அம்மாவுக்கும் வள்ளுவருக்கும் ஆகாதோ!?

பள்ளி பருவத்தில் வள்ளுவர் கோட்டம் போகலாம் என்று தோழிகளெல்லாம் திட்டம் போட்டால் அது காதலர்கள் சந்திக்கும் இடமென்று ஆளாளுக்கு தமது காதலனையும் அங்கு வரவைக்க திட்டம் போட்டார்கள். காதல் என்றாலே காத தூரம் ஓடும் நான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘டாஷ்’ என்று அர்த்தம் என்று அந்த வார்த்தையையே கெட்ட வார்த்தை என்று நினைத்திருந்த காலத்தில் காதல் செய்யும் தோழிகளை கெட்ட பெண்கள் பட்டியலில் சேர்த்துவிட்டு வள்ளுவர் கோட்டம் போகாமல் ஜகா வாங்கிவிட்டேன்.

ஆறு வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் 133 அடி வள்ளுவர் சிலையைக் கண்ட போது விண்ணப்பித்தேன் உள்ளூர் வள்ளுவர் கோட்டம் போக வேண்டுமென்று அது இந்த முறை பயணத்தில் நிறைவேறியது.

வள்ளுவர் கோட்டம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் என் பங்குக்கு:

தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் ‘திருக்குறளை’ தந்த திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்ட நினைவகம்தான் வள்ளுவர் கோட்டம். 1976-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15-ம் நாளன்று தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு ஆளூநர் திரு.கே.கே.ஷா அவர்கள் தலைமையில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. பக்ருத்தீன் அலி அகமது அவர்களால் ‘வள்ளுவர் கோட்டம்’ சென்னையில் திறந்து வைக்கப்பட்டது.

வள்ளுவர் கோட்டம் சிற்பத் தேர்:
இது தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் திருக்கோயில் வடிவமைப்பு உடையது. இதன் பீடம் 25 அடி சதுரப் பளிங்கால் அமைந்தது. ஏழு அடி உயரமுள்ள இரு யானைகள் இத்தேரை இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

பெரிதும், சிறியதுமாக பக்கத்திற்கு நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லாலானவை. பெரிய சக்கரத்தின் குறுக்களவு 11 1/4 அடி பருமன் 2 1/2 அடி. தேரின் அடித்தள அடுக்குகளில் மிக நுண்ணிய சிற்பங்கள் உள்ளன. இவை குறிப்பிட்ட குறட்பாக்களின் பொருளை விளக்குகின்றன. திருவள்ளுவர் சிலை உள்ள கருவறை, தரையிருந்து 30 அடி உயரத்தில் உள்ளது. இது 40 அடி அகலத்தில் எண் கோண வடிவாக அமைந்தது.

அரங்கு குறள் மணிமாடம் மாடி:

அரங்கம்: தொல்பெரும் தமிழ் பண்பாட்டின் அடிப்படையில் அழகுற அமைக்கப்பட்டுள்ள ‘தோரணவாயில்’ பார்வையாளர் அனைவரையும் அரங்கத்திற்கு வரவேற்கிறது. தூண்கள் ஏதுமில்லாத இவ்வரங்கத்தின் நீளம் 220 அடி. அகலம் 100 அடி. ஆசியாவிலேயே மிகப்பெரிய அரங்குகளில் இதுவும் ஒன்று. 4000 பேர் நன்கு அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க இயலும். இந்த அரங்கத்தின் மூலம் அரசாங்கத்திற்கு வருமானம் உண்டு. (நாங்கள் சென்றிருந்த போது ஏதோ பருத்தி ஆடைகள் கண்காட்சி மறுதினத்திலிருந்து தொடங்கப் போவதால் ஏதேதோ வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது) அரங்கத்தைச் சுற்றி தாழ்வாரத்தின் நீளம் 20 அடி. இதே போல் மேல் மாடியில் ஒரு மைய மாடியில் ஒரு மைய மாடமாகத் தாழ்வாரம் உள்ளது. இதுவே குறள் மணிமாடம்.

