இதென்ன கப்பிங் கலாட்டா?

‘கப்பிங்’ பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘கப்பிங்’ என்ற பதத்தைக் கேட்டவுடன் டிக்கிலோனா, ஸ்பூனிங், கப்லிங் என்ற வரிசையில் `ஜெண்டில்மேன்` படத்தில் வரும் விளையாட்டு போல ஏதோ ஒண்ணுன்னு நினைச்சீங்கன்னா நான் பொறுப்பல்ல. ’கப்பிங்’ என்பது ஒரு பழங்காலத்து மருத்துவமுறை. நோய்களுக்கு மருந்து சாப்பிட்டால் கசக்கும், ஊசி குத்தினால் வலிக்கும் ஆனால் இந்த கப்பிங் மருத்துவம் வலியில்லாத நிவாரணியாம்.

மனிதன் தோன்றிய ஆதி காலத்திலிருந்தே மருத்துவமும் தோன்றிவிட்டது என்று நமக்குத் தெரியும். ஆனால் வெவ்வேறு முறைகள், வகைகள், நம்பிக்கைகள் என்று எது பலன் தருகிறதோ அதனை மனிதன் அந்தந்த காலகட்டத்திற்கேற்ப பின்பற்றிச் சென்றிருக்கிறான். சிகிச்சையும் மருந்துகளும் வித்தியாசப்பட்டாலும் அதன் இறுதி வடிவம் குணமடைவதாக இருந்தால் அதைக் கையாளுவதில் எவருக்கும் தயக்கமிருக்காது. அதன் அடிப்படையில் வழிபடுதல், நம்பிக்கை என்பதையும் கூட அந்தக் காலத்தில் மருந்தாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். தீக்காயத்திற்கு நெருப்பு வைத்தியம் என்ற முறை கூட இருந்திருக்கிறது.

தாவரங்கள், வேர்கள், பறவை, விலங்கு, வருடி பிடித்து விடுதல், சூடு, சிரிப்பு என்று எதையுமே நாம் விட்டு வைக்கவில்லை மருந்தாக்க. பறவையின் கூட்டை தலைவலி நிவாரணியாக, ஒரு வகை எலியின் பல்லை கழுத்தில் கட்டிக் கொண்டால் பல் வலி நீங்கும் என்ற நம்பிக்கை வைத்தியமாக, எலியின் தோலை முகர்ந்தால் கடும் தடுமலும் ஓடிவிடுமென்ற மருத்துவம் இப்படி பலவகையான நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் இருந்தே வந்திருக்கிறது. சில வகை வைத்தியத்தைத் தவிர மற்றதெல்லாம் விஞ்ஞானம் விரிவு பெற ஒவ்வொன்றாக அழிந்தும் இருந்திருக்கிறது.

ஹோமியோபதி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர், யுனானி போன்றவைகளை தீவிரமாக இன்றும் நம்பத்தான் செய்கிறோம். என்ன, அலோபதியாட்கள் ஹோமியோபதி மருத்துவம் பெறுபவர் மாட்டுவண்டியில் பயணிப்பவர் என்றும் அலோபதியே வேக வைத்திய விமோசகரென்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இப்படியான வரிசையில் இப்போது ‘கப்பிங்’ வலுவாக இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அறுவை சிகிச்சையுமில்லை, செலவும் குறைவாம்.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று கண்ணதாசன் பாடினார். உண்மையில் ஒரு கோப்பையில் என் ஆரோக்கியம் என்று கப்பிங் முறையால் திருப்தியடைபவர்கள் பாடத் தொடங்கியுள்ளனர். 3000 ஆண்டுகள் பழமையான இந்த மருத்துவம் நுரையீரல் பாதிப்பு, இரத்த அழுத்தம், நெஞ்சு சளி, முதுகு வலி போன்றவற்றின் நிவாரணி. வியாதிஸ்தர்களைப் படுக்க வைத்து ஒரு சிறிய கண்ணாடி அல்லது மூங்கிலான கோப்பையை வெறுமையாக்கி அதாவது அதிலுள்ள பிராணவாயுவான ஆக்சிஜனை எரித்து அந்த கோப்பையை சூடாக்கி, தோள்பட்டைக்குக் கீழ் பகுதி அல்லது முதுகின் கீழ் பகுதியில் கவிழ்த்துவிட்டாலே போதும் நம் உடலில் உள்ள நஞ்சை அப்படியே நீக்கிவிடுமாம்.

