எதற்காக வலைப்பூ?

வலைப்பூன்னு ஒண்ணு ஆரம்பிக்கிறோம் அது எதுக்காக யாருக்காக? எல்லோரும் ஆளுக்கு ஒண்ணு வச்சிருக்காங்களே நானும் ஆரம்பிக்கிறேன்னு ஒரு வலைப்பூவாளர் கிட்ட கேட்டா அவங்க சொன்னாங்க “ஆரம்பிக்கலாம் யாருவேணாலும், ஆனா நீ எழுதுற எழுத்துக்கு பதிலடி வரும். தலையில குட்ட நெறைய பேர் காத்து கெடப்பாங்க. கன்னாபின்னான்னு திட்டி வரும் பெயருடனும் பெயரில்லாமலும். ஒரு பொது எடத்துல நின்னு உன் கருத்த சொல்றா மாதிரி வலைப்பூ. அதனால எழுதிற எல்லா கிறுக்கலையும் வலையேற்றாம உனக்கே ‘ஆஹா நானா எழுதினேன்’னு தோணுற அளவுக்குள்ள பதிவை மட்டும் போடு” அப்படின்னு ஒரு பெரிய பில்டப்பே கொடுத்தாங்க. இலவசமா கிடைக்குது என்பதற்காக அப்படியேவா அறிவுரைய அள்ளிக்க முடியும்? எடுத்துக்கிறத மட்டுந்தான் எடுத்துக்க முடியும் அதான் என் வலைப்பூவையே கிறுக்கல்னு போட்டு பிரிக்காம எல்லாத்தையும் கொட்டி வைக்கிறேன் நீங்களும் பாவம் படிச்சு தொலைக்க வேண்டியிருக்கு.

யாரும் யாருடைய வலைப்பூவுக்கும் தேடிப் போவதில்லை மாறாக
* ‘அண்மையில் மறுமொழி இடப்பட்ட இடுகை’,
* ‘பரிந்துரைக்கப்பட்ட இடுகை’,
* ‘அதிகம் பார்வையிடப்பட்ட இடுகை’,
* ‘தேன்கூடு போட்டி’யில் பங்கேற்றவர்கள்

இந்த மாதிரி இடங்களில் தலைப்பும் கூடவே வரும் நான்கு வரிகளும் சுவாரஸ்யமாக இருந்தாலே ஒரு பதிவை திறந்து படிக்கிறோம். அல்லது பதிவின் சுட்டியை தனிமடலிலோ, பின்னூட்டத்திலோ படிக்க தருவதால் படிக்கிறோம். படிக்கும் எல்லா பதிவுகளுக்கும் எல்லோரும் பதில் எழுதுவதில்லை அதிலும் ஒரு கணக்கு இருக்கு

* சிலர் பிடித்திருந்தாலும் சரி பிடிக்கவில்லையென்றாலும் சரி ஏதாவது பதில் எழுதி தன் வருகையை நியமனம் செய்து கொள்கிறார்கள்.
* சிலர் பாராட்ட மட்டுமே செய்வார்கள், நன்றாக இல்லை என்றால் படித்து விட்டு ஓடிவிடுவார்கள். (எண்ணிக்கையில் இப்படிப்பட்டவர்கள் குறைவு என்று சொல்லலாம்).

* சிலர் குறைகள் கண்டுபிடிக்கவே மற்றவரின் பதிவுக்கு போய் இரண்டு குத்து குத்திவிட்டு வரவில்லையென்றால் இவர்களுக்கு தூக்கம் வராது. இதில் தவறில்லை, குறை தெரிந்தால்தான் அடுத்த முறை நிறையாக இருக்கும்.

* சிலர் தனக்கு தானே ஒரு ரேஞ்சு வைத்துக் கொண்டு தனக்கு சரி சமமாக நினைக்கும் நபர்களின் பதிவுகளுக்கு மட்டும் போய் பதில் எழுதும் பழக்கம் கொண்டவர்கள். தன் உடம்பைவிட தலையின் எடை இவர்களுக்கு ரொம்ப அதிகம்தான்.

