Queen: மனதை ஆளும் “ராணி”

வேற்று மொழியில் நல்ல படங்களைப் பார்க்கும் போதெல்லாம் ‘ம்ஹும் தமிழுக்கு இது சரிப்படாது’ என்றே தோன்றுகிறது. ஏனெனில் கலாச்சாரம், பண்பாடு என்ற கட்டுக்குள் அடைபடுவது போல் தான் நமது படங்களையும் காட்சிப்படுத்த வேண்டிய அவசியமென்ற ஒரு பொய் முகத்தை அணிந்து கொள்கின்றனர் அல்லது மக்களுக்கு இப்படியானதுதான் பிடிக்குமென்று நினைத்துக் கொள்கின்றனரா? குறிப்பாக ஒரு பெண் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் போது அதுவும் அவள் கதாநாயகியென்றால் ‘ஒழுக்கம்’ என்ற வளையத்திற்குள் அவளை அடைத்து விடுகின்றனர். அதில் மிகுந்த சோகம் என்னவென்றால் ‘ஒழுக்கத்திற்கு’ அவர்களே வரையறைகளையும் வகுத்துவிடுகின்றனர்.

தேன்நிலவிற்கு நீங்கள் தனியாக சென்றிருக்கிறீர்களா? தேன்நிலவிற்குப் போக வேண்டும் அதில் இந்தெந்த இடத்தை கணவருடன் கைக்கோர்த்துப் பார்க்க வேண்டுமென்ற சராசரி ஆசைகளைப் பூண்டவளாக தன் மருதாணி விழாவில் நிகழும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் இரசித்தபடி, திருமணத்திற்கு பிறகு ஏற்படப்போகும் புதிய அனுபவங்களுக்காக காத்திருப்பவளுக்கு அதிர்ச்சியும் காத்திருக்கிறது. அவளை துரத்தி காதலித்த விஜய் திருமணத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு அவளை வேண்டாம் என்கிறான். திருமணம் நின்று விடுகிறதென்று அழுதாலும் மருதாணியை விழியிலேற்றினாலும் புலம்பாமல் தேன்நிலவிற்கு தனியாக சென்று திரும்புகிறவள் தான் ‘குயின்’.

இந்த ஹிந்தி திரைப்படத்தை என் தோழிகளுடன் சென்று பார்த்தேன். முடிவில் நாங்கள் அனைவருமே சொல்லிக் கொண்டது ‘குயின்’ திரைப்படத்தில் என்னை நானே பார்த்தேன் என்பதாக. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ‘குயின்’ கண்டிப்பாக ஒளிந்திருக்கவே செய்கிறாள். இப்படத்தில் ராணியாக கங்கனா ரெனாட் மிக அற்புதமாக தனக்கு தந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். படித்த நடுத்தர குடும்ப மிட்டாய் கடை பஞ்சாபி பெண் எப்படி சுதந்திரத்தை சுவாசித்து அதன் மூலம் மெருகேறுகிறாள் என்பதே கதை. கங்கனாவுடன் சேர்ந்து நாமும் பாரிஸ், ஆம்ஸ்டிரடாமை சுற்றிப் பார்க்கிறோம். ‘சுதந்திரம்’ இந்தியாவில் இல்லை என்பது திண்ணம். அதனை பெற அவள் பாரிஸ் வரை தனியாக செல்ல வேண்டியுள்ளது. அவள் அங்கே சென்று சந்திக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு நட்பாகிவிடுவதோடு கதையில் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்துகிறது. அதில் விஜயலட்சுமி என்பவரை பாரிஸில் சந்தித்து அவளுடன் சேர்ந்து பாரிஸை பார்த்து இரசிக்கும் ராணிக்கு இப்படியும் வாழலாம் அதில் தவறில்லை என்று எண்ணினாலும் அவளுடைய அடிப்படை குணங்களிலிருந்து அவள் விடுபடவில்லை என்பதையும் பூக்களின் மீது பன்னீர் துளிகளாகக் காட்டியிருப்பது அழகு.