எலும்புகளால் நரம்பால் தோலாலான நம் உடலில் நான்கு வகையான திரவமுள்ளது அவை இரத்தம் (Blood), கொழுமை சளி (Phlegm), மஞ்சள் பித்தம் (yellow bile) மற்றும் கரும் பித்தம் (black bile). கடைசியில் குறிப்பிட்ட கரும்பித்தமே நஞ்சுத்தன்மையை உண்டாக்கி நம் உடல்கேட்டிற்கும், இயலாமைக்கும் காரணியாகிறது. ஒரு கப்பில் சுமார் 10- 15 மிமி நஞ்சு வெளியாகுமாம். அந்த நஞ்சை நீக்கும் போது அந்த இடத்தில் நல்ல இரத்தம் ஊறுவதால் உடல்நலக் குறைவு சீர் பெறுகிறதாம். சிகிச்சைக்குப் பிறகு கொஞ்ச நேரம் அப்படியே படுத்த நிலையில் இருக்க வேண்டுமாம். நெஞ்சு சளி, நுரையீரல் பிரச்சனை வைத்தியத்திற்காக நஞ்சை விலக்கியிருந்தால் உடனே கம்பளியால் நோயாளிகளைச் சுற்றி குறைந்த உஷ்ணத்திற்கு உடன் மாற்றிவிட வேண்டுமாம்.

கப்பிங் முறை சாதாரண விஷயம்தான் ஆனால் இதனை கைதேர்ந்த பயிற்சி பெற்ற மருத்துவர்களே செய்ய முடியுமாம். அதனால் உங்கள் மீது சோதனை செய்தவற்காக பயிற்சி பெறாத யாரும் அழைத்தால் ‘ரிஸ்கெடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி’யென்று போய் விட வேண்டாம். அப்புறம் முக்கியமான இன்னொரு விஷயம் இந்த கப்பிங்கின் போது நஞ்சு நீங்கும் போது வலியிருக்காது ஆனால் உறிஞ்சிய இடத்தில் இரத்தம் கட்டியது போல் வடு ஏற்படும், எப்படி அட்டை உறிஞ்சிவிட்ட இடத்தில் சிகப்பாக இருக்குமோ அந்த மாதிரி. அந்த வடு கூட சில நாட்களில் மறைந்துவிடுமென்று சொல்கிறார்கள். `கப்` பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவமென்பதால் `கப்பிங்` என்ற பெயர் வந்தது என்று சின்னக் குழந்தைகளும் சொல்லிவிடும்.

இந்த கப்பிங் முறையின் பிறப்பிடம் எகிப்து. அதன் பின்னர் அதனை முழுமையாக இன்னும் சீனர்கள் பயன்படுத்துகிறார்கள். கப்பிங் மருத்துவ முறையை அரபியில் ஹிஜாமா என்று சொல்கிறார்கள். ஹிஜாமா என்ற பதம் ஹிஜாம் அதாவது உறிஞ்சுதல் என்று அரபியில் பொருட்படும். ஹிஜாமா மருத்துவம் சிறப்பு என்று நபிகள் முகமது (ஸல்) குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறதாம் அல் புகாரி 10/139. அதனால் இது இஸ்லாமியர்கள் மட்டுமே உபயோகிக்கிறார்கள் என்று தவறான புரிதல் கொள்ள வேண்டாம். கிவ்யினெத் பால்த்ரோ (Gwyneth Paltrow) என்ற ஹாலிவுட் நடிகைக்கு பல பேர் விசிறியென்றால் அவர் கப்பிங் மருத்துவ முறையின் விசிறியாம். சில வருடத்திற்கு முன்பு நடந்த நியூயார்க் படவிழாவில் அவர் முதுகில் தடயங்களுடன் வந்ததை பார்த்து கேள்விக்கணை தொடுக்கவே அவர் இதைப் பற்றி விளக்கியுள்ளார். அமீரகத்தில் ஷார்ஜாவில் இதற்கான மருத்துவர் இருப்பதாக `கல்ப் நியூஸ்` சொல்லியது மருத்துவக் குறிப்பு செய்தியோடு.

