ஒரு வெற்றி விழாவும் சில பின்னணிகளும்..

அமீரகத் தமிழ் மன்றத்தின் விழாக்களைப் பற்றி எழுத வேண்டுமென்றாலே நான் மட்டுமல்ல எங்கள் அமைப்பின் தலைவர் ஆசிப்பும் கூட நம் குழந்தையைப் பற்றி நாமே கூறிக் கொள்வது சரியல்ல என்று எண்ணியே பதியப்பட வேண்டிய பகிரப்பட வேண்டிய விஷயங்கள் பல விட்டுப்போயுள்ளது.

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் வரிசையில் விழாக்களை நடத்திப்பார் என்பதையும் சேர்க்க வேண்டிய கட்டாயத்தின் அவசியத்தை உணர்ந்தேயிருப்பார்கள் அமீரகத்தின் தமிழ் அமைப்புகள்.

அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பும் அமீரகத் தமிழ் மன்றமும் இணைந்து கோபிநாத் அவர்களை அழைத்து இரு தினங்கள் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தோம். பத்தாம் ஆண்டு விழா என்பதால் பலமணி நேரம் நிறைவான நிகழ்ச்சி தர வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தாலும் அபுதாபியில் வியாழக்கிழமைகளில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பேயில்லை என்பதையறிந்து கோபிநாத் வந்தால் போதும் பத்தாம் ஆண்டுவிழா சிறப்பு பெற்றுவிடுமென்ற நம்பிக்கையில் வியாழன் நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டு அரும்பாடுபட்டு அரங்கத்தையும் அமர்த்தினோம். ஒவ்வொரு அரங்கத்தைக் கேட்கும் போதும் அந்த தேதியில் கிடைக்கவில்லை என்று செய்தி வரும் போது மிகவும் சோர்வாகியது மனது. சுழற்றாத எண்ணுமில்லை, மேயாத இணைய தளமுமில்லை என்ற அளவுக்கு எல்லா இடத்தில் தேடியும் எங்கள் தேவைகளோடு சரிவரவில்லை. இறுதியில் துபாய் பெண்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரி வளாக அரங்கம் முடிவானது. எல்லா அரங்கமும் தட்டிக்கழிந்தது இது போன்ற அற்புதமான வசதிகள் கொண்ட அரங்கத்திற்காகவென்று நம்பினோம். இந்த அரங்கம் எங்களுக்குக் கிடைத்ததே எங்களுக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக இருந்தது. இதுவரை இங்கே எந்தத் தமிழ் நிகழ்ச்சியும் நடைபெற்றதே இல்லை. எங்கள் பத்தாம் ஆண்டுவிழாவே முதல் தமிழ் நிகழ்ச்சி என்பதோடு அமீரகத்திற்கு முதல் முறையாக கோபிநாத் என்ற நிறைவான இன்பத்தில் திளைத்திருந்த வேளையில், `நீயா நானா போன்ற ஒரு ஆரோக்கிய விவாத மேடையில் பங்குபெற விருப்பமா` என்ற அறிவிப்பை பரவலாக வலம்வர செய்து மக்கள் உற்சாகமாக பெயர்கள் தந்துக் கொண்டிருந்த தருணத்தில்தான் விஜய் டி.வி.யில் `நீயா நானா` பகுதியில் ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பின் பிரச்சனை பீறிட்டது.

கோபிநாத் இங்கு வந்துவிடுவாரா என்ற சவால்கள், கோபிநாத் எங்கே வரப்போகிறார் என்ற ஏளனங்கள், கண்டிப்பாக நிகழ்ச்சி நடக்கப் போவதில்லையென்ற எதிர்மறை துன்புறுத்தல்கள் எங்களைத் துரத்தியது. என்னவானாலும் சரி கோபிநாத் வந்தே ஆக வேண்டுமென்ற ஆதங்கம் மேலோங்கியது.