* சிலர் வாக்குவாதம் செய்ய, சண்டை போட, வம்பிழுக்கவே மற்றவர்கள் வலைக்கு போய் சுறுக்கென்று எழுதி வைத்துவிட்டு வருகிறார்கள். (இதுல எந்த குத்தும் இல்லப்பா நம்புங்க)

மொத்தத்தில் ஒருவரை மெச்சி ஒருவரும் அல்லது ஒருவரை தூற்றி மற்றவரும் வலைத்தளத்தில் தனக்கென்று ஒரு இடம்பிடித்துவிடுகிறார்கள்.

எதற்காக யாருக்காக எழுதுகிறோமென்றால்

* என் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க என்பதுதான் பலரது கருத்து. ஆனால் அந்த நோக்கம் கூட இல்லாமல் பல பேர் தம் கருத்தை சொல்வதை விட மற்றவனை தாக்குவதில் ரொம்பவும் பெரிய குறிக்கோள்களுடன் திரிகிறார்கள்.

* இப்படித்தான் எழுத வேண்டும், இந்த கட்டுப்பாட்டுக்குள்தான் நிற்க வேண்டுமென்றெல்லாம் இல்லாமல் என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வைப்பது ஒரு விதம். எழுதுகோலைப் பிடித்து எழுதும் போது நம் மனசு சொல்றபடி எழுதுவோம் ஆனா இந்த கணினி முன்னாடி தட்டுறது இருக்கே அது நம்ம மூளை என்ன சொல்லுதோ அதன்படி கேட்டு செயல்படுகிறோம். அதனால்தான் பலர், மற்றவர்களைக் காயப்படுத்துகிறோமா என்று கொஞ்சம் கூட மனதால் யோசிக்காமல் செய்யும் செயலாகிவிடுகிறது.

* சிலர் எழுதும் போது எப்படித்தான் இப்படி எழுதுகிறார்கள் என்று தோன்றும் அளவுக்கு இருக்கும். இது நமக்கு தோணாம போச்சேன்னு தோணும். அப்படிப்பட்டவர்கள் எழுத்து சில நேரங்களில் அங்கீகரிக்கப்படாமல் போய்விடுவது ரொம்பவும் கஷ்டமாகி போகிறது. (போன மாத தேன்கூடு போட்டியில் ‘திரைச்சீலை’ என்ற கதை படித்து அப்படி தோன்றியது. யாருமே அந்த கதையை படிக்கவில்லையோ அல்லது புரிந்துக் கொள்ளவில்லையோ தெரியவில்லை பத்து இடத்திற்குள்ளும் வராமல் போனது ரொம்ப கஷ்டமாக இருந்தது மனதுக்கு.)

* சிலர் வணிக முறையாக உபயோகிக்கிறார்கள் இந்த வலைப்பூவை. தன்னுடைய நிறுவனத்தைப் பற்றி பலருக்கு கொண்டு செல்ல, தன் பொருளை விற்க, தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள என பலதரப்பட்ட வணிகம் இந்த வலைப்பூவில்.

சுருக்கமாக சொன்னால், எல்லோருக்கும் நம் கருத்து கேட்கவே இடுகைகள். மூன்று கோட்பாடுகள், கொள்கைகள், குறிக்கோள்களுக்குள்தான் வலைப்பூவாளிகள் என்பது என் கருத்து.

1. இரகிசய டைரியை பலர் பார்க்க படிக்க வைப்பது. அதாவது நிகழ்வை, நடந்த சொந்த அனுபவத்தை, ஏமாற்றத்தை, வெற்றியை, சந்தோஷத்தை, சோகத்தை கொட்டி தீர்க இணையத்தில் ஒரு இடம். அதை மற்றவர்கள் பார்ப்பதில் படிப்பதில் ஆட்சேபனை இல்லாதவர்கள் இவர்கள்.

2. சிலர் நிறைய நட்பு சம்பாதிக்க, பொழுதுபோக்காக அரட்டையடிக்க, நூல்விட, கடல போட. இவர்களது ஒரு குறுகிய வட்டம் மட்டுமே நிறைய தேடல் இல்லாதவர்கள். எழுதுவதை ‘ஆஹா’ ‘ஓஹோ’ போட ஒரு சிறிய வட்டம் சம்பாதித்தால் போது என்று இருப்பவர்கள்.

3. நிறைய பேர் வித்வான்களாக, புலவர்களாக, அறிஞர்களாக, துத்துவ ஞாநியாக, அறிவு ஜீவிகளாக தன்னை நியமித்துக் கொண்டு தன் கருத்தை பலருக்கு கொண்டு செல்லும் எண்ணம் உடையவர்கள். இவர்கள்தான் தான் எழுதுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் மற்றவர்கள் என்ன எழுதிகிறார்கள் என்ற தேடலுடன் படிப்பவர்கள்.

