துபாய் நல்ல துபாய்

துபாய்க்கு வந்து இந்த அக்டோபரோட பத்து வருஷமாகுது. பத்து வருஷத்துல என்ன கிழிச்ச என்ன சாதிச்சன்னு கேட்டிடாதீங்க அப்புறம் நிறைய சாதிச்சேன்னு பொய் சொல்ல வேண்டி வரும். என்ன நம்ப முடியலையா? என்னாலயே நம்ப முடியல அப்புறம் நீங்க நம்பனும்னு எதிர்பார்ப்பேனா? ஆனா மறக்க முடியாத சில நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யுது. அக்கா துபாய்ல இருந்த தைரியத்துல நான் ஒரு தப்பித்தலுக்காக போறேன்னு அடம்பிடிச்சதும் வீட்டுல அனுப்பி வச்சாங்க. ஒரு பெண்ணை, அதுவும் எங்க சமூகத்துல- தனியா துபாய்க்கு அனுப்புறதே பெரிய விஷயம்தான். ஆனா வந்து இறங்கியதும் வெளிநாடுன்னு பெரிய பிரம்மிப்பெல்லாமில்ல. அக்கா கூட கேட்டா என்ன வெளியில வேடிக்கைப் பார்த்துட்டு வருவேன்னு பார்த்தா ‘ம்மு’ன்னு வரேன்னு. பின்ன சந்தோஷமாவா இருக்கும்?! அப்பா அம்மா அக்காமார்கள், தோழிகள், ஆசையா வளர்த்த மீன்கள், நெருக்கமா இருந்த செடிகள்னு எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாச்சு. அக்காக்கிட்டக்கூட அதான் கேட்டேன் “உன் புருஷன்ற ஒரு சொந்தத்துக்காக எல்லாத்தையும் எப்படி விட்டுட்டு வர மனசு வந்துச்சு”ன்னு. “நானாவது ஒரு சொந்தத்துக்காக வந்தேன் நீ எதுக்குடி வந்தே”ன்னு ஒரு நியாயமானக் கேள்வி கேட்டவுடனே நான் ‘கப்-சிப்’ன்னு ஆயிட்டேன்.

எங்க வீட்டுல நாலு பொண்ணுங்க. நான் தான் நாலாவது. நானும் பெண்ணா பொறந்துட்டதால பெத்தவங்களுக்கு ரொம்ப வருத்தமாம். அம்மா நான் பொறந்தப்ப என்ன தூக்கக்கூட இல்லன்னு பக்குத்து வீட்டு அக்கா அடிக்கடி சொல்லி நினைவுபடுத்துவாங்க. எனக்கப்புறம் ஒரு கடைக்குட்டி ஒரு தம்பி இருக்கான் அது வேற விசயம். ஆனா ஆண் பிள்ளன்னு எதுக்குக் கேட்கிறாங்க? ஆண் பிள்ளையா இருந்தா அவங்களுக்கு எல்லா வகையிலும் உதவியா இருப்பான்னுதானே? அதனால நானும் எப்பவுமே அப்படி இருக்கணும்னு சின்னதிலிருந்தே ஒரு வைராக்கியம். எதுக்குமே பெத்தவங்க கிட்ட காசு கேட்கக் கூடாதுன்னு இருப்பேன். அஞ்சு வரைக்கும்தான் மெட்ரிகுலேஷன் பள்ளி அதுக்கப்புறம் அரசினர் பள்ளிதான், அதனால மாச மாசம் பள்ளிக்கு பணம் கட்டத் தேவையில்ல. பள்ளிக்கூடத்துல எல்லாப் பசங்களும் சுற்றுலாப் போனாக்கூட அத வீட்டுல வந்து சொல்ல மாட்டேன். இன்னிக்கு விடுமுறைன்னு சொல்லிடுவேன். ஒரு வருஷம் படிச்சி முடிச்சதும், இந்த வருஷப் புத்தகத்த கைமாத்தி அதுல கெடைக்குற காச வச்சிதான் புது வருஷ புத்தகத்த வாங்குவேன். அப்பா பத்திரிகையில் புகைப்பட நிபுணர் அதனால நிறைய படச்சுருளோட டப்பா கெடைக்கும். பள்ளி தோழிங்க கிட்ட அவங்கவங்க வீட்டுல இருந்து பூதர்மாவு அதாங்க வாசனப் பவுடர் கொஞ்சம் எடுத்து வரச் சொல்வேன். எல்லா விதமான பவுடர்களையும் அந்த படச்சுருள் டப்பாலக் கொட்டினால் புதுவித வாசன வரும், அத பெரிய வகுப்பு படிக்கிற அக்காங்கக்கிட்ட 5 ரூபாய்க்கு விற்பேன். வாசன மாவுக் கொண்டு வரவங்களுக்கு 50 பைசாக் கொடுத்துட்டு மிச்சத்த என் தேவைக்கு வச்சுக்குவேன். அதே மாதிரி பறவைங்க இறக்கைல வித விதமான நிறத்துல சாயம் பூசி அத மொத்தமாக் கட்டி அதுல ஒரு ‘பின்’குத்தி அதையும் 5 ரூபாய்க்கு விற்பேன். சட்டையில் குத்திக்கிற ‘பிரோச்’ மாதிரி அழகா இருக்கும். இந்த மாதிரி குட்டி குட்டி வியாபாரம் நெறய வச்சிருக்கேன். அப்ப நான் மூணாவது நாலாவதுதான் படிச்சிட்டுருப்பேன். அந்தக் காசை மிட்டாய் வாங்கித் திண்ண செலவழிக்க மாட்டேன். சேர்த்து சேர்த்து வச்சி எதுக்காவது உபயோகமா பயன்படுத்துவேன். அப்பவே பணம் பண்ணுற எண்ணம்னு சொல்ல வரேன். அதுக்கா இந்த பில்டப்புன்னு கேட்காதீங்க.

