இஸ்லாமியர்கள் இரண்டு பெருநாட்களைக் கொண்டாடுவார்கள். ஒன்று நோன்புப் பெருநாள் மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள். ரமதான் மாதத்தில் நோன்பு நோற்று பெருநாள் தினத்தில் தர்மம் செய்துவிட்டு கொண்டாடுவது ஈகைத்திருநாள். ஹஜ் செல்பவர்கள் அதற்கான கிரியைகளை முடித்த பிறகு பெருநாள் தினத்தில் ஆடு, மாடு அல்லது ஒட்டகம் என்று தமது வசதிக்கேற்ப இறைவனுக்காகப் பலியிடுவது தியாகத் திருநாளில்.
பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாளானது இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதாக அமைகிறது. இறைவனின் கட்டளையின்படி தன் மனைவியையும் பச்சிளங்குழந்தையையும் பாலைவனத்தில் விட்டுச் சென்றுவிட்டு, சில காலம் கழித்து வந்து இப்ராஹிம் (அலை) பார்க்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற வறண்ட பூமி ஒரு சிறு நகரமாகி இருந்தது. தன் குடும்பம் நல்ல சூழலில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்கள். மெக்காவிற்கு வந்து போன வண்ணம் இருந்தார்கள். தன் மகன் மீது அளவுகடந்த பாசம் உடையவர்களாக இருந்தார்கள்.ஒருமுறை இப்ராஹிம் (அலை) தன் மகனைப் பார்க்க வரும் போது, இஸ்மாயீல் ஸம்ஸம் கிணற்றுக்கு அருகில் தனது அம்பை சீவிக் கொண்டிருந்தார்கள். மகனைக் கண்ட மகிழ்ச்சியில் அவர்களை ஆறத் தழுவி முத்தமிட்டார்கள். இப்ராஹிம் (அலை) அன்று இரவு தூங்கும் போது இறைவனின் கட்டளை ஒரு கனவாக வந்தது. மறுநாள் தம் கனவை குறித்து மகனிடம் சொன்னார்கள் இப்ராஹிம் (அலை). “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவது போலக் கனவு கண்டேன். இது குறித்து நீ என்ன நினைக்கிறாய்?” என்று தயக்கத்துடன் கேட்டார்கள். தந்தையைப் போலவே மிகுந்த இறைநம்பிக்கை கொண்ட இஸ்மாயீல் (அலை) சிறிதும் தயங்காமல் “இறைவனின் ஆணைப்படியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்றார்.
இப்ராஹிம் தவமிருந்து பிரார்த்தித்து வரம் பெற்று தனது எண்பத்தி ஆறாவது வயதில் கிடைத்த பிள்ளைச் செல்வத்தை இறைவன் பலியிடச் சொல்லிவிட்டான் என்பதற்காக, அந்த இறைக் கட்டளைக்காக, மகன் இஸ்மாயீலை பலியிடத் துணிந்து ஓர் இடத்திற்குக் கூட்டி வருகிறார். அந்த வழியில் சைத்தான் இப்ராஹிமின் எண்ணத்தைக் கலைக்க முயற்சி செய்கிறான். “நல்லுள்ளம் கொண்ட இப்ராஹிம் பலியிடுவதா?” என்று கேள்விகளும் பிற தீய எண்ணங்களும் பிறக்கச் செய்த ஷைத்தானை கல்லாலடித்து விரட்டுகிறார்கள் இப்ராஹிம் (அலை). வழி கெடுக்க முனைந்த சைத்தான் மீது இப்ராஹிம் (அலை) கல்லெறிந்து விரட்டிய நிகழ்வின் நினைவாகத்தான் ஹஜ் கிரியைகளில் ஒன்றாகச் ‘ஷைத்தான் என்று நினைத்து கல் எறியும்’ கிரியை இன்றும் நிகழ்ந்து வருகிறது.
இப்ராஹீம் (அலை) ஷைத்தானிற்குக் கட்டுப்படாமல் இறைக் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள். தன் மகன் கண்களைப் பார்த்து தனது மனம் மாறிவிடக் கூடாது என்று மகன் இஸ்மாயீலை குப்புறப்படுக்க வைத்து, கூர்மையான கத்தியை கழுத்தில் வைத்து அறுக்க முயல்கிறார்கள். எந்த இப்ராஹிமுக்காக இறைவன் நெருப்பின் தன்மையை அந்த நொடியில் நீக்கி அதனைக் குளிர்ச்சியாகவும் சுகமளிக்கக் கூடியதாகவும் மாற்றினானோ, அவனே கத்தியின் தன்மையையும் மாற்றினான், அதனை வெட்டவிடாமல் செய்தான்.
வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை அனுப்பிப் பலியிடுவதைத் தடுத்தான் இறைவன். இப்ராஹிம் கண்ட கனவை நிறைவேற்றிவிட்டதாகவும், அவருக்காக ஏற்படுத்திய அனைத்து சோதனையிலும் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்றும் அவருக்கு அறிவிக்கப்பட்டு, மகன் இஸ்மாயீலை பலியிடுவதற்குப் பதிலாக ஓர் ஆட்டை அல்லாஹ் பலியிடக் கட்டளையிட்டான்.

இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாவதாக!
திருக்குர்ஆன் 37:99-111
Leave A Comment