சுகுணா என் காதலி

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை. (இப்படி ஏதாவது பில்டப் கொடுத்தாதான் ஒருநாளாவது இந்த படம் ஓடும்:-) )

இப்படியாகும் என்று நினைக்கவேயில்லை நான். எதுதான் நான் நினைத்த படியெல்லாம் நடந்திருக்கிறது? இந்த பாஸ்கரும் அந்த பாஸ்கராக இருப்பான் என்று தோன்றக் கூட இல்லை எனக்கு. கல்லூரி முடிந்தவுடனேயே இங்கு வந்துவிட்டதால் ஊர் வாசனையே இல்லாமல் போய் விட்டது. பிடித்தது கிடைக்காது என்று தெரிந்த பிறகு கிடைத்ததை பிடிப்பதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன். முதல் வாரம் அவள் வீடு என்று தெரியாமலேயே இருந்திருக்கிறேன். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளில் தான் அவள் முகம் பார்க்கும் வாய்ப்பே கிடைத்தது. எனக்கு மிகுந்த ஆச்சரியம். அவள் தானா அல்லது பார்ப்பவர்கள் எல்லாம் அவளாக ஒரு காலத்தில் தெரிந்துக் கொண்டிருந்த அதே நோய் மீண்டும் வந்துவிட்டதா என்று எனக்கே சந்தேகம். என் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதாக அதே கணம் பாஸ்கரும் ‘சுகுணா’ என்று விளித்து என் அச்சத்தை தெளிவாக்கிவிட்டான். ஆமாம் அது என் சுகுணாவேதான். எப்படி அடுத்தவன் பொண்டாட்டியை ‘என் சுகுணா’ என்கிறேன் என்றெல்லாம் கேட்க கூடாது. இப்போது வேண்டுமானால் அவள் பாஸ்கரின் மனைவியாகி போகலாம், என் மனதளவில் இன்றும் அவள் ‘என் சுகுணா’தான்.

லேசில் எந்த பெண்ணையும் பிடித்துவிடாது எனக்கு. சின்ன வயதிலிருந்தே அம்மாவை கண்டால் ஒருவகை வெறுப்பு, காரணம் அவள் என்னை பெற்றவள் அல்ல என்பதால் இல்லை அவள் என் தந்தையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளாததால். யாரிடமும் ஒட்டாமலேயே வளர்ந்துவிட்டேன். என் சிந்தனைகளையும் யோசனைகளையும் அவ்வப்போது எழுதுவேன் அதற்கு ‘கவிதை’ என்று நானே பெயர் சூட்டிக் கொண்டேன். ஆனால் அது எனக்கு மட்டுமே புரிந்தது. அதனால் அதனை இப்போது எவரேனும் வாசித்தால் ‘பின் நவீனத்துவத்துடன்’ சேர்த்து விடக் கூடும். அந்த வகையான எழுத்துக்கள். எழுதியதை வெறுப்பில் பறக்க விட்டுக் கொண்டிருந்த போது, இனி எழுதவே போவதில்லை என்று எல்லாவற்றையும் வீசிக் கொண்டிருந்த போது சில பக்கங்கள் சுகுணாவின் காலை சென்றடைய குப்பை என்று ஒதுக்காமல் ஒரு காகிதத்தை மட்டும் கையில் எடுத்தாள். முதலில் என் காகிதத்தை ஒரு பெண் தொட்டாள் என்றதும் கோபம்தான் பிளறியது, பறக்கவிட்டாலும் அந்த குப்பை எனக்கே சொந்தமானது. எடுத்தவள் முகம் மலர்ந்தது. தூரத்திலிருந்து கவனித்தேன். “ஹே சூப்பர் கவிதைடி” என்று தோழியிடம் இரசித்து சொல்லியது அந்த அமைதியான சூழலில் அவள் வார்த்தை மட்டும் என் காதில் எட்டவே அவளை நான் இரசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவளை அடிக்கடி காணவே முடியாது. என் சுகுணா மிகவும் அடக்கமானவள், அமைதியானவள், அழகானவள். பூமிக்கும் வலிக்காமல் நடப்பவள். பூமியை மட்டுமே பார்த்து நடப்பவள். எத்தனையோ முறை நான் அவளை கடந்து சென்ற போதும் அவள் என்னை கவனித்ததே இல்லை. நான் வசீகரிக்கும் ஆணாக இல்லாமல் போனதால் என்று சொல்லிவிடாதீர்கள். என்னை மட்டுமல்ல அவள் யாரையும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை. ஆனால் அந்த பாவி பாஸ்கரை மட்டும் எப்படித்தான் கவனித்தாள் என்று இன்னும் எனக்கு புரியவேயில்லை. ஒரே ஒரு முறைதான் அவளை அவனுடன் பார்த்தேன், மனம் ஒப்பவேயில்லை. அதுவும் அவள் வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில்தான் நின்று பேசிக் கொண்டிருந்தனர் இருவரும். என்ன உறவு என்று அவசரப்படாமல் தெரிந்துக் கொள்ளும் அவசரத்தில் நான் இருந்தேன். நானே அவள் வீட்டில் உள்ள ஒரு பெரியவரிடம் எதேச்சையாக ஏதோ காட்டுவதாக அவர்களை காட்டி விட்டேன். அதன் பிறகு என்ன ஆனது என்று எனக்கே தெரியாது. ரொம்ப நாளாக அவளை வெளியில் பார்க்க முடியவில்லை. காட்டிக் கொடுத்ததால் அவளை வீட்டில் அடித்தார்களோ என்று எனக்கு நானே கற்பனை செய்துக் கொண்டு கொஞ்ச காலம் குற்ற உணர்ச்சியில் இருந்தேன்.