ஒவ்வொரு அக்காவுக்கா கல்லூரி படிப்பு முடிச்சதும் கல்யாணம் பண்ணி வச்சிட்டிருந்தாங்க. நான் பார்த்தேன் இதுல நம்ம மாட்டிக்க கூடாது, சில வருஷமாவது பெத்தவங்களுக்கு சம்பாதிச்சு தரணும்னு என்னோட பல வருஷக் கனவ நெனவாக்க துபாய் வந்து சேர்ந்தேன். அதே மாதிரியே நடந்துக்கிட்டேன். ஒரு பெண்ணாலயும் எல்லா விதத்திலயும் பெத்தவங்களுக்கு ஒரு ஆணை விட அதிகமாகவே உதவ முடியும்னு நிரூபிச்சிட்டேன். மறக்க முடியாத சில நிகழ்வுன்னு ஆரம்பிச்சுட்டு அத சொல்லலன்னா எப்படி?

நான் துபாயில போன என்னுடைய முதல் நேர்முகம் ஒரு பெரிய நிறுவனம்தான் ஆனா இந்திய நிறுவனம். குடும்ப நண்பரோட செல்வாக்க வச்சு அந்த நிறுவனத்தோட மனிதநலம் மேம்பாட்டு துறை மேலாளரைப் போய் பார்த்தேன். அவர் என்னுடைய பொழிப்புரை, சான்றிதழ் எதையுமே பார்க்கல, அவர் என்னப் பார்த்தவுடன் சொன்ன விஷயம் “உனக்கு நேர்மையா ஒரு அறிவுரை சொல்லணும்னு தோனுது, நீ ஊருக்குப் போய்ட்டு கல்யாணம் முடிச்சுக்கிட்டு வா. இரண்டு பேருக்கும் சேர்த்து வேல தரோம். நீ கல்யாணமாகாத பொண்ணு இங்க வேல பார்த்தீனா எங்க பையனுங்க அவங்க தெறமைய வேலைலக் காட்டமாட்டானுங்க உங்கிட்டக் காட்டத்தான் நினப்பாங்க”ன்னு சொன்னதும், அந்த கசப்பான உண்மை என்ன ரொம்ப பாதிச்சுது. வீட்டுக்கு வந்து ‘ஓ’ன்னு அழுதேன். அழுததற்கான காரணம் முதல் அடியே சறுக்குதேன்னு. என் திறமை வேணாம் என் கல்யாண தகுதிதான் வேணுமாம், இந்த நிறுவனம் இல்லாட்டி என்ன எத்தனையோ இருக்குன்னு மனதிடம் இன்னும் கூடிச்சு. இது இஸ்லாமிய ஊருன்னுதான் பேரு ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு போனேன் “நீ தலையில துணிப் போட்டுட்டு போனேனா வேலைக் கிடைக்காது”ன்னு உபதேசம், அப்படி சொன்னதும் ஒரு முஸ்லிம் பெண்மணிதான். நான் நானாத்தான் இருப்பேன். இப்படி இருந்து வேல கெடச்சா கெடக்கட்டும்னு இருந்தேன். அப்ப திருமணமாகாத பெண்களுக்கு நுழைமதி சுலபமா கிடைக்காததால பெரிய தலவலியா வேற இருந்துச்சு, ஆனா பெரிய நிறுவனமா இருந்தா அந்த பிரச்சனையெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க. அப்புறம் இன்னொரு இடத்திற்கு போனேன் நேர்முகத்திற்கு, எல்லாரும் ‘சூட்-கோட்’, குட்ட பாவாடைன்னு விதவிதமா வந்திருந்தாங்க. நான் மட்டும்தான் சுரிதார். போச்சுடான்னு நினச்சேன், ஏனா அந்த மேலாளர் “இந்த மாதிரி பாரம்பரிய உடைல நேர்முகத்திற்கு வரக்கூடாது”ன்னார். நான் சொன்னேன் எங்க ஊர்ல இது பாரம்பரிய உடை இல்ல நவநாகரீக உடைதானு ஒரு போடு போட்டேன். என்னதான் நான் மற்ற உடைகளெல்லாம் உடுத்தினாலும், தகுதிக்காக வேலக் கெடக்கினுமே தவிர உடைக்காக இருக்கக் கூடாது பாருங்க. ஆனா அதே நிறுவனத்திலிருந்து இரண்டாவது நேர்முகத்திற்கு வரச் சொன்னதும் ஆச்சரியமா இருந்துச்சு. அங்கேயே வேலையும் கிடச்சுது.