மருத்துவம் விஞ்ஞானம் என்று வளர்ந்தாலும் தினம் தினம் புது நோய்களும் உருவாகவே செய்கிறது. மருந்துகளும் சிக்கிச்சைகளும் வியாதிகளின் பாதிப்புகளையும் வலிகளையும் தள்ளிப் போட முடியுமே தவிர இழப்பையும் இறப்பையும் அல்ல என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

By | 2009-08-17T06:41:00+00:00 August 17th, 2009|அறிவியல்/நுட்பம்|18 Comments

18 Comments

  1. சந்தனமுல்லை August 17, 2009 at 8:36 am - Reply

    தகவல் பகிர்வுக்கு நன்றி! வித்தியாசமாக இருக்கிறது..இந்த மருத்துவ தகவல்!

  2. ☀நான் ஆதவன்☀ August 17, 2009 at 8:46 am - Reply

    முதல் பத்தியிலேயே போட்டதால சரியாப் போச்சு. தலைப்பை பார்த்துட்டு நான் “ஜெண்டில்மேன்” முடிவுக்கு தான் வந்திருப்பேன் 🙂

    புதுமையாக இருக்கிறது ஜெஸிலா. பகிர்வுக்கு நன்றி.

  3. கலையரசன்.. August 17, 2009 at 8:51 am - Reply

    தகவல்களுக்கு நன்றி டாக்டர் ஜெசிலாக்கா…
    (கப்பிதனம் என்ற வார்த்தை கப்பிங்கிலிருந்து மருகியதா?)

  4. தேவன் மாயம் August 17, 2009 at 9:03 am - Reply

    இங்கு பலர் முதுகிலும், இடுப்பிலும் காயத்துடன் அலைக்றார்கள்- பிரச்சினையும் தீராமல்………..!!

  5. RAD MADHAV August 17, 2009 at 9:03 am - Reply

    அருமையான மருத்துவப் பதிவு.. வாழ்த்துக்கள்….
    (ஆமாம் நீங்கள் உண்மையிலேயே மருத்துவர் தானே…. 🙂

  6. RAD MADHAV August 17, 2009 at 9:03 am - Reply

    //`கப்` பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவமென்பதால் `கப்பிங்` என்ற பெயர் வந்தது என்று சின்னக் குழந்தைகளும் சொல்லிவிடும்//

    இது புதுசா இருக்கு?? 🙂

  7. நல்ல பதிவுங்க.. நிறைய தகவல்கள்

    அழகா விவரிச்சிருக்கீங்க.

  8. கோபிநாத் August 17, 2009 at 10:38 am - Reply

    ம்ம்ம்..பகிர்வுக்கு நன்றி ஜொசிலாக்கா 😉

  9. முதல் வருகை உங்கள் பதிவுக்குள்….

    அருமையான தகவல் …. வாழ்த்துக்கள்….

    http://safrasvfm.blogspot.com

  10. ஜெஸிலா August 17, 2009 at 10:45 am - Reply

    நன்றி சந்தனமுல்லை.

    தெரியும் ஆதவன் உங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க அதான் முன் ஜாக்கிரதையா போட்டுட்டேன் 🙂

    நான் என்ன விஜய்க்கு தங்கச்சியா டாக்டர் ஜெஸிலான்னு தகுதியில்லாமல் போட்டுக்க 🙂

    .

