சுதந்திரம்

அவன் சொன்னதே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதில் என் தூக்கத்தையும் தொலைத்து இப்படி விட்டத்தைப் பார்த்து படுக்க வைத்துவிட்டானே? ‘நானும் அவனைப் போல் இருந்துவிட முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்ற நினைப்பே பெரிய நிம்மதியையும் பிரமிப்பையும் தருகிறதே? இந்த எண்ணம் எனக்கு ஏன் தோன்றுகிறது? இப்போதுதான் தோன்றிய ஒன்றா அல்லது மனதில் ஒளிந்துக் கிடந்தது இப்போது அவன் சொன்னவுடன் விஸ்வரூபம் எடுக்கிறதா?

எத்தனை ஆண்டுகள் கழித்துப் பேசுகிறேன் அவனுடன் அந்த சந்தோஷமெல்லாம் மறந்து ஒரு புள்ளியில் வந்து நிற்கிறதே மனது. அவன் மனைவி மக்களுடன் அமெரிக்காவில் சந்தோஷமாக இருக்கிறான் கொடுத்து வைத்தவன் என்றல்லவா நினைத்திருந்தேன். இப்ப மட்டும் என்னவாம் எது எப்படியிருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவன் கொடுத்து வைத்தவன் தான். அவன் எவ்வளவு சுலபமாகத் தன் மனைவிக்கு வேறு ஒருவன் பிடித்திருக்கிறது அதனால் அவளுக்கு அவனையே திருமணம் செய்து கொடுத்துவிட்டேன் என்கிறான். “எப்படிடா அப்படி முடியும்?” என்றால் ‘சிவில்’ என்கிறான். குழந்தையைப் பற்றி நான் தயக்கத்துடன் கேட்டால் அவனோ ‘மாற்றி மாற்றி எங்கள் வசதிக்கேற்ப பார்த்துக் கொள்வோம், எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது’ என்கிறான் சுலபமாக. புரிதல் இருந்தால் ஏன் பிரிய வேண்டுமாம்? இடம் மாறிவிட்டால் நம் கலாச்சாரம், பண்பாடு, சிந்தனை எல்லாமுமா மாறிப் போகும்? …ஏன் மாறக்கூடாது? இருந்தால் அவனைப் போல் தான் இருக்க வேண்டும். இந்தத் திருமணம், கட்டமைப்பு, ஒழுங்கு, ஒருவனுக்கொருத்தி இதெல்லாம் எப்போது பிறந்தது? மதம் வந்து முளைத்த பிறகுதான் இந்த கருமாந்திரமெல்லாம் வந்திருக்கக் கூடும். பெரியாரை தீவிரமாக வாசிக்கும் போதெல்லாம் அவர் திருமணத்தைக் குறித்து சொல்லியிருப்பதைப் படிக்கும் போதெல்லாம் பெரியார் மீது பழியைப் போட்டு திருமணத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வதோடு சரி. திருமணம் என்ற ஒன்று வந்தே இருக்கக் கூடாது பிடித்திருந்தால் சேர்ந்து வாழ்ந்து, எந்தப் பொறுப்புகளும் சுமந்துக் கொள்ளாமல் வாழ்க்கையை அப்படியே நாம் விரும்பியபடி அமைத்துக் கொண்டு நேசித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.

