பெருமழையும் நூஹ் நபியின் கப்பலும்

முன்னோர்கள் மறைந்ததும் அவர்களின் நினைவாக அவர்களின் உருவங்களை மனிதர்கள் வடிவமைத்தார்கள். அப்படி வடிவமைத்தவர்களும் மறைந்த பிறகு அந்த உருவங்களும் சிலைகளும் கடவுளாகின.
ஓர் இறைவன் என்பதை மறந்து மனிதர்கள் சிலை வழிபாட்டில் மூழ்கி வழிகேட்டில் இருந்தனர். மனிதர்கள் சிலைகளை வணங்க ஆரம்பித்த பிறகு மனிதர்களுக்குள்ளேயே தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்றும் பிரிவினை பூண்டது. இப்படியான காலகட்டங்களில் தான் மக்களை நெறிப்படுத்த அவர்களில் ஒருவரை இறைத்தூதராகத் தேர்ந்தெடுத்து அந்த இறைத்தூதருக்கு ஏதாவது ஒரு வகை சக்தியை அளித்து, மக்களை ஓர் இறைக்கொள்கை மீதான நம்பிக்கையில் திரும்பச் செய்வான் இறைவன்.
இறைவனின் பார்வையில் நல்லொழுக்கம் கொண்டவனே உயர் அந்தஸ்து பெற்றவன். அந்தக் கூட்டத்தில் குணசீலராக, நல்லொழுக்கம் கொண்டவராகத் திகழ்ந்த, எல்லா நிலைகளிலும் இறைவனைத் துதித்துக் கொண்டும், நன்றி செலுத்திக் கொண்டும் இருந்த நூஹை நபியாகத் தேர்ந்தெடுத்தான் இறைவன். அந்தச் சமுதாயத்திற்கு மிகப் பெரிய வேதனை வருவதற்கு முன் அவர்களை எச்சரிப்பதற்காக நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினான்.
இறைவனிடம் கற்றுத் தெரிந்த விஷயங்களை நபி நூஹ் (அலை) மக்களிடம் அழகான முறையில் எடுத்துக் கூறினார். மக்களைப் பல வகைகளாக, பல வடிவங்களாகப் படைத்ததையும், இந்தப் பிரபஞ்சத்தின் படைப்புகளைப் பற்றியெல்லாம் விவரித்து, கேட்பவர்களைச் சிந்திக்க வைத்தார். ஆனால் மிகச் சொற்ப மக்களே வழிகேட்டிலிருந்து திரும்பினார்கள். மற்றவர்கள் அவர் பேச்சில் மயங்கிவிடக் கூடாதென்று காதுகளைப் பொத்திக் கொண்டு ஓடினார்கள். முகத்தில் ஆடையைக் கொண்டு மூடி அவரைப் பார்க்காதபடி மறைந்தார்கள். செவிமடுக்கவும் நேரமில்லை, உன்னால் முடிந்ததைச் செய்யென்றும், போதித்தவருக்கே தீங்கிழைக்கவும் துணிந்தார்கள். இதன் பிறகு நபி நூஹ் (அலை) இறைவனிடம் “உன்னை மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே, இவர்கள் சந்ததியினரும் வழிகேட்டிலேயே இருப்பார்கள், உனது அடியார்களையும் அவர்கள் வழி கெடுப்பார்கள். அநீதி இழைத்த இவர்களுக்கு அழிவைத் தா” என்று பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள்.
அல்லாஹ்வும் நூஹ் நபியின் பிரார்த்தனைக்குச் செவிமடுத்தான். நூஹ் (அலை) அவர்களை ஒரு பிரமாண்டமான கப்பலை செய்யுமாறு பணித்தான். வானவர்களின் உதவியுடன் பல நூறு வருடங்களில் அந்தக் கப்பல் தயாரானது. அந்தக் கப்பலை இறைவனின் கட்டளையின்படி மூன்று தளங்களாகக் கட்டினார். ஒரு தளத்தில் மிருகங்களுக்கான கூடுகளையும் நிறுவினார். வேறொரு தளத்தை இறைநம்பிக்கையாளர்களுக்கென ஒதுக்கினார். மற்றொரு தளத்தைப் பறவைகளுக்கும் மற்ற உயிர்களுக்குமென்று விட்டுவைத்தார்.
எல்லாருக்கும் தேவையான உணவு பொருட்களையும் சேகரித்து ஏற்றிக் கொண்டார்கள். இவர் பல்லாண்டு காலமாக இந்த வேலையற்ற வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று கப்பலைத் தயார் செய்து கொண்டிருக்கும் போது அதைப் பார்த்த இறை நிராகரிப்பாளர்கள் பரிகாசம் செய்தார்களாம். ‘தண்ணீரில்லாத இடத்தில் கப்பல் எதற்குத் தரையில் ஓட்டவா?’ என்று எள்ளி நகையாடினார்கள்.
