ஆது சமூகத்தின்‌ அழிவு

வெவ்வேறு சமூகத்தினருக்கு இறைவன் அவரவர் மொழிகளைப் பேசும் நபிகளை அனுப்பி இருக்கிறான் என்று நம்பப்படுகிறது. பழமை வாய்ந்த தமிழ்மொழிக்கும் இறைவன் நபியை அருளியிருப்பான் ஆனால் அதைப் பற்றிய எந்த வரலாற்றுக் குறிப்புகளும் நம்மிடத்தில் இல்லை. அரபி மொழியில் பேசிய முதல் இறைத்தூதர் ‘ஹூத்’ (அலை) அவர்கள்தான். அவர்களுக்குப் பின் நபி சாலிஹ் (அலை), சுஹைப் (அலை), முகமது நபி (ஸல்) என்று அதன் பிறகு அரபிய மண்ணில் அரபு மொழி பேசுபவர்களாகத் தோன்றியுள்ளார்கள்.

வெள்ளப்பெருக்கில் மூழ்கடிக்கப்பட்ட நூஹ் நபியின் சமூதாயத்திற்குப் பிறகு அவர்கள் வழியில் வந்த நான்காவது தலைமுறையில் மீண்டும் மக்கள் ஏக இறைவனை மறந்து சிலை வழிப்பாட்டுக்கு திரும்பிய ‘ஆது’ என்ற கூட்டத்தினருக்காகவே அல்லாஹ் ஹூத் நபியை அருளினான். அவர்கள் வாழ்ந்திருந்தது ஓமான் மற்றும் யெமனுக்கு நடுவில் உள்ள உபார்- அல் அஹ்கஃப் என்ற பகுதியிலாம். ஆது சமூகத்தினர் மிகவும் உயரமானவர்களாகவும் உடல் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தார்களாம். அவர்களைப் போன்று வேறு எந்தச் சமுதாயமும் படைக்கப்படவில்லையாம், அவ்வளவு உயரமானவர்களாம், வலிமை மிக்கவர்களாம்.

நிகழ்காலத்தில் இருப்பது போன்றே ஆது சமூகத்தினரும் மிகவும் நாகரீகமானவர்களாகவும், செழுமையானவர்களாகவும் இருந்தனராம். செல்வம் அதிகமாக இருந்ததால் மக்கள் மத்தியில் பெருமையும், ஆணவமும் சேர்ந்தே இருந்ததாம். எவ்வளவு இருந்தும் வாழ்வில் திருப்தி இல்லாதவர்களாக, தம் பெருமையைப் பறைசாற்றுபவர்களாக மிக வடிவான தூண்கள் கொண்ட மாடமாளிகைகளை அமைத்து வாழ்ந்து வந்தார்களாம். அதனால் அவர்கள் ஓர் இறைக் கொள்கையை மறந்து தம் வசதிக்கேற்ப பெரிய பெரிய சிலைகளை அமைத்து வணங்கி வந்தார்களாம்.

இறைவன் நன்மைகளைக் கொண்டு இவ்வுலகை நிரப்பினாலும் அவன் நற்கிருபையையும் கருணையையும் மனிதன் அனுபவித்துவிட்டு பின்பு அதனை, அவனை விட்டு நீக்கிவிட்டால் அவன் மனக்கசப்போடு நன்றி கெட்டவனாகிவிடுகிறான். இன்பத்திலேயே திளைத்திருப்பவனுக்கு இறைவனே மறந்துவிடுகிறது. அதனால்தான் இறைவன் தன் திருக்குர்ஆனில் தெளிவாகத் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்து எவர் நன்மைகளையே தொடர்ந்து செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பையும், மகத்தான நன்மைகளையும் தருவேன் என்று உறுதியளித்துள்ளான்.