அது சரி, ஏன் சொந்தக் கத சோகக்கதயெல்லாம் சொல்றேன்னு யோசிக்கிறீங்களா? நம்ம வலைஞர்களுக்குள்ள நோயிருக்குல? அட எனக்கும் சேர்த்துத்தான், அதாங்க எழுதுறவங்க யாரு என்னன்னு தெரிஞ்சிக்காம அவங்க படைப்ப வாசிக்கிறதுல கொஞ்ச சிரமப்படுற நோயப்பத்தித்தான் சொல்லுறேன். என்ன படைப்பு, எதப்பத்தி எழுதிருக்காங்க, எப்படி எழுதிருக்காங்கன்னு படிக்க மாட்டோம்ல. நாம யாரு எழுதிருக்கான்னு பார்ப்போம், பின்ன தலைப்பு கவர்ச்சியா இருக்கான்னு பார்ப்போம் அதெல்லாமிருந்தாத்தானே சொடுக்கி வாசிக்கச் சொல்லுது. அதனாலத்தான் என்னைக்குமில்லாத திருநாளா சொந்த புராணம் கொஞ்சம் பாடிருக்கேன். ஆனாலும் ஒரு பதிவுன்னு இருந்தா, அத நாமப் படிக்கும் போது ஏதாவது புதுசா தெரிஞ்சிக்கணும்னு ஆசப்படுவோம்ல? இது வரைக்கு படிச்சுப்புட்டு ஒண்ணுமே இல்லாமப் போனா எப்படி அதுவும் தினமும் ஒரு சுவாரஸ்யம்னு சொல்லிட்டேன்ல, அதுக்காக துபாயப் பத்தி கொஞ்சம் சொல்லிடுறேன். நான் இங்க வந்த போது இருந்த துபாய்க்கும் இப்பவுள்ள துபாய்க்கும் நிறய வித்தியாசம். பத்து வருஷத்துல நம்ம ஊருல அப்படி பெரிய மாத்தம் வந்திருக்கான்னா இந்த ஊரோட ஒப்பிடும் போது அது பெரிய விஷயமில்லன்னு சொல்லலாம்.


