“நம் குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று யூசுப் (அலை) கேட்டுக் கொண்டதன் பேரில், தங்கள் சொந்த ஊரை விட்டுவிட்டு, இருந்த இடத்தையே காலிசெய்து கொண்டு எகிப்துக்கு யூசுப் (அலை) அவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள் தந்தை யாகூப் (அலை), அவர்களின் மனைவி, எல்லாச் சகோதரர்களும், சகோதரர்களின் குடும்பத்தினரும்.
நகரத்தில் நுழைந்ததுமே யூசுப் (அலை) பெரிய பொறுப்பில் அந்த நாட்டில் உயர்ந்திருப்பது கண்டு மகிழ்கிறார்கள் யாகூப் (அலை). யூசுப் (அலை) அவர்கள் தம் தாய் தந்தையரை கண்ணியத்துடன் இன்முகத்துடன் வரவேற்று, அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி அமர்த்தித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
யூசுப் (அலை) அரியணையில் வீற்றிருக்கும் போது பொறுப்பில் இருக்கும் தம் மகனைக் கண்டவுடன் எகிப்தின் பழங்காலக் கலாச்சார நடைமுறைபடி அவருக்கு மரியாதை செலுத்துவதாக, நன்றி செலுத்துவதாக வந்த அனைவரும் அவருக்குத் தலை தாழ்த்தினார்கள்.
யூசுப் (அலை) உடனே எழுந்து “என் அருமைத் தந்தையே! நான் சிறுவனாக இருந்தபோது பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிவதாக நான் கனவில் கண்டதின் விளக்கம் இதுதான். நீங்கள்தான் சூரியன், தாய்தான் சந்திரன், சகோதரர்கள்தான் அந்தப் பதினோரு நட்சத்திரங்கள். அல்லாஹ் என் கனவை நிகழ்வாக்கிவிட்டான். இறைவனுக்கே எல்லாப் புகழும்” என்றார்.
தனக்கும் தன் சகோதரர்களுக்குமிடையே ஷைத்தான் பிரிவினையை உண்டு செய்து அங்கிருந்து எகிப்து சென்று அங்கும் சிறைச்சாலையில் பல வருடங்களாக இருந்து, பிறகு ஓர் உயர் பொறுப்பில் வீற்றிருக்கச் செய்து, இன்று தன் குடும்பத்தினருடன் தம்மை ஒன்று சேர்த்த அற்புதங்களையெல்லாம் தன் உறவுகளுக்கு விவரித்தார்கள் யூசுப் (அலை) அவர்கள்.
மேலும் அவற்றையெல்லாம் நிகழ்த்திய இறைவனின் கருணையைப் பற்றி எல்லோரிடமும் சொல்லி, பேருபகாரத்திற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள் யூசுப் (அலை).
“நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், அவன் யாவற்றையும் நன்கறிந்தவன், மிக்க ஞானமுள்ளவன்” என்றும் கூறினார்கள்.
எகிப்து மன்னரிடம் தன் குடும்பத்தைப் பற்றி எடுத்துரைத்துத் தம் குடும்பத்தாரை எகிப்திலேயே தம்மோடு தங்க அனுமதியும் பெற்றார்கள்.
“என் இறைவா! நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் கற்றுத்தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன். ஒரு நல்ல முஸ்லிமாக, உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும்போதே என்னை மரணிக்கச் செய்து, நல்லவர்களோடு என்னைச் சேர்த்துவிடு!” என்று யூசுப் (அலை) நெகிழ்ந்து நன்றி செலுத்தும் வண்ணம் மண்டியிட்டுச் சிரம் தாழ்த்தி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
அதன்பிறகு கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் யாகூப் (அலை) தன் மகன்களோடு வாழ்ந்தார்கள். அவர்கள் இறக்கும் தருவாயில் மகன்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டார்கள். அதற்கு மகன்கள் “நீங்கள் வணங்கிய, உங்கள் மூதாதையர் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை) ஆகியோர் வணங்கிய ஒரே இறைவனையே வணங்குவோம், அவனையே முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக இருப்போம்” என்று கூறினர். யாகூப் (அலை) இறந்த பிறகு அவர்களது மூதாதையர்களான இப்ராஹீம் (அலை), இஸ்ஹாக் (அலை) அடக்கப்பட்ட பைத்துல் முகத்தஸ் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.
யூசுப் (அலை) அவர்களின் திருமணம் பற்றிய எந்தத் தெளிவான வரலாற்றுக் குறிப்புகளுமில்லை. தன் தந்தையின் காலத்திற்குப் பிறகு எகிப்திலேயே நூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்ததாகச் சரித்திரம் சொல்கிறது. அவர்கள் இறந்த பிறகும் அவர்களின் மூதாதையர்கள் அடக்கப்பட்ட பைத்துல் முகத்தஸ் அருகிலேயே யூசுப் (அலை) அவர்களும் அடக்கப்பட்டார்கள்.
திருக்குர்ஆனில் `யூசுப்’ என்கிற வரலாறுகளில் அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கிறது. இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியில்லை. மாறாக இதற்கு முன் உள்ள வேதத்தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், அருட்கொடையாகவும் இருக்கிறது” என்பதாகும்.
நம் கனவுகளும் இனிமையானதாக நல்லவிதமாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
Leave A Comment