சின்ன சின்ன ஊடல் – குட்டிக்கதை

சின்ன சின்ன ஊடல்

‘எப்பதான் மணி 6 ஆகும் வீட்டுக்குக் கிளம்பலாம்’ என்று காத்திருந்தாள் சுதா. அவள் காத்திருப்பிற்குப் பின்னால் நிறைய அர்த்தமிருந்தது. அன்று சுதந்திர தினம், புத்தம் புது ஆடை அணிந்துக் கொண்டாள், இனிப்பையும் எடுத்துக் கொண்டாள் வெள்ளைக்காரனிடம் வேலை பார்ப்பதால் சுதந்திர தினத்தை அவர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதில் அவளுக்கு பெரும் மகிழ்ச்சி. நிறுவனத்தில் நிறைய இந்தியர்கள் என்பதால் நிர்வாகமே சுதந்திர தினத்தன்று எல்லாருக்கு ‘டோனட்’ வழங்கியது. இந்தியர்கள் பேரைச் சொல்லி அனைத்து நாட்டினரும் உண்டு மகிழ்ந்தனர். அவள் அணிந்த புத்தாடையில் அவள் அழகாக இருக்கிறாள் என்று அலுவலகத்தில் உள்ள எல்லா நபர்களும் கூறினாலும் அவள் அந்த வார்த்தையை தன் காதலிடமிருந்து எதிர்பார்த்து, அலுவலகம் முடிந்தவுடன் அவன் சந்திப்பிற்காகக் காத்திருந்தாள். அலுவலகம் முடிந்த பிறகு இருவரும் சந்திப்பது வழக்கம்.

மணி 6.15 ஆனதும் காதலன் விக்ரமுக்கு செல்பேசியில் அழைத்தாள்.

“கண்ணா, நான் கிளம்புறேன்” என்றாள் – அவன் அவளைக் காக்க வைத்ததால், செல்லக் கோபத்தில்.

“கிளம்புறியா? சரி செல்லம் கிளம்பு” அவனிடமிருந்து பதில் வந்தது. ‘நான் வருவேன் என்று தெரிந்தும்
ஏன் கிளம்புகிறாள்?’ என்று மனதில் அவள் கோபத்தை புரிந்தவனாக எப்படியும் அவளை ‘சுருதி மியூசிக்கில்’ பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு உத்தரவு கொடுத்துவிட்டான் அவன்..

அலுவலகம் முடிந்தபின் இருவரின் சந்திப்புக்குப் பிறகு அவள் செல்லும் வீணை பள்ளிதான் ‘சுருதி மியூசிக்’.

அலுவலகத்தில் வேலைப் பளுவில் மூழ்கிவிட்டதால் அவனுக்கு நேரத்திற்குக் கிளம்ப முடியாமல் போனது.

‘கிளம்புறேன்னு சொல்லிக் கூட ஒரு வார்த்தை, இரும்மா வந்திடுறேன்’னு சொல்ல தோணுச்சா?’ என்று
எண்ணியவளாக அலுவலகத்தில் இருந்து கீழே வந்தாள். அப்படி நினைத்தாலும்,

அலுவலகத்திற்குக் கீழே தன் வாகனம் அருகே வந்து நிற்பான் விக்ரம் என்று எதிர்பார்த்து அவள் கண்கள் இங்கும் அங்கும் தேடியது. ஏமாந்தவளாய் வண்டியை கிளப்பிக் கொண்டு விரட்ட ஆரம்பித்தாள்.. போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததாலும், அவனை எதிர்பார்த்து ஏமாந்த காரணத்தாலும் வேகம் கூடியது. வண்டி ஓட்டியபடியே மறுபடியும் அவனை செல்பேசியில் அழைத்தாள், ஒலித்துக் கொண்டே இருந்தது அவன் கைப்பேசி,

கோபத்தில் இணைப்பை துண்டித்து அவள் கைப்பேசியை பக்கத்து இருக்கையில் எரிந்தாள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு செல்பேசி ஒலிக்கவே, எடுத்து காதில் வைத்தாள். – அவனேதான்

“ம்ம், சொல்லுங்க” அவள் குரலில் கோபம் தணியவில்லை.

“எங்கடா இருக்க?” கனிவாகக் கேட்டான் விக்ரம்.

“நீங்க எங்க இருக்கீங்க?” ஒருவேளை பக்கத்தில் எங்கேயாவது இருக்கிறானோ என்று நினைத்துக் கொண்டு கண்ணாடியில் அங்கும் இங்கும் தேடிய படி கேட்டாள்.