எதிர்மறையான செய்திகளும், சிலரின் பொறாமை சூழ்ச்சியிலும் குழப்பித்திற்குள்ளான அபுதாபி அமைப்பு அதன் விளைவாக எங்களுடன் இணைந்து செயல்படவிருப்பதிலிருந்து பின்வாங்கியது. கோபிநாத்தை நாங்கள் நேரடியாகத் தொடர்பு கொண்ட போது 18 ஆம் தேதிக்கு அவருக்கு படப்பிடிப்பிடிப்பு இருப்பதால் வரவியலாது என்ற செய்தி எங்களை நொறுங்க வைத்தது. ’அடுத்து என்ன?’ என்ற போது எத்தனை நாட்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை ஆனால் நம் ஆண்டுவிழா கோபியோடுதான் என்பதில் உறுதியாக இருந்தோம். வெவ்வேறு தினங்களின் சாத்தியக்கூறுகளையும் மற்ற விருந்தினர்களின் வசதிகளையும் சரிப்பார்த்திருந்த போது குறித்த தேதியில் நிகழ்ச்சி நடைபெற வேண்டுமென்ற என் பிராத்தனை வீண் போகவில்லை. பிராத்தனையின் பலனாக 18 ஆம் தேதியிருந்த படப்பிடிப்பு அவரே ஒத்திவைத்து ஒத்துழைத்தது முதல் மகிழ்ச்சி. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று விழா வேலைகளில் மூழ்கினோம்.

எவ்வளவு விளம்பரம் செய்திருந்தாலும், விழா அமைப்பவரின் பின்புலம் சிறப்பானதாக இருந்தாலும், விழாவின் விருந்தினர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி நம் தமிழ் மக்கள் நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்து சேர்வது என்பது இன்னும் குதிரைக் கொம்பாக உள்ள விஷயமே. அப்படியிருக்க அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய 10 ஆம் ஆண்டு விழா வியாழன் 18 பெப்ரவரி 2010 துபாய் உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் சரியான நேரத்திற்குத் தொடங்கியதே விழாவின் முதல் வெற்றி.

நிகழ்ச்சி தொய்வில்லாமல் நன்றாக அமைந்தது என்று பலதரப்பட்ட பார்வையாளர்களின் மடல்கள் வந்து குவிந்தாலும் மேடைக்குப் பின்னால் நடந்த இடையூறுகளை யாரும் அறிந்திருக்க முடியாதுதான். நாங்கள் செய்த முதல் தவறு நம் மக்களை நம்பி நுழைவுச் சீட்டை கிழிக்காமல் உள்ளே அனுமதித்தது. ஆயிரத்தி இருநூறு மக்கள் மட்டுமே கூட முடியும் என்பதால் அழைப்பிதழையும் விநியோகித்து நேரத்திற்கு வர முடியாவிட்டால் வாயில் கதவு பூட்டப்படும் என்று எச்சரிக்கை விடுத்தும் நிறைய பேரால் நேரத்திற்கு வர இயலவில்லை. காரணம் வியாழன் வேலைநாள் என்பதால் மக்கள் வரத் தாமதமானது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மிகவும் சாமர்த்தியமாக சிலர் தம்முடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து அழைப்பிதழ் இல்லாமலேயே அரங்கிற்கு வரச் செய்து, தம் நுழைவுச்சீட்டை மீண்டும் வெளியில் அனுப்பி அவர்களை உள்நுழையச் செய்த சூழ்ச்சி எங்களைப் பல பிரச்சனைகளுக்குள்ளாக்கியது. அழைப்பிதழ்கள் இருந்தும் பலர் வெளியேறியதும், பலர் நின்று கொண்டு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்ததும் இதனால்தான். நிறைந்த அரங்கத்தைத் தந்திருந்தாலும் இதனை முதன்மைக் குறையாகவே கருதுகிறோம்.

முக்கிய பிரமுகர்களுக்கு வேறு நிறத்தில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதில் இருக்கை வரிசைகள் குறிக்கப்பட்டிருந்ததை யாருமே பொருட்படுத்தாமல் தானே அதிபதி என்பதாக முதல் வரிசையில் உட்கார்ந்ததால் எங்கள் புரவலர்களும் நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானார்கள். ஒரு நிகழ்ச்சி நடக்கப் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது. அந்தப் பொருளை தந்து உதவிய புரவலர்களுக்கு முதல் வரிசையை தந்து கவுரவிப்பதுதானே நியாயம்? அந்த வகையான மரியாதையைக் கூட செய்ய முடியாமலாகிவிட்டது சிலரின் ஒத்துழைப்பில்லாமல் போனதால். தன்னார்வக் குழு அமைத்து இருக்கை சரிப்பார்த்து அமர வைக்க வேண்டிய சிலரே தம் அறை நண்பர்களை முன்னிருக்கையில் உட்கார வைத்து வேடிக்கை பார்த்த நிகழ்வு கூட நம் விழாவில்தான் முதன்முறையாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். எப்படித்தான் நம் மக்களால் இப்படி இருக்க முடிகிறது என்று யோசிக்கக் கூட முடியவில்லை.

