நேர் வழியில் இருப்பவர்களுக்கே அமைதியும் வெற்றியும்

‘துவா’ என்ற பள்ளத்தாக்கில் இறைவன், தன் இறை அறிவிப்பை அருளி, மூஸா (அலை) அவர்களை இறைத்தூதராகத் தேர்ந்தெடுத்து,  எகிப்துக்குச் சென்று ஃபிர்அவ்னிடம் ஓரிறைக் கொள்கையைப் போதிக்கும்படி சொன்னான்.

மூஸா (அலை) அவர்கள் பயந்தார்கள். தன்னைக் கொலைகாரனென்று தேடிக் கொண்டு இருக்கும் இடத்தில் எப்படி தன்னை இறைத்தூதரென்று சொல்லிக் கொண்டு அதே எகிப்தில் நுழைவது என்று யோசித்தார்கள். மேலும் அவர் சரளமாகப் பேசக் கூடியவர் இல்லை. மற்றவர்கள் சரியாக விளங்கிக் கொள்ள முடியாதவாறு திக்கிப் பேசும் இயல்புடையவராக இருந்தார்கள் மூஸா (அலை). தான் தனியாக ஃபிர்அவ்னை எதிர்கொள்வதைக் காட்டிலும் தன்னுடன் தன் சகோதரன் ஹாரூன் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவராக இறைவனிடம் தனக்கு வேண்டியதைக் கேட்டார்கள்.

“இறைவனே! நான் பயப்படாமல் நடந்து கொள்ளும் அளவுக்கு என்னை உறுதிப்படுத்தி, எனக்கு எல்லாக் காரியங்களையும் எளிதாக்கி வைப்பாயாக. என்னால் சரளமாகப் பேச முடியாது, நான் சொல்வது மற்றவர்கள் விளங்கிக் கொள்ளும் அளவுக்கு என் நாக்கில் இருக்கும் திக்குவாய் முடிச்சை அவிழ்ப்பாயாக! எனக்கு உதவியாளராக என் உடன்பிறந்த சகோதரன் ஹாரூனை ஏற்படுத்தித் தருவாயாக” என்று பயபக்தியோடு கேட்டார்கள் மூஸா (அலை).

அதற்கு இறைவன் “பயப்படாமல் புறப்படுங்கள், நீங்கள் கேட்டவைகளை உங்களுக்குக் கொடுத்துவிட்டேன். நீங்கள் குழந்தையாக இருக்கும்போது வாக்குறுதி மாறாமல் உங்களைக் காத்தது பற்றி எண்ணிப் பாருங்கள். உங்களை நாமே பல சோதனைகள் கொண்டு சோதித்தோம். 

எனக்காகவே உம்மைத் தூதராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆகவே, நீங்களும் உங்கள் சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்லுங்கள். என்னைத் தியானித்துத் தொழுவதை நீங்கள் இருவரும் கைவிடாதீர்கள். வரம்பு மீறிவிட்ட ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நீங்கள் என்னுடைய தூதரென்று சொல்லுங்கள். அவனிடம் நீங்கள் இருவரும் சாந்தமாக நடந்து கொள்ளுங்கள். 

மென்மையான சொற்களைச் சொல்லுங்கள். அதனால் அவன் நல்லுபதேசம் பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம். பனூ இஸ்ராயீலர்களை வேதனைப்படுத்தாது நல்ல முறையில் நடந்து கொள்ளச் சொல்லுங்கள். நேர் வழியைப் பின்பற்றுகிறவருக்குத்தான் வாழ்க்கையில் அமைதியும் வெற்றியும் என்று சொல்லுங்கள்” என்றான் இறைவன்.

அதற்கு மூஸா (அலை) “எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான் அல்லது அவனால் எங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன்” என்றார்கள்.

“நீங்கள் இருவரும் பயப்பட வேண்டாம். நான் எல்லாவற்றையும் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் உங்களிருவருடனும் எப்போதும் இருப்பேன்” என்று இறைவன் அறிவித்ததைக் கேட்டு, மூஸா (அலை) அவர்களுக்குத் தெளிவு பிறந்தது. அவர்கள் இருதயம் படபடத்தது. தன்னுடன் பேசிய குரல் நின்றதும், சுற்றிலும் பார்த்துவிட்டு, தம் மனைவியை விட்டுவிட்டு வந்த இடத்திற்குத் திரும்பினார்கள். 

தன் மனைவியிடம் எல்லாவற்றையும் பகிர்ந்தார்கள். இறைவனின் கட்டளையை நிறைவேற்ற நாம் உடனே எகிப்துக்குப் புறப்பட வேண்டுமென்று அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினார்கள்.

By | 2017-05-07T06:54:51+00:00 June 1st, 2016|0 Comments

Leave A Comment