இந்த உறுதிகளை மறந்து ஆது சமூகம் வழிதவறியதைக் கண்ட ஹூத் நபி ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்’ என்றும் ‘உங்கள் மனக் கிளர்ச்சிக்காகவும், செருக்கிற்காகவும், அதன் காரணங்களால் நீங்கள் செய்யும் அநியாயப் பாவங்களுக்காகவும் மன்னிப்பு கேட்டு நல்வழியில் திரும்புங்கள்’ என்றும் போதிக்க, அவர்கள் அவர் சொல்வதை நிராகரித்துள்ளனர். ‘உங்களை இறைவன் வறட்சியிலிருந்து காத்து, மழையைத் தந்து உங்கள் வளங்களை மேலும் அதிகரிப்பான்’ என்று சொல்லும் போதும் புறக்கணித்து ‘நீ சொல்வதற்கு என்ன அத்தாட்சியுள்ளது? நீ சொல்வதற்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டுவிட முடியாது. எங்களைப் போன்ற இன்னொரு மனிதனான உனக்கு ஏன் இப்படியான வேற்றுச் சிந்தனை? இதையெல்லாம் கேட்க எங்களுக்கு நேரமில்லை. ஏதோ ‘வறட்சி’ என்றாயே அதை வரச் சொல், பிறகு பார்ப்போம்’ என்று ஹூத் நபியிடம் கேலி பேசிவிட்டு, அவர்கள் சொன்ன நல்வழிமுறைகளைக் கடைப்பிடிக்க மறுத்துள்ளனர்.

ஹூத் நபிக்கு இறைவன் மிக விரைவில் இவர்களை அழிக்கவிருக்கிறான் என்பதும், அவன் நினைத்தால் நிமிடத்தில் ஒரு சமூகத்திற்குப் பதிலாக மற்றொன்றை கொண்டு வந்துவிடுவான் என்றும தெரிந்திருந்தது. எனவே அவர்கள் இறைவனை நேசிப்பவர்களுக்காகவும் அவன் மீது நம்பிக்கையுடையவருக்காகவும் பிரார்த்தித்தார்கள். அவர்கள் மீண்டும் இறையச்சம் கொள்ளாத மக்களை எச்சரித்தார்கள்.

வறட்சி பரவியது. பச்சைப்பசேலென்று இருந்த இடங்கள் காணாமல் போகத் தொடங்கின. மழை வராமல் நிலம் வறண்டிருந்தது, ஆனால் ஆது சமூகத்தின் ஆணவம் குறையவில்லை. சூரியன் அந்தப் பாலைவன மணலில் குடி கொண்டது. அதன்பிறகு பிறிதொரு நாளில் தண்டனைக்கான உத்தரவு வந்தபோது, அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், அவர்கள் அது மழை மேகமென்று உற்சாகமடைந்தனர். ஆனால் அது அவர்களுக்கு நோவினை தரவிருக்கும் கொடுங்காற்று என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பலத்த காற்று எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்து இரக்கம் காட்டாமல் ஏழு இரவுகளும் எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசி, அந்தச் சமூகத்தினரை அடியுடன் சாய்ந்த ஈச்சமரங்களைப் போல் பூமியில் வீழ்த்தியது. எல்லாப் பொருட்களும் அழிந்து தரைமட்டமாகி அவர்களுடைய வீடுகள் மட்டும் ஆள்அரவம் அற்று அமைதியாக நின்றன.

ஹூதும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் மட்டும் இறையருளால் காப்பாற்றப்பட்டார்கள். காற்றைக் கொண்டு இறைவன் ஆக்கவும் செய்வான், அழிக்கவும் செய்வான்.

இப்படியாகக் குற்றம் செய்த சமூகத்திற்கு இறைவன் அவர்கள் வாழும் போதே தண்டனையைக் கொடுத்திருக்கிறான். திருக்குர்ஆனில் சில ஊர்களின் வரலாறுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில இப்போதும் உள்ளன, சில அறுவடை செய்யப்பட்டவை போல் அழிபட்டும் போயின. தற்போது உபாரை சுற்றிலும் யாருமற்ற பாலைவனம் தான் உள்ளது.

திருக்குர்ஆன் 11:50-60, 46:21-25, 69:6-7, 26:124-140, 89:6-8, 11:100
By | 2017-03-25T14:21:45+00:00 April 14th, 2016|0 Comments

Leave A Comment