ஒரு பெண் தான் செய்ய வேண்டுமென்று விரும்புவதை பெரியவர்களுக்காக, பெற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து, அவர்கள் விருப்பப்படியே எல்லாம் நடக்க அனுமதித்து அதையே தன் விருப்பமாக்கிக் கொண்டு தன் விருப்பத்தையே மறந்தும்விடுகிறாள். என்ன படிக்க வேண்டும், என்ன உடுக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்படி சிரிக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டுமென்று பெண்களுக்கென்று ஒரு தனி பட்டியலே நீள்கிறது. அந்த பட்டியலிலுள்ள ஒவ்வொன்றையும் தகர்க்கிறாள் ராணி. யார் என்னை எப்படி பார்க்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்ற கவலையெல்லாம் கொள்ளாமல் கிடைத்ததை உண்கிறாள், பிடித்ததை உடுக்கிறாள், மனம் விட்டு சிரிக்கிறாள், மதி சொல்படி நடக்கிறாள். அதைப் பார்க்க்கும் போது நம்மையறியாமல் அந்த குதூகலத்தில் நாமும் ஐக்கியமாகிவிடுகிறோம். இந்த படத்தில் ஒரு காட்சியுண்டு ‘Why fart and waste it when you can burp and taste it?’ என்று விஜயலட்சுமி சொன்னதும், ராணி ‘எங்கூரில் ஏப்பத்தை பெண்கள் சத்தமாக விடுவதே தவறு, நீங்கள் அதை சுவைக்கவும் செய்வீர்களா?’ என்று ஆச்சர்யப்பட்டு அடுத்த நிமிடமே சத்தமாக ஏப்பமிட்டு சிரித்துக் கொள்ளும் காட்சி மிக இயல்பாக காட்டியிருந்தாலும் அதில் உள்ள சாராம்சம் எத்தனைப் பேர்களை நெருடுமென்று யோசித்தேன்.

ஒரு ஆணுக்கு வேலை கிடைத்தால் அது ஒரு தகவல் அவ்வளவுதான். ஆனால் ஒரு பெண்ணுக்கு வேலை கிடைத்தால் பல விஷயங்களை அவள் யோசிப்பதோடு அதற்கான அனுமதியும் பெற வேண்டியுள்ளது. அந்த வேலைக்குச் செல்லலாமா வேண்டாமா அது பாதுகாப்பானதா என்றெல்லாம் யோசித்து பிறகு தந்தையிடம் அல்லது கட்டிக் கொள்ளப் போகிறவனிடம் அனுமதி பெற்றே செல்லும் ஒட்டுண்ணிகளாக திகழுவதை உணராதிருக்கிறோம். மற்ற நாட்டில் தனக்கான தீர்மானத்தை தானே முடிவெடுப்பதில் தவறில்லை அது அவளுடைய வாழ்கை அதைப் பற்றி அவள்தான் முடிவெடுக்க வேண்டும், அது சாத்தியமென்பதை அவள் உணர்ந்து செயல்படுத்தி அதில் கிடைக்கும் ஆனந்தத்தை முகத்தில் மிளிரவிடும் கங்கனா தனது இந்தப் படத்தின் மூலம் கண்டிப்பாக பாலிவுட்டில் ஒரு மைல்கல்லை பதித்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. ‘காதல்’, ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையில் பொதுவாக மயக்கமுறும் பெண்களை, இல்லை மகுடிக்கு மயங்காது உருகாது தனியாக திடமாக தன் காலில் நிற்க முடியுமென்று ஒரு தெம்பைத் தந்துள்ளது இந்தப் படம்.

