விடைகாகக் காத்திருக்கும் கேள்விகள் | 101 சோதியங்கள்

அறிவியல், விஞ்ஞான, தொழிற்நுட்பமென்று எல்லாம் வளர்ந்திருந்தாலும் விடையில்லாத கேள்விகள் நம்முன் நிறைந்தே நிற்கின்றன. அப்படியான கேள்விகளில் ஒன்றுதான் ‘101 சோதியங்களின்’ 101-வது கேள்வி. ஒருவரி கதையை மிக நுட்பமான கவிதையாகத் தந்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த்த சிவா. குழப்பங்களோ, திருப்பங்களோ, அதிர்வுகளோ இல்லாத மிக சாதாரணப்படம் கதை சொல்லலில் சிறந்து நிற்கிறது. தனித்தன்மை என்ற பாசாங்கேதுமில்லாமல் தனது வலுவான கதாபாத்திரத்தை வைத்து படத்தைத் திறமையாக ஈர்ப்புடன் நகர்த்தியுள்ளார்.

குழந்தையை கதாநாயகனாக்கி அழகு பார்த்த படம். குழந்தைகள் நமக்குத் தெரியாத விஷயத்தை குறித்துக் கேள்வி எழுப்பினாலோ, அல்லது நம்மையே கேள்விக்குள்ளாக்கினாலோ, அல்லது அவன் தெரிந்து கொள்ளக்

கூடாது என்று நாம் எண்ணும் அந்த விஷயத்தைப் பற்றி கேள்வி கேட்டாலோ உடனே நாம் அவர்களை அதட்டி அடக்குகிறோம். ‘வயசுக்கு மிஞ்சியப் பேச்சு’, ‘வாய் நீளம்’, ‘அதிகப்பிரசங்கி’ என்றெல்லாம் சொல்வதும் அதனால்தான். இப்படியான கேள்வியைக் கேட்கும் சிறுவனான அனில் குமார் பொக்காரோவை 101 கேள்விகள் எழுதித்தர கேட்கிறார் அவன் ஆசிரியர். அதில் அவனுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த ஒவ்வொரு கேள்விக்கும் 1 ரூபாய் தருவதாகவும் சொல்கிறார்.

– ஏன் சிலந்தி தன் வலையில் தானே சிக்கிக் கொள்வதில்லை?
– வானத்தின் நிறம் மாற்றத்தின் காரணமென்ன?
– மீன்கள் மூச்சுவிடுவது எப்படி?

இப்படியாக தான் பார்க்கும் விஷயங்களை, தன்னைச் சுற்றியிருக்கும் வாழ்வின் சந்தேகங்களை தன் முதுகில் கேள்விகளாகச் சுமந்தபடி ஒரு பட்டாம்பூச்சி அமிழ்தத்தைத் தேடி திரிவது போல் அவனும் தேடித் திரிகிறான். அதற்காக எல்லா ‘ஃபிரேமிலும்’ பட்டாம்பூச்சியைக் காட்டியிருப்பது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும், செலவில்லாத சொற்ப கதாபாத்திரங்களைப் படைத்து அதில் ஒவ்வொருவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருப்பதே இப்படத்தின் சிறப்பு.

