அறிவின் ஆரம்ப எழுத்து – அலிஃப்

நான்கு தலைமுறை பெண்களின் இன்னல்களை ஃபாத்திமாவாக வரும் லேனாவின் மூச்சு திணறலோடு ஆரம்பிக்கிறது ‘அலீஃப்’ திரைப்படம். நம் வாழ்வில் முதலில் மிகவும் மதிக்கப்படவேண்டிய ஒருவர் யாரென்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்ட போது “உன் தாய்” என்றார்கள். ஒரு முறையல்ல மூன்று முறை கேட்கப்பட்ட போதும் முதல் மூன்று ஸ்தானங்களும் தாய்க்கே என்றார்கள், நான்காவதாகத் தந்தை என்றார்கள். அப்படியான தாய்மார்களை இஸ்லாத்தின் பெயரில் வதைப்பதைச் சித்தரிக்கும் படம். கண்டிப்பாக இது மூச்சுத் திணறல்தான். நியாயமான கேள்விகளைப் பெண்கள் எழுப்பும் போது திணறல் ஏற்பட்டு, அவளை நசுக்கி வாழ்வின் எல்லைக்கு ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்தாலும், இன்னல்களைத் தாண்டி வாழ தலைப்படுகிறாள் இப்படத்தில் ஃபாத்திமா. இப்படம் பெண்களுக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இங்கு ஆண்களையோ மதத்தையோ குற்றம்பிடிக்கவில்லை மாறாக மதத்தின் பெயரில் பிழைப்பு நடத்தும் கூட்டத்தை நேரடியாகச் சாடியுள்ளது. ஃபாத்திமா ஒரு கட்டத்தில் ‘இன்று என் கணவர் என்னைக் காரணங்கள் காட்டி விவாகரத்துச் செய்கிறான் என்றால் அதற்கு முழுப் பொறுப்பு நீதான்’ என்று மதபோதகரைக் கை காட்டுவது – இப்படியாகப் பெண்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.

ஒரு விபச்சாரி, நாவறட்சியுடன் இருந்த நாய்க்குத் தண்ணீர் கொடுத்து அந்த நாயின் தாகத்தைத் தணித்ததற்காக அவளது பாவக் கறைகளை மன்னித்து இறைவன் சுவன வாழ்வைப் பரிசாகத் தந்தது பற்றி ஃபாத்திமா மதபோதகரிடம் கேள்வி எழுப்பும் போது “அது தவறு… பெண்களோட சப்தம் சபையில் எழுந்தால் அது மறுமை நாளின் வரவென்று” தவறாகப் போதிக்கிறார். மார்க்கம் சொல்வதெல்லாம் பிற உயிர்களுக்குக் காருண்யம் காட்டினால் கருணையாளன் நமக்கு அதைவிடச் சிறந்த கருணையைக் காட்டுகிறான் என்பதுதானே? ”பூமியில் உள்ளோருக்கு நீங்கள் இரக்கம் காட்டுங்கள், வானில் ’அர்ஷில்’ உள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்” என்று போதிக்கும் மார்க்கத்தின் உண்மைகளை மறைத்து அவர் அவர்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் மதகுருக்கள் முழங்குவதை நிரல்படுத்தியுள்ளது ‘அலிஃப்’.

பிரமாதமான இயக்கமென்று சொல்வதை விடத் திரைகதையால், வீரியமான வசனங்களால் கேள்விகளைக் கொண்டு நிரப்பிக் கண்ணாடியை நம் முன் நிறுத்தி, சமீபகாலமாகத் தூய்மைவாதம் என்ற பெயரில் திரிந்து கொண்டு இருக்கும் சூழல்களையும், நமக்கே தெரியாமல் விதைக்கப்பட்ட விஷத்தினால் வார்த்தெடுக்கப்படும் சமுதாயக் கட்டமைப்பையும் கண் முன்னே விவரிக்கிறார் இயக்குனர் என்.கே. முகமது கோயா. எவ்வளவு பாகுபட்டுக் கிடந்தாலும் பெண்கள், அவர்களின் ஆடைகள், ஒழுக்கங்கள் என்று வந்துவிட்டால் அனைவரும் கைகோர்த்துக் கொண்டு சாடுகின்றனர் என்பதையும் போகிற போக்கில் சொல்லிவிடுகிறார். திருமணத்தில் அழைக்கப்படாத விருந்தாளியாக வரும் சிறுவன் அலியை அடித்து விரட்டுபவர்கள், திருமணம் முடிந்து குப்பையில் சாப்பாட்டைக் கொட்டுவது, பெரியவர்கள் பிரச்சனையில் குழந்தைகளின் படிப்பு பாதிப்பு அடைவது, சடலத்தை அடக்கம் செய்யவும் வேண்டுமென்றே காத்திருக்க வைத்திருத்தலை எதிர்த்து வீட்டின் பின்புறத்தில் புதைக்க, தன் அயலார் சந்திரனாக வரும் கலாபவன் மணியை அழைக்க, ‘மோண்டா கழுவாத இவனா அடக்கம் செய்யப் போறான்?’ என்று கேட்பவர் வாயை மூடும் வகையில் ‘அவன் மனசு சுத்தமானது அது போதும்’ என்று பதிலுரைப்பது என்று மனிதத்திற்காகத்தான் மதமே தவிர, மதத்தைத் தாங்கிப் பிடித்து மனிதத்தைச் சாகடிக்கிறார்கள் என்பதை அழகாகச் சின்னச் சின்னக் காட்சிகளில் நெஞ்சை நிறைக்கிறார்.