நான் கல்லூரியில் இறுதி ஆண்டு முடிக்கும் போதுதான் அவள் முதல் ஆண்டில் காலெடுத்து வைத்திருந்தாள். அதனால் இன்னும் அவளுக்கு மணமகன் தேட காலமிருக்கிறது என்று கணித்துக் கொண்டு வெளிநாடு வேலை கிடைக்கவே பறந்துவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய திருமண பேச்செழவே, அவள் இறுதியாண்டுக்கு இப்போதுதான் வந்திருப்பாள் என்று கணக்கிட்டு அவளை விசாரிக்க சொல்லும் போது தெரிந்துக் கொண்டேன் அவள் பாஸ்கருடன் ஓடிப் போய்விட்டாள் என்று. ‘ஓடி போய்விட்டாள்’ என்று யாரும் தெரிவிக்கவில்லைதான், ஆனால் வேற்று சாதி பாஸ்கர் என்ற பையனுடன் திருமணம் முடிந்து விட்டது என்று தெரிய வந்தது. அப்போதுதான் நான் என் வாழ்க்கையின் ‘வில்லனின்’ பெயரையே தெரிந்துக் கொண்டேன். அவள் தூரத்தில் அவனுடன் இருக்கும் போது அவள் முகம் தனியாக பளிச்சிட்டு தெரிந்தது, அப்போது அவனை நான் கவனிக்காததால் இப்போது அவர்கள் வீட்டிலேயே மேல் தளத்தில் வாடகைக்கு இருக்கிறேன். இருப்பினும் ஓரத்தில் ஒரு வகை ஆசை. அந்த ஆசையில் ஒருவகை வலி. அதனால் என் மனசு எனக்கு சொன்னதெல்லாம் ‘இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதென்றால் அதுவும் கடல் கடந்து, அவள் வாழ்க்கையில் உனக்கு இன்னும் இடம் இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே இருந்தது. கடிவாளமில்லாத மனது கண்டபடி அலைபாயத்தானே செய்யும்? ஆனால் சில நேரங்களில் அவர்களை கடந்து நான் மேலே ஏறும் போது, பாஸ்கரும் சுகுணாவும் அவர்களுடைய குட்டி தேவதையுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மிகுந்த பொறாமையாக இருக்கும். நான் இருக்க வேண்டிய இடத்தில் அவன் என்று நினைத்துக் கொள்வேன். குட்டி தேவதையின் பெயர் கூட தெரியாது எனக்கு. என்னை கண்டாலே ஓடி ஒளிந்துக் கொள்வாள். ‘உனக்குமா என்னை பிடிக்கவில்லை’ என்று நான் நினைத்துக் கொள்வேன். நான் கடக்கும் போது என்னை நிமிர்ந்தும் பார்த்ததில்லை என் சுகுணா. பார்த்தால் மட்டும் அவளுக்கு என்னை தெரிந்துவிடப் போகிறதா என்ன? இருப்பினும் கண்ணுக்குள் கலக்க மாட்டாளா என்ற அற்ப ஆசை இருக்கத்தான் செய்கிறது. அப்படி வாய்ப்பு கிடைக்காதா என்று நான் பார்க்கும் போதெல்லாம் அவள் முதுகை மட்டுமே காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவர்கள் பேசி சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும் போது ‘ஒருவேளை அவள் என்னுடன் இருந்திருந்தாள் இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்க முடியாதோ’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டாலும் என் அலைபாயும் மனம் ‘இதை விட சந்தோஷமாக இருந்திருப்பாள். பிடிக்காத மனைவியென்பதாலேயே முன்னேற முயற்சிக்காமல் அவளையும் இங்கு அழைத்து வராமல் இருக்கிறாய். இவள் மனைவியாகியிருந்தால் நீ எங்கேயோ போயிருப்பாய்’ என்று சொல்லி என்னை கற்பனை உலகிற்கு இழுத்து செல்லும்.

