ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோல் மன்னன்

ஒரு நாட்டின் ஆட்சியாளர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியான எல்லாக் குணங்களையும் ஒருசேரப் பெற்றிருந்தான் எகிப்து நாட்டின் அரசன் ஃபிர்அவ்ன். எகிப்தை ஆளுபவர்களுக்கு ஃபிர்அவ்ன் என்று பெயர். 

அவன் தன்னை உலகத்தின் அதிபதியாகக் கருதினான். தன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் யாருமில்லை என்று பெருமையடித்துக் கொண்டான். அந்தக் கொடுங்கோலன் தனது ஆட்சியதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் தன்னைக் கடவுள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டதோடு தன்னைப் போலவே ஒரு சிலையையும் செய்து, அதனைக் கடவுளாக்கி, மக்களை அதனை வணங்க வற்புறுத்தினான். 

இறையச்சம் இல்லாதவனாக, தான் செய்யும் அட்டூழியங்களுக்குக் கேள்வி கணக்கு உண்டு, மறுமையில் வேதனையுண்டு என்ற பயமில்லாமல் செயல்பட்டான். 

நாட்டு மக்களிடையே பிரித்து ஆளும் சூழ்ச்சியைச் செய்தான். மக்களிடையே உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தினான். இப்ராஹிம் (அலை), யாகூப் (அலை) அவர்களின் வழி வந்த பனீ இஸ்ராயீலர்களைக் கொத்தடிமைகளாக்கி துன்புறுத்தினான். அவன் குலத்தினர் எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும் அவர்களே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தார்கள். 

எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருந்தாலும் சிறுபான்மையினராகக் கருதப்பட்ட பனீ இஸ்ராயீலர்கள், தம் இனத்திலிருந்து ஒருவர் தோன்றுவார், அவர் ஃபிர்அவ்னை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவார் தம் இன்னல்களுக்கு முடிவு கட்டுவார் என்று நம்பினார்கள். இது பற்றித் தம் முன்னோர்களின் இறை அறிவுப்புகளில் உள்ளதால் அது விரைவில் நடந்தேறும் என்றும் காத்திருந்தனர். 

ஃபிர்அவ்னுக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு தீச்சுவாலை பனீ இஸ்ராயீலர்களிலிருந்து கிளம்பி வந்து தம் அரண்மனையைக் கொளுத்திவிடுவதாகக் கண்டு திடுக்கிட்டு பயந்து எழுந்தான். 

மறுநாளே தம் நாட்டின் ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும் அழைத்து, தம் கனவு குறித்து விளக்கம் கேட்டான். அதற்கு அவர்கள் “பனீ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் தோன்றுகின்ற குழந்தை, பெரியவனாகி ஃபிர்அவ்னை அழித்து வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவான்” என்று சொன்னதைக் கேட்டு கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ஃபிர்அவ்ன் எந்தக் குறிப்பிட்ட காலத்தில் தோன்றுவான் என்பதை அறிந்து பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று குவிக்க உத்தரவிட்டான். 

நாட்டில் கர்ப்பிணிப் பெண்கள் கண்காணிக்கப்பட்டனர். ஆண் குழந்தையென்றால் அறுத்துக் கொலை செய்வது, பெண் குழந்தைகளை உயிருடன் விட்டுவிடுவது என்று உத்தரவிடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண் குழந்தைகள் தாய்மார்களின் கண் முன்பே கொல்லப்பட்டனர். 

இறைவன் அந்நாட்டின் பலஹீனப்படுத்தப்பட்டோருக்கு அருள்புரிய நாடினான். ஃபிர்அவ்ன் பயந்த விஷயத்தை நிறைவேற்ற முடிவு செய்தான். பலஹீனப்பட்ட பனீ இஸ்ராயீலர்களிலிருந்தே தலைவர்களை உருவாக்கவும், அந்நாட்டுக்கே வாரிசுகளாக்கவும் விரும்பினான். 

நபி மூஸாவை உருவாக்கி, மூஸா (அலை) அவர்களின் தாயாருக்கு இறைச்செய்தியை அனுப்பி வைத்தான் இறைவன். “உன் குழந்தை பிறந்ததும் அதற்கு வயிறு நிரம்பப் பாலூட்டி, அவரைப் பயப்படாமல், துக்கப்படாமல் ஆற்றில் விட்டுவிடு. அவரை இறைத்தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்ற அறிவிப்பு வந்தது. 

மூஸாவின் தாயார் கர்ப்பிணியாக இருந்தும் அது வெளியே தெரியாதது போல இருந்ததால், இரகசியமாகக் குழந்தையைப் பெற்று, பாலூட்டி, பிரிய மனமில்லாமல் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து பாதுகாப்பாக ஆற்றில் விட்டுவிடுகிறார்கள். ஆனால் அதனைக் கண்காணிக்க தன் மூத்த மகள் மரியமை அனுப்பி வைக்கிறார்கள். 

நைல் நதியில் மிதந்து வந்த அந்தப் பெட்டியை ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் கண்டெடுக்கின்றனர். அதனை ஃபிர்அவ்னின் மனைவியிடம் சேர்ப்பித்த போது குழந்தையில்லாத அவள் அந்த அழகான குழந்தையைப் பார்த்தவுடன் வாரி அணைத்து முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் சொரிவதைக் கண்ட ஃபிர்அவ்னுக்கும் மகிழ்ச்சியாகிவிடுகிறது. அந்தக் குழந்தையைக் கொல்லாமல் விட்டு வைக்கும்படியும், அதனைத் தாம் தத்தெடுக்க விரும்புவதாகவும் சொன்ன மனைவியின் வார்த்தைக்கு ஃபிர்அவ்ன் மறுப்புத் தெரிவிக்கவில்லை. 

பிற்காலத்தில் அந்தக் குழந்தைதான் ஃபிர்அவ்னுக்கு விரோதியாகவும் அவனையே வீழ்த்தக் கூடியவராகவும் ஆவார் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. 

By | 2017-05-16T11:45:09+00:00 May 24th, 2016|0 Comments

Leave A Comment