  11. ஜெஸிலா August 17, 2009 at 10:48 am - Reply

    //கப்பிதனம் என்ற வார்த்தை கப்பிங்கிலிருந்து மருகியதா// எப்படி இப்படியெல்லாம் ஏடாகூடமா கேட்கிறீங்க 🙂

    ராத் மாதவ், எல்லாமே புதுசா தான் இருக்கும் 🙂

    தேவன் மாயன், அதற்காக தான் கைத்தேர்ந்த பயிற்சி பெற்ற நல்ல மருத்துவரிடம் போக வேண்டுமென்று சுட்டியிருக்கிறேன்.

    நன்றி செந்தில் மற்றும் கோபி.

    வாங்க அபூபக்கர். மிக்க நன்றி.

  12. R.Gopi August 17, 2009 at 1:22 pm - Reply

    இந்த‌ "க‌ப்பிங்" விஷ‌யம் இன்றுதான் படிக்கிறேன்…. நல்ல செய்தி….ஜெஸீலா..

    //மருந்துகளும் சிக்கிச்சைகளும் வியாதிகளின் பாதிப்புகளையும் வலிகளையும் தள்ளிப் போட முடியுமே தவிர இழப்பையும் இறப்பையும் அல்ல என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.//

    எவ்ளோ பெரிய‌ விஷ‌ய‌த்த‌ இவ்ளோ சாதார‌ண‌மா சொல்லிட்டீங்க‌….

    வாழ்த்துக்க‌ள்…

  13. சுல்தான் August 18, 2009 at 5:30 am - Reply

    இது பழைய வைத்திய முறை என இலேசாக கேள்விப்பட்டிருக்கிறேன். விரிவாக தெரியப்படுத்தி இருக்கின்றீர்கள் நன்றி

  14. தீராத வயிற்று வலிக்கு இதே போல் செய்து குணமடைவார்கள் என்று என் பெரியம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்.

  15. கோமதி அரசு August 18, 2009 at 5:33 am - Reply

    ஜெஸிலா,
    எங்கள் ஊரில் பாட்டி செய்யும்
    வைத்தியம் போல் இருக்கு.

    ஆனால் கொஞ்சம் வேறு மாதிரி,

    ஒருசெம்பில் மஞ்சள் தண்ணீர் விட்டு
    நோய்வாய் பட்டவரின் பெய்ரை சொல்லி
    ஒரு வெள்ளை துணியை எரித்து அதை
    மஞ்சள் தண்ணீரில் போட்டு ஒரு தட்டில் அப்படியேஅந்த செம்பை கவிழ்த்துவிடுவார்கள்,
    செம்பில் உள்ள தண்ணீர் சொட்டு எல்லாம் வடிந்தவுடன் நோயாளியின்
    மூச்சு பிடிப்பு விட்டுவிடும்.

  16. !!!! பகிர்வுக்கு நன்றி

  17. எவ்ளோ பெரிய‌ விஷ‌ய‌த்த‌ இவ்ளோ சாதார‌ண‌மா சொல்லிட்டீங்க‌….
    //

    எவ்ளோ ஃபிலிங்கா சொன்ன விசயத்தை இப்படி சாதாரணமா சொல்லிட்டிங்களே கோபி 🙂

  18. ஜெஸிலா August 18, 2009 at 10:34 am - Reply

    //எவ்ளோ பெரிய‌ விஷ‌ய‌த்த‌ இவ்ளோ சாதார‌ண‌மா சொல்லிட்டீங்க‌….// நன்றி கோபி. சாதாரணமா சொல்ல மட்டும்தான் முடியும். இழப்பை தடுக்க முடியாதே 🙁

    கோமதி, மூச்சுப்பிடிப்புக்கு செய்வார்கள் பார்த்திருக்கிறேன். அது வேறு இது வேறு.

    நன்றி சுல்தான் பாய். இதனை சுன்னாஹ் முறை என்றும் சொல்கிறார்கள்.

    உண்மையாகவா சின்ன அம்மணி. தகவலுக்கு நன்றி.

    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா, அந்த படத்தில் இருக்கும் குழந்தை அழகு.

    மின்னுது மின்னல், கோபி சாதாரணமாவா சொல்லியிருக்கார்?

Leave A Comment