நாம் ஒரு விழாவிற்குப் போவோம் எவ்வளவு பெரிய சிறப்பு விருந்தினர் வந்திருந்தாலும் மேடையில் அவர் வரும்போது பார்த்துக் கொள்வோமே தவிர எப்படியாவது முந்தியடித்துக் கொண்டு மேடையேறி அவர் அருகே நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியதே இல்லை. நான் என்னைப் போலவே மற்றவர்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் சில அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே பின் வழியாக மேடைக்கு வந்து பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு நம்மவர்கள் மேடை நிர்வாகத்தைச் சரியாக கவனித்துள்ளார்கள். மேடையில் விலை மதிப்புள்ள பொருட்களிருக்கும் அது தவறுதலாக களவுப் போய்விட்டால் யாரைச் சந்தேகிப்பது? இந்த பொது அறிவு கூட இல்லாமல் எப்படித்தான் சிலரால் செயல்பட முடிகிறதென்றே புரியவில்லை. நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களை அணுகி உத்தரவு கேட்டல்லவா பின் மேடைக்கு வர வேண்டும்? யார் கொடுத்தார்களோ இவர்களுக்கு அந்த தைரியத்தை.

இவர்கள் இப்படியென்றால் விழாவிற்கு ஒரு வாரத்திலிருந்து ஏன் விழாநாளன்று கூட நுழைவுச் சீட்டுக் கேட்டு மிரட்டல்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள் நுழைவுச்சீட்டு இந்த இடத்தில் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று பலவாறு விளம்பரப்படுத்தி ஒரு வாரத்திற்கு முன்பே நுழைவுச் சீட்டுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு விட்டது. எல்லாம் முடிந்த பிறகு மிகவும் தாமதமாக தனக்கு எப்படியும் கிடைத்துவிடுமென்ற எண்ணத்தில் வாங்காமல் விட்டுவிட்டு நான் இன்னார், நான் இந்த நிறுவனத்தின் மேலாளர் ’எனக்கு நுழைவுச்சீட்டு தராமல் எப்படி விழா நடக்க முடியும்’ என்ற தொனியில் மிரட்டல்களையும் பொறுத்துக் கொண்டோம். தெரியாதவர்களிடமும் இனிமையாகப் பேசி நுழைவுச்சீட்டு முடிந்துவிட்டது என்று சொன்னாலும் மற்றவர்களின் சூழ்நிலையோ பிரச்சனையோ அறியாமல் அதட்டுவதும், ’என்ன முகத்தில் அறைந்தாற் போல் தொலைப்பேசியை அவர் துண்டிக்கிறார் நான் யார் தெரியுமா?’ என்ற வண்ணம் புகார் எழுப்பியவர்களையும் இந்த இடத்தில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. விழா நடப்பதே இவர்களைக் கொண்டு நிறுத்தத்தான் என்று எப்படி இவர்களால் நம்பமுடிகிறது. இந்த ஆதிக்கப் போக்கோடு இருப்பவர்கள் எப்போதுதான் மாறுவார்கள்?

இதாவது பரவாயில்லை. கட்டுப்பாடு என்ற விசயம் மருந்துக்குக் கூட நம் மக்களிடையேயில்லை. அரங்கிற்குள் தண்ணீரோ பிற தின்பண்டங்களோ கொண்டு வரக்கூடதென்று அழைப்பிதழில் அச்சிட்டிருந்தும் ஏமாற்றி எடுத்துச் செல்வதை சாமர்த்தியமாகவே நினைக்கிறார்கள் அவர்கள். நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கம் முழுக்க தண்ணீர் பாட்டில்கள். மீண்டும் ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு அரங்கத்தை வழங்க நிர்வாகம் யோசிக்காமல் என்ன செய்யும்? வெளியில் உணவகத்திலும் கூட இதே நிலைதான். ஆயிரம் குப்பைக் கூடைகள் வைத்திருந்தும் தரை முழுக்க தேநீர் கோப்பைகளை விசிறியடித்து நமது பண்பாட்டைக் காப்பாற்றினார்கள் தமிழர்கள். இதனால் எனக்கென்ன நஷ்டம் என்ற நினைப்பிருக்கிறதே தவிர இம்மாதிரியான விழாக்களை எத்தனை சிரமப்பட்டு நடத்துகிறார்கள் என்பது போன்ற உணர்வு துளியும் இருப்பதாகத் தெரியவில்லை.