வாழ்க்கையில் எனக்கு காதல் என்று பூத்தது இவளுடன் மட்டும் தான் அதையும் தெரிவிக்காமலேயே என் வாழ்வு முடிந்து விட்டால், என் காதலுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே? இவளுடன் பேசாமலேயே பழகாமலேயே பல நாட்கள் குடித்தனமே நடத்தியிருக்கிறேன் என் மனதளவில், என் உலகத்தில். இவளுக்காக குற்ற உணர்ச்சியில் இருந்த போது சோறு தண்ணியில்லாமல் என்னை நானே வதைத்திருக்கிறேன். ‘நம் உலகம்’ என்று ஒரு வலைதளமே அமைத்து இவளுக்காக எழுதுவதாக எழுதி தள்ளியிருந்திருக்கிறேன் ஏதாவது ஒரு மூலையில் இவள் படித்துவிடமாட்டாளா என்ற ஆவலுடன். ‘உனக்காக எழுதித் தள்ளியதை எவன் எவனோ இரசித்துவிட்டு சென்றிருக்கிறான் சுகுணா. ஆனால் எழுதவே வேண்டாமென்றிருந்த என்னை எழுத வைத்த உனக்காக நான் எழுதும் போது நீ இல்லாதது எனக்கு எங்கோ நோவுகிறது. சுகுணா உனக்கான என் காதலை தெரிவிக்க வேண்டும், வேண்டும்’ என்ற வெறியில் தான் அவளுக்காக அந்த கடிதத்தை நான் எழுதினேன். அந்த கணத்தில் எனக்கு ‘நான் திருமணமானவன், ஒரு குழந்தையின் தகப்பன்’ என்ற உணர்வே இல்லாமல் இருந்தது. மனைவியை காதலிக்காமலேயே மகன் எங்கிருந்து வந்தான் என்ற அசட்டுத்தனமான கேள்வியை நீங்கள் கேட்கக் கூடாது. காதலில் பிறப்பதல்ல உயிர், கலவியிலும் உருவாகும் என்பதால் பிறந்துவிட்டான். எழுதினேன் காதல் சொட்டும் கவிரசனையோடல்ல, மிகவும் சுருக்கமாக ‘கற்பனையில் வாழ்ந்துவிட்டோம் சிறிது காலமாவது நிஜத்தில் வாழ்ந்து பார்ப்போமா, வாய்ப்பளிப்பாயா?’ என்று மட்டுமே ஒரு அழகிய ஆங்கில வரிகள் பதித்த காதல் வாழ்த்து அட்டையில் என் கைப்படவும் எழுதிவிடாமல் தட்டச்சு செய்து அதை படிமமெடுத்து ஒட்டி எவ்வளவு நாசுக்காக அவள் ‘யார் யார்’ என்று யோசிக்கும் தவிப்பை அவளுக்கு தர நினைத்தேன்? இது வக்கரமாக உங்களுக்கு தெரியலாம். ஆனால் அது என் காதலுக்கு நானே செய்துக் கொள்ளும் ஒரு வகையான சமாதானம். நான் இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதமே ஆகிறது இருப்பினும் காலம் கடத்தாமல் எழுதவே தோன்றியது எனக்கு. எழுதிவிட்டேன் அனுப்பியும் விட்டேன்.