1990ல் எடுத்த படங்களைப் பார்க்கும் போது இந்த மாதிரி நானும் எடுத்திருந்தா வட்டம் போட்டு காட்டிருப்பேன். அப்போதெல்லாம் துபாய் ஷார்ஜா ரோட்டுல அந்த மணல்ல உட்கார்ந்து லூட்டி அடிப்பதே தனி சுகமாகத்தான் இருந்தது. இப்போது எங்கு திரும்பினாலும் கட்டிட மயமாயிடுச்சு. வீதில வண்டி கூடிப்போச்சு, போக்குவரத்து நெரிசல் கூடிப்போச்சு, வீட்டு வாடகை ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப ஏறிப் போச்சு. துபாயப்பத்தி விரிவா எழுதலாம்னா அதுக்கு வேலயே வைக்காம நிறை வலைப்பதிவர்கள் எழுதிக்குவிச்சிட்டாங்க. சரி கொஞ்சம் சுருக்கமா:

* உலகத்திலேயே ஒரே 7 நட்சத்திர விடுதின்னா அது ‘புர்ஜ் அல் அரப்’தான் (Burj Al Arab). ஒன்றரை வருஷத்துல கட்டி முடிச்சிட்டாங்க. உள்ளப்போயி சுத்திப்பார்க்கவே 60 யூரோ. அப்ப தங்கறதுக்கு எவ்வளவாகும்னு யோசிச்சுப்பாருங்க ஒரு இரவு தங்க $7500லிருந்து $15000 வரை இருக்காம்.

* வெளியில 50-55c ன்னு வெய்யில் கொளுத்தினாலும், குளிர்காலத்த பெரிய திடல்ல அடக்கி வச்சா மாதிரி அமச்சிருக்காங்க ‘மால் ஆப் எமிரேட்ஸை’ (Mall of the Emirates). இதுதான் உலகின் மிகப் பெரிய வணிக வளாகமாம். உறைபனி மூடிய தரைல வழுக்கிக்கிட்டு போகிற அதிசயம் இந்த மால் ஆப் எமிரேட்ஸுக்குள் இருக்கிற ‘ஸ்கீ துபாய்’ல இருக்கு.




* ‘பாம்’ (‘bomb’னு படிச்சிடாதீங்க இது ‘Palm’) பற்றிக் கேள்விப்பட்டீங்களா இல்லையான்னு தெரியல. ஈச்சை மரத்தோட வடிவத்தில் தீவு. அதாவது கடலுக்குள்ள மண்ணக்கொட்டி வீடு கட்டிருக்காங்க. இந்த மாதிரி இதுவரைக்கு மூணு தீவு உருவாகிக்கிட்டிருக்கு. ஒரு தீவு முழுசா முடிவடஞ்சிடுச்சு. மற்ற இரண்டு தீவுடைய வேல நடந்துக்கிட்டு இருக்கு. இதுவும் சீனச்சுவர் மாதிரி நிலாவிலிருந்து பார்த்தால் தெரியுமாம். நிலவிலிருந்து தெரியுதோ இல்லையோ எங்க அலுவலகத்திலிருந்து பார்த்தா ரொம்ப அழகா தெரியுது. இதுதான் உலகத்தின் எட்டாவது அதிசயமாகப் போகுதுன்னு சொல்றாங்க.

* ‘புர்ஜ் துபாய்’ கட்டிக்கிட்டு இருக்காங்க. 2008-ல உலகத்திலேயே இதுதான் மிகப்பெரிய கட்டிடமா இருக்கப் போகுதாம். இப்போதைக்கு 117 மாடி கட்டி முடிச்சாச்சு, தற்போதய உயரம் 410.5 மீட்டர், 800 மீட்டரை எட்டுமாம்.

* ‘துபாய் லாண்ட்’ இது 2009-ல முடியும்போது. இதுவும் உலகத்திலேயே மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனி நகரமாகவே வரப்போகுதாம்.

இந்த மாதிரி இன்னும் வரப் போகிற அதிசயங்கள் நெறய. இப்படி உலகப் புகழ் பெற்ற, பெறப் போகிற விஷயங்கள் எல்லாமே நான் துபாய்க்கு வந்த பிறகுதான் வந்தது. என்னாலதான் துபாய்க்கு அதிர்ஷ்டமே வந்துச்சுன்னு சொன்னா நம்பவா போறீங்க?

27 Comments

  1. Fast Bowler April 8, 2007 at 7:05 am - Reply

    🙂

  2. அபி அப்பா April 8, 2007 at 7:05 am - Reply

    Dubai nalla dubai thaan enakkum, nalla pathivu, arumaiyaaha irukku

    abi appa

  3. ஜெஸிலா April 8, 2007 at 7:08 am - Reply

    ஃபாஸ்ட், எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும். எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க? 😉

    அபி அப்பா இன்றைக்கு கொஞ்சம் தாமதமா வந்துட்டீங்க. தொடர்ந்து முதல் பின்னூட்டமிட்டிருந்தீங்க இன்றைக்கு தவறிடுச்சே! //Dubai nalla dubai thaan enakkum, // குடும்பத்தோடு இங்கே இருக்கும் அனைவருக்கும் கண்டிப்பா நல்ல துபாயாகத்தான் இருக்கும்.

