பெண்கள் விழித்துக் கொள்வார்களா?


ஒரு ஏழப்பட்டப் பொண்ணு எங்க அலுவலகத்திற்கு நேர்முகத்திற்கு வந்திருந்தாங்க. தேவையான படிப்பு, அனுபவம், நல்ல மொழி வளம் எல்லாம் இருந்தது. அவங்க அழைப்புக்காக காத்திருந்தாங்க மேலாளர் அறைக்குப் போய் பொசுக்குன்னு ஒரு நிமிஷத்துல வெளியில வந்திட்டாங்க. வெளியில் வந்தவங்களை என்ன ஆச்சுன்னு கேட்டேன். ‘இப்போதைக்கு ஆள் தேவையில்ல தேவைப்படும் போது அழைக்கிறோம்னு சொல்லிட்டாங்க’ன்னு சொன்னாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியவில்லை, ஆள் தேவைப்பட்டதால்தானே நேர்முகத்திற்கே அழைத்தோம். எல்லா தகுதிகளும் பொருந்தி வந்தவர்களை ஒன்றுமே விசாரிக்காமல் கூட அனுப்பிவிட்டதால் எனக்கு விசித்திரமாக இருந்தது. மேலாளரிடம் நேரடியாக கேட்டேன் ‘first impression is the best impression’ என்று சிரித்துக் கொண்டார். குழப்பத்துடன் அவர்களுக்கு ‘என்ன குறைச்சல்’ என்று வக்காலத்தை தொடங்கினேன். ‘நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா உனக்கு, அவள் என் அறைக்கு வந்த போது ஒரு பந்து உள் வந்துவிட்டு வந்த வேகத்தில் அடித்து திரும்புவதாக இருந்தது எனக்கு’ என்று மறுபடியும் சிரித்தார். அந்த பெண்ணின் உடல் வாகைக் கேலி செய்வது எனக்கு ரசிக்கும் படியாக இல்லை கோபத்தில் கதவை மட்டும்தான் வேகமாக சாத்த முடிந்தது.

இதே போல் பல வருடங்களுக்கு முன் நான் வேறு அலுவலகத்தில் இருந்த போது மனிதவள மேம்பாட்டு பிரிவில் சில மாதங்கள் இருந்தேன். அனுப்பிய பொழிப்புரைகளில் தகுந்தவற்றை பிரித்து தகுதியானவர்களை நேர்முகம் செய்து, வடிகட்டி, நான் சரி என்று நினைப்பவர்களை மட்டும் மேலாளரிடம் நேர்முகத்திற்கு அனுப்புவேன். அப்படி தகுதி பெறுபவர்களை வேலையில் அமர்த்துவார்கள். இப்படி வந்த பொழிப்புரையில் ஒரு காரியதரிசி வேலைக்கு எம்.சி.ஏ. படித்த நல்ல மதிப்பெண்கள் எடுத்த பல பிற தகுதிகள் கொண்ட ஒரு பெண் விண்ணப்பித்திருந்தார். தேவைக்கு அதிகமான தகுதியென்று ஒதுக்க இருந்தேன். கவனித்ததில் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்றதும் ‘அட தமிழ் பொண்ணு’ அழைத்தாவது பேசலாம், இவ்வளவு தகுதியுள்ளவர் சம்பந்தமில்லாத வேலைக்கு விண்ணப்பித்ததைப் பற்றிக் கேட்கலாம் என்ற ஆவல் பிறந்தது. அழைத்தேன். அழகான மொழி வளமும், குரல் வளமும் இருந்தது. என்னை அறிமுகம் செய்து கொண்டு காரணம் கேட்டேன். அவர் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது. அவளுடைய அப்பா பல வருடங்களாக அவரைப் பிரிந்து ஷார்ஜாவில் வேலைப் பார்த்திருந்திருக்கிறார். அவருடைய அம்மாவுக்குப் புற்றுநோய் இருந்ததாம் அதற்கே பல வருடங்கள் சம்பாத்தியம் தொலைத்து மனைவியையும் இழந்து உடல்நலம் சரியில்லாத போதும் இங்கு கஷ்டப்படுவதால், சுமையை பகிர்ந்துக் கொள்ள மகள் தயாரானாலும் அவள் தந்தை அவருடைய ‘ஸ்பான்சர்ஷிப்பில்’ மகளை அமீரகத்திற்கு அழைக்க முடியாததால் (மகளை தன் விசாவில் எடுத்துக் கொள்ள குறைந்தது 4000 திர்ஹம் அதாவது 45000ரூ. மாத சம்பளம் வேண்டும்) சுற்றுலா நுழைமதியில் வேலை தேடிக் கொண்டிருக்கிறாராம். இரண்டு மாதங்கள் முடியப் போகிறது, தகுதிக்கேற்ற வேலையென்ற அவசியமில்லை ஏதாவது வேலை கிடைத்து நிறுவன நுழைமதி கிடைத்தால் போதும் அப்பாவுக்குத் துணையாக இருந்து கொள்வது மட்டுமே அவளது நோக்கம். கடைசியாக அவர் சொன்ன விஷயம் மனதைத் தின்றது – ‘என்னதான் தகுதியிருந்தாலும் அழகும் வேண்டும் போல, நான் கருப்புங்க அதான் வேலையே கிடைக்கவில்லை’ என்றார் உடையும் குரலில். பலவகையில் முயற்சி செய்தும் அவரை வேலையில் அமர்த்த முடியவில்லை. அதுவும் வரவேற்பாளினியாகவும் காரியதரிசியாகவும் இருக்க அழகு ரொம்ப முக்கியமாகப்பட்டது மேலாளர்களுக்கு. பழைய நிகழ்வுகளை அசைபோட்டபடியே என் கையாலாகாத்தனத்தை கடிந்துக் கொண்டிருந்தேன்.