இந்த சென்னையில் இருந்துக் கொண்டு நானே இப்படியெல்லாம் சிந்திக்கும் போது நான் நினைப்பது போன்ற வாழ்க்கை வாழும் அமெரிக்கர்களை சூழ வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவனுக்கு இதற்கு மேலேயும் தோன்றியிருக்குமாக இருக்கும். நான் ஒரு பயிற்சிக்காக சிறிது காலம் ஐரோப்பாவிற்குச் சென்றிருந்தபோது நான் சந்தித்த ஆங்கிலேயர் அதிசயமாகக் கேட்டது ‘உங்க மனைவி நீங்க 1-2 வருடம் கழித்து உங்க நாட்டுக்குச் சென்றாலும் உங்களுக்காகவே காத்து இருப்பார்களா?’ என்று மனைவியை இந்தியாவில் விட்டு அமீரகத்தில் வாழும் ஒரு தமிழரைப் பார்த்து பிரம்மிப்போடு கேட்டுக் கொண்டிருந்தாரே. அந்த ஆங்கிலேயர் இந்திய திருமண முறையைப் பற்றி எவ்வளவு இரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் வாழுபவர்களுக்குத் தான் தெரியும் அதிலுள்ள கஷ்டம் என்பதை அவரிடம் சொல்லமலேயே வந்துவிட்டேன். ஐரோப்பாவிற்குச் சென்றேன் என்றுதான் பெயர். போனேன் வந்தேன் என்று இருந்துவிட்டேன் – எதற்கும் நேரமில்லாமல் போனது. அதற்கே சந்தேகச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள ஒரு மாதத்திற்கு மேலானது. இதற்கெல்லாம் பயந்தே என் மேலாளரிடம் நான் ஊரைவிட்டு எங்கும் எதற்காகவும் போவதாக இல்லை. அப்படியே போனால் குடும்பத்தோடுதான் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன். ச்சீ என்ன ஒரு கேவலம் அதையும் பெரிய பெருமிதமாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். குடும்பக் கட்டமைப்புக்குப் பயந்தே எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அல்லவா தகர்த்துவிட்டு வந்திருக்கிறேன்.

கையாலாகாத் தனத்தோடு எத்தனை நாட்கள் தான் நான் இப்படி குழந்தையாகவே தலையணையை நனைப்பது? எத்தனை பேர் என்னைக் காதலித்தார்கள், ஏன் தான் நான் தவறான துணையைத் தேர்ந்தெடுத்தேனோ? நானா தேர்ந்தெடுத்தேன்? இணையத்தில் தொடர்ந்து பேச்சாடல் (Chatting) செய்ததில் வந்து விழுந்தது இந்தக் கண்றாவி காதல். அப்போதே யோசித்திருக்க வேண்டும் இவளுக்கு என்னை எதற்காகப் பிடித்தது என்று. காதலை என்னைவிடத் தயக்கமின்றி தெரிவித்தது அவள்தானே? கடல் கடந்த வேலையில், கைநிறைய சம்பளத்தில், கணினியியல் படித்த இந்தத் திறமையான வீசிகரிக்கும் ஆணை யாருக்குத்தான் பிடிக்காது? வாழ்க்கையின் பாதுகாவலுக்கு ஒரு ஆளை தேடியிருக்கிறாள், பெண்களுக்கே உண்டான சுயநலமென்று நன்றாக யோசித்திருந்தால் என் மரமண்டைக்கு அதெல்லாம் புரிந்திருக்கும். அப்போதிருந்த தனிமையில் இவள் பேச்சாடலுக்கு அடிமையாகிப் போய் கைப்பிடிக்கவும் நேர்ந்துவிட்டது. ஆனாலும் அது ஒரு சுகமான வசந்த காலம் தான். நினைத்தால் இன்றும் இந்த நொடியும் இனிக்கிறதே!

