யாகூப் (அலை) “அல்லாஹ் மீதே நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன். எல்லா அதிகாரமும் அல்லாஹ்விடமே உள்ளது. நீங்கள் எகிப்துக்குள் ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள், வெவ்வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள். இறைவன் உங்களைப் பாதுகாப்பான்” என்று தம் மகன்களிடம் சொல்லி, இளைய மகன் புன்னியாமீனையும் அவர்களுடன் அனுப்பி வைக்கிறார்கள்.
நெடும் பயணத்திற்குத் தயாராகி ஒட்டகங்களில் அமர்ந்து பதினொரு மகன்களும் விடைப்பெற்றுச் சென்றார்கள். தந்தை கூறிய அறிவுரையின் படி வெவ்வேறு வாயில்களில் நுழைந்தார்கள். நேராகச் சென்று யூசுப் (அலை) அவர்களைச் சந்தித்தார்கள். இருபது வருடத்திற்குப் பிறகு தம் சொந்தத் தம்பி புன்னியமீனைப் பார்த்தவுடன் வாரியணைத்து முத்தமிட நினைக்கிறார்கள். ஆனால் தன்னுடைய ஆதங்கத்தை மறைத்துக் கொண்டு எல்லாருக்கும் விருந்து கொடுத்து, தம் தம்பி புன்னியமீனை தனியாக அழைத்துத் தம்முடன் உட்கார வைத்து, தான் யூசுப் என்பதை அறிவித்துவிடுகிறார்கள். மற்ற சகோதரர்கள் தமக்குச் செய்த காரியத்தைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டாமென்கிறார்கள்.
இறைவனின் கருணையினால் பல வருடங்கள் கழித்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தி இருவரும் கட்டியணைத்துத் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். தாம்தான் யூசுப் என்ற இரகசியத்தை வெளியில் காட்டிக் கொள்ள வேண்டாமென்றும், யாருக்கும் இது பற்றிச் சொல்லக் கூடாது என்றும் யூசுப் (அலை) புன்னியாமீனிடம் உறுதி வாங்கிக் கொள்கிறார்கள்.
மறுநாள் அவர்கள் கிளம்புவதற்கு முன், அவர்களுக்குத் தேவையான தானியங்களை நிறைவாகக் கொடுத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு மூட்டையென்று ஏற்றி அனுப்பும் போது முன்பு கிரயப்பொருட்களை அவர்களுக்குத் தெரியாமல் மூட்டையில் வைத்ததுபோல், இந்த முறையும் யூசுப் (அலை) யாருக்கும் தெரியாமல் தம் தம்பி புன்னியமீனுக்காகத் தன்னுடைய குவளையைப் பாசத்தோடு அவருடைய மூட்டையில் வைத்துவிடுகிறார்கள்.
சகோதரர்கள் திரும்பும் போது அரண்மனையின் காவலர்கள் அவர்களை நிறுத்தி “நீங்கள் திருடர்கள். அரசரின் மரக்காலை நீங்கள்தான் எடுத்திருக்க வேண்டும்” என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்கள். அவர்கள் “நாங்கள் திருடர்கள் அல்ல, நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஊருக்குக் குழப்பம் விளைவிக்க வரவில்லை. எங்களில் யாருடைய மூட்டையிலாவது நீங்கள் அதனைக் கண்டெடுத்தால் நாங்கள் அவரை உங்களுக்கு அடிமையாகக் கொடுத்துவிட்டுச் செல்கிறோம்” என்று வாக்குறுதி தந்தார்கள்.
மூட்டைகள் சோதிக்கப்பட்டன மரக்காலைக்குப் பதிலாக யூசுப்பின் குவளை வெளிப்பட்டது. அதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியுற்று “இவன் திருடன் என்றால், இவனுடைய மற்ற சகோதரன் யூசுப்பும் திருடித்தான் இருப்பான்” என்று அபாண்டமாகப் பேசினார்கள்.
அதனைக் கேட்ட யூசுப் (அலை) தம் மனதுக்குள் `நீங்கள் இன்னும் மாறவே இல்லை. அதே தீய குணத்துடன்தான் இருக்கிறீர்கள். நீங்கள் என்னைத் தவறாக வர்ணிக்கிறீர்கள், அதை அல்லாஹ் நன்கு அறிவான்` என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
குவளை அரண்மனையின் பொருள் என்பதால் புன்னியமீன் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்படுகிறது. காவலாளிகள் “இவரைக் கைது செய்து அமைச்சரிடம் ஒப்படைக்கப் போகிறோம்” என்று கூறுகிறார்கள்.
யூசுப் (அலை) பிரியத்தினால் தம் தம்பிக்கு அளித்த குவளையினால், தனது தம்பியின் மீதே குற்றம் சாட்டப்பட்டு, தம் தம்பியைத் தம்மிடமே விட்டுச் செல்ல வழிவகுக்கிறான் இறைவன் என்பதை உணர்கிறார்கள் யூசுப் (அலை).
அல்லாஹ் தாம் நாடியவருக்குப் பதவிகளை உயர்த்துகிறான், வேண்டியதை மனதில் நினைத்த மாத்திரத்திலேயே தருகிறான். கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான ஒருவன் இறைவன் மட்டுமே!
திருக்குர்ஆன் 12:66-77
http://goo.gl/oBf9Q6
Leave A Comment