கித்று (அலை) அறிவார்ந்தவர் என்று அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வந்தும், அவர் செய்த எந்தக் காரியத்திலும் எந்த நியாயத்தையும் பார்க்காததால் மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. எனவே அவர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தைப் பற்றியும் பொறுமையில்லாமல் கேள்விகள் கேட்டு வாக்குறுதி தவறினார்கள் மூஸா (அலை).
கித்று (அலை) விளக்கமளிக்கத் தொடங்கினார்கள் “நாம் பயணித்த அந்த மரக்கலத்தில் சிறிய ஓட்டை போட்டது நினைவிருக்கலாம். அந்த மரக்கலம் கடலில் வேலை செய்யும் சில ஏழைகளுக்குச் சொந்தமானது. அவர்களை ஆட்சி செய்யும் கொடுங்கோல் அரசன் பழுதில்லாத நல்ல நிலையில் உள்ள மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக ஏழை மக்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறான். ஆகையால் நான் அதில் ஓர் ஓட்டையிட்டுப் பழுதாக்கிவிட்டேன். அப்படிச் செய்ததால் அந்த ஏழைகளின் மரக்கலம் காப்பாற்றப்படும் என்பதற்காக” என்றார்கள்.
உடனே மூஸா (அலை) “இது தெரியாமல் நான் அவசரப்பட்டு உங்களைத் தவறாக நினைத்துவிட்டேன்” என்று சொன்னார்கள்.
கித்று (அலை) தொடர்ந்தார்கள், “அடுத்து, அந்தச் சிறுவனுடைய தாய்- தந்தையர் இருவரும் இறைநம்பிக்கையாளர்கள். ஆனால் அந்த சிறுவன் வாலிபனானால் அவ்விருவரையும் வழிகேட்டிலும், தவறான பாதையிலும் சேர்த்துவிடுவான் என்பதை நான் அறிந்ததால் அவனைக் கொன்றேன். அதுமட்டுமின்றி அவ்விருவருக்கும் தூய்மையான, பெற்றோரிடம் அன்பு செலுத்தக்கூடிய சிறந்த ஒரு மகனை இறைவன் இவனுக்குப் பதிலாகக் கொடுப்பான்” என்றார்கள் உறுதியாக.
உடனே மூஸா (அலை) “இறைவனின் கட்டளையில்லாமல் நீங்கள் அப்படிச் செய்திருக்க மாட்டீர்கள். அது தெரியாமல் நான் தவறாகப் பேசிவிட்டேன் மன்னித்து விடுங்கள்” என்றார்.
இறுதியாக, அந்தச் சுவரைப் பற்றிக் கூறினார்கள் கித்று (அலை) “அந்த ஊரில் இரு அநாதைச் சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய தந்தை நல்ல நேர்மையான மனிதராக இருந்தார். அவர் அவர்களுக்காக விட்டுச் சென்ற புதையல் அந்தச் சுவருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. சுவர் விழுந்துவிட்டால் அந்தப் புதையல் தவறான கைகளுக்குச் சென்றுவிடுமென்று நான் அந்தச் சுவரை சரி செய்தேன். அந்தச் சிறுவர்களுக்கு உரிய நேரத்தில் அந்தப் புதையல் கிடைக்கும்.
நான் செய்த ஒவ்வொரு காரியமும் இறைவன் நாடிய செயல். என் விருப்பு வெறுப்பின்படி நான் எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. இப்படிதான் பெரும்பாலானோர் இறைவனின் காரியத்தைப் பற்றி அறியாமல் பொறுமையிழந்து இருப்பார்கள்” என்று கூறினார்கள்.
மூஸா (அலை) அவர்களுக்குத் தெளிவு பிறந்தது. இறைவனின் ஒவ்வொரு செயலிலும் நமக்குப் புரியாத விளங்கிக்கொள்ள முடியாத நியாயம் இருக்கும். நாம் மேலோட்டமாகப் பார்த்து எதையுமே கணிக்கக்கூடாது. எல்லா விஷயங்களுக்கும் வேறு பக்கம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம் அவன் நமக்கு நன்மையை நாடுகிறான் என்று நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, பிரதிபலனை எதிர்பார்க்காமல் பிறருக்கு நன்மையைத் தயங்காமல் செய்ய வேண்டும் என்பதையும் மூஸா (அலை) கித்று (அலை) மூலம் புரிந்துக் கொண்டார்கள்.
மூஸா (அலை) பார்த்துக் கொண்டிருக்கும் போதே கித்று (அலை) தொலைதூரம் நடந்து சென்றுவிட்டார்கள்.
திருக்குர் ஆன் 18:79-82
Leave A Comment