ஆயிரம் பேரைக் கொன்றால்தான் ஒரு சிறந்த மருத்துவர் என்பது போல். கண்டதை படிப்பவர்கள்தான் கற்றவர்களாகிறார்கள். இவ என்னடா பெரிய லார்டு லபக்குதாஸ் மாதிரி எழுதிருக்காளேன்னு நினைக்காதீங்க, எனக்குத் தெரிஞ்ச காரணத்த நா சொல்லிட்டேன். எதுக்கு பதிக்கிறீங்கன்னு நீங்க சொல்லுங்க.

எழுத்து சுதந்திரம் நிறைந்த இந்த வலைப்பூவை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

By | 2006-09-02T06:35:00+00:00 September 2nd, 2006|பதிவர் வட்டம்|23 Comments

23 Comments

  1. நிலவு நண்பன் September 2, 2006 at 7:09 am - Reply

    இந்த வாரம் அலுவலகம் விடுமுறையா..? 🙂

  2. வேந்தன் September 2, 2006 at 7:13 am - Reply

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை,நான் கூட நிறைய எழுதி குவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் வலைப்பூ பக்கம் வந்தேன். ஆனால் இங்கு நடக்கும் கூத்துக்களைப் பார்க்கும் போது, நான் ஏன் எழுத வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது

  3. இராம் September 2, 2006 at 8:16 am - Reply

    //சிலர் தனக்கு தானே ஒரு ரேஞ்சு வைத்துக் கொண்டு தனக்கு சரி சமமாக நினைக்கும் நபர்களின் பதிவுகளுக்கு மட்டும் போய் பதில் எழுதும் பழக்கம் கொண்டவர்கள். தன் உடம்பைவிட தலையின் எடை இவர்களுக்கு ரொம்ப அதிகம்தான்.//

    ஜெசிலா,

    நல்லா சூடாகதான் கேள்வி கேட்டு இருக்கீங்க.

  4. sivagnanamji(#16342789) September 2, 2006 at 12:43 pm - Reply

    //எழுத்து சுதந்திரம் நிறைந்த இந்த வலைப்பூவை நாம் சரியாகத்தான்
    பயன்படுத்துகின்றோமா?//

    ‘நச்’னு ஒரு கேள்வி!

  5. G Gowtham September 2, 2006 at 12:45 pm - Reply

    ஜெஸிலா,
    ‘உள்குத்து, வெளிக்குத்து’னெல்லாம்
    இங்கே வலைப்பூவில் பேசிக்கிறாங்கள்ல, அந்த எல்லாவகையான குத்துகளையும் சேர்த்துவச்சு செம குத்து விட்ருக்கிங்க!

    ஆமா முடிவா என்ன சொல்ல வர்றிங்க.. ‘எழுத்து சுதந்திரம் நிறைந்த இந்த வலைப்பூவை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?’ என்ற கேள்வியா?
    அட போங்கம்மா.. எதில்தான் நாம சுதந்திரத்தை சரியா பயன்படுத்துகிறோம்?! எல்லாத்திலும் எல்லாமும் உண்டு. எது வேணுமோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளும் சுதந்திரமும் எல்லாருக்கும் உண்டு.

    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காணும் அறிவு நம்ம மண்டைக்குள்ளதான். தீதும் நன்றும் பிறர் தர வாரா..

  6. ஜெஸிலா September 2, 2006 at 1:44 pm - Reply

    ஞாநி வெள்ளி சனி எங்களுக்கு விடுமுறைல அதான்.

    வேந்தன் ராஜு, என்ன கூத்து நடந்தா என்ன, நீங்கப்பாட்டுக்கு எழுதி குவிக்க வேண்டியதுதானே?

    ராம் சூடாக கேட்கவில்லை, எப்பவோ எழுத வேண்டும் என்று நினைத்ததை ஆறப்போட்டுத்தான் எழுதியிருக்கிறேன் 😉

    சிவஞானம்ஜீ, பெயரிலேயே மரியாதை வச்சிருக்கீங்க 😉 நச்சுன்னு நான் கேள்விக் கேட்பது இருக்கட்டும் நீங்க அந்த கேள்விற்கு ஏன் பதில் சொல்லல 😉 ?

