(மொழி பற்றிய ஒரு கருத்தரங்கம்),கல்லூரி செல்லும் இளம்பெண் இவ்வாறு கூறினார்.தமிழில்தான் படிக்க வேண்டும்,தமிழில்தான் பேச வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்று சொல்லுங்கள்,அப்போது தமிழை படிக்கிறேன் என்று கூறினார்.

    இந்த அலட்சியம் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களிடம் மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன்.

Leave A Comment