என் கடிதம் கைக்கு கிடைத்து விட்டதா அல்லது வேறு சில காரணமா என்று தெரியவில்லை, நான் கடிதம் அனுப்பி இரண்டாவது நாளிலேயே அவர்கள் வீட்டில் ஏதோ பூகம்பம் வெடித்தது போல் பலத்த சண்டை நிகழ்ந்துக் கொண்டிருந்தது, அப்போது தான் நான் அலுவலகம் முடிந்து மாலை வீட்டுக்குள் நுழைகிறேன். உரையாடல்களின் சத்தம் கேட்காதது போல் படி ஏறினேன். சண்டையென்று அந்த சத்தத்தை வைத்து உணர்ந்து கொள்ள முடிந்ததே தவிர சொற்கள் சரியாக காதில் கேட்காததால் சம்பவம் புலப்படவில்லை. இருவர் குரலில் அவன் குரல் தூக்கலாக ஒலிக்கவே சுகுணாவின் குரல் கேட்காமலேயே இருந்தது. அடிக்கடி உரக்க தெளிவாக கேட்டதெல்லாம் ‘கத்தாதே’ என்ற ஒரே வார்த்தை மட்டும். சலசலப்புக்கு பிறகு பாஸ்கர் வெளிக் கதவை திறக்கும் சத்தம் கேட்டது, மேலிருந்து எட்டிப் பார்த்தேன். கோபத்தில் சிவந்திருந்தது பாஸ்கரின் முகம். எட்டிப் பார்க்கும் என்னையும் கவனிக்காமலேயே குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியில் சென்று விட்டான். கீழே சென்று அவளிடம் ஆறுதலாக ஏதேனும் பேசலாமா, இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று தோன்றியது. இருப்பினும் பாஸ்கர் மறுபடியும் வந்துவிட்டால் என்ற அச்சத்தில் அப்படியே உட்கார்ந்து விட்டேன். வேறேதும் சத்தம் கேட்கிறதா என்று காதை கூர்மைப்படுத்திதான் வைத்திருந்தேன் ஆனாலும் வேலையின் அலுப்பா என்று தெரியவில்லை, என்னையறியாமலேயே தூங்கிப் போனேன். கனவிலும் சுகுணாதான் என்னுடன். திடீரென, நடு இரவில் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். சத்தம் கீழிருந்துதான் என்று ஓடி இறங்கி சென்றேன், ஹாலில் பாஸ்கர் கையை தலை மேல் வைத்து அழுதுக் கொண்டிருந்தான். மகள் சோஃபாவில் படுத்திருந்தாள். சுகுணாவை என் கண்கள் தேடியது. அழுகைக்கான காரணமும் புரியவில்லை. அருகில் சென்று அவன் தோளில் கை வைத்தேன். என் கையை பிடித்துக் கொண்டு அழுதான். அக்கணம் என் மனதை பிசைந்தது, மிகவும் சங்கடமாகிப் போனது. “என்ன ஆச்சுங்க” என்று தயக்கத்துடன் கேட்டேன். ஒன்றும் சொல்லாமல் அவன் மேலும் குரலுயர்த்தி அழுதான். ஒருவகையான பயம் என் மனதை பிடித்துக் கொண்டது காரணமேயில்லாமல். மறுபடியும் உலுக்கி “சொல்லுங்க” என்றேன். உள் அறையை கைக்காட்டி மறுபடியும் குரல் உயர்த்தி அழுதான். எனக்கு உள் அறைக்கு போக ஏதோ தயக்கமாக இருந்தது. வெளி கதவும் திறந்தே இருந்தது. கீழ் தளம் என்பதால், இவன் அழும் சத்தம் கேட்டிருந்திருக்கும் அந்த வில்லாவின் காவலாளிக்கு, ஓடிவந்தார், “கியா ஹுவா சாப்” என்றான். பிறகு அவனே உள் அறைக்கு தைரியமாக தயக்கமில்லாமல் ஓடிப் பார்த்துவிட்டு ஒரே ஒரு கணம் திகைத்து நின்றான். அவன் கண் விரிந்ததில் உள்ளே ஏதோ விபரீதம் நடந்திருக்கு என்பதை மட்டும் புரிந்துக் கொண்டேன்.