    கெளதம், நமக்கு குத்தெல்லாம் தெரியாதுப்பா, அப்படி நினைத்து எழுதவுமில்ல. அப்ப சுதந்திரத்தை சரியா பயன்படுத்தலன்னு சொல்லவறீங்க. //தீதும் நன்றும் பிறர் தர வாரா..// வாஸ்தவம்தான்

  7. லொடுக்கு September 2, 2006 at 2:05 pm - Reply

    //எதற்காக வலைப்பூ?//

    பின்ன எதுக்கு.. உங்களை மாதிரி நல்லா எழுதுரவங்களை எழுத விட்டு வேடிக்கை பாக்கத்தான்….

  8. azadak September 2, 2006 at 2:06 pm - Reply

    ஆஹ்ஹா…கொஞ்சமே கவலப்பட்டு அதத் தொடச்சுப்போட்டுட்டு ஜாலியா வெண்பாவுல ஆங்கிலத்தக் கலந்து களைகட்டுற நேரத்துல நம்மள திரும்பவும் திரைச்சீலைக்குள்ள மறைக்கப்பாக்றீங்களே இது நியாயமா 🙂

    *பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு* சொல்ற அதிர்ஷ்டம் நமக்கு இல்லீங்கோவ்…அது வைரமுத்து சாருக்குதானுங்கோவ், சரி..இல்ல.. கமல் சாருக்குதானுங்கோவ் :)))

    அன்புடன்
    ஆசாத்

  9. தம்பி September 2, 2006 at 2:06 pm - Reply

    //இந்த மாதிரி இடங்களில் தலைப்பும் கூடவே வரும் நான்கு வரிகளும் சுவாரஸ்யமாக இருந்தாலே ஒரு பதிவை திறந்து படிக்கிறோம்.//

    இதில ஏதும் தப்பு இருக்கா?

  10. மஞ்சூர் ராசா September 2, 2006 at 4:51 pm - Reply

    ஜெஸிலா,
    உங்களின் ஆதங்கமும், எண்ணமும் எனக்கும் பலமுறை தோன்றியிருக்கிறது. வலைப்பதிவுகளில் பலர் தங்களின் திறமையை அழகாக வெளிப்படுத்தத்தான் செய்கிறார்கள். ஆனால் பின்னூட்டங்கள் பல சிறந்தப் படைப்புகளுக்கு மிக சொற்பமாகவும் ஏன் சில சமயங்களின் கிடைக்காமலே போய்விடுவதும் சில ஒன்றுமேயில்லாத பதிவுகளுக்கு ஏகப்பட்ட பின்னூட்டங்களும் வருவது, இன்னும் நாம் வலைப்பதிவுகளை சரியான முறையில் பயன் படுத்துவதில்லையோ என்னும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. எனக்கு தோன்றுவதெல்லாம் நல்ல படைப்புகளை அங்கீகரியுங்கள், குற்றம் குறைகளை எடுத்து சொல்லுங்கள். இதில் பாகுபாடு பார்க்காதீர்கள். என்பது மட்டும் தான்.

  11. ஜெஸிலா September 2, 2006 at 5:04 pm - Reply

    //எழுத விட்டு வேடிக்கை பாக்கத்தான்….// லொ.பாண்டி வேடிக்கை பாக்குறீகளா இல்லையான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது. உள்ளேன் ஐய்யா போட்டுட்டு போகனும் 😉

    //ஜாலியா வெண்பாவுல ஆங்கிலத்தக் கலந்து களைகட்டுற நேரத்துல நம்மள திரும்பவும் திரைச்சீலைக்குள்ள மறைக்கப்பாக்றீங்களே இது நியாயமா :)//
    வெண்பாவில் ஆங்கிலம் கலப்பா? நல்ல விஷயம்தான் கண்டிப்பாக என் ஓட்டு இல்லை. பத்தென்ன இரண்டுக்குள்ளேயே வருவீர்கள் நன்றாக இருந்து அதை மக்கள் படித்தால். எல்லாத்தையும் படிக்காம, குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே படித்து ஓட்டு போடுறாங்க அதான் உங்க ஆக்கம் விட்டுப்போச்சு ;-(

    தம்பி உமா, அதில் தவறு இருப்பதாக நாஞ்சொன்னேனா? தப்பும் இல்ல தல மேல கொட்டுமில்லை 😉

    //நல்ல படைப்புகளை அங்கீகரியுங்கள், குற்றம் குறைகளை எடுத்து சொல்லுங்கள். இதில் பாகுபாடு பார்க்காதீர்கள்.// இதை தண்டோரா போட்டாலும் காதில் வாங்க மாட்டார்கள். கருத்துக்கு நன்றி மஞ்சூர் சுந்தர். அப்புறம் ஊருகெல்லாம் நல்லபடியா போயிட்டு வந்திட்டீங்களா?