அன்று மதியம் சாப்பிட உட்காரும் போது சக தோழிகள் கொண்டு வந்திருந்தைக் கவனித்தேன், சின்ன டப்பாவில் சின்ன துண்டுகளாக வெட்டிய ஆப்பிள் நிரப்பிக் கொண்டு வந்திருந்தாள், ‘என்ன இது’ என்றேன் ‘நான் ‘டயட்’டில் இருக்கிறேன்’ என்றாள் பெருமையாக. மற்றொருத்தி எனக்கு ஒன்றுமே வேண்டாம் ‘ஸ்லிம் டீ’ மட்டும் குடிக்கப் போறேன் என்றாள். நான் மட்டும்தான் சாப்பாடு, குழம்பு, பொறியல் என்று எல்லாம் கொண்டு போய் ஒன்றையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னை சுற்றி நின்றுக் கொண்டு ‘எப்படிப்பா நீ மட்டும் இப்படிலாம் சாப்பிட்டாக் கூட அப்படியே இருக்கே’, ‘நீ சாப்பிடுவதெல்லாம் எங்கே போகுது’, ‘அவங்க குடும்பத்துல எல்லாருமே அப்படிதாம்ப்பா’ என்று ஆளாளுக்கு தன் பங்குக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை உற்றுக் கவனித்தால் சமூகக் கட்டாயத்திற்காக கல்லூரி மாணவி, வேலைக்குப் போகும் பெண்கள் மட்டுமல்ல இல்லதரசிகளும் கூட தன்னை கனகட்சிதமாக வைத்துக் கொள்ள சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு பலவகைப்பட்ட பக்கவிளைவுக்கு உள்ளாகிறார்கள். உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உடலைப் பேணுவது இல்லை இவர்கள் தங்கள் கணவர்கள் கைவிட்டுப் போகாமல் வைத்துக் கொள்ள ‘டயட்’ என்ற பெயரில் தன்னைத்தானே வதைத்துக் கொள்கிறார்கள்.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது யார்? ஒல்லி அழகா பருத்திருப்பது அழகா அல்லது கொஞ்சம் பூசினாற்போல் இருப்பது அழகா? கருப்பு அழகா சிவப்பு அழகா இல்லை இடைப்பட்ட நிறம் அழகா? பெண்கள் அழகைப் பற்றி பேச மன்மதன்களாக இருக்க தேவையில்லை ஆண் என்ற தகுதியிருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள் பலர். பெண்ணின் தேவையென்பது மிகவும் சாதாரணமானது ஆனால் ஒரு ஆண் தன் மனைவியாக வரப் போகும் மனைவிக்கு வேண்டிய தகுதிகளை ‘மாட்ரிமோனியலை’ எடுத்துப் பார்த்தால் லட்சணம் தெரியும். எத்தனை பெண்கள் இந்த வகையான நிபந்தனைக்குள் வராததால் முதிர்கன்னிகளாக இன்றும் இருக்கிறார்கள்? சந்தையில் எப்படிப்பட்ட பொருள் நல்ல விலைபோகிறது, எந்த பொருட்களின் வியாபாரம் 100% லாபம் தருகிறது என்பதை கணக்கில் கொண்டு ஒரு வியாபாரி, தொழிலதிபரும் பொருளை தந்து அதன் பின் அதற்கேற்ப விளம்பரமும் செய்வான். அதுபோல ஆகிவிட்டது பெண்கள் நிலையும். இதற்கும் ஆண் ஆதிக்க சமுதாயம்தான் காரணம் என்று பொதுப்படையாக முத்திரை குத்தாமல் (அதுவே உண்மையாக இருந்தாலும்) ஆராய்ந்து பார்த்தால் ஊடகங்கள், சினிமா, இதிகாசம், காப்பியம் என்று எல்லாமும்தான் காரணமாகிறது.

