யூசுப் (அலை) ‘தம் தம்பி திரும்பிச் செல்கிறானே தன்னுடன் வைத்துக் கொள்ள முடியவில்லையே’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டதாலோ என்னவோ, இறைவன் அவர்களுக்காகவே புன்னியமீனிடம் இருக்கும் யூசுப் (அலை) அவர்களின் குவளையை அரசருடைய மரக்காலைத் தேடும்போது வெளிப்படுத்தினான். அதன் காரணமாகவே புன்னியமீனை எகிப்திலேயே விட்டுச் செல்லும்படி அவர்களின் மற்ற சகோதரர்கள் பணிக்கப்பட்டார்கள்.
யாகூப் (அலை) அவர்களின் மகன்களுக்கு அவர்கள் தங்கள் தந்தையிடம் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. “எங்களுக்கு வயோதிகத் தந்தை இருக்கிறார். அவரால் புன்னியமீனின் பிரிவைத் தாங்க முடியாது. இறைவன் மீது சத்தியம் செய்து புன்னியமீனை அழைத்து வந்திருக்கிறோம். தயவு செய்து அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை வைத்துக் கொண்டு இளையவனை அனுப்பிவிடுங்கள்” என்று கெஞ்சினார்கள் மற்ற சகோதரர்கள்.
“எங்கள் பொருளை எவரிடம் கண்டோமோ அவரைத்தான் அழைத்துச் செல்ல முடியும். வேறொருவரை அவருக்குப் பதிலாக எடுத்துக் கொள்வது அநியாயமாகிவிடும்” என்று சொல்லி புன்னியமீனை எகிப்திலேயே அரண்மனையில் விட்டுச்செல்ல சொல்கின்றனர் காவலர்கள்.
சகோதரர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களில் மூத்தவர் சொன்னார் “நான் இங்கிருந்து அசையப்போவதில்லை. எப்படி நான் என் தந்தையின் முகத்தில் விழிப்பேன்? நாம் புன்னியமீனுக்காக அவரிடம் இறைவனின் பெயரில் சத்தியம் செய்து வந்திருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படித்தான் யூசுப் விஷயத்திலும் நாம் நம் தந்தையை ஏமாற்றிவிட்டோம். நீங்களெல்லாம் தந்தையிடம் சென்று இங்கு நடந்ததைப் பற்றிச் சொல்லுங்கள். குவளை புன்னியமீனின் மூட்டையிலிருந்து கண்டெடுக்கப்பட்டதை, நாம் இங்கு கண்டதை, அறிந்ததைப் பற்றிச் சொல்லுங்கள். நம்முடன் வந்த நம்மூர்வாசிகளிடமும் கேட்டுக் கொள்ளச் சொல்லுங்கள். நீங்கள் உண்மையைத்தான் சொல்கிறீர்கள் என்பதையும் தெளிவுபடுத்துங்கள். நம் தந்தை எனக்கு அனுமதி தரும் வரை, அல்லது இறைவனின் தீர்ப்பு வரும் வரை இங்கிருந்து நான் அசையப்போவதில்லை” என்று சொல்லி மற்றவர்களைத் தந்தையிடம் அனுப்பி வைத்தார்.
புன்னியாமீன் இல்லாமல் ஊர் திரும்பியவர்கள் நடந்தவற்றைக் குறித்துத் தந்தையிடம் சொல்ல, தன் மகன் புன்னியமீன் தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த முறையும் இவர்கள் தங்களின் சதித்திட்டத்தால் யூசுப்பைப் போல இந்த மகனையும் ஏதோ செய்துவிட்டனர் என்று எண்ணியபோதே தந்தை யாகூப் (அலை) அவர்களின் மனம் பதறியது. குரலெழுப்பி அழுது கொண்டே “இல்லை! தவறான விஷயத்தைச் செய்யும்படி உங்களுடைய மனங்கள் தூண்டி விட்டிருக்கின்றன. அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்க்கப் போதுமானவன். இந்த நேரத்தில் நான் மிகப் பொறுமையாக இருக்க வேண்டும். அதுவே எனக்கு உகந்தது. அல்லாஹ்வே எல்லாவற்றையும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்.
யூசுப் (அலை) மற்றும் புன்னியாமீனின் பிரிவை யாகூப் (அலை) அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. துக்கத்தால் அழுது அழுது அவருடைய இரண்டு கண்களும் வெளுத்துப் பஞ்சடைந்துவிட்டன.
இதைக் கண்ட அவர்களுடைய மக்கள் “தந்தையே! நீங்கள் யூசுப்பை நினைத்து நினைத்து அழுது, நோயுற்று, இளைத்து இறந்து போகும் வரை, அவருடைய எண்ணத்தில் இருந்து வெளிவர மாட்டீர்களா?” என்று ஆதங்கப்பட்டனர்.
அதற்கு யாகூப் (அலை) மகன்கள் இன்னும் பொறாமையின் வெளிப்பாட்டில் இப்படி பேசுகிறார்கள் என்று எண்ணியவர்களாக, யூசுப்பின் கனவைப் பற்றி யோசித்தவர்களாக “என்னுடைய மனக் கவலையைப் பற்றி அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். உங்களுக்குத் தெரியாதவையெல்லாம் எனக்குத் தெரியும். நீங்கள் எனக்காக மீண்டும் எகிப்துக்குச் சென்று யூசுப்பையும், புன்னியமீனையும் தேடிப் பாருங்கள். அவர்களைப் பற்றி விசாரியுங்கள். அல்லாஹ் மீது நம்பிக்கை வையுங்கள். அவன் மீது நம்பிக்கை இழக்காதீர்கள்” என்று சொன்னார்கள்.
மகன்களும் மீண்டும் எகிப்துக்குச் செல்லத் தயாரானார்கள்.

திருக்குர்ஆன் 12:76-87
http://goo.gl/NU6mHL
Leave A Comment