இறைவனின் புதிய திட்டம்

ஒவ்வொரு முறையும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் இறைவனின் வேதனையைச் சுவைக்கும் போது அவர்கள் மூஸா (அலை) அவர்களின் உதவியை நாடினர். 

வேதனைகள் நீங்கிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்வோம், பனூ இஸ்ராயீலர்களை அவருடன் அனுப்பிவிடுவோம் என்று வாக்குறுதி அளித்து, அதனை மீறினர். இப்படியாகக் கனமழை, வெட்டுக்கிளி, பேன்களின் சோதனைகளிலிருந்து மூஸா (அலை) அவர்களின் பிரார்த்தனையின் மூலம் காப்பாற்றப்பட்டனர்.

தவணை முறையில் சோதனையைத் தந்த இறைவன் தவளைகளை அனுப்பி வைத்தான். ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் வாழும் பகுதியில் ஆயிரக்கணக்கான தவளைகள் உலா வந்தன. ஃபிர்அவ்னின் மாளிகையின் அடியில் ஓடிக் கொண்டிருந்த நைல் நதியின் கால்வாய்களிலிருந்து தவளைகள் மாளிகைக்கே நேரடியாகப் படையெடுத்து வந்தன. தவளைகள் தெருவிலும் வீட்டிலும், அறையிலும், படுக்கையிலும் கட்டுப்பாடில்லாமல் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.

இதற்குத் தீர்வாக மறுபடியும் மூஸா (அலை) அவர்களை, ஃபிர்அவ்ன் கூட்டத்தினர் அழைத்துப் பிரார்த்திக்கச் செய்தனர். வேதனைகள் நீங்கினால் பனூ இஸ்ராயீலர்களை நல்ல முறையில் நடத்துவதாக வாக்குறுதி அளித்தனர். மூஸா (அலை) அவர்களும் வழக்கம் போல் அவர்களை நம்பினார்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிணி நீங்கியது. தவளைகள் நதிக்குத் திரும்பின. வழக்கம்போல் ஃபிர்அவ்ன் கூட்டத்தினர் தம் வாக்குறுதிக்கு மாறுசெய்தனர்.


அடுத்து வந்த சோதனை, பெருஞ்சோதனையாக அமைந்தது. ஒருநாள் காலையில் கண் விழித்த ஃபிர்அவ்னுக்குப் பருகப் பால் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்தக் குவளையில் ஃபிர்அவ்ன் பாலுக்குப் பதிலாக இரத்தத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். தம் வேலையாட்களை அழைத்துக் கடிந்தான். அவர்களுக்கும் பால் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட கோப்பையில் இரத்தம் இருப்பதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. 

மீண்டும் தண்ணீரைப் பருக எடுத்தபோது அதிலும் இரத்தம்தான் இருந்தது. “முட்டாள்களே! உங்கள் அனைவரையும் அழித்துவிடுவேன். பால், தண்ணீர் என்று எல்லாக் குவளைகளிலும் இரத்தம் கொண்டு வந்துள்ளீர்களே!?” என்று ஆத்திரமடைந்து ஓய்வதற்குள் அவன்அரண்மனைக்கு வெளியே அவனது சமூகத்தினர் வந்து குவிந்திருந்தனர்.

“அரசே! இப்படியான ஒரு சோதனையை நாங்கள் இதுவரை கண்டிருக்கவில்லை. தயவு செய்து இஸ்ராயீலர்களை நம் கட்டுபாட்டிலிருந்து விடுவித்து மூஸா (அலை) அவர்களுடன் அனுப்பிவிடலாம்” என்று குமுறியது கூடியிருந்த கூட்டம்.

இதைக் கேட்ட ஃபிர்அவ்னுக்குக் கோபம் கொப்பளித்தது. மக்கள் அறிவிழந்தவர்கள் போல் பேசுகிறார்களே, இப்போது என்ன நேர்ந்துவிட்டது என்று விசாரிக்க, கூடியிருந்த மக்கள் நகரத்தில் ஒரு சொட்டுத் தண்ணீருமில்லை எல்லாமே இரத்தமாகியுள்ளன என்று முறையிட்டனர்.

ஃபிர்அவ்னுக்கு, தனக்குத் தரப்பட்ட பாலும், தண்ணீரும் இரத்தமாக மாறி இருந்தது குறித்து விளங்கியது. மீண்டும் மூஸா (அலை) அவர்களும், ஹாரூன் (அலை) அவர்களும் அழைக்கப்பட்டனர்.

“இந்தப் பெருஞ்சோதனையிலிருந்து என்னையும் என் மக்களையும் காப்பாற்றிவிட்டால் கண்டிப்பாகப் பனூ இஸ்ராயீலர்களை எங்கள் கட்டுபாட்டிலிருந்து விடுவித்துவிடுவோம்” என்று ஃபிர்அவ்ன் வாக்குறுதி அளித்தான்.

இறைத்தூதர்கள் இருவரும் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். இறைவன் வேதனையை அவர்களைவிட்டு நீக்கினான்.

நகரமே இயல்புநிலைக்கு வந்த பிறகு ஃபிர்அவ்ன் இனி மூஸா (அலை) அவர்களை விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்தான். ஆனால் இறைவனின் திட்டம் வேறொன்றாக இருந்தது.

By | 2017-06-12T06:42:38+00:00 June 9th, 2016|0 Comments

Leave A Comment