வெளியில் ஓடிவிட்டான் காவலாளி. கொஞ்ச நேரத்தில் காவல்துறை படையெடுத்து வந்திருந்தது. வில்லாவில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூடி வீட்டின் வெளியே நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். விடியும் நேரமும் நெருங்கிவிட்டது. காவல்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் அனுமதியில்லாமல் நுழைந்தார்கள், கூடவே காவலாளி “யஹான் சாப்” என்று உள் அறையை கைக்காட்டினார். பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே பேசிவிட்டு, செல்பேசியில் யார் யாருக்கோ வேற்று பாஷையில் பேசிக் கொண்டனர். காவல்துறை அதிகாரிகளிடமும் பாஸ்கர் ஒன்றும் சொல்லாமல் அழுகையை மட்டும் பதிலாக தந்தார். என்னை கேட்டார்கள் ‘who are you?’ என்று. உள் அறையில் என்ன நேர்ந்திருக்கிறது என்று பார்க்கும் துணிச்சல் கூட இல்லாத நான் என்ன பதில் சொல்லிவிடப் போகிறேன். நான் யாரென்று சொல்லக் கூட பயந்துக் கொண்டு ‘நான் பாஸ்கருடைய சிநேகிதன் மேல் அறையில் குடியிருக்கிறேன்’ என்றேன். “எப்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது” என்றார். எந்த சம்பவம் என்று புரியாத எனக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இப்பதான் புரிகிறதா எங்களுக்கு எப்பவோ புரிந்து விட்டது என்று நினைக்கிறீர்களா? எனக்கு புரிவதெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதாலேயே மழுங்கல் ராஜாவாக நின்றிருந்தேன். எந்த சம்பவம் என்று கேட்டால் அபத்தமாகி போகுமோ என்று யோசித்துக் கொண்டேன் “பாஸ்கர் அழும் குரல் கேட்டே கீழே வந்தேன், என்ன நடந்தது…” என்று இழுக்கும் முன்பே, பெரிய அதிகாரி மற்றவரிடம் வேற்று பாஷையில் ஏதோ சொல்ல. அது இவர்களிடம் ‘ஸ்டேட்மெண்ட்’ வாங்கிக் கொள் என்பதாக தொணித்தது, காரணம் ‘ஸ்டேட்மெண்ட்’ என்ற வார்த்தை மட்டும் ஆங்கிலத்தில் இருந்தது.

மெதுவாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள் அறையில் எட்டிப் பார்த்தேன். குனிந்த தலை நிமிராத என் சுகுணா மொத்தமாக பூமி பார்த்தபடியே தொங்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலிருந்து கண்ணெடுக்க முடியவில்லை என்னால். நான் மேலே உறங்கிக் கொண்டிருக்கும் போதா நீ மொத்தமாக உறங்கிவிட்டாய் என்று உலுக்கலாம் போல் இருந்தது. கனவா நிஜமா, என் சுகுணா ஆத்திரத்தில் அவசரத்தில் எடுத்த முடிவாக இருக்கும், இந்த நிகழ்வை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாதா? கணிணியில் இருக்கும் ‘undo’ போல் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.. எங்கே அந்த கால இயந்திரம்… எங்கே.. என்று பித்து பிடித்து கத்த இருந்தேன். அப்போது என்னை நடுங்க வைக்கும் அளவுக்கு என்னை ஒரு தள்ளு தள்ளிக் கொண்டு அந்த உள் அறையில் நுழையும் போது நான் மீண்டும் சுதாரித்துக் கொண்டேன். அல்லது அந்த நிமிடமே பித்து பிடித்துக் கொண்டிருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. என்னை இடித்து தள்ளி உள்நுழைந்தது காவல் துறை அதிகாரிகளோ யாரோ தெரியவில்லை, அந்த உடுப்பில் இல்லை, சுகுணாவை கீழே கிடத்தினார்கள். அதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள். அவள் கையில் இருக்கும் காகிதத்தை எடுத்தார்கள். அதில் ‘என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை’ என்ற சுய வாக்குமூலம் இருந்ததாக பேசிக் கொண்டார்கள்.

அதன் பிறகு பாஸ்கரை தனியாக அழைத்து சென்று ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒன்றுமே அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த மகள் எழுந்து “அம்மா, அம்மா” என்று அவள் கண்கள் தேடவே மற்ற அறையிலிருந்து அதை கேட்ட பாஸ்கர் ‘ஓ’ என்று அழ தொடங்கிவிட்டான். ஒரு குழந்தையின் தவிப்பிற்கு நான் காரணமா என்று குடைய ஆரம்பித்தது மண்டைக்குள்.

