இஸ்லாத்தைத் தழுவிய ஸபா நாட்டின் அரசி

ஸபாவின் அரசி பல்கீஸ், இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களைக் காண தனது சேனைகளுடன் புறப்பட்டு, சுலைமான் (அலை) அவர்களின் அரண்மனையை அடைந்தார்.

சேனைகள் வெளியில் காவலிருக்க, சுலைமான் (அலை) அரசியை மிகுந்த மரியாதையோடும் அன்போடும் வரவேற்று, அரசிக்காக அமைத்திருந்த மேடை அருகே அழைத்து வந்து, அரசியின் அரியணையைச் சுட்டிக்காட்டி, “தங்களின் அரியாசனம் இப்படி இருக்குமா?” என்று கேட்டார்.

அரசிக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை. தன் முன் இருப்பது தனது அரியாசனமென்று உணர்ந்தவர். அதனைப் பூட்டி காவலில் வைத்து வந்திருந்தது எப்படி இங்கே வந்திருக்க முடியும் என்று எண்ணியவராக, தமது அரியணை மிகவும் அழகாக மாற்றப்பட்டிருப்பதை இரசித்து வியந்தவராக, தடுமாறியபடி “ம்ம்… ஆமாம், இது என்னுடைய அரியணைப் போலுள்ளது” என்று கூறினார்.

இறைத்தூதர் சுலைமான் (அலை) சற்றும் தாமதிக்காமல் “இது உங்களுடைய அரியணைதான்” என்று கூறியதும் அரசி அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தார்.

“எப்படி இது உங்களுக்குச் சாத்தியமாயிற்று?. நான் இதனை மிகுந்த காவலுக்குட்படுத்தி இருந்தேனே?” என்று பிரமிப்பிலிருந்து மீளாதவராகக் கேட்டார்.

அதற்கு சுலைமான் (அலை), “உண்மையில் இது தங்களுடைய அரியாசனம்தான். உங்கள் நகரத்திலிருந்துதான் எடுத்து வரப்பட்டது. நீங்கள் விரும்பினால், அதற்கு மிக அருகில் சென்று பார்வையிடுங்களேன்” என்றார்கள்.

தண்ணீர் குளத்திற்குள் அரியணை இருப்பதாக எண்ணிய அரசி, தமது ஆடை நனைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆடையை அவருடைய கணுக்கால் தெரியும்படி தூக்கினார்.

அதற்கு சுலைமான் (அலை) புன்முறுவலுடன், “அது கண்ணாடிதானே தவிர தண்ணீரில்லை” என்று சொன்னார்கள்.

ஆடையைக் கீழிறக்கி அரியணைக்கு அருகில் வந்தவர், தனது அரியாசனத்தைச் சோதித்தவராக, உறுதி செய்த மகிழ்ச்சியில் “ஆமாம், இது என்னுடைய அரியணைதான்” என்று புன்னகையுதித்தார்

அரசர் சுலைமான் (அலை) “அமருங்கள்” என்று சொல்ல. அதில் ஏறி அமர்ந்தார் அரசி. அந்த நொடியில் அரசி சுலைமான் (அலை) ஓர் இறைத்தூதர் என்பதை உணர்ந்தார்கள். ஓர் இறைத்தூதரால் மட்டும்தான் யாரும் செய்ய இயலாத இத்தகைய அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்பதை உணர்ந்தார்கள். தாம் இத்தனை காலமாக நிலையில்லாத சூரியனை வணங்குவதைக் குறித்து வெட்கித் தலைகுனிந்தார்கள்.

உடனே தனது இரு கைகளையும் ஏந்தி உள்ளம் ஒன்றி மனதார பிரார்த்தனை செய்தார் “இறைவா, இந்நாள் வரை சூரியனை எங்கள் தெய்வமாகக் கருதி வணங்கி தவறிழைத்துவிட்டோம். என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும், என் மக்களையும் மன்னிப்பாயாக! இறைவன் ஒருவன் தவிர வேறில்லை என்று நம்பிக்கைக் கொண்டு உன்னிடம் சரணடைகிறேன். உலகிற்கெல்லாம் அதிபதியே உன்னையும், உன் தூதரையும் மனதார நம்புகிறேன்” என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

திருக்குர்ஆன் 27:40-47

By | 2017-03-25T14:18:35+00:00 July 28th, 2016|0 Comments

Leave A Comment