பெருமை, தலைக்கனம், ஆணவம் என்று கூடாத குணங்கள் நிறைந்தவர்களுக்கு வரவிருக்கும் ஆபத்துகளைப் பற்றி நூஹ் (அலை) எச்சரித்தும் அவர்களின் குணங்களின் காரணமாகவே அலட்சியம் செய்தார்கள். ஆனால் நூஹ் நபி விடுத்த ஏகத்துவ அழைப்பு ஏழை எளியோர்கள், வறியோர்கள் மற்றும் பலவீனமான மக்களின் இதயத்தில் இடம் பிடித்தது. அவர்களின் துன்பங்களை நீக்கி மனத்திற்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாகவும் அவர்களுக்குத் தெரிந்தது.
நூஹ் நபியவர்கள் எல்லா உயிரினங்களில் இருந்தும் ஒவ்வொரு ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கப்பலில் ஏற்றினார்கள். ஒவ்வொரு விலங்குகளில் இருந்தும், பறவைகளிலிருந்து ஓர் ஆண் இனம்- பெண் இனம் என்று பார்த்துப் பார்த்து இறைவனின் வழிநடத்தலின் பேரில் எல்லாவற்றையும் கப்பலில் ஏற்றினார்கள். இவ்வாறு எல்லா உயிரினங்களையும் ஏற்றிய பிறகு நூஹ் நபியும் அவர்களின் குடும்பத்திலுள்ள இறைநம்பிக்கையாளர்களும் மட்டும் கப்பலில் ஏறிக் கொண்டார்கள். நபியின் மனைவி இறைநம்பிக்கை கொள்ளாததால் கப்பலில் ஏற்றப்படவில்லை. அவள் அந்த நிலையிலும் தன் கணவன் உளறுவதாகவே நினைத்திருந்தால், இறையச்சம் கொள்ளாதவராகவே இருந்தார்.
இறைவனின் கட்டளையின் பேரில் வானம் திறந்து, பூமி அதுவரை பார்த்திராத அடைமழை கொட்டியது. பூமி தண்ணீரை விழுங்காமல் துப்பித் தள்ள நீர் மட்டம் உயர்ந்து கொண்டே சென்றது. அந்த நொடியிலும் மக்கள் இந்தக் கப்பலை நம்பத் தயாராக இல்லை.
இறைநம்பிக்கையுடையவர்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி கப்பலில் ஏறிக் கொண்டார்கள். அவன் பெயரைக் கொண்டே கப்பலையும் செலுத்தத் தயாராகும் போது நூஹ் (அலை) தன் மகனை அன்பாக அழைக்க, அவர்களின் மகன் இறை நிராகரிப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு ‘நான் மலை மீது ஏறித் தப்பித்துக் கொள்வேன்’ என்றான். தன் மகன் மூழ்கடிக்கப்படுவான் என்று அஞ்சி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
ஆனால் இறைவனோ “நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல” என்று சொல்லி விட, இறை மறுப்பாளர்களோடு சேர்ந்து நபியின் மனைவியும் மகனும் கூட மூழ்கடிக்கப்பட்டார்கள். இறைக் கட்டளையின்படி பூமி சுத்தமானது, வானமும் மழையை நிறுத்திக் கொண்டது, பூமியும் தன்னால் இயன்றவற்றையெல்லாம் உறிந்து கொண்டது. கப்பலும் ஜூதி மலையில் மோதி நின்றது. வெளி நிலவரத்தை அறிந்து கொள்ள நூஹ் (அலை) அவர்கள் ஒரு புறாவை வெளியே பறக்க விட்டு பரிசோதித்தார்கள். அது ஒலிவச்செடியின் முனைக் காம்பை தன் அலகில் எடுத்து வந்தது. அதைப் பார்த்த அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது.
இறைவனை மட்டும் நம்பி கப்பலில் ஏறியவர்கள் கைவிடப்படவில்லை. அதன்பின் அவர்கள் நூஹ் (அலை) சொன்ன வழிமுறையிலேயே இறை வணக்கம் செய்தார்கள். நூஹ் (அலை) மரணத் தருவாயிலும் மக்களை அழைத்து ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மறந்துவிடக் கூடாதென்றும், எல்லாநிலைகளிலும் அவனை வணங்கி நன்றி செலுத்த வேண்டுமென்றும், மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாது என்றும் இறைவனின் பார்வையில் அனைவரும் சமம் என்றும் அவர்களை நல்வழிப்படுத்தினார்.
நாமும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நல்ல அறங்களைச் செய்வோம், மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம்.
திருக்குர்ஆன் 11:25-48, 71:1-28, 7:59-64, 17:4
By | 2017-03-25T14:21:45+00:00 April 13th, 2016|0 Comments

Leave A Comment