  4. அபி அப்பா April 8, 2007 at 7:37 am - Reply

    இல்லை, படித்தது நான் தான் பர்ஸ்ட், பின்னூட்டம் தான் பாஸ்ட் பர்ஸ்ட். படிச்சுகிடு இருக்கும் போதே கொஞ்சம் வேலை வந்துடுச்சு. முடிச்சுட்டு வர்ரத்துகுள்ள பாஸ்ட்டு போட்டுட்டார்:-)
    மற்ற படி படங்கள் ரொம்ப சின்னதா இருக்கே ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்க:-))

  5. ஜெஸிலா April 8, 2007 at 7:39 am - Reply

    அபி அப்பா படங்களை கிளிக்கினால் பெரிதாகுமே.

  6. அபி அப்பா April 8, 2007 at 8:33 am - Reply

    ஆமாம் இப்போ தான் கிளிக்கினேன், சரி சரி!

  7. Fast Bowler April 8, 2007 at 8:33 am - Reply

    துபைக்கு வருவதென்பது ‘புலி வாலைப் பிடிக்கும் கதை’ என்பதை எனது நண்பர்கள் வட்டத்தில் பேசிக்கொள்வோம். அதில் நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை படித்த போது தோன்றியது வெறும் ‘:)’ மட்டுமே. அதைத்தான் பின்னூட்டினேன்.

  8. Fast Bowler April 8, 2007 at 8:33 am - Reply

    மற்றபடி, உங்கள் சொந்தக் கதையும் நல்லா இருந்துச்சு. ஆனால் என்ன, அதில் திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாமல் போர். 🙂

  9. ஜெஸிலா April 8, 2007 at 8:42 am - Reply

    ஓஹோ அதான் சிரிப்புக்கு காரணமா. //மற்றபடி, உங்கள் சொந்தக் கதையும் நல்லா இருந்துச்சு. ஆனால் என்ன, அதில் திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாமல் போர். :)// என்ன மாதிரி திடுக்கிடும் திருப்பம் எதிர்பார்த்தீங்கன்னு முன்னாடியே சொல்லியிருந்தா சேர்த்திருக்கலாம் 😉

    அபி அப்பா, நீங்க கொடுத்த எண்ணை சுழற்றியாச்சு. நன்றி.

  10. அய்யனார் April 8, 2007 at 8:42 am - Reply

    nalla pathivu

    🙂

  11. சுல்தான் April 8, 2007 at 9:01 am - Reply

    அவரவர்களின் எண்ணங்கள்தானே எழுத்தாகிறது. நேரே பார்க்காதவர்களையும் அவர்களின் எழுத்துக்கள் நன்றாகவே பரிச்சயப்படுத்துகிறது.
    //எப்பவுமே அப்படி இருக்கணும்னு சின்னதிலிருந்தே ஒரு வைராக்கியம்//
    வைராக்கியப்படி வாழ்க்கை வாழ்வதற்கு கொடுப்பினை இருக்க வேண்டும். உங்களுக்கு வாய்த்தது மகிழ்ச்சி. இந்த மாதிரி வைராக்கியத்தினால் எதையாவது இழந்ததாக எப்போதாவது உங்களுக்கு வருத்தமேற்பட்டதுண்டா?
    ஏனெனில், என் எண்ணப்படி வாழ இயலாவிட்டாலும், அது இறைவன் புறத்திலிருந்து எனக்கேற்பட்ட நன்மையாக சில நேரங்களில் நான் நினைத்து மகிழ்ந்ததுண்டு.

  12. ஜெஸிலா April 8, 2007 at 9:18 am - Reply

    நன்றி அய்யனார் & சுல்தான். //இந்த மாதிரி வைராக்கியத்தினால் எதையாவது இழந்ததாக எப்போதாவது உங்களுக்கு வருத்தமேற்பட்டதுண்டா?// இறைவன் கிருபையில் அத்தகைய வருத்தம் ஏற்பட்டதில்லை. ஒருவேளை லட்சியம் பெரிதாக இருந்ததால் மற்றவையெல்லாம் இரண்டாம்பட்சமாக தெரிந்திருக்கும் அதனாலேயே அப்படி ஒரு வருத்தப்படும் சூழலுக்கு வரவில்லை.

