மூஸா (அலை) மற்றும் ஹாரூன் (அலை) செய்த பிரார்த்தனையால் இறைவன் ஃபிர்அவ்னின் கூட்டத்தினருக்கு ஒன்றன்பின் ஒன்றாக சோதனைகளை அனுப்பினான். கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும் அனுப்பி வைத்த இறைவனிடமே, ஃபிர்அவ்னின் கூட்டத்தினரின் பொய் வாக்குறுதியை நம்பி, அந்த வேதனைகளை நீக்கக் கோரினார்கள் மூஸா (அலை).
இறைவனும் நிரந்தரமாக வேதனைகளை முற்றிலும் நீக்கிவிடாமல் அவர்கள் திருந்த ஒரு சந்தர்ப்பம் தந்து, சிறு தவணை வரை அவர்களுக்கு வேதனை தராமல் விட்டு வைத்தான். திருந்தாத ஃபிர்அவ்னின் சமூகத்தினர் வழக்கம் போலவே பெருமையடித்துக் கொண்டும், பனூ இஸ்ராயீலர்களை இழிவாக நடத்திக் கொண்டும் இருந்தனர்.
ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் இப்படி இருக்க, பனூ இஸ்ராயீலர்களின் கலகத்தையும் மூஸா (அலை) சமாளிக்க வேண்டியிருந்தது. மூஸா (அலை) சமூகத்தைச் சேர்ந்த காரூன் என்பவர் பெரிய செல்வந்தராக இருந்தார். எல்லோராலும் அறியப்பட்டவராகப் பல அடிமைகளைக் கொண்டு வேலை ஏவுபவராக இருந்தார். பெரிய மாடமாளிகையில் தங்கியிருந்தார்.
அவரிடமிருந்த செல்வம் மொத்த பனூ இஸ்ராயீல் சமூகத்தை உயர்த்தும் அளவுக்கு நிறைந்திருந்தது. அவர் விலை உயர்ந்த உடுப்புகளை உடுத்திக் கொண்டு ஏழைகளுக்கு உதவாது பெருமையடித்துக் கொண்டிருப்பவராக இருந்தார். ஆதலால் மூஸா (அலை) அவர்களின் அறிவுரைகளை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாம் செல்வந்தராக இருப்பதற்குத் தன்னுடைய அறிவும் முயற்சியும் மட்டுமே காரணம் என்று சொல்லி கர்வத்துடன் நடந்து கொண்டார்.
அவருடைய கூட்டத்தார் அவரிடம் “பெருமைகொண்டு ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், ஆணவம் கொள்பவர்களை நேசிக்க மாட்டான். இறைவன் உனக்கு நல்லது செய்திருப்பதைப் போல் நீயும் நல்லதை செய். இந்த உலக வாழ்க்கையின் கவர்ச்சியில் உன்னைப் படைத்தவனை மறந்துவிடாதே, மறுமை வீட்டை மறந்துவிடாதே” என்று உபதேசித்தனர். அவர் அதைக் கேட்பதாக இல்லை.
சிலர் “காரூனுக்கு இறைவன் கொடுத்ததைப் போல் நமக்கும் கொடுக்கக்கூடாதா?” என்று ஏங்கினர்.
சிலர் “இறைநம்பிக்கையுடன் நல்ல காரியங்களைச் செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது” என்று கூறினர்.
மூஸா (அலை) ‘ஸகாத்’ அதாவது கட்டாயத் தர்மம் குறித்துக் காரூனுக்கு நினைவூட்டினார்கள். ஏழைகளுக்குத் தமது செல்வத்தில் இருந்து ஒரு பகுதியை தர்மம் செய்ய வேண்டும், ஸகாத் என்பது அனைத்து விசுவாசிகளின் மீதானக் கட்டாயக் கடமை என்று விவரித்தார்கள்.
காரூனுக்கு மூஸா (அலை) அவர்கள் சொன்னதில் நம்பிக்கையில்லை. தன்னை இறைவனுக்குப் பிடித்ததாலும், தான் வாழும் முறையை அங்கீகரித்ததாலுமே தமது செல்வத்தை இறைவன் அதிகரித்தானே தவிர ஏழைகளுக்கு உதவுவதற்கில்லை என்றார்.
மூஸா (அலை), காரூனுடைய எண்ணம் தவறானது. இறைவன் கொடுப்பதே நம்மைவிட எளியவருக்குக் கொடுப்பதற்காகத்தான். ஒரு பகுதியைக் கணக்கிட்டு கொடுத்துவிடு என்று சொன்னதைக் காரூன் கணக்கிட்டுப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இவ்வளவு பெரிய தொகையைப் பிரிய அவர் மனம் ஒப்பவில்லை.
காரூன் ஸகாத் கொடுக்க மறத்ததோடு, மூஸா (அலை) அவர்களுடைய சொந்த லாபத்திற்காகத்தான் இப்படியான ஸகாத் சட்டத்தைக் கண்டுபிடித்துள்ளார் என்று வதந்தியைப் பரப்பினார். லஞ்சம் கொடுத்து மூஸா (அலை) அவர்களின் பாதையிலிருந்து சிலரை விலக்கவும் செய்தார் காரூன்.
இறைவனின் கோபம் காரூன் மீது திரும்பியது. காரூனையும் அவன் வீட்டையும் பூமி விழுங்கிவிட்டது. அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்று இல்லாத வண்ணம் அந்த இடமே சூனியமானது.
இதைக் கண்ட மக்கள் “அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு வசதிகளைப் பெருக்கவும் செய்கிறான், சுருக்கவும் செய்கிறான். பெருமை அடிப்பவர்களை இறைவன் விரும்புவதில்லை. அல்லாஹ்வின் அருள் இல்லையென்றால் நம்மையும் இப்பூமி விழுங்கி இருக்கும்” என்று பேசிக் கொண்டனர்.
அல்லாஹ் பொறுமையாளர்களையும், நன்மை செய்பவர்களையுமே நேசிக்கின்றான்.
Leave A Comment