யாகூப் (அலை) அவர்கள், தங்களின் பிரியமான மகன்களான யூசுப் மற்றும் புன்னியமீனின் பிரிவைத் தாங்க முடியாமல் மிகவும் தளர்ந்துவிட்டதைக் கண்ணுற்ற யாகூப் (அலை) அவர்களின் மற்ற மகன்கள் தந்தையின் நலனிற்காக மூன்றாம் முறையாக மீண்டும் எகிப்துக்கு சகோதரர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற முனைப்போடு செல்கிறார்கள்.
மூன்றாவது முறையாக எகிப்திற்குள் நுழைந்தவர்கள், தம் மூத்த சகோதரரையும் அழைத்துக் கொண்டு நேராகச் சென்று சந்தித்தது சகோதரர் யூசுப் (அலை) அவர்களை. ஆனால் அவர்கள் அவரை யூசுப் (அலை) என்று அறிந்திருக்கவில்லை. “அமைச்சரே! நாங்கள் பெரிய கஷ்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். அத்துயரிலிருந்து எங்கள் வயதான தந்தையை மீட்க நாங்கள் நிறைய தானியங்களை எடுத்துச் சென்று ஈடுகட்ட வேண்டும். நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டு வந்து இருக்கின்றோம். எங்களுக்குத் தானமாகவும் தானியங்களை நிறைவாக கொடுங்கள். அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கையேந்தி நின்றார்கள் சகோதரர்கள்.
அதைப் பார்த்து சகிக்க முடியாமல் அவர்கள் மொழியிலேயே யூசுப் (அலை) “நீங்கள் மதிகெட்டு இருந்தபோது யூசுப்புக்கும் அவருடைய சகோதரர் புன்னியமீனுக்கும் என்ன செய்தீர்கள் என்று நினைவிருக்கிறதா?” என்று கேட்டார்கள் தம்மை வெளிப்படுத்தியவர்களாக.
மறுநிமிடமே சகோதரர்களுக்கு அதுதான் யூசுப் என்று தெரிந்துவிடுகிறது. மிகுந்த தயக்கத்துடன் “நீங்கள் யூசுப்பா?” என்று சகோதரர்கள் கேட்க, “ஆமாம், நான்தான் யூசுப். இதோ நம் சகோதரர் புன்னியமீன். அல்லாஹ் எங்கள் மீது இரக்கம் காட்டி அருள் புரிந்திருக்கின்றான். எவர் பயபக்தியுடன் இறைவனிடம் கையேந்தி நிற்கிறாரோ, எவர் பொறுமையை மேற்கொண்டு நம்பிக்கை இழக்காமல் பிரார்த்திக்கிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் பிரார்த்தனையை வீணாக்கிவிட மாட்டான். நன்மை செய்வோருக்குக் கண்டிப்பாக நற்கூலி உண்டு” என்று திடமாகக் கூறினார்கள் யூசுப் (அலை).
அதைக் கேட்டு நடுங்கியவர்களாக “நாங்கள் உங்களுக்குத் தவறு இழைத்துவிட்டோம். ஒப்புக் கொள்கிறோம். இறைவன் உங்களை இவ்வளவு மேன்மையுடையவராகத் தேர்ந்தெடுத்துள்ளானே!” என்று ஆச்சர்யப்பட்டவர்களாக, அதே நேரம் பொறுப்பில் இருக்கும் தம்பி யூசுப் (அலை) தங்களைப் பழி வாங்கிவிடுவாரோ என்று பயந்தபடி கூறினார்கள்.

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு இரக்கம் காட்டி அருள் புரிகின்றான். மேலும், பொறுமையாகத் தம் தேவைகளை நம்பிக்கையுடன் கேட்டு நிற்பவர்களின் நியாயமான பிரார்த்தனைகளுக்குச் செவிமடுக்கின்றான்.
திருக்குர்ஆன் 12:67, 12:87-92
Leave A Comment