  13. சுல்தான் April 8, 2007 at 9:54 am - Reply

    //இறைவன் கிருபையில் அத்தகைய வருத்தம் ஏற்பட்டதில்லை.//
    என்றுமே ‘இன்னும் மகிழ்வோடே வாழ’ வாழ்த்துக்கள்.

  14. நல்ல பகிர்வு….

    இன்னும் பத்து வருடம் கழித்து இதனை விடவும் நல்லா முன்னுக்கு வந்திறுக்கும்..அப்பவும் இதுபோன்ற ஒரு பதிவு வரும்னு எதிர்பார்க்கின்றேன்.

  15. கோபிநாத் April 8, 2007 at 5:18 pm - Reply

    துபாய் பத்தி உங்க பார்வையில் கலக்கியிருக்கீங்கக்கா ;-))

    \ஒரு பெண்ணாலயும் எல்லா விதத்திலயும் பெத்தவங்களுக்கு ஒரு ஆணை விட அதிகமாகவே உதவ முடியும்னு நிரூபிச்சிட்டேன்.

    உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம். இன்னும் பல வெற்றிகள் பெற இந்த தம்பியின் வாழ்த்துக்கள்

  16. ஜெஸிலா,

    சின்ன வயசிலேயே தொழில் முனைவராக இருந்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்களை இன்னும் விரிவாக எழுதினால் பலருக்கு பயன்படும். நன்றி.

    ‘என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்காமல் யார் எழுதியது என்று பார்ப்பது’ ஓரளவு நியாயம்தான் என்று படுகிறது. நூற்றுக் கணக்கான பதிவுகள் வெளியாகும் போது எதைப் படிப்பது என்று தேர்வு செய்ய ஏதாவது வழி வேணுமே! இந்த இடுகையில் ஒங்க சொந்தக் கதை தெரிந்த பிறகு உங்கள் படைப்புகளின் பார்வைப் பின்னணி புரிந்து படிக்க முடியும். அந்த வகையில் எழுதுபவரின் சொந்தக் கதையும் தேவைதானே!

    அன்புடன்,

    மா சிவகுமார்

  17. ஜெஸிலா April 8, 2007 at 5:25 pm - Reply

    நன்றி சுல்தான். இன்ஷா அல்லா ரசிகவ் ஆயுசு இருந்தால். நன்றி கோபிநாத் தம்பி.

    //இந்த இடுகையில் ஒங்க சொந்தக் கதை தெரிந்த பிறகு உங்கள் படைப்புகளின் பார்வைப் பின்னணி புரிந்து படிக்க முடியும். அந்த வகையில் எழுதுபவரின் சொந்தக் கதையும் தேவைதானே!// தெரிந்திருந்தால் முதல் பதிவா போட்டிருப்பேனே? நன்றி.

  18. நண்பன் April 8, 2007 at 5:52 pm - Reply

    Palm Dubai is visible from the sky is true. I had a picture taken in 2004 from the Satellite. I do not know whether, the concerned authorities would allow me to publish the picture in the blog!!! If they allow, then I can present the same.

    Then as per today’s press release, Burj Dubai had crossed 120 storey and at 455m height, now its the tallest building in the middle east as well as Europe.

    And 10 year – a decade is a good time frame to observe the changes. I have seen the enitre Marina rising up from no where in the last 3 years!!!

    Now, major Universities are planning to send their team to study the success of Duabi and whether it would be sustainable – the Growth rate at this pace!!!

    Let us wait and watch for their report!!!

    (eKalappai problem – Hence in English – Sorry)

    Nanban

  19. Anonymous April 9, 2007 at 7:49 am - Reply

    Dear Madam,

    a.
    Kindly check the authenticity of first photo, ‘cause in 1990 those roads were fully asphalted and the appearance cannot be like this.

    b.
    Does anyone have the rear view of Burj Al Arab, that is, the perspective from right opposite side of what you have published.

    With warm regards
    Dubaiwala

  20. ஜெஸிலா ரொம்ப நல்லா எழுதிட்டீங்க.

    துபாய் வரும்போது உங்களைச் சந்திக்க முயற்சிக்கிறேன்(ஜூலை)

    உண்மைதான் மனித நட்பு வட்டாரம் வளருவதே ஒருவரை ஒருவர் தெரிந்த பிறகுதான்.
    அந்த வகையில் உங்களைப் பற்றிப் படிக்க மனசு நிறைவா இருக்கு.