ஒரே அறையில் ஆண்களுடன் தங்க வேண்டிய சூழ்நிலையில் தயங்குவது, பின்பு நண்பர்களாகி அவர்களுக்குக் காலை உணவு பரிமாறுவது, ஆட்டம்- பாட்டம், ஆண்- பெண் என்ற பேதமில்லாமல் சகஜமாக பழகுதல், நட்புக்கு மொழி அவசியமில்லை என்பதாக ஜப்பானிய நண்பர் பேசுவதை காது கொடுத்து கேட்டு தானும் ஹிந்தியில் அவருக்குப் புரியுமோ புரியாதோ என்ற எதிர்பார்ப்பில்லாமல் உரையாடுவது. அணைப்பதில், தொடுதலில் காமம் மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை அது அன்பாக நட்பாக பாசத்தின் வெளிப்பாடாக இருக்கலாமென்று தனது மன இருக்கத்தை தளர்த்துவதெல்லாம் மிக லேசாகச் சொல்லி சென்று மனதை அள்ளிச் சென்ற படம்.

தனியாகப் பயணிப்பதால் சில பல இடர்களை ராணி சந்தித்தாலும் எல்லாவற்றிலுமிருந்து மீண்டு தனியாக வாழப் பழகிக் கொள்வதோடு. அதைப் பற்றி அவளுக்கே ஆச்சர்யம் என்பதையும் மிக நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.. அந்த காட்சிகளுக்கு ஏற்ற வகையில் கங்கனா வளைந்திருப்பது நேர்த்தி. பல இடங்களில் கங்கனா ரெனாட் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ ஸ்ரீதேவியை நினைவுபடுத்தினாலும் இவருக்கென்ற ஒரு தனி உடல்மொழியோடு அலங்கரிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தின் சில வசனங்களை கங்கனாவே தனக்கேற்ப எழுதிக் கொண்டார் என்பதை அறிவதன் மூலம் அந்த பாத்திரத்தில் தன்னை எவ்வளவு ஈடுபடுத்திக் கொண்டார் என்பது புலப்படுகிறது. ஒவ்வொரு கதாபாத்திர படைப்பையும் மிக அற்புதமாகச் செய்திருக்கிறார் இயக்குனர் விக்காஸ். அதற்கேற்ப திரைக்கதையை பர்வீஸ், சைத்தாலி, விக்காஸ் சேர்ந்து 100 சதவீத உழைப்பைக் கொட்டி படத்தை முழுமையடைய வைத்துள்ளனர். இதில் நடித்த பலருக்கு இது முதல் படமாம். ஆனால் அந்த சாயலே எங்கும் தெரியவில்லை. ஒலெக்சான்டராக வரும் மிஷ்பாய்கோ அழகுடன் கூடிய கம்பீரத்துடன் வலம் வரும் நண்பராகிவிடுகிறார். அதே போல மார்செல்லோவாக வரும் மார்கோவின் மீது கங்கனாவிற்கு மட்டுமல்ல நமக்கும் நேசம் பிறந்துவிடுகிறது. அவருடைய கண்களில் மின்னும் சிரிப்பு எனக்கு ‘ஈட் பிரே லவ்’வில் பிலிப்பாக வரும் சேவியர் பார்டமை போலத் தோன்றியது.

ஒரு ஆண் மகனால் தனக்கு வேண்டுமென்பதை உடனே நிறைவேற்றிக் கொள்ள இயலும். அது பயணமென்றாலும் சரி அல்லது தேவையான பொருளென்றாலும் சரி. ஆனால் ஒரு பெண் தனியாகப் பயணம் செல்வதோ தேவையான பொருட்களைத் தனக்காக வாங்குவதோ இன்னும் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட பெண்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது. அப்படியான பெண்களின் கனவுகளில் கற்பனைகளில் ‘இப்படியெல்லாம் இருந்தால் எப்படியிருக்கும்’ என்று நினைப்பவர்களுக்கு இந்தப்படம் ஒரு பிரதிபலிப்பாக, வடிகாலாக அமையும்.

பெண்கள் நாங்கள் இரசித்தது போல் ஒரு ஆண் இப்படத்தை இவ்வளவு ஆழமாக இரசிக்கவும் நேசிக்கவும் முடியுமா என்று தெரியவில்லை. ‘குயின்’ மகுடம் சூடிக் கொண்டாள்.

By | 2016-12-20T18:18:21+00:00 March 27th, 2014|திரைவிமர்சனம்|0 Comments

Leave A Comment