மத்யன் என்ற குலத்தவர்கள் எகிப்து எல்லைப் பகுதிக்கும் தற்போது ஜோர்டான் இருக்கும் இடத்திற்கும் இடையில் மத்யன் என்ற சிறு நகரத்தில் வாழ்ந்தார்கள்.
அதன் பக்கத்திலேயே ‘அய்கா’ என்ற இடம் நல்ல விளைச்சல் மிகுந்த பகுதியாகத் திகழ்ந்தது. ஆனால் இரண்டு பகுதி மக்களும் இறைமறுப்பாளர்களாக, மோசடி செய்பவர்களாக, வழிப்பறி கொள்ளையர்களாக, வியாபாரத்தில் நேர்மையில்லாதவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களை நேர்வழிப்படுத்த இறைவன் அங்கு இப்ராஹிம் (அலை) அவர்களின் தலைமுறையில் வந்தவர்களான ஷுஐப் (அலை) அவர்களை அனுப்பினான்.
ஷுஐப் (அலை) அவர்களின் குடும்பப் பின்னணி தெரிந்திருந்ததால் அவர்களிடம் மக்கள் மரியாதையாக நடந்தார்களே தவிர அவர்கள் சொன்ன விஷயங்களைக் கேட்க மறுத்துவிட்டனர். இருப்பினும் அந்த மக்களிடம் இறைத்தூதரான ஷுஐப் (அலை) “இறைவன் ஒருவனே. அவனை மட்டுமே வணங்குங்கள். வியாபாரத்தில் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
மக்களுக்குச் சேர வேண்டிய பொருட்களைச் சரியாக முழுமையாக அளந்து கொடுங்கள். எடையில் திருட்டுத்தனம் செய்து பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். நீங்கள் இப்போது நல்ல நிலைமையில்தானே இருக்கிறீர்கள், ஆனால் அளவிலும், நிறுவையிலும் மோசடி செய்தால் உங்களை வேதனை சூழ்ந்து கொள்ளும்” என்று அறிவுரை சொன்னபோதும் இறைத்தூதரான ஷுஐப்(அலை) அவர்களை யாருமே பொருட்படுத்தவில்லை.
இவர்கள் அய்காவிற்குச் சென்று அங்கும் பிரச்சாரம் செய்தார்கள். சிலர் இவர்கள் சொல்வது உண்மை, நல்வழி என்பதைப் புரிந்து கொண்டு மனம் திருந்தி வாழ்ந்தார்கள். அப்படியான நல்லடியார்களைக் கூட்டிக் கொண்டு ஷுஐப் (அலை) மீண்டும் மத்யன் பகுதிக்கு விரைந்தபோது, அங்கிருந்தவர்கள் இவர்களது போதனைகளுக்குச் செவி சாய்க்கவில்லை.
இவர்களைப் பார்த்து ஏளனம் பேசினார்கள். அவர்களுடைய குலத்தார் இல்லாமல் இருந்திருந்தால் கல்லெறிந்தே கொன்றிருப்போம் என்றார்கள். அவர்களுடன் சேர்ந்திருக்கும் கூட்டம் வசதியில்லாத ஏழை மக்கள் அதனாலேயே இவர்கள் பின்னால் வந்துவிட்டார்கள் என்றும் பேசினார்கள். ஓர் இறைக் கொள்கையில் இல்லாமல் அவர்களைப் போலவே இருக்கும்படி நம்பிக்கை கொண்டவர்களை மிரட்டிப் பார்த்தார்கள். அவர்களை ஊரைவிட்டே விரட்டிவிடுவோம் என்றும் பயமுறுத்தினார்கள்.
அவர்களின் பயமுறுத்தலுக்கெல்லாம் அஞ்சாமல் ஏகத்துவத்தை எடுத்துரைத்துக் கொண்டும், தவறான இழிசெயல்களிலிருந்து விலகக் கோரியும் போதித்த வண்ணம் இருந்தார்கள் ஷுஐப் (அலை). தனக்காக நல்வழியில் மாறச் சொல்லவில்லை. அவர்கள் நன்மக்களானால் அவர்களுக்கே நல்லது என்றும் நல்லவற்றை எடுத்துரைக்க, தான் கூலி கேட்கவில்லை மாறாக இறைவன் நன்மை செய்பவர்களுக்குத் தகுந்த கூலியைத் தருகிறான் என்றெல்லாம் சொன்னபோது, அதற்கு அவர்கள் “உங்களைப் பார்த்தால் சூனியம் செய்யப்பட்டவர்போல் உள்ளது. நீங்களும் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்தான். நீங்கள் உங்களை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையென்றால் வானத்தில் இருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படி செய்யுங்கள்” என்று நகைத்தனர்.
“அறிவிழந்து நகைக்கிறீர்கள். இதற்கு முன்பு நூஹ் (அலை), ஹூத் (அலை), சாலிஹ் (அலை), லூத் (அலை) இவர்களின் ஊர் மக்களுக்கு என்ன நேர்ந்தது, என்ன ஆனார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லையா? அவர்களுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்பட வேண்டுமா? தாமதமாகிவிடவில்லை, இறைவனிடம் நீங்களெல்லாம் மன்னிப்புக் கோரி பாவ மன்னிப்புக் கேட்டு அவன் பக்கமே மீளுங்கள்.
இறைவன் கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கேள்விகள் எழுப்பியும், அறிவுரைகள் தந்தும், அவர்களின் நிராகரிப்பு தொடர்ந்தது. ஊழல் பெருகியது. வழிப்பறிக் கொள்ளையும், வியாபாரத்தில் நேர்மையின்மையும் நிறைந்து வழிந்தது.
அவர்களை நேர்வழிப்படுத்தும்படி ஷுஐப் (அலை) பிரார்த்தித்தார்கள். அந்த ஊர் வெயிலின் கொடுமையில் தகித்தது. ஒருநாள் இருட்டிக்கொண்டு வந்தது. ஆனால் அந்த மேகம் மழையைத் தரவில்லை. கெட்ட மக்களுக்கு அழிவைத் தந்தது. மத்யன் நகரத்து மக்கள் மட்டுமல்ல அய்கா பகுதியின் நேர்வழிப்படாத மக்களும் அழிந்தனர். அவர்கள் கேட்ட ஒரு துண்டு வானம் அவர்கள் மீது விழவில்லை, மொத்தமாக மேகம் கீழே விழுந்தது போன்ற பேரிடிச் சத்தத்துடன் தாக்கியது. பூகம்பம் புரட்டிப் போட்டது போல் அவர்கள் தம் வீடுகளிலேயே இறந்து கிடந்தனர்.
ஷுஐப்பும் அவர்களுடனிருந்த நல்லடியார்களும் அழிவிலிருந்து தப்பித்தார்கள். நல்லவர்கள் மட்டும் வாழும் நகரமாக அப்பகுதி மாறியது. ஷுஐப் (அலை) தன்னுடைய இரண்டு மகள்களுடன் மிகச் செழிப்பான பகுதியில் வளமுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக வாழ்ந்தார்கள்.
Leave A Comment