அவள் தற்கொலைக்கு எது காரணம் என்று எனக்கு தெரியவேயில்லை. ‘ஆனால் நான் தான் காரணமா? என் கடிதம் தான் காரணமா’ என்று தெரிந்துக் கொள்ள முடியவே இல்லை. எப்படி கேட்பேன் அது பற்றி. யாரிடம் கேட்பேன்? அப்படியே அந்த கடிதம் காரணமாக இருந்தாலும் அதை நான் தான் எழுதினேன் என்று சொல்லிக் கொள்ளும் தைரியமில்லை எனக்கு. ‘எப்படி ஒரு வாக்கிய கடிதம் ஒரு உயிரை பறிக்க முடியும்?’ என்று எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் ‘அப்படித்தான் இருக்கும்’ என்று என் கடிவாளம் இல்லாத மனது சொல்லி என் உயிரை உருக்குகிறது, பைத்தியக்காரனாக இன்னும் அலைய வைக்கிறது கால இயந்திரத்தை தேடி.

By | 2007-07-15T13:11:00+00:00 July 15th, 2007|சிறுகதை|18 Comments

18 Comments

  1. 🙁

    Kathai Nalla Irukku!

  2. லொடுக்கு July 16, 2007 at 6:02 am - Reply

    //சிறுகதை//

    அப்படியா?

    //இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை.//

    நம்பிட்டேன்.

  3. கோபிநாத் July 16, 2007 at 6:03 am - Reply

    எப்பா !!!!!!!!!

    அட்டகாசமான எழுத்து நடைக்கா ;))) எனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருக்கு..

    கதையின் முடிவும் ரொம்ப சரி.

    \இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை. (இப்படி ஏதாவது பில்டப் கொடுத்தாதான் ஒருநாளாவது இந்த படம் ஓடும்:-) )\

    ஆமா இது எதுக்கு?

  4. அபி அப்பா July 16, 2007 at 7:59 am - Reply

    இப்ப தான் லொடுக்கு லிங் குடுத்து படிக்க சொன்னார். அதோட இல்லாம இதில என்ன உள்குத்துன்னு ஆராய்ச்சி பண்ணுய்யான்னு வேற சொல்லிட்டார்! ஆஹா மண்டைய பிச்சுக்கு வச்சுட்டாங்கப்பா!

  5. ramachandranusha July 16, 2007 at 8:00 am - Reply

    இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை//

    ஏதோ மேட்டர்ன்னு நெனச்சி, வரி வரியாய் ஆராய்ந்து எதுவுமே பிடிப்படாமல் மிகவும் ஏமாந்துப் போனேன் 🙂

  6. என் சுரேஷ் July 16, 2007 at 8:01 am - Reply

    அருமை

    அன்புடன்
    என் சுரேஷ்

  7. அய்யனார் July 16, 2007 at 10:00 am - Reply

    பயங்கர முடிவு

    🙁

  8. C.M.HANIFF July 16, 2007 at 11:38 am - Reply

    nalla eshuti irukeenga , continue 🙂

  9. ஜெஸிலா July 16, 2007 at 1:29 pm - Reply

    என்ன சிபி அழுதுக்கிட்டே நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்கீங்க. யாராவது சொல்ல சொல்லி மிரட்டினார்களா? 🙂

    ஆமாம் லொடுக்கு அப்படியேதான். நம்பினால் சரி 😉

    நிஜமாவா கோபி 🙂 அது சும்மா பில்டப்புக்குன்னுதான் போட்டிருக்கேனே. 😀

    நன்றி சுரேஷ் அண்ணா.

    நீங்களுமா உஷா… 😉 இல்லைன்னா இருக்குன்னு அர்த்தமா ? வம்பா போச்சிடா.

    மண்டைய பிச்சிக்கிட்டதுல ஏதாவது புலப்பட்டதா? கண்டிப்பா ரொம்ப மோசமான ஷேம்போன்னு தெரிஞ்சிருக்குமே 😉

    அய்யனார் கண்டிப்பா உங்களை நம்பவே மாட்டேன். கதையை படிக்காமலேயே பயங்கர முடிவுன்னா எப்படி? அபி அப்பாவுக்கு நன்றி போட மறந்திட்டீங்களே ;-B

    ஹனீஃபா பாய், நிஜமாவே படிக்கிறீங்களா இல்ல ஊக்கப்படுத்துவதற்காக இப்படி எழுதுறீங்களா? உங்களுக்குன்னு வலைப்பதிவு ஆரம்பிக்கலையா இன்னும்? எப்போ அந்த நல்ல காரியம்?