‘உடுக்கை போன்ற இடுப்பு’ என்று அன்று மட்டுமல்ல, ‘பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி’, ‘ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு? ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு’, ‘ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி’ என்றெல்லாம் பாட்டும் வரத் தொடங்கிவிட்டது. ஆனால் குண்டான ஆணைப் பற்றி பாடினால் ‘கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா… எந்த கடையில நீ அரிசி வாங்கின உன் அழகுல ஏன் உசுர வாங்குற’ இப்படி அல்லது ‘கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ அவன் பருமனாக இருந்தாலும் கருப்பாக இருந்தாலும் இவளுக்கு அழகுதான், ஏன்னா எழுதுறது ஆண்கள் பாருங்க. அதனால் அது அப்படியே ஆகிவிட்டது. இந்த மாதிரியான சூழலில் ஊறிப் போன பெண்கள் நடிகைகளையும், விளம்பரத்திற்கு வரும் பெண்களையும் பார்த்து அதே மாதிரி தாமுமிருக்க முயல்கிறார்கள். ஒல்லி பெண்களுக்கு ‘மாடல்’ யார் தெரியுமா நம்ம ‘பார்பி’ பொம்மைதான். ஆனால் ஒவ்வொரு ஊருக்கும் காலத்திற்கேற்பவும் ஆண்கள் இரசனை மாறுகிறது. ஒரு காலகட்டத்தில் குண்டு குஷ்பு பிடித்தால் கொஞ்ச நாட்களுக்கு பின் ஒல்லி சிம்ரன் பிடிக்கும் இப்படி ஆண்களுக்கு என்ன பிடிக்கிறது என்பதற்கேற்ப பெண்களும் ஆட வேண்டிய கட்டாயம். ஆனால், எல்லா ஆண்களும் மனைவிமார் மெல்லிசாக உடைந்துவிடுவது போல் இருக்கவேண்டுமென்று நினைக்கிறார்களா என்று தான் தெரியவில்லை.

ஒரு ஜான் வயிற்றை நிரப்ப முடியாமல் உலகின் பல பகுதியில் பட்டினியாலும் பிணியாலும் வாட, எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாமல் தனக்குத்தானே கட்டுபாட்டை விதித்து சாப்பிட வேண்டிய வயதிலும் சாப்பிடாமல், நோயாளி போல் அளந்து சாப்பிடுகிறார்கள். மெலிந்து காணப்படுவது அழகா உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அழகா என்று இவர்களுக்கு யார் புரியவைப்பது? பெண்கள் விழித்துக் கொள்வார்களா அல்லது ஆண்களாவது புற அழகு தேவையில்லை அக அழகு போதும் என்று பெண்களுக்கு புரிய வைப்பார்களா?