எத்தனை மனக் கசப்புகள் இருந்தாலும் ஓய்வில்லாமல் பலவகை விழா வேலையால் உடல் சோர்ந்திருந்தாலும், விழாவின் வெற்றிக் களிப்பிலும் மக்களின் நம்பிக்கையான வார்த்தைகளிலும் பாராட்டுதல்களிலும் கிடைக்கும் உற்சாகம் எல்லாவற்றையும் மறக்கச் செய்து நம்மை புதுப் பொலிவோடு நம்முடைய அடுத்த விழாவை நோக்கி விரையச் செய்கிறது…

இதையும் பாருங்கள்:
http://kusumbuonly.blogspot.com/2010/02/blog-post_23.html

மற்ற படங்களையும் காணொளியையும் பார்க்க எங்கள் முகப்புத்தக பக்கத்தில் இணைந்துக் கொள்ளுங்கள்: http://www.facebook.com/ameeraga.thamiz.mandram

தமிழ் இணையச் செய்தித் தளங்களில் எங்களது செய்தி:

http://sangamamlive.in/index.php?/content/view/7043/1/

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/uae-tamil-mandram-celeberates-10th.html

http://www.tamilsaral.com/news%3Fid%3D3567.do

http://www.thinnai.com/?module=displaystory&story_id=81002201&format=html

விழா செய்தி ஆங்கிலத்திலும்:

http://www.prlog.org/10544127-10th-anniversary-of-ameeraga-thamiz-mandram-tamil-association.html

http://www.pressreleasepoint.com/ameeraga-thamiz-mandram039s-10th-anniversary-celebration

By | 2010-02-25T05:59:00+00:00 February 25th, 2010|அனுபவம்/ நிகழ்வுகள்|26 Comments

26 Comments

  1. கண்ணா.. February 25, 2010 at 7:32 am - Reply

    இந்த நிகழ்ச்சிக்கு உழைத்தவர்களுக்கு மட்டுமல்ல…10 ஆண்டுகளாக தமிழ் மன்றத்தை சிறப்பாக நடத்திவரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  2. //இதாவது பரவாயில்லை. கட்டுப்பாடு என்ற விசயம் மருந்துக்குக் கூட நம் மக்களிடையேயில்லை. அரங்கிற்குள் தண்ணீரோ பிற தின்பண்டங்களோ கொண்டு வரக்கூடதென்று அழைப்பிதழில் அச்சிட்டிருந்தும் ஏமாற்றி எடுத்துச் செல்வதை சாமர்த்தியமாகவே நினைக்கிறார்கள் அவர்கள். நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கம் முழுக்க தண்ணீர் பாட்டில்கள். மீண்டும் ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு அரங்கத்தை வழங்க நிர்வாகம் யோசிக்காமல் என்ன செய்யும்? வெளியில் உணவகத்திலும் கூட இதே நிலைதான். ஆயிரம் குப்பைக் கூடைகள் வைத்திருந்தும் தரை முழுக்க தேநீர் கோப்பைகளை விசிறியடித்து நமது பண்பாட்டைக் காப்பாற்றினார்கள் தமிழர்கள்//

    நிகழச்சியில் நடந்தது துபாய் ஆனாலும்… வந்தவர்கள் இந்தியர்கள்தானே… அதான் இப்படி ஒண்ணும் பண்ணமுடியாத ஜசீலாக்கா…

    முயற்சிக்கு உங்களுக்கும் அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்கள்.

  3. அண்ணாமலையான் February 25, 2010 at 8:12 am - Reply

    வாழ்த்துக்கள்..

  4. கவிதை காதலன் February 25, 2010 at 8:12 am - Reply

    ரொம்ப தெளிவா இருக்கீங்க

  5. ஹுஸைனம்மா February 25, 2010 at 8:50 am - Reply

    உங்கள் அனைவரின் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    நேரந்தவறாமையும், சுத்தமும் நம்மவர்களுக்கு கைவராதது என்றில்லை; இடத்துக்கேற்றவாறு அலட்சியம்தான்;

    இனிவரும் விழாக்களும் இதைவிடச் சிறப்பாக நடத்த உதவும் இதன் அனுபவங்கள்.

