இறைத்தூதர்களுக்கும் நல்லடியார்களுக்கும் சோதனை

சிரியாவின் தென்மேற்கு பகுதியில் ஹவ்ரான் என்ற நகரத்தில் வாழ்ந்தவர்கள் அய்யூப் (அலை) அவர்கள். இவர்கள் இப்ராஹிம் (அலை) சந்ததியில் ஈசுவுடைய வழியில் வந்தவர்களாகச் சொல்லப்படுகிறது. அய்யூப் (அலை) அவர்களின் மனைவி யாகூப் (அலை) அவர்களின் பேத்தியென்றும் சொல்லப்படுகிறது. 

இவர்கள் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். நிறைய ஒட்டகங்கள், குதிரைகள், கழுதைகள், ஆடுகள், காளைகள், பசுக்கள், நிலபுலன்கள், அடிமைகள் என்று எந்தக் குறையுமின்றி இருந்தார்கள். தன்னுடைய பெரிய வீட்டில் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். மிகவும் பயபக்தியுடையவர்களாக இறைவன் அருளிய ஒவ்வொரு விஷயத்திற்கும் நன்றி செலுத்திக் கொண்டே இருந்தார்கள். 

உறவினர்களுடன் நல்லமுறையில் நடந்து கொண்டார்கள். ஏழைகளுக்கு உதவினார்கள். செல்வந்தர்களுக்கும் வியாபாரத்தில் உறுதுணையாகச் செயல்பட்டார்கள். எல்லாருக்கும் மிகவும் பிடித்தவராகத் திகழ்ந்ததால் இறைத்தூதராக இருந்த அய்யூப் (அலை) போதித்த விஷயங்களை மக்களும் ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் வேலைகளில் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் இறைவனை வணங்குவதை விட்டும் அவர்கள் விலகவில்லை. 

சந்தோஷமாக இருந்த அவர்களின் வாழ்வில் சூறாவளியாகச் சோதனைகள் திடீரென்று நிரம்பியது. அவர்கள் தங்கியிருந்த வீடு இடிந்து விழுந்தது. குழந்தைகளை இழந்தார்கள். கால்நடைகள் இறந்தன. செல்வந்தராக இருந்தவர்கள் வறுமையை ருசிக்க ஆரம்பித்தார்கள். இருப்பினும் அவர் மனம் தளராமல் “இறைவன்தான் தந்தான் அவனே எடுத்துக் கொண்டான்” என்று பொறுமையாக இருந்ததைக் கண்டு மக்கள் ஆச்சர்யப்பட்டனர். அவருடைய மனைவி அவருக்குப் பக்கபலமாகத் திகழ்ந்தார்கள். 

அய்யூப் (அலை) அவர்களின் தோலில் பிரச்சனை ஆரம்பமானது. அந்தத் தோல் நோய் அவர் உடல் முழுவதும் பரவியது. உடல் அரிப்பினால் அவர் சொறிந்து சொறிந்து தோலில் புண்ணிலிருந்து சீழ் வடிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவர்கள் தன்னைக் குணப்படுத்த வேண்டிப் பிரார்த்திக்கவே இல்லை. அவர்களின் மனைவியும் ஏன் நீங்கள் இறைவனிடம் கையேந்தவில்லை என்று கேட்டார்கள். 

அதற்கவர்கள் “இத்தனை காலமாகக் கொடுத்துக் கொண்டிருந்ததற்கே இன்னும் நன்றி சொல்லி முடியவில்லை. எப்படி நான் இவ்வேதனையிலிருந்து விரைந்து விடுப்பட வேண்டுவேன்? இறைவனிடம் அதற்காகப் பிரார்த்திக்க எனக்கே வெட்கமாக உள்ளது. சில வருடமாகத்தான் நான் சோதனை காலத்தில் உள்ளேன். நான் ஆரோக்கியமாகச் செல்வந்தராக இருந்த காலமே அதிகம்” என்று சொல்லிவிட்டார்கள். 

வைத்தியத்திற்குச் செலவு செய்தே அவர்கள் மிகவும் வறுமையில் தள்ளப்பட்டார்கள். அவர்களின் உறவினர்களோ, தெரிந்தவர்களோ யாருமே உதவவில்லை. அவர்கள் மனைவி பிற இடத்தில் வீட்டு வேலை செய்து பணம் ஈட்டினார்கள்.

மக்கள் அய்யூப் (அலை) அவர்களுக்கு இருப்பது தொற்று வியாதியாக இருக்கலாம் என்று அவர்களை ஊரை விட்டு விலக்கி வைத்தார்கள். வீட்டு வேலைக்கு வரும் அவர் மனைவியையும் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். அவர்களுக்கு உணவுக்கும் வழியில்லாததால் அய்யூப் (அலை) அவர்களின் மனைவி அவருடைய கூந்தலை வெட்டி விற்று வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கி வந்தார்கள்.

மனைவி பொறுமை இல்லாமல் அதிருப்தியில் பிரார்த்திக்கச் சொன்னதாலும் அவர்கள் முடியை இழந்ததைப் பின்னாளில் அறிந்ததும் அய்யூப் (அலை) மனவேதனைப்பட்டுக் கோபத்தில் “இறைவன் மீது ஆணையாக உன்னை அடித்தால்தான் என் கோபம் தணியும்” என்று சொல்லிவிடுகிறார்கள். கணவர் கோபத்தில் இருந்தாலும் அவருக்குப் பணிவிடை செய்வதை அவர் மனைவி நிறுத்தவில்லை. 