By | 2007-04-30T07:11:00+00:00 April 30th, 2007|பெண்ணியம்|17 Comments

17 Comments

  1. Nandha April 30, 2007 at 7:45 am - Reply

    அழகா சொல்லி இருக்கீங்க? என்னைச் சுற்றி உள்ள பல பெண்களிடம் இதே குறையை நான் கண்டிருக்கிறேன். பல பெண்கள் கம்மியா சாப்பிடறதை ஃபேஷன் ன்னு நினைச்சுட்டிருக்காங்க.

    //பெண்கள் அழகைப் பற்றி பேச மன்மதன்களாக இருக்க தேவையில்லை ஆண் என்ற தகுதியிருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள் பலர். //

    நான் பார்த்த பல ஆண்கள் இந்த வகைதான் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

  2. அபி அப்பா April 30, 2007 at 8:13 am - Reply

    ஏன் எனக்கு இத மாதிரி எழுத வர மாட்டங்குது:-))

    நல்ல கருத்து நல்ல பதிவு!!

  3. அய்யனார் April 30, 2007 at 8:28 am - Reply

    உங்களோட சமூகப் பார்வை நல்லாருக்கு ஜெஸிலா
    சுற்றி நடக்கும் அபத்தங்களை கண்டிக்க முடியாததின் கோபம்.உங்கள் எழுத்துகளில் பளிச்சிடுது.சமூகம் சார்ந்த அவலங்களுக்கெதிரான குரல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    புற அழகை புறந்தள்ளுவது பற்றி கேட்டிருக்கிங்க..இதெல்லாம் சாத்தியமாறது கஷ்டங்க..அகம்னு நாம ஏதாவது சொல்லப்போக அப்படியா அதுல fate இருக்குமான்னு கேக்குற அளவுக்கு நெலம மோசமாயிடுச்சி

  4. ஜெஸிலா April 30, 2007 at 8:52 am - Reply

    நன்றி நந்தா. //நான் பார்த்த பல ஆண்கள் இந்த வகைதான் என்பதை ஒத்துக்கொள்கிறேன்// நீங்க அந்த வகை இல்லன்னா சந்தோஷம்.

    நன்றி அபி அப்பா. //ஏன் எனக்கு இத மாதிரி எழுத வர மாட்டங்குது:-))// இதுல ஏதும் உள்குத்து இல்லையே 😉

    //அகம்னு நாம ஏதாவது சொல்லப்போக அப்படியா அதுல fate இருக்குமான்னு கேக்குற அளவுக்கு நெலம மோசமாயிடுச்சி // fate அவசியமில்லை faith இருந்தால் போதும்.
    //புற அழகை புறந்தள்ளுவது பற்றி கேட்டிருக்கிங்க..இதெல்லாம் சாத்தியமாறது கஷ்டங்க// எப்படி கஷ்டம்? நாளடைவில் உருமாறி போகிற புறம்தான் அவசியம்ல? கருத்துக்கு நன்றி அய்யனார்.

  5. Fast Bowler April 30, 2007 at 9:00 am - Reply

    உள்ளேன் அம்மா.

  6. Anonymous April 30, 2007 at 9:35 am - Reply

    அப்ப பெண்கள் தூங்குறாங்கன்னு ஒத்துக்கறீங்க? அப்பாடா! பெண்ணியம்குற தலைப்புல விழித்துக் கொள்வார்களான்னு கேட்டிருக்கீங்களே? அதற்கு நன்றி!! தூங்குனா எழுப்பலாம். ‘கோமா’ல இருந்தா என்ன செய்றது?