குறள் மணிமாடம்: இம்மணிமாடச் சுற்றில் அறத்துப்பால் கருநிறப் பளிங்கிலும், பொருட்பால் வெண்ணிறப் பளிங்கிலும், காமத்துப்பால் செந்நிறப் பளிங்கிலும் திறந்த புத்தக வடிவில் பொறிக்கப்பட்டுள்ளன. சில முக்கிய குறள்களை விவரிக்க அழகிய ஓவியங்களும் நிரம்பியிருந்தது. ஆனால் அந்தப் புத்தக வடிவில் பொறிக்கப்பட்டுள்ள குறளின் நடுவில் திருஷ்டிக்காகவா என்று தெரியவில்லை வரிசையாக எல்லா புத்தகத்தின் நடுவிலும் வெற்றிலை சுவைத்துத் துப்பிய கறைதான் இருந்தது.

வேயாமாடம்: திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல கோபுரம் கலசம் ஆகியவற்றைக் காண வேயாமாடம் அமைந்துள்ளது. இதன் நீளம் 220 அடி. அகலம் 100 அடி. இங்கு கலசம், கோபுரம், திருவள்ளுவர் சிலை, மூன்றின் நிழலுருவம் தோன்ற மூன்று நீர் நிலைகள் இருந்திருக்க வேண்டிய இடம் வறண்டு கிடந்தது. ‘6 மணியாச்சு கிளம்புங்க’ என்று பிரம்புடன் வரும் நபரிடம் ‘ஒரு நிமிடம்’ என்று சொல்லிவிட்டு வேயாமாடத்திற்குச் செல்லும் படிக்கட்டில் அவசரமாக மூச்சிரைக்க ஓடி திருவள்ளுவர் சிலையை தரிசித்துவிட்டு படமும் எடுத்துவிட்டு கீழே வந்துவிட்டேன்.

சுற்றாடல்: சிற்பத்தேர், அரங்குகள் போக சுற்றியுள்ள பகுதியில் அலங்காரத்திற்காக பூஞ்செடிகளும் மற்ற செடிகளும் வைத்திருப்பது ஒரு சின்ன பூங்காவாக காட்சியளிக்கிறது.

இந்த மாதிரியான ஒரு இடம் வெளிநாட்டில் இருந்தால் எவ்வளவு அழகாகப் பராமரிப்பார்கள். எவ்வளவு பாதுக்காப்பாக கவனித்துக் கொள்வார்கள். இந்த இடத்தை வைத்து எத்தனை சுற்றுலா பயணிகளைக் கவரலாம்? அரசாங்கத்திற்கு பராமரிக்க பணமில்லையென்றால் கூட ‘அனுமதி இலவசம்’ என்றில்லாமல் நுழைவுக் கட்டணம் வைத்து அந்த வருமானத்தில் இன்னும் அழகாக வைத்திருக்கலாமே? ஆசியாவிலேயே பெரிய அரங்கில் ஒன்றான இந்த அரங்கில் எத்தனை பெரிய நிகழ்ச்சிகள் நடத்தி எவ்வளவு அழகாக பராமரித்து இன்னும் பிரமாதமாக வைத்திருக்கலாம்? இப்பவும் நிறைய நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன, மந்திரிகளும் வந்து கலந்து கொள்ளத்தான் செய்கிறார்கள் ஆனால் முழு அக்கறை யாருக்கும் ஏனில்லை? அவ்வளவு பெரிய இடத்தைப் பராமரிக்க, பாதுகாக்க இரண்டே ஆட்கள் போடப்பட்டுள்ளார்கள். ‘துப்பாதே’ என்று மக்களை விரட்டவே ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொரு ஆள் வேண்டுமே. நிறைய வருமானம் வரும்படி செய்தால், அதற்கான செலவுகள் செய்யவும் தயக்கமிருக்காதே? அரசாங்கத்தைக் கடிந்தும் குற்றமில்லை நம் மக்களைச் சொல்ல வேண்டும், ஏன் தான் நம் மக்களும் அசுத்தம் செய்கிறார்களோ? எப்படித்தான் திருக்குறள் மீது ‘துப்ப’ மனசு வருகிறது? சுத்தமாக ஒரு இடமிருந்தால் மத்தியில் துப்ப மனசு வராதுதானே? ஸ்பென்சர் பிளாசா, சிட்டி செண்டர் நடுவில் துப்பவா செய்கிறார்கள்? என்னவொரு பாரபட்சம்.?!!

தமிழக அரசு வள்ளுவர் கோட்டம் பராமரிக்கவென்று ஒதுக்கிய பணத்தை அம்மா ஆட்சியில் வேறெங்கோ ஒதுக்கிவிடுவார்களாம் காரணம் கீழே உள்ள இந்த படம்தான்.