இயற்கை அழைப்பிற்கும் தன் மனைவியின் உதவியில்லாமல் போக முடியாத அய்யூப் (அலை) அவர்கள் தனக்காகத் தன் நோய் தீர இறைவனிடம் கையேந்தாதவர்கள், ‘இறைவனின் கோபத்தினால், அவர் செய்த பாவத்தினால் ஏற்பட்ட விளைவு’ என்று மக்கள் பேசிக் கொள்ளும்போதும், இறைவனையே வாய்விட்டுப் புகழ முடியாதபடி வாய்க்குள்ளும் புண் ஏற்படவே இறைவனிடம் கண்ணீர்விட்டு மண்றாடுகிறார்கள். 

“இறைவா, என்னைத் தனிமைப்படுத்திவிடாதே, உன்னைத் துதிக்க என் ஆரோக்கியத்தை எனக்குத் திருப்பித் தருவாயாக. அறிந்தும் அறியாமலும் நான் செய்த பாவத்தை மன்னிப்பாயாக. உன் விருப்பத்தின்படியே நான் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன் என்றே இருந்தேன், இன்று உன்னை வணங்கவே உடலில் தெம்பில்லாமல் இருக்கிறேன், என்னைக் குணப்படுத்துவாயாக. கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய். என்னை இத்துன்பத்திலிருந்து விடுபடச் செய்வாயாக” என்று உருக்கமாகப் பிரார்த்தித்தார்கள். 

உடனே அவருடைய பிரார்த்தனை ஏற்கப்பட்டு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அய்யூப் (அலை) அவர்களிடம் வந்து “உங்கள் காலை மண்ணில் அடியுங்கள்” என்றார்கள். பலகீனமான அய்யூப் (அலை) அடிக்க முடியாமல் அடிக்க அங்கு ஒரு நீருற்றுப் பொங்கியது. அதில் அந்தக் குளிர்ச்சியான நீரூற்றில் குளிக்கும்படியும், அதிலிருந்து பருகும்படியும் சொல்லப்பட்டது. அப்படியே செய்ய, அவர்கள் திடகாத்திரமாக மீண்டும் பழைய நிலைக்கே மாறினார்கள். 

துன்பங்கள் நீக்கப்பட்டன. வாழ்க்கை வளமையானது. அவருடைய குடும்பம் விசாலமாக்கப்பட்டுப் பல குழந்தைகளையும் சந்ததியினரையும் ஏற்படுத்தினான் இறைவன். 

இறைவன் மீது சத்தியம் செய்து மனைவியை அடிப்பேன் என்று சொன்னது அய்யூப் (அலை) அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. கஷ்டகாலத்திலும் தம்மோடு துணை நின்ற மனைவியை எப்படி அடிப்பேன், தவறாகச் சத்தியம் செய்துவிட்டேனே என்று எண்ணியவர்கள், அதைப் பற்றியும் கையேந்தி ‘என்ன செய்வேன் இறைவா’ என்று முறையிட்டார்கள். 

“ஒரு பிடி புல் கற்றை எடுத்து அதைக் கொண்டு உம் மனைவியை அடிப்பீராக. உங்கள் சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம். அவர்களுக்கு வலிக்கவும் வலிக்காது” என்பதோடு “நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் சிறந்த நல்லடியார். அவர் எதிலும் நம்மை நோக்கியவராகவே இருந்தார்” என்றும் திருக்குர்ஆனில் இறைவனின் வசனத்தில் வந்துள்ளது. 

இன்னும் அவர்களை மீண்டும் செல்வந்தராக ஆக்கிய பிறகு அவர்கள் குளிக்கும் போது ஒரு தங்கத்தாலான வெட்டுக்கிளியின் கால் அவர்கள் மீது விழுந்தது. உடனே அவர்கள் அதனை அள்ளத் தொடங்கினார்கள். அப்போது “அய்யூப்! நீங்கள் பார்க்கிற இச்செல்வம் உங்களுக்குத் தேவைப்படாத அளவிற்கு உங்களை நான் செல்வந்தராக்கியுள்ளேனே?” என்று இறைவன் கேட்க, அவர்கள் “ஆம் இறைவா! ஆயினும் உன் அருள்வளத்தை எப்படி மறுப்பேன். 

அது எனக்குத் தேவைப்படுகிறதே” என்று பதிலளித்ததாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) சொன்னது புகாரி நூலில் வந்துள்ளது. அந்த அளவுக்கு அய்யூப் (அலை) அவர்களுக்கு நோய் நீங்கப்பெற்று மீண்டும் செல்வந்தர்களாகவும், இறை வழியில் செலவிடுபவர்களாகவும், ஏழைகளுக்கு உதவுபவர்களாகவும் பல ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள். 

அய்யூப் (அலை) அவர்களின் வரலாறு, இறைவன் இறைத்தூதர்களையும், நல்லடியார்களையும் மிகவும் சோதிப்பான் என்பது பற்றியும், இறைவனின் அருளைப் பற்றியும் இறை நம்பிக்கையுடன் வணங்குபவர்களுக்கும் நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.

By | 2017-03-25T14:55:49+00:00 May 21st, 2016|0 Comments

Leave A Comment