“நான் இப்பதாண்டா கிளம்பினேன், ரோடு காலியா இருக்கு, அதனால் வண்டி பறக்குது” என்றான்
அவள் கோபத்தை கண்டுகொள்ளாமல்.

“ம்ம் சாருக்கு ‘கிளப்’புக்கு போக அவசரமோ?!” என்றாள் எரிச்சலாக.

‘கிளப்’ என்பது சீட்டு விளையாடி அரட்டை அடிக்கும் ‘கிளப்’ அல்ல, அவன் சிறுவர் சிறுமியர்களுக்கு இலவசமாக தமிழ் சொல்லிக் கொடுப்பான். அந்த இடத்தைதான் ‘கிளப்’ என்று கேட்கிறாள்.

“பசங்களுக்கு இன்னிக்கு விடுமுறதான?! அதான் மதியானமே போய் சொல்லிக் கொடுத்துட்டு வந்திட்டேன்” என்றான் அலட்டலாக.

‘ஓஹோ! அதான் ஐயா நேரத்திற்கு வேலையை முடிக்க முடியாம, சீக்கிரம் கிளம்பி வந்து என்னப் பார்க்க முடியாம இருந்த காரணமோ’ என்று மனதில் நினைத்துக் கொண்டதில் இன்னும் சூடேறியது அவளுக்கு.

வண்டியை இன்னும் விரைவாக்கினாள். கொஞ்ச நேர மவுனத்திற்கு பிறகு “சரி என் வீணை கிளாஸ் வந்திடுச்சு நான் போறேன்” என்று அவன் பதிலுக்கு காத்திராமல் இணைப்பைத் துண்டித்தாள்.

அவள் வீணை வகுப்புக்கு வந்து நிற்கும் போது பின்னால் விக்ரமுடைய ‘காம்ரி’ தெரிந்தது.

இருப்பினும் காத்து கிடக்கட்டும் என்ற நினைப்பில் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்று விட்டாள். தவமாக தவம் கிடந்தாலும், காதலிக்காக என்பதால் 45 நிமிடம் வெளியில் காத்துக் கொண்டு இருந்தான் அவன். இவள் இப்படி அடிக்கடி அவனைக் காக்க வைப்பதால், நேரத்தைப் போக்குவதற்காக வண்டியில் நிறைய புத்தகம் வைத்திருப்பான். புத்தகத்தின் உதவியில் நேரம் பறந்தது. வெளியில் வந்தவள் அவனைப் பார்க்காதது போல் வண்டி எடுத்தாள்.

அவனைக் கண்ணாடியில் பார்த்து ‘துத்துத்துத் பாவம் கண்ணா நீ, காத்திருந்தியா, நம்ம போற வழியில் நிறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிடுவோம்’ என்று மனதிலேயே பேசிக் கொண்டாள்.

அவன் இவளைப் பின் தொடர்ந்தான். மறுபடியும் செல்பேசியில் இணைந்தனர். அவன் பின்னால் வண்டியில் இருக்கும் சந்தோஷம் தன் குரலில் தென்படாமல், அவனை பார்க்காதது போலவே பேச்சைத் தொடங்கினாள் “என்ன வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சா?”

“இல்லடா, வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ‘சிக்னலில்’ நிற்கிறேன்” அவனும் விடாமல்,

அவளுக்கும் தான் பின்னால் இருப்பது தெரிந்திருக்கும் என்று தெரிந்தும், தான் அவளைப் பார்க்காமல் வீடு வரை சென்றதாக ஊற்றினான்.

கண்ணாடியில் அவனைப் பார்த்தபடி சிரிப்பை அடக்கிக் கொண்டு “சரி சரி சீக்கிரம் வீட்டுக்கு போங்க, அம்மா தேடப் போறாங்க” என்றாள் கிண்டலாக.

அவன் கார் ‘டிராக்’ மாறி அவளின் இடது புறத்திற்கு வந்தது.

“கண்ணா, இந்தப் பக்கம் கொஞ்சம் திரும்பி பாரு” அவளைப் பார்த்தபடி பின்னால் வேகமாக வரும் வண்டிகளுக்கு வழி தராமல், இவளுடைய காரின் வேகத்திலேயே வண்டியை செலுத்திய படி கேட்டான்.

ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு, அவன் பக்கம் திரும்பாமல்

“எங்கே எங்கே?” என்றாள் தேடுவது போன்ற பாவனையில்.

பின்னால் வரும் வண்டி விளக்கை அணைத்து அணைத்துக் காட்டவே, அதே வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் விரட்டி வேறு பக்கம் திரும்பினான். இதை சற்றும் எதிர்பாராத சுதா, “செல்லம், அந்தப் பக்கமா எங்க போற?” என்றாள் திகைப்பாக.