ஆட்சி சண்டையில் தவிப்பது உயிருள்ள மக்கள் மட்டுமல்ல ‘திருவள்ளுவரும்தான்’.

சமீபத்திய செய்திப்படி தமிழக அரசு ரூ.60 லட்சத்தை வள்ளுவர் கோட்டத்தை புதுப்பிக்க ஒதுக்கியுள்ளார்கள். பணம் கொட்டிப் புதுப்பித்த பிறகாவது மறுபடியும் நாசமாகாமல் பராமரிக்கிறார்களா என்று பார்ப்போம்.

By | 2007-02-10T11:01:00+00:00 February 10th, 2007|அக்கறை|9 Comments

9 Comments

  1. சிறில் அலெக்ஸ் February 10, 2007 at 12:59 pm - Reply

    சென்னையில் அத்தன நாள் இருந்தாலும் போய் பாக்கணூம்னு எண்ணமிருந்ததில்ல.. கடைசியா ஒருநாள் மனச தேத்திக்கிட்டு மனைவிகூடப் போனா.. ஒரே காதலர்கள் கூட்டம்.. சரியா பராமரிப்பில்ல.

    சீக்கிரமாகவே வந்துட்டோம்.. கொஞ்சம் பராமரிச்சா ரெம்ப நல்ல பொழுதுபோக்கிடமாக அமையும் என்பதில் சந்தேகமில்ல.

    அப்படியே ஒருவர் ஒரு குறள் படிச்சு திருந்திட்டாலும் போட்ட 60லட்சம் எடுத்திடலாமில்லியா.

    🙂

  2. சாணக்கியன் February 10, 2007 at 3:25 pm - Reply

    அவசியமான பதிவு. ஒரு முக்கிய பண்பாட்டு சாட்சியாக அரங்கை அமைக்கும் அரசுக்கு அதை ஒழுங்கான முறையில் பராமரிக்கவும் அக்கறை வேண்டும். இப்போது கலைஞர் ஆட்சிதானே நடக்கிறது. அரசு இடம் என்றாலும், கோட்டையில் இப்படி துப்பிவைக்க அரசு அனுமதிக்குமா? அரசின் மெத்தனப் போக்கையும் சொல்லவேண்டும்.

    சும்மா கண்காட்சி எல்லாம் மட்டும் வைக்காமல், பட்டிமன்றங்களும், கவி அரங்கங்களூம், பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகளையும் அங்கு நடத்தினால் அந்த இடத்திற்கு உரிய மரியாதை வரும்.

    உங்கள் பதிவிலிருந்து நிறைய விசயங்கள் அறிய முடிந்தது. நன்றி!

  3. ஜெஸிலா February 10, 2007 at 3:42 pm - Reply

    //அப்படியே ஒருவர் ஒரு குறள் படிச்சு திருந்திட்டாலும் போட்ட 60லட்சம் எடுத்திடலாமில்லியா.// எந்த குறள்னு சொன்னீங்கன்னா அப்படியே அனுப்பிவச்சிடலாம் அலெக்ஸ் 😉

    //கோட்டையில் இப்படி துப்பிவைக்க அரசு அனுமதிக்குமா? // அப்படிப் போடுங்க அருவாள. நன்றி.

  4. Anonymous February 11, 2007 at 7:29 am - Reply

    துலுக்கனுங்க எல்லாம் இந்து கோவில்களை இடுக்கும் போது ஒரு துலுக்க பெண் இந்து நெறிகளை பேசுவது நல்ல விழயம்.

  5. மஞ்சூர் ராசா February 11, 2007 at 10:13 am - Reply

    கொஞ்ச வருடங்களாகவே கோட்டம் சரியாக பராமறிக்கப்படாமல் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

    திமுகவால் உருவாக்கப்பட்ட இந்த கோட்டம் மீண்டும் பழைய நிலையை விரைவில் அடையவேண்டும்.

    சிலவிசயங்களில் எதிர்கட்சிகள் விரோதமனப்பான்மையுடன் செயல்படுவதை தவிர்த்தால் நாட்டுக்கு நல்லது.

  6. திரு February 11, 2007 at 11:41 am - Reply

    அரசும் மக்களும் கவனத்தில் கொள்ளவேண்டிய விசயம் இது.