  6. gulf-tamilan February 25, 2010 at 8:50 am - Reply

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!!

  7. ☀நான் ஆதவன்☀ February 25, 2010 at 9:05 am - Reply

    உங்கள் ஆதங்கம் சரியாகப்பட்டாலும் குறையை கூற மட்டுமே இந்த பதிவோவென்று நினைக்க தோன்றுகிறது. 🙁

    விழாவின் சில நல்ல பிண்ணனிகளையும், சுவாரசியமான நிகழ்வுகளையும் சேர்த்திருக்கலாம்.

    உங்கள் உழைப்புக்கு நன்றிகள் பல.

  8. இந்த ’சாமர்த்தியசாலிகள் ‘ தொல்லை எல்லா இடத்திலும் இருக்கும்போல.. கஷ்டம் தான்.. 🙁

  9. அபுஅஃப்ஸர் February 25, 2010 at 10:23 am - Reply

    இதற்காக உழைத்த அணைத்து நிர்வாகிகளுக்கும் ஹேட்ஸ் ஆஃப்

  10. அப்துல் கதீம் February 25, 2010 at 10:25 am - Reply

    நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செயதல் தவிர்க்கலாமே என்ற உள்ளுணர்வு வேண்டும் என்பதை, உங்கள் வெற்றிவிழா பற்றிய பதிவாவது நம்மவர்கள் மனதில் பதிய வைக்கும் என நம்புவோம். ஒரு வெற்றி விழாவின் பின் பாராட்டுகள் இதமாக இருப்பினும், அவற்றை இந்த கசப்பான அனுபவங்கள் மூழ்கடித்துவிடுமே. அடுத்தடுத்த விழாக்கள் இனிய நினைவுகளை மட்டுமே மீதமாக விட்டுச்செல்லட்டும்.

  11. குசும்பன் February 25, 2010 at 11:26 am - Reply

    செம சூடு!

    ஜில்லுன்னு மோர் குடிச்சால் தான் சூடு அடங்கும் போல!

  12. S Maharajan February 25, 2010 at 11:27 am - Reply

    வந்திருந்தது அனைவரும் தமிழர்கள் தானே!
    பிறகு எப்படி சொல்படி கேட்போம்.
    எங்களுக்கு மற்றவர்களை குறை சொல்லி தானே பழக்கம்.

  13. ஜெஸிலா February 25, 2010 at 2:16 pm - Reply

    மிக்க நன்றி கண்ணா.

    பிரதாப், இந்த போக்கு மாற வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

    நன்றி அண்ணாமலையான்.

    ரொம்ப தெளிவா இருக்கேனா? அப்படின்னா?

    உண்மைதான் ஹுசைனம்மா இனி வரும் காலத்தில் இதனை எதிர்கொள்ள முயற்சிப்போம்.

    நன்றி வளைகுடா தமிழன். தற்போது நீங்கள் இருக்கும் இடம்?

  14. ஜெஸிலா February 25, 2010 at 2:26 pm - Reply

    மறுக்கவில்லை ஆதவன். குறைகளைப் பட்டியலிடவும் அதனை புரிந்தாவது வரும் காலங்களில் மக்கள் திருந்திவிட மாட்டார்களா என்ற ஆதங்கத்தில் பகிரப்பட்டவை.

    சாமர்த்தியசாலின்னு தவறா எழுதிவிட்டேன் முத்துலெட்சுமி. அவர்களை குறுக்குபுத்திக்காரர்கள் என்று அழைப்பதே சரி 😉

    நன்றி அபுஅஃப்ஸர்.

    அதே நம்பிக்கையில்தான் பதிந்திருக்கிறேன் கதீம் அண்ணன். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    இந்தக் காலநிலையில் மோர் குடிச்சா ஜல்ப்பு வந்திடும் குசும்பரே. ‘-)

    மஹாராஜன், தமிழர்கள் எதிர்காலத்தில் புரிந்துக் கொண்டு நடப்பார்கள் என்று நம்புவோமே.