  10. nakkeeran007 July 16, 2007 at 2:11 pm - Reply

    good

  11. C.M.HANIFF July 17, 2007 at 5:51 am - Reply

    “ஹனீஃபா பாய், நிஜமாவே படிக்கிறீங்களா இல்ல ஊக்கப்படுத்துவதற்காக இப்படி எழுதுறீங்களா? உங்களுக்குன்னு வலைப்பதிவு ஆரம்பிக்கலையா இன்னும்? எப்போ அந்த நல்ல காரியம்? “
    Ennanga ippadi kaettuteenga , unmaiyilayey padichuttu taan eshuthuraen, valaipathivu aarambikkum ennam illai, ungalai poal ullavanga eshuthurathai padithu vittu comments poduven , avvalavutaan;-)

  12. தேவ் | Dev July 17, 2007 at 6:51 am - Reply

    Kadai nallaa irrukkunga.. konjam ezhuthu pizhaiyai seri pannirunga

  13. அபி அப்பா July 17, 2007 at 7:09 am - Reply

    // அய்யனார் said…
    பயங்கர முடிவு//

    //அய்யனார் கண்டிப்பா உங்களை நம்பவே மாட்டேன். கதையை படிக்காமலேயே பயங்கர முடிவுன்னா எப்படி? அபி அப்பாவுக்கு நன்றி போட மறந்திட்டீங்களே ;-B//

    டி.பி.ஆர் ஜோசப் மாதிரி சரித்திரத்தை கொஞ்சம் திரும்பி பாருங் அம்னி! நானா படிக்காம பின்னூட்டம் போடுவேன்:-))

  14. ஆமாம் இது கதை தானே? அப்புடின்னா, கதை ரொம்ப நல்லாயிருக்கு… எனக்கு ஒரு சந்தேகம், நீங்க நல்லாத்தானே எழுதுறிங்க, அப்பறம் ஏன் ‘கிறுக்கல்கள்’ போட்டுருக்கிங்க? இடையிடையே சில எழுத்துப்பிழைகள் வருவதால் கிறுக்கல்கள் என்று போட்டு அதை ஒரு கவசமா பயன்படுத்துறிங்களோ?

  15. ஜெஸிலா July 17, 2007 at 7:49 am - Reply

    நக்கீரனுக்கு நன்றி.

    உண்மையா இருந்தா சரிங்க. நன்றிங்க ஹனீஃப் பாய்.

    நன்றி தேவ், சரி செய்துவிடுகிறேன் விரைவில்.

    அபிஅப்பா உங்க சரித்திர வரலாறு தெரியாதா எனக்கு…? உங்க அறிவுரையை நீங்கயில்ல அய்ஸ் கடைப்பிடிப்பார்ன்னு சொன்னேன் 😉

    அபிவிருத்தி, உங்கள மாதிரி நிறைய பேர் கேட்டுட்டாங்க. எனக்கு நல்லாயிருக்கிறது மத்தவங்களுக்கு கிறுக்கலா தெரியலாம் அதான் அப்படி 😉

  16. Sumathi. July 17, 2007 at 8:24 am - Reply

    ஹாய் ஜெஸிலா,

    சொல்ல தெரியல.. என்னமோ மனசு கணமாயிட்டுது.. ஒருவேள அவங்களை நீங்க வேற மாதிரி கையாண்டிருக்கலாமே…
    பட், கதை ரொம்ப நல்லா இருந்தது.எழுத்து நடையும் கூட…

  17. தலைப்பைப் பார்த்தவுடன் பயந்துவிட்டேன். இன்னும் முழுதாகப் படிக்கவில்லை. படித்துவிட்டுச் சொல்கிறேன்.

  18. ஜெஸிலா July 17, 2007 at 12:00 pm - Reply

    நன்றி சுமதி.

    மிதக்கும்வெளி, கண்டிப்பா நீங்க படிக்க வேண்டிய கதைதான் 😉

Leave A Comment