    ஆணாதிக்கவாதி

  7. Anonymous April 30, 2007 at 12:25 pm - Reply

    //Anonymous said…
    அப்ப பெண்கள் தூங்குறாங்கன்னு ஒத்துக்கறீங்க? அப்பாடா! பெண்ணியம்குற தலைப்புல விழித்துக் கொள்வார்களான்னு கேட்டிருக்கீங்களே? அதற்கு நன்றி!! தூங்குனா எழுப்பலாம். ‘கோமா’ல இருந்தா என்ன செய்றது?

    ஆணாதிக்கவாதி
    //

    தூக்க மாத்திரை ஓவர்-டோஸா கொடுத்து தூங்க வச்சது யாரு? உங்களை போல ஆணாதிக்கவாதிகளா?

    – பெண் ஈய வாதி

  8. ஜெஸிலா April 30, 2007 at 12:40 pm - Reply

    என்ன ஃபாஸ்ட் ரொம்ப பரபரப்பா?

    //அப்ப பெண்கள் தூங்குறாங்கன்னு ஒத்துக்கறீங்க? அப்பாடா! பெண்ணியம்குற தலைப்புல விழித்துக் கொள்வார்களான்னு கேட்டிருக்கீங்களே? அதற்கு நன்றி!! // ஆணாதிக்கவாதிகளுக்கு மட்டுந்தான் இப்படிலாம் குதர்க்க்க்கமா யோசிக்க முடியும். தாலாட்டு பாடும் ஆணாதிக்கவாதிகள் இருக்கும் போது ஏமாளி பெண்கள் சுகமாக தூங்கத்தான் செய்கிறார்கள்.

    //தூக்க மாத்திரை ஓவர்-டோஸா கொடுத்து தூங்க வச்சது யாரு? உங்களை போல ஆணாதிக்கவாதிகளா?

    – பெண் ஈய வாதி
    // சூப்பர் ஹிட். மிக்க நன்றி உங்கள் தகுந்த பதிலுக்கு.

  9. Sumathi April 30, 2007 at 1:30 pm - Reply

    ஹாய் ஜெஸிலா,

    நல்லா சொல்லியிருக்கீங்க… சபாஷ்…

    ஆனா இது மாதிரி எத்த்னை சொன்னாலும் ஆண்களுக்கும் புரியாது,

    அதெ போல பெண்களுக்கும் தெரியாது.அவங்க புற அழகை மட்டும் தான் பெருசா நினைக்கிறாங்க..

  10. ஜெஸிலா April 30, 2007 at 1:50 pm - Reply

    வாங்க சுமதி.
    //அதெ போல பெண்களுக்கும் தெரியாது.அவங்க புற அழகை மட்டும் தான் பெருசா நினைக்கிறாங்க.. //

    உங்க கருத்துக்கு மிக்க நன்றி. ஒரு பெண்ணாவது முன் வந்து கருத்து சொல்லியிருக்கீங்களே உங்களுக்கும் ஒரு சபாஷ்.

  11. ரவிசங்கர் May 1, 2007 at 5:49 am - Reply

    உங்கள் கவிதைகளை விட இது போன்ற கட்டுரைகள் நல்லா இருக்கு..ஒரு சில கவிதைகள் மட்டுமே மிளிருது..(புது வண்டி முதல் விபத்து எலுமிச்சை..போன்றவை)..அவை போன்றவற்றை அதிகம் தெரிந்தெடுத்து எழுதலாம்.

    அழகில்லாத பெண்ணுக்கு வேலை இல்லை. அழகால் வேலை கிடைக்கும் பெண்ணுக்கு அதாலேயே அடுத்தடுத்துத் தொல்லைகள் வருகிறது. இது குறித்தும் எழுதி இருக்கலாம்.

  12. ஜெஸிலா May 1, 2007 at 5:56 am - Reply

    //உங்கள் கவிதைகளை விட இது போன்ற கட்டுரைகள் நல்லா இருக்கு..ஒரு சில கவிதைகள் மட்டுமே மிளிருது.// வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி.

