திட்டமிடாமல் கால் போன போக்கில் எகிப்தைவிட்டுத் தப்பி வந்து, மத்யன் நகரத்தில் பத்தாண்டுகள் இருந்துவிட்டு, கர்ப்பிணியான மனைவியுடன் அந்த நகரத்தைவிட்டுக் கிளம்பி தன் குடும்பத்தினரைப் பார்க்கும் ஆவலில் மீண்டும் எகிப்துக்குக் கிளம்பிவிடுகிறார்கள் மூஸா (அலை).
மூஸா (அலை) அவர்களுக்கு ஆடுகளையும் உணவையும் தந்து வழியனுப்பிய ஷுஐப் (அலை) ஆடு மேய்க்கும் தடியையும் தந்தார்கள். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, அப்படியே வந்து கொண்டிருந்தபோது மிகவும் இருட்டிவிட்டிருந்தது. நல்ல குளிராக இருந்த இரவில் குளிர்காய்வதற்கும், சமைப்பதற்கும் நெருப்பில்லை. எங்காவது நெருப்பு கிடைக்குமா என்று சுற்றிப் பார்த்தார்கள் மூஸா (அலை). தொலைவில் தூர்-சினாய் மலையில் வெளிச்சமாகத் தெரிந்தது. “நீங்கள் இங்கேயே இருங்கள் நான் அங்கு சென்று நெருப்பு வாங்கி வருகிறேன்” என்று சொல்லி மனைவியை அங்கு விட்டுவிட்டு. வெளிச்சம் தெரியும் பகுதிக்கு விரைந்தார்கள்.
அந்த இடத்திற்கு வந்ததும் “மூஸாவே!” என்று யாரோ அழைப்பதைக் கேட்டுப் பயந்தார்கள் மூஸா (அலை). அந்தக் குரல் தொடர்ந்தது “பயப்படாதீர்கள். நாம்தான் உம்முடைய இறைவன். நீங்கள் புனிதமான ‘துவா’ என்ற பள்ளத்தாக்கில் நிற்கிறீர்கள். உங்கள் காலணிகளைக் கழற்றிவிடுங்கள்” என்ற இறைவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உடனே தமது காலணிகளைக் கழற்றினார்கள் மூஸா (அலை). “நாம் உம்மை என் தூதராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த இறை அறிவிப்பை கவனமாகக் கேளுங்கள்” என்றான் இறைவன்.
மிகவும் பவ்யமாக, கவனமாகக் காது கொடுத்துக் கேட்டார்கள் மூஸா (அலை) “நான்தான் அல்லாஹ், என்னைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே, என்னையே நீங்கள் வழிபடுங்கள், என்னையே தியானிக்கும் பொருட்டு உங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் செய்த காரியங்களுக்கான தகுந்த பிரதிபலன்கள் அளிக்கப்படும். அதனை நம்பாது, தன் மன இச்சையைப் பின்பற்றுபவன் அழிந்து போவான். அந்த நியாயத் தீர்ப்பு நாள் எப்போது வரும் என்பதை என்னைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்” என்று அறிவிப்பை அருளினான் இறைவன்.
மூஸா (அலை) இன்னும் பதட்டத்திலிருந்து மீளாமல், செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். “மூஸாவே! உம்முடைய வலது கையில் என்ன இருக்கிறது?” என்று அல்லாஹ் கேட்டான். கொஞ்சம் இயல்புநிலைக்குத் திரும்பியவராக மூஸா (அலை) “இது என்னுடைய கைத்தடி. இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறித்துப் போடுவேன். இதன் மீது நான் சமயங்களில் சாய்ந்து கொள்ளவும் செய்வேன்.
இதை வைத்து சில பல தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வேன்” என்று தன் திக்குவாயால் திக்கித் திணறிச் சொன்னார்கள். “அதனைக் கீழே எறியும்” என்று இறைவன் கட்டளையிட்டான். கட்டளைக்குப் பணிந்து உடனே அதனைக் கீழே எறிந்தார்கள் மூஸா (அலை). அப்போது அந்தக் கைத்தடி ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பானது. அதைக் கண்டு பயந்து ஓடினார்கள் மூஸா (அலை). இறைவன் மீண்டும் “மூஸாவே, பயப்படாதீர்கள். அதைப் பிடியுங்கள். கண்டிப்பாக அது பழைய நிலைக்கே மாறிவிடும்” என்ற இறைவனின் வாக்கிற்கு கட்டுப்பட்டு, அதனை எடுத்தார்கள் உடனே அந்தப் பாம்பு பழைய நிலையான கைத்தடிக்கு மாறியது.
இன்னும் வேறு ஓர் அதிசயத்தை மூஸா (அலை) அவர்களுக்கு விட்டுச் சென்றான் இறைவன். மூஸா (அலை) தமது கையை விலாப்புறமாக அக்குளுக்குள் புகுத்தி வெளியில் எடுத்தால், ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக ஒளிரும் கையாக மாறியது. அது தன்னுடைய மற்றொரு அத்தாட்சி என்று அறிவித்தான் இறைவன். மேலும் எகிப்துக்குச் சென்று வரம்பு மீறிய ஃபிர்அவ்னிடம் ஓரிறைக் கொள்கையைப் போதிக்கும்படி சொன்னான். அல்லாஹ் கொடுத்த அற்புத சக்திகள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள உதவும் என்றும் இறைவன் கூறினான்.
எகிப்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு ஃபிர்அவ்னிடமிருந்து தப்பித்து வந்த மூஸா (அலை) அவர்களிடம், இறைவன் தம் இறை அறிவிப்பைத் தந்து இறைத்தூதராக்கி அற்புதங்களையும் தந்து, அல்லாஹ்வின் பாதுகாப்பை உறுதியளித்து ஃபிர்அவ்னிடமே அனுப்பி வைக்கிறான். அல்லாஹ் தான் நாடியவரை மன்னிப்பான், தான் நாடியவரை வேதனையும் செய்வான், இன்னும் தான் நாடியவருக்கு, தம் அருட்கொடையையும் விசாலமாக்குவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
Leave A Comment