    வள்ளுவருக்கு கோட்டம் அமைக்காமலே இருந்திருக்கலாம். சமூக பொறுப்பின்மையும், அலட்சியமும் தனிநபர் முதல் அரசு வரை குவிந்து கிடக்கிறது. குப்பைகளை பொது இடத்தில் கொட்டுவதே நடைமுறையாகி போனது நம்ம வாழ்க்கை :((

    //Anonymous மொழிந்தது…
    துலுக்கனுங்க எல்லாம் இந்து கோவில்களை இடுக்கும் போது ஒரு துலுக்க பெண் இந்து நெறிகளை பேசுவது நல்ல விழயம்.//

    அனானி இங்கும் மதவெறியா? தமிழ் அடையாளங்கள் இந்து என உங்களுக்கு சொல்லியது யாரோ?

  7. ஜெஸிலா February 12, 2007 at 6:18 am - Reply

    //சிலவிசயங்களில் எதிர்கட்சிகள் விரோதமனப்பான்மையுடன் செயல்படுவதை தவிர்த்தால் நாட்டுக்கு நல்லது.
    // ம்ம்ஹ்ம், அவுக வீட்டப்பத்தியே கவலப்படுறவங்க நாட்டப்பத்தியும் கொஞ்சம் கவலப்பட்டா நல்லாத்தான் இருக்கும்.

    //குப்பைகளை பொது இடத்தில் கொட்டுவதே நடைமுறையாகி போனது நம்ம வாழ்க்கை :((
    // ஆமாம் திரு அவர்களே அத கொஞ்சம் மக்கள் மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும். அனானிக்கு உங்க பதில் சும்ம ‘நச்சு’ன்னு இருக்கு நன்றிகள்.

  8. வவ்வால் September 13, 2007 at 3:21 am - Reply

    //பணமில்லையென்றால் கூட ‘அனுமதி இலவசம்’ என்றில்லாமல் நுழைவுக் கட்டணம் வைத்து அந்த வருமானத்தில் இன்னும் அழகாக வைத்திருக்கலாமே?//

    2 ரூபாய் நுழைவுக்கட்டணம் உண்டு ஆச்சே, ஒரு வேளை சுவர் ஏறிக்குதித்து விட்டீர்களோ :-))

    மலிவான கட்டணம் என்பதால் தேவையற்ற பலரும் உள்ளே போய் நாசம் செய்கிறார்கள்.பின் புறத்தில் கஞ்சா விற்பனை கூட நடக்கும். பலரும் சுவர் ஏறிக்குதித்து தான் உள்ளே போகிறார்கள்.

    சுத்தமாக வைத்து இருப்பதில் அரசுக்கும் , மக்களுக்கும் பொறுப்புண்டு!அரசும் அதிகம் காவலர்கள் போட்டு கண்காணிக்க வேண்டும்.

    அரங்குகளை வாடகைக்கு விடுவதால் வருமானம் வேறு வருகிறது. அரசு நல்ல நோக்கத்திற்காக குறைந்த கட்டணம் நிர்ணயித்துள்ளது, ஆனால் அதனை வணிக நிறுவனங்கள் தான் பயன்படுத்திக்கொள்கின்றன. அரசு அதிகாரிகளை “கவனித்து” இடம் பிடித்துக்கொள்வார்கள், சாதரணமாக ஒருவர் போய்க்கேட்டால் அலைய விடுவார்கள். அரசு அரங்கு கட்டணத்தை வணிக நோக்கத்திற்கான பயன்பாட்டிற்கு என்றால் உயர்த்த வேண்டும்.அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலேயே வள்ளுவர்கோட்டத்தை பராமரிக்கலாம்!

  9. ஜெஸிலா September 13, 2007 at 3:30 am - Reply

    //2 ரூபாய் நுழைவுக்கட்டணம் உண்டு ஆச்சே, ஒரு வேளை சுவர் ஏறிக்குதித்து விட்டீர்களோ :-))// அப்படியா? இல்லப்பா சுவர்ல ஏறிக்குதிக்கல பைக் பார்கிங்குக்கு 2 ரூபாய்னு நினைச்சுக்கிட்டேன் :-).
    //அரசும் அதிகம் காவலர்கள் போட்டு கண்காணிக்க வேண்டும்.

    அரசு அரங்கு கட்டணத்தை வணிக நோக்கத்திற்கான பயன்பாட்டிற்கு என்றால் உயர்த்த வேண்டும்.அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலேயே வள்ளுவர்கோட்டத்தை பராமரிக்கலாம்!// வேண்டும், செய்யலாம்னு நாம சொல்றோம் அவங்க காதுல எட்டுமா?

Leave A Comment Cancel reply