அவர்கள் எதிர்பார்த்திருந்தபடியே ஹாஜரா இறைவனின் அருளால் கருவுற்றார்கள். மகிழ்ச்சியடைய வேண்டிய சாரா (அலை) வேதனைப்பட்டார்கள். தனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று அழுதார்கள். தன்னை இப்ராஹிம் (அலை) வெறுத்து ஒதுக்கிவிடுவார்களோ என்றும் அஞ்சினார்கள். சாரா (அலை) கேட்டுக் கொண்டதன் பேரில் நடந்தேறிய திருமணம் இப்போது சாராவுக்கே மனவருத்தம் என்பதால் ஹாஜரா மனவுளைச்சலில் பிரார்த்தனையில் இறங்கினார்கள். இறைவனிடமிருந்து ஹாஜராவுக்கு நற்செய்தி வந்தது.“உங்களுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறக்கும் அதற்கு இஸ்மாயீல் என்று பெயர் சூட்டுங்கள். அந்தக் குழந்தையின் சந்ததிகளை இறைவன் மேன்மைப்படுத்துவான் அவருடைய சந்ததிகளிலிருந்து பன்னிரெண்டு தலைவர்கள் உருவாகி வருவார்கள்” என்பதுதான் அந்த நற்செய்தி.. இறைவனின் வாக்குப்படி இஸ்மாயீலும் பிறக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பிறக்கிறது. ஆனால் சாரா (அலை) அவர்கள் அதிருப்தியிலிருந்து மீளவில்லை. இப்ராஹிம் (அலை) மன நிம்மதி வேண்டி பிரார்த்திக்கும் வேளையில் இறைவன் அவர்களுக்கு அன்னை ஹாஜராவையும் பச்சிளம் குழந்தை இஸ்மாயீலையும் மக்காவில் கொண்டு விட்டுவிட்டு வரும்படி கட்டளை இடுகிறான்
பாலஸ்தீனிலிருந்து கிளம்பி ஹாஜராவையும் பால்குடி குழந்தையையும் பாரஹான் பள்ளத்தாக்கில் ‘கதாஉ’ என்னும் இடத்தில் தற்போது காபா இருக்கும் இடத்திற்கு அருகில், வெட்டவெளி பாலைவனத்தில் ஒற்றை மரத்தின் நிழலின் கீழ் விட்டுவிட்டு ஒரு வார்த்தையும் பேசாமல் மனக் கஷ்டத்தோடு திரும்பி செல்கிறார்கள். இப்ராஹிம் (அலை) உறுதியாக இறைவனை நம்பினார்கள். இறையச்சம் மற்றும் இறைபக்தியின் காரணமாகத் தனக்கு வந்த கட்டளையை அப்படியே பின்பற்றினார்கள்.தன்னை விட்டுவிட்டுச் செல்லும் கணவரைப் பார்த்து அன்னை ஹாஜரா கேட்டார்கள், “எங்களை இங்கே யாரிடம் விட்டுச் செல்கிறீர்கள்?“ என்று. இப்ராஹிம் (அலை) எந்தப் பதிலும் தரவில்லை. “இப்ராஹிமே! இறைவன் சொல் கேட்டா எங்களை இங்கே விட்டுச் செல்கிறீர்கள்?“ என்று மறுபடியும் ஹாஜரா கேட்க, இப்ராஹிம் “ஆம்“ என்று தலையசைத்தார்கள். “அப்படியென்றால் இறைவன் எங்களைப் பார்த்துக் கொள்வான். எங்களைக் கண்டிப்பாகக் கைவிட மாட்டான்“ என்று திடமான நம்பிக்கையுடன் சொல்லிவிட்டார்கள் அன்னை ஹாஜரா.
தன் மனைவியின் நம்பிக்கை வீண் போகாது என்று தெரிந்த இப்ராஹிம் (அலை) அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றதும் மனது கேட்காமல் இரு கரங்களையும் உயர்த்திப் பிரார்த்தித்தார்கள் “இறைவா, ஆள் நடமாட்டமில்லாத இந்த இடத்தில், வறண்ட இந்தப் பாலைவனத்தில் உன்னை மட்டும் நம்பி என் மனைவியையும் மகனையும் விட்டுச் செல்கிறேன். அவர்கள் வாழ்வதற்கான வசதிகளைத் தந்தருள்வாயாக, எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்கள் இவர்களிடம் நல்லமுறையில் அன்புடன் நடந்து கொள்ளச் செய்வாயாக, உலகத்தில் உள்ள ஒவ்வொரு நல்மனிதனின் உள்ளத்தையும்இந்தப் பூமியில் இணைப்பாயாக!. மேலும் அவர்களுக்கு எல்லா விதமான கனி வகைகளை உணவாக வழங்குவாக!“ என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்து அங்கிருந்து திரும்பி சிரியா நோக்கி சென்றுவிடுகிறார்கள். இது மக்காவுக்காகச் செய்யப்பட்ட பிரார்த்தனை அதனால்தான் இந்த நிமிடம் வரை மக்கா நகரம் மிகச் சுபிட்சமாக, நல்ல அந்தஸ்துடன், உலகில் உள்ள எல்லாக் கனி வகைகளும்கிடைக்கக் கூடிய இடமாகத் திகழ்கிறது.