கேள்விகளைச் சேகரிக்கும் பொக்காரோவின் உடல்மொழி, உணர்ச்சி பொங்கப் பேசும் அவன் கண்கள், அழுத்தத்தை அழகாக காட்டியுள்ள விதம், அவன் அலட்சியப் புன்முறுவல் என்று அந்த கதாபாத்திரத்திற்கு அத்தனை பொருந்தியிருக்கிறார் பொக்காரோவாக வரும் மினோன். இதற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆசிரியர் என்றாலே மதிப்பும் மரியாதை என்ற சொற்களும் கூடவே வந்து நிற்கும். அந்த மரியாதைக்குரிய இடத்தை சரியாக நிரப்புகிறார் இந்திரஜித். வகுப்பறையில் ஆசிரியரே தெய்வம், அவர் சொல்வதே வேத வாக்கு, அவர் ஏதும் கேட்டுவிட்டால் உடனே தந்து அவருடன் நெருக்கமாக வேண்டுமென்ற பண்பு பொதுவாக எல்லோரிடமும் உண்டு. நான் படிக்கும் போதும் அப்படித்தான் இருந்தது. இந்தக் காலத்து குழந்தைகள் அதற்கு விதிவிலக்காக இருக்கலாம். ‘தனியொருவருக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாரதி போல் இந்த படத்தில் வரும் ஆசிரியர் எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் அவர்களால் முடிந்தால் ஒரு சாப்பாடு பொட்டலத்தோடு மற்றொன்றையும் எடுத்து வர கேட்கிறார். அவர் கேட்டுவிட்டார் என்ற காரணத்திற்காக வீட்டில் அடம்பிடிக்கிறான். அவன் பள்ளிக்குத் தயாராகிவிட்டு பொட்டலத்தை எதிர்பார்த்து நிற்கிறான். அம்மா அதனை நீட்டியதும் இயல்பாக கட்டி அணைத்துக் கொள்கிறான். இப்படி எந்தெந்த வயதில் எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்தால் தான் அந்த தாய்க்கு மகிழ்ச்சி. பசிக்கிறது என்று குழந்தை அழ வேண்டும். கேட்ட பொருள் கிடைக்கும் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அடித்தால் அழ வேண்டும் என்ற இயற்கை மரபிலிருந்து சிறிது விலகி நின்றாலும் அந்தத் தாயுள்ளம் பதறும்.

பொக்காரோ கேள்விகளைத் தேடி நேரத்தோடு வீடு திரும்பாததால் அழுகையுடன் உட்கார்ந்திருப்பாள் அவன் தாய். அவன் திரும்பி வந்ததும் “எங்கே சென்றாய்?” என்ற கேள்வியுடன் கம்பெடுத்து விலாசிவிட்டு “என் குழந்தை அழவில்லையே இவனுக்கு என்ன ஆயிற்று?” என்று குரலெடுத்து அழும் தாய். வேலையில்லாத தந்தை, நோயுற்றவர் என்று தன்னை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பறிபோன வேலைக்காக போராடும் அன்பான அப்பா. மனவளர்ச்சி குன்றிய தங்கைக்கு வார்த்தைகளை கோர்க்க சொல்லிக் கொடுக்கும் காட்சியில் மினோன் மிகச் சிறப்பாக அழுத்தம் திருத்தமாக உண்மையிலேயே அந்தக் குழந்தைக்கு உச்சரிப்பு சொல்லிக் கொடுப்பது போலவும், அவளை முதுகில் சுமந்துக் கொண்டு ‘பரோட்டா’ என்ற வார்த்தைகளைச் சொல்லித் தருவதும், அவள் ஏன் மற்ற குழந்தை போல் இல்லை என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடையில்லாமல் தவிக்கும் போதும் தெரிந்து கொள்கிறான் சில கேள்விகளுக்கு சரியான விடைகளை இன்னும் கண்டறியவில்லையென்று. இப்படி ஒவ்வொரு பாத்திரப் படைப்புகளும் அபாரம்.

உலகப்பட தரத்தில் மலையாளப் படங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. இப்படியான படங்கள் தமிழில் ஏன் வருவதில்லை என்ற கேள்விக்கே இடமில்லை. நம் இரசனை அப்படி. நமக்கு வாய்த்தது நமக்கு கிடைக்கவே செய்கிறது. அதனால் ஆதங்கமும் பொறாமையும் பட்டுவிட்டு செல்ல வேண்டியதுதான். முடிந்தால் ‘101 சோதியங்களை’ கேள்விகள் கேட்காமல் பார்த்துவிடுங்கள்.

By | 2016-12-20T18:18:22+00:00 February 17th, 2014|திரைவிமர்சனம்|0 Comments

Leave A Comment