காதல் என்ற போதையில் மிதந்துக் கொண்டே கல்யாண நாளை வரவேற்றேன். பிரச்சனையில்லாத காதல் திருமணம் நம்முடையதாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். பேச்சாடலில் அவள் பேசியதற்கும் இப்போதிருக்கும் பிசாசிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அவளா இவள்? திருமணம் முடிந்து ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று முடிந்துவிடாமல் குறைந்தது 4 வருடம் என் வாழ்நாளிலேயே சந்தோஷமானதாகத் தான் இருந்தது. எப்போது அவளுக்கு என் செயல்களில் நம்பிக்கையின்மை வந்ததோ சந்தேகம் என்ற நோய் வந்ததோ அப்போதே நான் செத்துவிட்டேன். எங்கள் காதல் பேச்சாடலில் நிகழ்ந்ததால் முதலில் நான் கணினியில் பேச்சாடல்களை நிறுத்த வேண்டுமென்று உத்தரவிட்டாள். ‘முடியாதுடி சனியனே, நான் அலுவலகத்தில் பேசினால் உனக்கு தெரியவா போகிறது’ என்று அந்த நொடியே பளாரென்று ஒன்று கொடுத்திருந்தால் இப்போது இந்த நிலைக்கு வந்திருக்காது. ஒவ்வொரு நாளும் என் ஒவ்வொரு செயலிலும் அவளுக்கு மட்டும் தானே ஏதேனும் தவறு கண்டுபிடிக்க முடிகிறது. ஏன் இப்படியாகிவிட்டாள்? எதற்காக என்னை வதைப்பதோடு அவளையும் வதைத்துக் கொள்கிறாள்?

என் நண்பனின் மனைவி போல இவளுக்கும் யாராவது பிடித்திருந்தால் ‘போய் தொலை’ என்று அனுப்பிவிடலாமே, ஆனால் இவளோ அலாதியான பாசப் பிணைப்பு என்று பிதற்றிக் கொண்டு என்னை ஒரு நாய் குட்டிப் போல் கட்டி இழுத்து தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள அல்லவா ஆசைப்படுகிறாள்? நான் என்ன ஜடப் பொருளா அல்லது வீட்டில் இருக்கும் ஒரு மேஜையா அவளுக்காக உபயோகித்துக் கொண்டு உணர்வுகளே இல்லாமல் ஒரு மூளையில் முடங்கி கிடக்க? எனக்கென்ற நட்பு வட்டாரங்கள் கூட இவளால் சுருங்கிவிட்டது. சுருங்கிவிட்டதென்ன சுருங்கிவிட்டது இல்லாமல் போனதென்று சொன்னால் ரொம்பப் பொருத்தம். போதும் போதும் மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டு அழுவதைவிட ஒரு முடிவு எடுக்க வேண்டியதுதான். நான் விவாகரத்து பிரிவு என்று நினைத்தாலே குழந்தை தான் என் கண் முன்னால் வந்து நிற்கிறாள். என் ஒரே பிடிப்பான என் மகள் என் கைவிட்டுப் போய்விட்டால்? அப்படி ஒன்றும் நடந்துவிடாது என் குழந்தை என்னிடம் இருந்து வளரவே விரும்புவாள். வருங்காலத்திற்காக இனியும் என் நிகழ்கால சந்தோஷத்தை இழக்க முடியாது. என் குழந்தையின் சந்தோஷத்திற்காக நான் ஏன் திருமணம் என்ற சிறையில் சிக்கிக் கொண்டு சிறகடிக்க முடியாமல் சிலுவையில் அறைந்தாற் போல் திண்டாட வேண்டும்? யோசித்து யோசித்தே தலையில் உள்ள பாதி முடியும் கொட்டிவிட்டது, வாழ்க்கையில் விரக்திதான் மிஞ்சியிருக்கிறது. போதும் போதும் இதற்கு ஒரு முடிவுக் கட்டியாகியே தீர வேண்டும்.

முடிவெடுத்தவனாக “போடி உங்க வீட்டுக்கு போய்விடு, விவாகரத்து நோட்டிஸ் வந்து சேரும்”. மகளைப் பார்த்து “கண்ணா, இனி அப்பாதாண்டா உனக்கு எல்லாம். வா செல்லம் நீ தான் என் வாழ்வின் பிடிப்பே”. “செல்லம், இனி நீ தான் என் வாழ்க்கையே” என்று அவள் சொல்லும் போதே தலையணையால் யாரோ அடிப்பது போல் உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தான்.

