ஆட்சியாளராகவும், நபியாகவும் இரு பொறுப்பில் இருந்த தாவூத் (அலை) அவர்களின் ஆட்சியைப் பலப்படுத்தி, அவருக்குப் போதிய ஞானத்தையும் தெளிவான விளக்கத்தையும் இறைவன் தந்திருந்தான்.
சுலைமான் (அலை) வளர்ந்து வாலிபரான பிறகு, தாவூத் (அலை) சுலைமான் (அலை) அவர்களுக்கு ஆட்சியில் சில பொறுப்புகளை வழங்கியிருந்தார்கள்.
ஒருநாள் இருவர் தாவூத் (அலை) அவர்களிடம் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கேட்டு வந்தனர். அப்போது சுலைமான் (அலை) அவர்களும் அந்த இடத்தில் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் “அவருடைய ஆடு என்னுடைய நிலத்தில் மேய்ந்து பயிர்களை நாசம் செய்துவிட்டது” என்று குற்றம்சாட்டினார். தாவூத் (அலை), மற்றவரிடம் “அவர் சொல்வது உண்மையா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம்” என்று பதிலளித்தார்.
உடனே தாவூத் (அலை), “அவர் இழந்த பயிர்களுக்குப் பதிலாக உன்னுடைய ஆட்டை அவருக்குத் தந்துவிடு” என்றார்கள்.
அதை மறுத்து, சுலைமான் (அலை) தன் தந்தையிடம் “இதற்கு நான் ஒரு தீர்வு சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள்.
தாவூத் (அலை), மகன் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவலுடன் அனுமதியளித்தார்கள்.
“ஆட்டின் உரிமையாளர், பாழாகிவிட்ட பயிர்கள் வளரும் வரை, மற்றவருடைய நிலத்தைப் பராமரிக்கட்டும். அதுவரை நிலத்தின் உரிமையாளர் ஆட்டின் பாலைப் பெற்றுக் கொள்ளட்டும். பயிர் வளர்ந்தவுடன், நிலத்தை நிலத்தின் உரிமையாளர் பெற்றுக் கொண்டு, ஆட்டை மீண்டும் ஆட்டின் உரிமையாளருக்குத் திரும்பத் தந்துவிடட்டும்” என்று இருவருக்கும் இழப்பு ஏற்படாதவாறு திருப்தியளிக்கும் வகையில் தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை ஏற்கும்படி அரசர் தாவூத் (அலை) அவர்களும் உத்தரவிட்டார்கள்.
தீர்வு காண வந்தவர்களும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்கள்.
சுலைமான் (அலை) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நேரம் வந்துவிட்டதாக தாவூத் (அலை) உணர்ந்தார்கள்.
திருக்குர்ஆன் 21:78-79, 38:30
Leave A Comment