  12. ஏ.எம்.ரஹ்மான் September 3, 2006 at 7:43 am - Reply

    நல்லதோ கெட்டதோ இதில் வரும் நல்ல விசயங்களை ஏத்துகிட்டா சரி, எழுதுவது பெரிய விசயம் அல்ல என்ன எழுதுகிறோம் என்கிறது தான் முக்கியம் எனக்கு புரிந்த வரை ஜெஸிலா நல்ல விசயத்தை தான் சொல்லுராங்க வாழ்த்துக்கள்.

  13. மதுமிதா September 3, 2006 at 7:44 am - Reply

    ///
    எழுத்து சுதந்திரம் நிறைந்த இந்த வலைப்பூவை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?
    ///

    தேவையான நேரத்தில் தேவையான கேள்வி

    கேள்வி பிறக்க பதில் கிடைக்கும்

  14. ஜெஸிலா September 3, 2006 at 7:56 am - Reply

    //கேள்வி பிறக்க பதில் கிடைக்கும் // காத்திருப்போம் மதுமிதா.

    //ஜெஸிலா நல்ல விசயத்தை தான் சொல்லுராங்க வாழ்த்துக்கள். //
    நன்றி ரஹ்மான்.

  15. Srimangai(K.Sudhakar) September 5, 2006 at 12:17 pm - Reply

    ஜெசீலா,
    வலைப்பூக்களை “on line diary” என்று ஆகிற பொழுது, தான் நினைத்தது, சொல்வது என்பது முதலில் காணப்படும். இதில் கொஞ்சம் நார்சிஸம் ( தன் எழுத்தைத் தானே ரசிப்பது), தன் எழுத்திற்கு பின்னூட்டங்கள் எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாதது. வலைப்பூக்களுக்கு அதன் சுதந்திரமே அதனை விகாரப்படுத்துவதாகப் போவது , அதன் ஜனநாயகப்போக்கின் ஒரு வெளிப்பாடே. விட்டுவிடுங்கள். படித்ததில் நல்லதை ரசியுங்கள். பின்னூட்டமிடுங்கள்.
    உங்கள் கேள்வி நியாயமானது. பின்னூட்டங்கள் பெரும்பாலும் மஞ்சூர் ராசா சொன்னமாதிரி , நாம் எண்ணுவது போலில்லாது சில வலைப்பூக்களுக்கு ஒன்றுமே கிடைக்காமலும், சிலவற்றிற்கு அதிகம் கிட்டியும் காணக்கிடைப்பது வருந்தத்தக்கதே. சராசரியாக ஒரு வலைப்பூ வாசகன் என்ன வாசிக்க நினைக்கிறான் என்பதையும் இது பொறுத்துள்ளது.
    என்ன, “நாம எழுதுவோம். ஒத்த சிந்தனையுள்ளோரிடம் மேலும் ஆழமாக தொடர்புகொள்வோம். மாற்றுச் சிந்தனையாளர்களின் கருத்துக்கு மதிப்பளித்து, அந்தப்பக்கத்தின் நியாயம் என்ன? எனத் தெரிந்துகொள்வோம்.. “என நினைப்பது சில வலைப்பூக்களில் காணலாம். இல்லாவிட்டால் அடிதடிதான்…
    நன்கு எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    க.சுதாகர்

  16. ஜெஸிலா September 5, 2006 at 12:56 pm - Reply

    //ஜனநாயகப்போக்கின் ஒரு வெளிப்பாடே. விட்டுவிடுங்கள்.// வேற வழி 😉
    //இல்லாவிட்டால் அடிதடிதான்…// அதான் நடக்குது இங்க.
    //நன்கு எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.// நன்றி சுதாகர்.

