மன்னிப்பதே மாண்பளிக்கும் பண்பு

மன்னிப்பதே மாண்பு என்ற பண்புடைய யூசுப் (அலை) தம் சகோதரர்கள் தன்னைக் குடும்பத்தைவிட்டுப் பிரித்துப் பாழ்கிணற்றில் போட்டதையெல்லாம் பொருட்படுத்தாமல், மறந்து மன்னித்து அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும் செய்தார்கள். யூசுப் (அலை) தம்மைப் பற்றியோ, தாம் பாதிக்கப்பட்டதையோ பற்றிக் கவலைப்படவில்லை, மாறாக ஓர் இறைத்தூதராகத் தன் வாழ்வியல் முறையை எளிமையாக்கி, தம் மக்களை ஏக இறைக் கொள்கையின் பக்கம் ஈர்த்தார்கள்.

யூசுப் (அலை) அவர்களின் மன்னிப்பு சகோதரர்களுக்கு மனமாற்றத்தைக் கொண்டு வந்தது. அவர்கள் செய்த தீமைகளுக்கு வருந்தினார்கள். எல்லாச் சகோதரர்களும் மீண்டும் இணைந்த மகிழ்ச்சியில் கட்டியணைத்துக் கண்ணீர் சிந்தி தங்கள் இன்பத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

தம் தந்தையின் தளர்ந்த நிலை பற்றியும், அவருக்குக் கண் பார்வை தெரியவில்லை என்பது குறித்தும் யூசுப் (அலை) அவர்களிடம் சொன்னார்கள். யூசுப் (அலை) தன் பொறுப்புகளை அப்படியே விட்டுவிட்டு வரமுடியாது என்பதால் அவர் தம்முடைய சட்டையை அவர்களிடம் தந்து “இதனை நம் தந்தையின் முகத்தில் போடுங்கள், அவருக்கு நிச்சயம் கண் பார்வை வந்துவிடும்” என்றார்கள்.

இதே மாதிரியான சட்டையில் ஓநாயின் இரத்தத்தைத் தேய்த்து, யூசுப்பை ஓநாய் கொண்டு போய்விட்டது என்று நம்ப வைத்த சகோதரர்கள், பல காலத்திற்குப் பின் மனம் திருந்தி தன் சகோதரர் யூசுப் (அலை) அவர்களிடம் சட்டையை வாங்கித் தம் தந்தையைக் குணப்படுத்த செல்கிறார்கள். (அந்தச் சட்டை சொர்க்கத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் (அலை), யூசுப் (அலை) அவர்களுக்காகத் தந்த சட்டையென்று சில குறிப்பில் உள்ளது.)

தந்தை யாகூப் (அலை), இரு கைகளையும் ஏந்திக் கண்ணீருடன் பிரார்த்தனையில் மூழ்கி இருந்த நிலையில் திடீரென அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது. ஏதோ நன்மை நடக்கப் போகிறது என்று உணர்கிறார்கள். நோன்பு வைத்திருந்த யாகூப் (அலை) ஒரு குவளை பாலை அருந்தி தம் நோன்பை நிறைவு செய்தார்கள். வீட்டை விட்டு வெளியே வந்து தலையை உயர்த்தி முகர்ந்தபடி “என் மகன் யூசுப்பின் மணம் என்னை நெருங்கி வருகிறது” என்றார்கள்.

இதைக் கேட்ட அவருடைய மருமகள் தன் மாமனாருக்கு ஏதோ ஆகிவிட்டது, அவர் யூசுப்பை நினைத்து நினைத்து புத்தி தடுமாறிவிட்டதாக நினைக்கிறார். “நீங்கள் யூசுப்பின் நினைப்பில் இருப்பதால் அப்படி உணர்கிறீர்கள்” என்று அவர்கள் சொல்ல, யாகூப் (அலை), “நிச்சயமாக இல்லை. நீங்கள் என்னை அறிவிழந்தவன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. ஆனால் நான் என் மகன் யூசுப்பை நுகர்கிறேன்” என்றார் மீண்டும் மிக நம்பிக்கையுடன்.

எகிப்திலிருந்து தம் மகன்கள் மகிழ்ச்சியாகச் சொந்த ஊருக்குத் திரும்பி, நடந்தவற்றை எல்லாம் சொல்லி, யூசுப்பின் சட்டையைத் தந்தையின் முகத்தில் போட்டபோது அவருடைய பார்வை திரும்பிவிடுகிறது. உடனே தந்தை யாகூப் (அலை) “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நான் அறிவேன் என்று நான் உங்களிடம் சொல்லவில்லையா?” என்று மகன்களை நோக்கிக் கேட்கிறார்கள்.

மனம் திருந்திய புதல்வர்கள் “தந்தையே! நாங்கள் தவறு செய்துவிட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள். எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று உருக்கமாகக் கேட்கிறார்கள்.

அவர்களும் அல்லாஹ்விடம் தம் மகன்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கிறார்கள். “இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.

அனைவரும் வீட்டில் உள்ள அனைத்தையும் எடுத்துக் கொண்டு தங்கள் இடத்தையே காலிசெய்துவிட்டு எகிப்துக்கு யூசுப் (அலை) அவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள். நைல் நதியை அடைந்தார்கள், செழிப்பாக இருக்கும் நகரம் தென்படுகிறது. அவர்களின் பயணம் கிட்டத்தட்ட இறுதிக்கு வந்துவிட்டது.

திருக்குர்ஆன் 12:92-98

By | 2017-03-25T14:20:33+00:00 May 18th, 2016|0 Comments

Leave A Comment