அவள் திரும்பாத கோபத்தில், “ம்ம் கிளப்புக்கு தான்” என்று பதில் வந்தது அவனிடமிருந்து.

அதைக் கேட்டவுடன் தாங்காமல் இவள் தொண்டை அடைத்தது. “மதியானமே போய்ட்டு வந்துட்டேன்னீங்க” என்றாள் ஏமாற்றத்தை அடக்கிய படி.

“சும்மா சொன்னேன். அதான் உன்னை பார்க்க வீணை கிளாஸுக்கு வந்தேன். நீதான்

கண்டுக்காம போன. பக்கத்தில் வந்து கொஞ்சம் ‘திரும்பிப் பாருடா’ன்னு கெஞ்சினேன், ரொம்ப அலட்டிக்கிட்ட, இப்ப நான் எங்க போனா உனக்கு என்ன? விடு” என்றான் – அவள் கோபம் இவனுக்கு ஒட்டிக் கொண்டதுபோல.

“சாரிடா கண்ணா, சத்தியமா கொஞ்ச நேரம் இப்படி தெரியாதது மாதிரி விளையாடிட்டு

ஒரு ‘ஸ்டார் மார்டில்’ நிறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிட்டு ரெண்டு பேர் கோபத்தையும் தணிக்கலாம்ன்னு நெனச்சேன்,

ஏமாத்திட்டேடா. என்கிட்ட ஏன் கிளப்புக்கு மதியானமே போனேன்னு பொய் சொன்ன, அதனாலதான் …” என்று அவள் சிணுங்கினாள்.

“என்ன ஏமாத்த நினச்சு நீ ஏமாந்திட்ட, அதற்கு நான் என்ன செல்லம் செய்ய முடியும்?.

சரி இன்னக்கி இல்லாட்டி என்ன நாளைக்கு சந்திப்போம்ல” என்றான் திடமாக.

ஆறுதலாக அவன் பேசினாலும் ஏமாற்றத்துடன் வாடிய முகமாய் வீடு வந்தாள் சுதா.

எல்லோரும் அவள் அழகாக இருக்கிறாள் என்று சொன்ன அந்த புது ஆடையை அதிர்ஷ்டக் கெட்டது என்று ஒதுக்கி வைத்தாள்.

ஊடலில்தானே காதலின் வலிமை தெரிகிறது.

By | 2006-08-31T07:48:00+00:00 August 31st, 2006|சிறுகதை|8 Comments

8 Comments

  1. ப்ரியன் August 31, 2006 at 12:13 pm - Reply

    உண்மை உண்மை (ஒன்னுமில்லை ஜெஸிலா அனுபவம் பேசுது அம்புட்டுத்தான்)

  2. ஜெஸிலா August 31, 2006 at 2:35 pm - Reply

    உங்க அனுபவத்த தானே சொல்றீங்க ப்ரியன்;-)

  3. Anonymous August 31, 2006 at 6:29 pm - Reply

    ஹும்..காதலிக்க நேரமிருக்கு!

  4. ஜெஸிலா September 1, 2006 at 11:00 am - Reply

    ஆமாம் காதலிக்க நேரமிருக்கு அந்த கதாபாத்திரத்திற்கு. நீங்க என்ன நினைச்சீங்க அனானி?

  5. Anonymous September 1, 2006 at 11:45 am - Reply

    கதையா? கற்பனையா? உண்மையா? நிஜமா? நடந்ததா? நடக்கப்போகிறதா? எனக்குக்கு மட்டும் சொல்லிடுங்க ப்ளீஸ். தனி மடலிட்டு சொல்றீங்களா? இல்ல தனி போஸ்ட் போடுறீங்களா? கண்ணுக்கு முன்னாடி காதலர்கள்.

  6. ஜெஸிலா September 1, 2006 at 1:16 pm - Reply

    கதைய கதையா படிங்கப்பா. கேள்விக்கனையரே கற்பனையா நிஜமான்னு தெரிஞ்சிக்கிட்டு என்னப் பண்ண போறீங்க?

  7. ஏ.எம்.ரஹ்மான் September 2, 2006 at 6:44 am - Reply

    ஜெஸிலா இந்த கதையிலிருந்து ஒன்னு மட்டும் புரியுது பெண்களுடைய சுபாவம் இப்படிதான்னு

  8. Anonymous September 9, 2006 at 7:34 am - Reply

    really super story jazz, ippadithaan sometimes la yaamathuradha ninaithu naama yaamanthuduram very nice.ungal tamil thondu vazharattum

    anbudan
    sharun777

Leave A Comment