  17. ஞானவெட்டியான் September 6, 2006 at 11:24 am - Reply

    அன்பு ஜெஸிலா,
    வணக்கம்.
    //நிறைய பேர் தன் கருத்தை பலருக்கு கொண்டு செல்லும் எண்ணம் உடையவர்கள்.//

    “வழக்கிழந்த காவியங்களையும், மறைத்து வைத்துள்ள சித்தர்களின் இரகசியங்களையும் இளைய தலமுறைக்கு விட்டுச் செல்லவேண்டும்” என்னும் தவிப்போடு , இவைளைப் பத்திந்து வைக்கும் என்போன்ற கிழங்களை எந்த வகுப்பில் சேர்த்துள்ளீர்கள்? இயல்பாகவே என் தமிழ் இப்படித்தான் இருக்கும்.

    //நிறைய பேர் வித்வான்களாக, புலவர்களாக, அறிஞர்களாக, துத்துவ ஞாநியாக, அறிவு ஜீவிகளாக தன்னை நியமித்துக் கொண்டு …//

    இந்த வகுப்பில் என்னைச் சேர்க்கவில்லையே?:))

  18. லொடுக்கு September 6, 2006 at 11:25 am - Reply

    //லொ.பாண்டி வேடிக்கை பாக்குறீகளா இல்லையான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது. உள்ளேன் ஐய்யா போட்டுட்டு போகனும் 😉
    //
    தவறு. உள்ளேன் அம்மா என்றல்லவா சொல்ல வேண்டும். சரி, தவறை மன்னித்து…
    ‘உள்ளேன் அம்மா.’ சொல்லியாச்சு போதுமா?

  19. நிலவு நண்பன் September 6, 2006 at 11:26 am - Reply

    //ஞாநி வெள்ளி சனி எங்களுக்கு விடுமுறைல அதான்.//

    அட வியாழன் – வெள்ளியை..வெள்ளி – சனியா மாத்திட்டாங்களே..?

    வந்த 2 மாசத்துல இப்படி ஒரு மாற்றமா..? அந்த மாற்றத்தைப் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்..

  20. ரவிசங்கர் May 1, 2007 at 5:50 am - Reply

    //சுருக்கமாக சொன்னால், எல்லோருக்கும் நம் கருத்து கேட்கவே இடுகைகள். மூன்று கோட்பாடுகள், கொள்கைகள், குறிக்கோள்களுக்குள்தான் வலைப்பூவாளிகள் என்பது என் கருத்து.//

    கருத்து சரி. ஆனா, தயவுசெஞ்சு -வலைப்பூவாளிகள்- போன்ற கொடுமையான சொற்களை விடுத்து வலைப்பதிவர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுகிறேன். நன்றி

  21. ஜெஸிலா May 1, 2007 at 5:51 am - Reply

    தமிழை எளிதாக்கும் ஆர்வம் புரிகிறது ரவிசங்கர் ஏற்கிறேன், மாற்றிக் கொள்கிறேன்.

  22. சந்திப்பு May 1, 2007 at 7:45 am - Reply

    ஜெசிலாவின் கருத்துக்கள் அனைத்து வலைப்பதிவர்களும் படிக்க வேண்டியது. வாழ்த்துக்கள்! அதுசரி, பல பேருக்கு எப்படித்தான் கமெண்ட் எழுதுவதற்கும், மற்ற வலைப்பதிவுகளை படிப்பதற்கும் நேரம் கிடைக்கிறதோ! அதுதான் எனக்குத் தெரியாத ரகசியமாக இருக்கிறது. அதுமட்டுமா? சில நேரங்களில் நமக்கு வருகிற கமெண்ட்டுக்கு கூட பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறோம்!!!!!!!! மேதின வாழ்த்துக்கள்!

  23. ஜெஸிலா May 1, 2007 at 7:49 am - Reply

    நன்றி பெருமாள். நீங்கள் சொல்வது சரிதான் எல்லா பதிவுகளையும் படிக்க முடியாதுதான். ஆனால் படிக்கும் பதிவுகளுக்கு ஒரு வரி பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்தினால் அவர்களை நிறைய எழுத தூண்டும், நமக்கு மேலும் நிறைய வாசிக்க கிடைக்கும் 😉

    என்றோ எழுதிய பதிவுக்கு இன்று எனக்கு கிடைத்த பின்னூட்டம் சந்தோஷத்தை தரத்தான் செய்கிறது 😉

Leave A Comment