  21. sundar April 9, 2007 at 7:50 am - Reply

    உங்கள் தன்னம்பிக்கையும் அதன் விளைவான வாழ்க்கையோட்டமும் ஒரு ஆச்சர்யக்குறி…துபாய் பற்றி நல்ல அலசல். துபாய் வந்து 3 மாதங்களே ஆன என் போன்றோருக்கு பெரிய ” ஆஹா”….மொத்ததில் நல்ல பதிவு….சேதுவின் பின்னூட்டம் படித்து இங்கே வந்தேன்…

  22. உங்களது சொந்தக் கதையும், துபாய் கதையும் நன்றாக உள்ளது. உங்களை மாதிரி வீட்டுக்கு ஒரு பெண் பெற்றோர்களுக்கு உதவுவதில் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்று சொன்னது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும். துபாய் பற்றிய செய்திகள் நல்ல அறிவுள்ள செய்திகள். தெரிந்து கொண்டோம்.. கூடவே ஒரு சிறிய வேண்டுகோள். இந்த யூரோ, துபாய் கரன்ஸிகள் பற்றித் தெரிவிக்கும்போது நமது இந்திய ரூபாய் மதிப்பில் எவ்வளவு என்பதையும் சொல்லிவிட்டீர்களானால் என்னைப் போன்ற கணக்கு ‘மக்கு’கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். நன்றிகள் பல..

  23. ஜெஸிலா April 9, 2007 at 8:36 am - Reply

    விளக்கமான விவரத்திற்கு நன்றி ரசிகவ்.

    துபாய்வாலா 1997-ல் நான் வரும் போது ஷேக் சையத் சாலை இப்படிதான் இருந்தது. எனக்கு இணையத்தில் கிடைத்த படம்தான் அது. புர்ஜ் அல் அரபின் படம் நீங்கள் கேட்டது போல் கிடைத்தால் எங்கு அனுப்புவது?

    வாங்க வல்லி. புதிய முகத்தை சந்திக்க ஆவலாக உள்ளேன். ஆமா ஏன் ஜூலை கொழுத்தும் வெயிலில் வரீங்க?

    //ஒரு ஆச்சர்யக்குறி…துபாய் பற்றி நல்ல அலசல். துபாய் வந்து 3 மாதங்களே ஆன என் போன்றோருக்கு பெரிய ” ஆஹா”….// நன்றி சுந்தர் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை. நீங்களும் நம்ம ஊருதானா மிக்க மகிழ்ச்சி.

    நன்றி உண்மை தமிழன். 60 யூரோ = ரூ.3,440/- //ஒரு இரவு தங்க $7500லிருந்து $15000 வரை இருக்காம். // ரூ. 322,562.500 – 643,125.000. இனி வரும் பதிவுகளில் இந்திய ரூபாயில் குறிப்பிட தவற மாட்டேன்.

  24. C.M.HANIFF April 11, 2007 at 5:29 am - Reply

    Ungal pathival dubaiyai oru visit adithu vanthu vitten 😉

  25. எல்லாம் சரிதான் கடைசியா ஒரு காமெடி அடிச்சிருக்கிங்க அக்கா எனக்கு சிரிப்பு வந்திடிச்சி.

  26. நானானி May 1, 2007 at 5:49 am - Reply

    ஜெஸிலா!
    உங்கள் பதிவுகளில் சிலது படித்தேன்.
    துபாய் பற்றி நிறைய விபரம் தெரிந்து
    கொண்டேன். உங்கள் சொந்தக்கதை
    சோகக்கதை அல்ல. சாதித்த கதை!!
    வாழ்த்துக்கள்!!

  27. ஜெஸிலா May 1, 2007 at 5:59 am - Reply

    //Ungal pathival dubaiyai oru visit adithu vanthu vitten 😉 // நன்றி ஹனீபா.

    //எல்லாம் சரிதான் கடைசியா ஒரு காமெடி அடிச்சிருக்கிங்க அக்கா எனக்கு சிரிப்பு வந்திடிச்சி// அடுத்தவங்களை சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்னு சொல்லுவாங்க. எனக்கு எளிதாப் போச்சு 😉

    //உங்கள் சொந்தக்கதை
    சோகக்கதை அல்ல. சாதித்த கதை!!
    வாழ்த்துக்கள்!! // மிக்க நன்றி நானானி.

Leave A Comment