“எவ அந்த செல்லம் உங்க வாழ்க்கையோட பிடிப்பு? இப்படி கன்னாபின்னான்னு தூக்கத்தில பேசுறது, கேட்டா நான் பிசாசாகி போறேன்ல? என்று ‘உர்’ரென்ற முகத்தோடு அவனை உலுக்கிக் கொண்டே கேட்டாள். “உங்க கூட சண்டப் போட நேரமில்ல. இன்றைக்கு சுதந்திர தினம் எங்க பள்ளிக்கூடத்துல விழா, அதுக்கு ஆசிரியர்கள் சீக்கிரம் போகணும்னு சொன்னேன்ல? சரி நான் கிளம்புறேன், பாப்பாவும் என் கூட வரா… இட்லி வச்சிருக்கேன் அத சாப்பிட்டுட்டு, உங்களுக்கு கட்டி வச்சிருக்கிற டிபன் பாக்ஸை மறக்காம எடுத்துட்டு போங்க. அப்புறம் நீங்க போகும் போது எல்லா விளக்கும் விசிறியும் அணைச்சிருக்கான்னு பார்த்துட்டு, கதவெல்லாம் ஒழுங்கா மூடியிருக்கான்னு ஒருமுறைக்கு இரண்டு முறை செக் பண்ணிடுங்க. உங்க ஷர்ட் இஸ்திரி பண்ணி அங்க மாட்டியிருக்கேன்… சரி நேரமாச்சு நான் வரேன்…” என்று மூச்சு விடாமல் முழங்கிவிட்டு காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்துக் கொண்டிருந்தாள்.

‘ச்சே! எப்போ தூங்கிப் போனேன் நான்? அவளை வெளியே ‘போ’ன்னு சொன்னது கனவா? அதானே எனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வரும்? அவ்வளவு சீக்கிரம் எனக்கு விடுதலை கிடைத்துவிடுமா என்ன? ஆனா இவ இல்லாட்டி என் பாடு திண்டாட்டம்தான். இனி இப்படியெல்லாம் யோசிக்கக் கூட கூடாதுன்னு இந்த சுதந்திர நாளில் உறுதி மொழி எடுத்திட வேண்டியதுதான்’.

By | 2007-08-15T05:44:00+00:00 August 15th, 2007|சிறுகதை|13 Comments

13 Comments

  1. jaseela August 15, 2007 at 6:24 am - Reply

    ayyo paavam ….teacheroda purushan illa? athaan ithanai condition….nice story….& ellorukkum ” HAPPY INDEPENDENCE DAY”………

  2. அபிவிருத்தி August 15, 2007 at 8:54 am - Reply

    சுதந்திரத்தின் பொருளை தவறாக விளங்கிய நடிகைகளை வைத்து சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி நடத்தும் சன் டிவி போன்றதை பார்ப்பதற்காக இன்று அலுவலகத்திற்கு டிமிக்கி கொடுத்து வீட்டில் இருக்காமல் வேலை செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  3. அய்யனார் August 15, 2007 at 8:55 am - Reply

    ஜெஸிலா
    படிச்சிட்டே வரும்போது அங்கங்க சின்ன சின்னதா மின்னலடிச்சது ..ஹம்ம் நல்லா இருங்க 🙂

    இனிமே உங்ககிட்ட கொஞ்சம் சாக்கிரதயாவே இருக்கனும்

  4. ஜெஸிலா August 15, 2007 at 9:08 am - Reply

    நன்றி ஜெசிலா. உங்களுக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள். உங்க ஆத்துக்காரருக்கு நீங்கதான் பிராக்சியா? 🙂

    நன்றி அபிவிருத்தி. சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சியெல்லாம் பார்க்காம நல்ல புள்ளையா அலுவலகம் வந்து எல்லாருக்கும் முட்டாய் தந்தேன் தெரியுமா?

