பூமியில் இறைவனின் இல்லம்

இஸ்லாமியர்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தொழுகைக்கு அவர்கள் முன்னோக்குவது மக்காவிலுள்ள கஅபாவை. அதனை ‘கிப்லா’ என்கிறோம்.

அப்படியான கஅபா என்கிற இறையில்லத்தைக் கட்ட இறைவன் இப்ராஹிம் (அலை) அவர்களுக்குக் கட்டளையிடுகிறான். இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த இறைவன், இந்த உலகத்தையே தன் கையில் வைத்திருப்பவனுக்கு இந்த உலகத்தில் ஓர் இல்லம் வேண்டுமென்று அதை இப்ராஹிம் (அலை) அவர்கள்தான் புதுப்பித்துக் கட்டவேண்டும் என்பதற்காகவே இறைவன் இப்ராஹிம் (அலை) அவர்களைத் தம் மனைவி ஹாஜராவையும் மகன் இஸ்மாயீலையும் தற்போது கஅபா இருக்கும் இடத்தின் அருகே கொண்டு விடச் சொல்கிறார்.

ஏன் விட வேண்டும், அந்தப் பாலைவனத்தில் பச்சிளங்குழந்தையுடன் எப்படி ஜீவிப்பாள் என்று கேள்வி கேட்காத இப்ராஹிம், மகனைப் பலியிட வேண்டுமென்று கனவில் வந்த கட்டளைக்குக் காரணம் கேட்காத இப்ராஹிம், இறையில்லம் கட்ட வேண்டும் என்று கட்டளை வந்ததும் எந்தக் காரணமும் கேட்காமல், இறைவன் சொல்லிவிட்டால் அதில் அர்த்தமிருக்கும் என்ற நம்பிக்கையாளராக மகன் இஸ்மாயில் (அலை) அவர்களிடம் இச்செய்தியை சொல்கிறார்.

மக்காவிற்கு வந்த தந்தையைக் கண்டதும் பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்ற இஸ்மாயீல் (அலை), இறைவனின் உத்தரவை தந்தையார் சொன்னவுடன் ஏன் எதற்கு என்று கேள்விகள் இல்லாமல் இறைவன் கட்டளையிட்டதை நிறைவேற்ற தானும் உதவுவதாக உறுதியளித்தார்கள்.
வேலையைத் தொடங்க ஆயத்தமானார்கள். சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டை காற்று அடையாளம் காட்டியதைக் கண்டு அந்த இடத்தில் தோண்டி அதில் அடிக்கல்லை நட்டு கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்ட ஆரம்பித்தார்கள். இஸ்மாயீல் (அலை) கற்களைக் கொண்டு வந்து கொடுக்கக் கொடுக்க, இப்ராஹிம் (அலை) கட்டத் துவங்கினார்கள்.

கட்டடம் உயர உயர இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு எட்டவில்லையென்பதைக் கண்டு, அவர்கள் ஏறி நின்று கற்களை அடுக்க இஸ்மாயீல் (அலை) ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து வைத்தார்கள். அதன் மீது ஏறி நின்று இப்ராஹிம் (அலை) பணியைத் தொடர்ந்தார்கள். அப்போது இப்ராஹிம் (அலை) அவர்களின் கால்தடம் அந்தக் கல்லில் பதிந்தது. அந்தக் கல்தான் இன்னும் நம்மிடையே உள்ள கஅபாவின் அருகே வைக்கப்பட்டுள்ள ‘மகாமு இப்ராஹீம்’.

இருவரும் சேர்ந்து அடித்தளங்களையும் தூண்களையும் எழுப்பிக் கொண்டிருந்த போது இப்ராஹிம் (அலை) ஓர் அழகான கல்லை வேண்டினார்கள். இஸ்மாயீல் (அலை) தேடிச் சென்று வந்த போது, இப்ராஹிம் (அலை) ஏற்கெனவே ஓர் அழகான கல்லை வைத்து நிறுவியுள்ளதைப் பார்த்து “இது எப்படிக் கிடைத்தது?” என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். “வானவர் ஜிப்ரீல் (அலை) தந்த சொர்க்கத்தின் கல்” என்று பதிலளித்தார்கள் இப்ராஹிம் (அலை). இன்றும் அந்தச் சொர்கத்து கல் ‘ஹஜ்ருல் அஸ்வத்’ கஅபத்துல்லாவில் மக்கள் தொட்டு முத்தமிடத் துடிக்கும் கல். அந்தக் கல்லுக்கு எந்த ஆற்றலும் இல்லாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அதனை முத்தமிடுமாறு வழிகாட்டியுள்ளார்கள். காரணம் இவ்வுலகில் காணக் கிடைக்கும் சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் மட்டுமே.

இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) இறைவனின் கட்டளையின் பேரில் கட்டிய கஅபா ஆலயம் தான் முதல் இறையாலயம். அதனைக் கட்டி முடித்ததும் இருவரும் இணைந்து “இறைவா! எங்களிடமிருந்து இந்தப் புனிதப் பணியை ஏற்றுக்கொள்” என்று கஅபாவை சுற்றி வட்டமிட்டு நடந்தபடியே பிரார்த்தித்தார்கள். அதுமட்டுமின்றி அந்த இடத்தைப் பாதுகாப்பான இடமாகவும், அதில் வசிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களைக் கொண்டு உணவளிக்கவும் பிரார்த்தித்தார்கள்.

அதன்படியே இந்தக் கஅபா புனிதத்தளம் இறுதிநாள் வரை பாதுகாக்கப்படுமென்று திருக்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் வந்துள்ளது.

இந்தப் புனிதத்தளம் உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாக அமைந்துள்ள பிரம்மாண்டமான அத்தாட்சி.

திருக்குர்ஆன் 2:125-127, 22:26, 28:57, 29:67, 3:96 ஸஹிஹ் புகாரி 60:3364

– ஜெஸிலா பானு, துபாய்

By | 2017-03-25T14:21:45+00:00 April 22nd, 2016|0 Comments

Leave A Comment