தொலைக்காட்சியைத் தன் தோழியோடு இருக்கையில் அமர்ந்து பார்க்கும் குற்றமற்ற சிறுவனை அதட்டி கீழே உட்காரச் சொல்லும் போது கேள்வி கேட்காமல் கீழே நகர்பவனோடு அவன் தோழியும் கீழே உட்கார்ந்து உதிக்கும் புன்னகை, ஃபாத்திமா வேலை கேட்டு உதிர்க்கும் கண்ணீருக்கு, உடன் வேலை தர முயற்சிப்பவருக்கு நன்றியில் உயரும் கை என்று தத்தளிக்கும் குடும்பத்தை மதத்தின் பெயரில் எவ்வளவு அலைக்கழிக்கலாமோ அவ்வாறெல்லாம் சீண்டிப்பார்த்துப் படம் முழுக்க வேதனை நிரம்பிய காட்சிகளாக இருந்தாலும் அதன்னூடே நம்பிக்கை ஒளிக்கீற்றை விட்டுச் செல்லும் இயக்குனர், கம்யூனிசத்தின் அப்பட்டமான ஆதரவை வெளிப்படையாக அதிகப்படியாகச் சொல்வதாகத் தென்பட்டது. கம்யூனிசமிருக்கும் வீட்டில்தான் பெண் போராளிகள் உதிப்பார்களா என்ன?

“பெண் என்பவள் ஒரு பொருள் மட்டும்தானே? யாரும் வாங்கி உபயோகிக்கலாம், அவளுக்கென்று மனசு, ஆசைகள், உணர்வுகள் என்று எதுவுமே இருக்கக்கூடாது அப்படித்தானே? இந்தச் சமுதாயமும் முசலியார்களும் நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள், ‘பெண்களுக்கென்று நபிகளார் பல உரிமைகளும் சலுகைகளும் மொழிந்ததுண்டு. மஸ்ஜித்திற்குச் செல்லலாம், தந்தையின் சொத்தில் உரிமை பெறலாம், பொது மேடையில் பேசலாம், யுத்தத்திலும் பங்கெடுக்கலாம்…’ ஆண் ஒரு பெண்ணுக்கு விவாகரத்தை (தலாக்) மூன்று முறை சொல்ல வேண்டும் ஆனால் பெண் ஒர் ஆணுக்கு விவாகரத்தை ஒரே முறை சொன்னால் போதுமென்றும் உண்டு” என்று தைரியமாகப் பேச அவள் போராளியாகவோ, கம்யூனிட்டாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மார்கத்தைச் சரியான புரிதல்களுடன் எதிர்கொள்பவளாக இருந்தால் போதும்.

ஃபாத்திமா மூலம் ஒவ்வொரு பெண்களும் வேண்டி நிற்பதெல்லாம் இலகுவான சுவாசம், நிறைவாய் உணவு, உடுத்திக் கொள்ள உடை, மரியாதையான ஒரு வாழ்வு அவ்வளவுதான். அதன் பிறகுதான் மார்க்கம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க முடியுமென்று நேரடியாகச் சொல்லியுள்ளார் இயக்குனர் முகமது கோயா. இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.

எல்லாக் கதாமாந்தர்களும் அலட்டிக்கொள்ளாமல் கதையைச் சரியாகப் புரிந்து கொண்டு தம் பங்கை செவ்வனே செய்துள்ளனர் குறிப்பாக ஆட்டாவாக வரும் ஃபாத்திமாவின் தாய் ஜீனத் இயல்பான நடிப்பில் மிளர்கிறார். ஜாய் மாத்தியூ ஹாஜியாராகக் கலக்கியுள்ளார். இரண்டே பாடல்கள் என்றாலும் அதன் வரிகளில் பொதிந்த அர்த்தங்களைத் தன் இசையில் நம்மிடம் கொண்டு சேர்க்கிறார் ரமேஷ் நாராயண்.

இப்படத்தில் பிரச்சாரமுமில்லை எந்தத் தீர்வும் தரவில்லை, நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளவும் சிந்திக்கத் தூண்டவுமே இப்படம்.

இறுதி காட்சியில் கருப்பு அங்கி அணிந்த கூட்டத்தை அடக்குமுறையில் சிக்கி தவிக்கும் பெண்களின் இன்னல்களாக சித்தரித்து அவர்களை விடுப்பட்டவளாக வீர நடையும் நேர் கொண்ட பார்வையும் வீசி செல்கிறார் ஃபாத்திமா.

எனது போன பதிவான ‘தி ஸ்டோனிங் ஆப் சொரயா‘வில் கேள்வி கேட்டவளை கற்களால் எதிர்கொண்டு சாகடித்தார்கள். இந்தப் படத்தில் வீசப்பட்ட கற்களால் கோட்டை கட்டுகிறாள் ஃபாத்திமா. அலிஃப் பேசப்பட வேண்டிய படம்.

Leave A Comment