    அய்யனார். தவளை தன் வாயால் கெடும் என்று சொல்வார்கள் நீங்க எப்படி? :-))

  5. சுல்தான் August 15, 2007 at 12:05 pm - Reply

    என்னப்பா ஜெஸீலா என்னென்வோ எழுதறாங்களேன்னு பார்த்தேன்.எதைப்பார்த்துட்டு இப்படில்லாம் மாறிட்டாங்களோன்னு நெனச்சேன்.
    கடைசியில் நல்லாத்தான் முடிச்சிருக்கீங்க.
    //சீக்கிரம் போகணும்னு சொன்னேன்ல? சரி நான் கிளம்புறேன், பாப்பாவும் என் கூட வரா… இட்லி வச்சிருக்கேன் அத சாப்பிட்டுட்டு, உங்களுக்கு கட்டி வச்சிருக்கிற டிபன் பாக்ஸை மறக்காம எடுத்துட்டு போங்க. அப்புறம் நீங்க போகும் போது எல்லா விளக்கும் விசிறியும் அணைச்சிருக்கான்னு பார்த்துட்டு, கதவெல்லாம் ஒழுங்கா மூடியிருக்கான்னு ஒருமுறைக்கு இரண்டு முறை செக் பண்ணிடுங்க. உங்க ஷர்ட் இஸ்திரி பண்ணி அங்க மாட்டியிருக்கேன்//
    அவ்வளவு அவசரத்திலும் அவனுக்காகவும் அவன் குழந்தைக்காகவும் முறையாகப் பார்த்து செய்கின்ற மனைவியைப் பற்றி அவ்வாறு எண்ணியதற்கே அவனை உதைக்கணும்.

  6. ஜெஸிலா August 15, 2007 at 12:12 pm - Reply

    //அவ்வளவு அவசரத்திலும் அவனுக்காகவும் அவன் குழந்தைக்காகவும் முறையாகப் பார்த்து செய்கின்ற மனைவியைப் பற்றி அவ்வாறு எண்ணியதற்கே அவனை உதைக்கணும்.// முறையாக பார்த்து செய்தால் மட்டும் ஒரு மனைவியின் கடமை முடிந்துவிடுகிறதா சுல்தான் பாய்!?

  7. கோபிநாத் August 19, 2007 at 3:43 am - Reply

    ஜெஸிலாக்கா…இப்ப தான் பார்த்தேன்..தலைப்பு ஏற்ற கதை, அதான் நடையும் நல்லா இருக்கு 😉

    கடைசியில காமெடி பண்ணிட்டிங்க 😉

  8. ஜெஸிலா August 19, 2007 at 3:45 am - Reply

    என்ன கோபி பண்றது என்னுடைய போன கதை மாதிரி டிராஜிடிலதான் முடிக்க இருந்தேன். கதையிலாவது இப்படி இருந்துட்டு போகுதுன்னுதான் காமெடி 🙂

  9. C.M.HANIFF August 20, 2007 at 10:51 am - Reply

    nalla kathai , suspense 🙂

  10. ஜெஸிலா August 20, 2007 at 10:52 am - Reply

    விடுமுறையில் போயிருந்தீங்களா ஹனீப் பாய்? ரொம்ப நாளா ஆளையே காணோம்?

  11. c.m.haniff August 20, 2007 at 12:06 pm - Reply

    விடுமுறையில் போயிருந்தீங்களா ஹனீப் பாய்? ரொம்ப நாளா ஆளையே காணோம்?

    Aamaanga jazeela 🙂

  12. Benu August 28, 2007 at 4:00 pm - Reply

    teacherla athaan students mathiriye teacherukkum niraya sandhegam varuthu.

    nice story.

  13. ஜெஸிலா September 1, 2007 at 8:17 am - Reply

    //teacherla athaan students mathiriye teacherukkum niraya sandhegam varuthu.

    nice story.// பெனு, உங்க அம்மாவும் டீச்சரா இருந்தவங்க தானே? அவங்கள மனசுல வச்சிக்கிட்டு சொல்லலையே :-)) எம்.ஓ.பி. எப்.எம். கேட்டேன் – மேலும் நிறைய நிகழ்ச்சி செய்ய வாழ்த்துகள்.

Leave A Comment