    //அழகில்லாத பெண்ணுக்கு வேலை இல்லை. அழகால் வேலை கிடைக்கும் பெண்ணுக்கு அதாலேயே அடுத்தடுத்துத் தொல்லைகள் வருகிறது. இது குறித்தும் எழுதி இருக்கலாம். // கட்டுரையை நீட்டிக் கொண்டே போனால் சொல்ல வேண்டிய முக்கிய கருத்துக்களும் போய் சேர்வது சிரமம் அதுவுமில்லாமல் கொஞ்சம் பெரியதாக இருந்துவிட்டால் படிக்கவும் ஆர்வம் காட்டமாட்டார்கள் நம் மக்கள். அதனால் அதைப் பற்றி தனியாக வேறு பதிவு போட்டிடலாம். நன்றி ரவி.

  13. நளாயினி May 8, 2007 at 4:11 am - Reply

    மனசு அழகே அழகு. உடல் அழகு எதற்கு?. ஒரு முறை அம்மாவிடம் தொலைபேசியில் சண்டை செய்தேன். இந்த நாக்கு என்னெல்லாம் கேக்குது . ஏன் என்னை இப்படி பெத்தீர்கள் என. சாப்பாட்டில் நான் குறை வைத்ததே கிடையாது. ஆனா நலஇல அழகான குண்டம்மா. எனது வீட்டில் தாங்கள் கேட்டதை உடனே செய்யாது விட்டால் என்னை அழைப்பது அழகிய மொழியாகிய குண்டம்மா அல்லது பெரியம்மா என்றுதான். பலமனக்கிடங்குள் உள்ளவற்றை கிழறிவிட்டிருக்கிறீர்கள். நன்றி.naan 60 kg .

  14. ஜெஸிலா May 8, 2007 at 4:17 am - Reply

    //மனசு அழகே அழகு. உடல் அழகு எதற்கு?// நன்றி நளாயினி. ஏன் எடையெல்லாம் சொல்லிக்கிட்டு? குண்டம்மா என்றெல்லாம் செல்லமாக கூப்பிடுவார்களாக இருக்கும். உரிமையுள்ள இடத்தில்தானே அன்பு பொங்கி வழியும் அதனால் அதையெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதற்காக உடலை குறைக்கிறேன் என ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள கூடாது.

  15. சுல்தான் May 8, 2007 at 9:48 am - Reply

    //ஆனால், எல்லா ஆண்களும் மனைவிமார் மெல்லிசாக உடைந்துவிடுவது போல் இருக்கவேண்டுமென்று நினைக்கிறார்களா என்று தான் தெரியவில்லை.//
    மற்றவர்கள் எப்படியோ நான் அப்படியில்லை. எனக்கு உடைந்துவிடுவது போல் இருப்பவர்களைப் பார்த்தால் ஒரு வித பரிதாப உணர்வுதான் தோன்றும்.
    //ஆண்களாவது புற அழகு தேவையில்லை அக அழகு போதும் என்று பெண்களுக்கு புரிய வைப்பார்களா//
    ஜெஸிலா மாதிரி நன்றாக எழுதத் தெரியாததால், தனிப்பதிவின்றி, இங்கேயே!
    புரிந்து கொள்ளுங்கள் பெண்களே!. உடல் நலம்/அழகு பேணுவது அவசியம் ஆனால் மனநலம்/அழகு பேணுவது அவசியத்திலும் அவசியம்.

  16. ஜெஸிலா May 8, 2007 at 9:50 am - Reply

    //புரிந்து கொள்ளுங்கள் பெண்களே!. உடல் நலம்/அழகு பேணுவது அவசியம் ஆனால் மனநலம்/அழகு பேணுவது அவசியத்திலும் அவசியம். // நன்றி சுல்தான். புரிய வைக்க ஆண்கள் இருந்தாலும், புரிந்துக் கொள்ளும் மனநிலையில் நிறைய பெண்கள் இல்லை ;-(

  17. Anonymous May 8, 2007 at 12:42 pm - Reply

    என் மனதைத் தொட்டிருக்கிறது. ஒருவரது தாய், சகோதரிகள் மட்டுமல்ல மற்றப் பெண்களுக்கும் இதயம் உண்டு என்பதை உணரவேண்டும்.

    புள்ளிராஜா

Leave A Comment