  15. ஆமா ஜெஸிலா குறுக்குபுத்திக்காரர்கள் என்பது சரிதான்.. இங்க தில்லியில் அடிக்கடி வரிசையில் புகுபவர்கள் அல்லது இதுபோல குறுக்குவழிக்காரர்களை திட்டும் போது .. நீ தான் ரொம்ப ஸ்மார்ட்டுன்னு நினைப்பா .எங்க குறுக்க புகுறேன்னு திட்டுவாங்க.. 🙂

  16. chidambaranathan February 26, 2010 at 2:01 pm - Reply

    ஜெஸிலாவின் சூடு நன்றாக இருந்தது. அமீரக தமிழர்களுக்கு ஒரு பிரதி அனுப்பி வைக்கலாம். இது போன்ற குறைபாடுகள் எல்லா இடத்திலும் இருக்கும். இருந்தாலும் இவ்வளவு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  17. ♠புதுவை சிவா♠ February 26, 2010 at 2:02 pm - Reply

    பதிவை படிச்சா விழாவுக்கு இச்சை தறுவது நீயா நானா? என பலத்த போட்டி நிலவி இருக்கும் போல.

    :-))))))))

  18. கோபிநாத் February 26, 2010 at 2:02 pm - Reply

    \கண்ணா.. said…
    இந்த நிகழ்ச்சிக்கு உழைத்தவர்களுக்கு மட்டுமல்ல…10 ஆண்டுகளாக தமிழ் மன்றத்தை சிறப்பாக நடத்திவரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    \

    ரீப்பிட்டே ;)))

  19. ஜெஸிலா February 28, 2010 at 3:55 am - Reply

    அமீரகத் தமிழர்கள் படிக்க வேண்டுமென்றே எழுதியுள்ளேன். அதனால் நீங்கள் தனியாக பிரதியெடுத்து அனுப்பி சிரமப்பட வேண்டாம் சிதம்பரஸ் 🙂

    புதுவை சிவா நீங்க எழுதியதின் உள்ளர்த்தம் என்னவோ!?

    ரிப்பீட்டுக்கு நன்றி கோபி :-).

  20. Anonymous February 28, 2010 at 1:59 pm - Reply

    Please appload the video of that program as soon as possible..
    thanks in advance
    syed rahman, KSA

  21. சிரம்மங்களையும் கஷ்டங்களையும்தாண்டி நல்லமுறையில் அமைந்தமைக்கு வாழ்த்துக்கள்.. அமீரக தமிழ்மன்றதினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்..

  22. பஹ்ரைன் பாபா March 13, 2010 at 11:57 am - Reply

    நிறைய இடங்கள்ள உங்க ஆதங்கம் வெளிப்பட்டிருக்கு.. என்ன பண்றது.. எல்லா மனிதர்களும் எல்லா விசயத்தையும் புரிஞ்சி நடக்குறதில்லையே.. அப்டி நடந்திட்டா.. அவங்க தமிழர்கள் இல்லையே.. பொதுவா எல்லாருக்கும் இது போன்ற பொது நிகழ்ச்சிகள்ல கட்டுப்பாடோட இருக்கிறதில்ல.. சொந்த வீட்ட தவிர எங்க போனாலும் இவங்க குப்பய போடதான் செய்வாங்க.. இன்னல்களைத்தாண்டி நிகழ்ச்சிய நடத்தி முடிச்சிருக்கீங்க.. இது போதாதாங்க.. பொறாமைபட்டவங்க.. வீண் சவடால் விட்டவங்களுக்கேல்லாம்..
    சோதனையே இல்லைனா சாதனை எப்படி.. அவங்க அப்டிதான் நீங்க தொடர்ந்து உங்க பணிய சிறப்பா செய்யுங்க..

  23. மஞ்சூர் ராசா March 14, 2010 at 10:27 am - Reply

    குவைத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளிலும் இது போன்ற பிரச்சினைகளை பலமுறை பார்த்திருக்கிறேன்.

  24. வாழ்த்துக்கள்

  25. உங்களுடைய எழுத்தின் வ்சீகரமும், சமூக அக்கரையும் ஆன்மீகம் பற்றியும் நீங்கள் எழுத மாட்டீர்களா என ஒர் ஆசையை தூண்டியது.

    தமிழ் மன்றம் செயல்பாடுகள், உறுப்பினர்கள் பற்றி எனக்கு தெரிவிக்க முடியுமா?

    ஒ.நூருல் அமீன்

  26. malar May 1, 2011 at 3:58 am - Reply

    கோபினாத் பேசிய விடியோ இருந்தால் இணையத்தில் போடுங்கள்….

Leave A Comment