இப்ராஹிம் (அலை) ஹாஜராவையும் குழந்தையையும் ஒரு வீட்டில் விடவில்லை, உணவு தந்து செல்லவில்லை, எப்போது திரும்பி வருவேன் என்று சொல்லவில்லை இறைவனின் கட்டளையென்று அப்படியே சொன்ன இடத்தில் விட்டுச் சென்றார்கள். அவர்கள் விட்டுச் சென்றது தண்ணீருள்ள ஒரே ஒரு தோல் பை மட்டுமே. ஹாஜிரா அதிலிருந்து தாகத்திற்குத் தண்ணீர் அருந்தினார். அவர்களின் பால்குடி குழந்தை இஸ்மாயீலுக்காகப் பால் சுரக்கலாயிற்று. கொஞ்ச நேரத்திலேயே தண்ணீர் தீர்ந்துவிடுகிறது. தாயும்மகனும் தாகத்திற்குள்ளானார்கள். அந்த நொடியில்தான் ஹாஜரா அம்மையார் எவராவது தென்படுகிறார்களா என்று தேடுகிறார்கள். அங்கு அருகில் ஸஃபா என்ற மலைக் குன்றுக்கு சென்று ஏறி பார்க்கிறார்கள். எவரும் தென்படவில்லை தூரத்தில் தண்ணீர் தெரிவது போலுள்ளது எனவே அங்கிருந்து இறங்கி மர்வா மலைக் குன்றுக்கு வருகிறார்கள். அவர்கள் பார்த்தது கானல் நீர் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மீண்டும் அங்கிருந்து பார்க்கும் போது ஸஃபா மலைக்குன்று அருகில் தண்ணீர் இருப்பதாக நினைத்துக் கொண்டு மீண்டும் ஓடுகிறார்கள். பாலைவனத்தில் ஏது தண்ணீர்? இப்படி ஏழு முறை ஸஃபா- மர்வா என்று ஓடுகிறார்கள். அதன் பிறகு குழந்தையை அங்கிருந்து எட்டிப் பார்க்கிறார்கள். குழந்தை இஸ்மாயீல் அழுத வண்ணமுள்ளதை கண்டு மனம் பதை பதைத்து நிம்மதியில்லாத நிலையில் எவராவது தென்படுகிறார்களா என்று பார்க்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு குரல் ஒலிக்கிறது. குரல் ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியாதவராக அவர், ”உங்களால் நன்மை செய்ய முடியுமென்றால் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கூறினார். அங்கே வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நின்றிருந்தார்கள். குழந்தை இஸ்மாயீல் அழுது கொண்டே தம் கால்களைத் தரையில் அடிக்க, குதிகாலின் பக்கம் தண்ணீர் பீறிட்டு வர வானவர் ஜிப்ரீல் உதவுகிறார்கள். ஹாஜரா உடனே குழந்தையைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு, தண்ணீர் பீறிட்டு வரும் இடத்தில் அணை போல் கட்டி ‘ஸம் ஸம்’ என்கிறார்கள். ‘ஸம் ஸம்’ என்றால் ஓடாதே நில் என்று பொருள்.
அன்று அவர்கள் அந்தத் தண்ணீரை அணை போல் கட்டி நிற்க வைக்காமல் போயிருந்தால் தண்ணீர் வெளியே ஓடக் கூடியதாகி இருக்கும். இன்று அது ஒரு கிணறாகப் பல கோடி மக்களுக்கு இன்றளவும் பயன் தரக் கூடிய கிணறாக இருக்கிறது. உலகத்திலுள்ள அனைத்து மக்களும் ஹஜ் கிரியைகளைச் செய்துவிட்டு ஸம்ஸம் தண்ணீர் அருந்தி தங்கள் ஊருக்கும் ஸம்ஸமை எடுத்துச் செல்வது கண்கூடு.
‘ஸம் ஸம்’ என்று தண்ணீரை நிற்க வைத்து அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள் அன்னை ஹாஜரா. அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடி இருந்தது. பிறகு ‘ஸம் ஸம்’ தண்ணீரை உடனே குடிக்கலானார். அவரின் பால் அவரின் குழந்தைக்காகச் சுரந்த வண்ணமிருந்தது. இப்படியாக அவர்களின் வாழ்வாதாரமும்அழகான முறையில் அந்த இடத்தில் தொடங்கியது.
‘ஜுர்ஹும்’ என்ற குலத்தாரின் ஒரு குழுவினர் அவர்களைக் கடந்து சென்றபோது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் ஒரு வகைப் பறவையைக் கண்டு, அவர்களில் ஒருவரை அங்கே தண்ணீர் இருக்கிறதா என்று உறுதி செய்து வர அனுப்பினார்கள். அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு அக்குலத்தார், அன்னை ஹாஜராவிடம் அங்கே தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். ஹாஜரா (அலை) அனுமதி அளித்ததோடு தண்ணீரில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தினார்கள். அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்பி அதன் விளைவாக அக்குலத்தைச் சேர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றியது.
அந்த நகரம் உருவாக அடிப்படையாக இருந்தது ஸம்ஸம் அதிசய தண்ணீர்தான். ஸம்ஸம் இன்றும் நம்மிடத்தில் உள்ளது. இறைநம்பிக்கையோடு தம் குழந்தையுடன் அந்த இடத்தில் தங்கிவிட்ட அன்னை ஹாஜராவுக்கு இறைவன் தந்த அற்புத பரிசு ஸம்ஸம் நீருற்று. ஏழு முறை ஸஃபா மர்வாவுக்கிடையில் அவர்கள் ஓடி தவித்த தவிப்பை இன்றும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டி உம்ரா மற்றும் ஹஜ் செய்யும் அனைவரும் ஸஃபா- மர்வா மலைக் குன்றுக்கு இடையே ஓடும் தொங்கோட்டம் இன்றும்நடைமுறையில் உள்ளது. ஹஜ் கிரியைகளில் பெரும்பாலான விஷயங்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் இறைநம்பிக்கையை நமக்கு நினைவுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
திருக்குர்ஆன் 14:35-38, ஸஹிஹ் புகாரி 4:60:3365
Leave A Comment