அல்லாஹ் படைத்த ஆதிமனிதன்

உலகத்திலுள்ள அனைத்தையும் நமக்காகப் படைத்த இறைவன், வானங்களின் பக்கம் திரும்பி அதனை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அதன் பிறகே இந்த உலகத்தின் முதல் மனிதரை படைத்தான்.

நபி ஆதம் (அலை) அவர்கள்தான் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர், எல்லா மதத்தாலும் நம்பப்படும் ஆதி மனிதர், அவரே முதல் நபியும். ஆதாம் என்றால் எபிரேய மொழியில் மண்ணால் ஆனவன் என்றும் பொருளாம். ஆம், இறைவன் ஆதமை ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் படைத்ததாக திருக்குர்ஆன் 15:26-இல் கூறப்பட்டுள்ளது.

அதென்ன ஓசை தரக்கூடிய மண் என்று நீங்கள் யோசிக்கலாம். இறைவன் தன் அற்புதக் கரங்களால் பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தானாம். அந்த மண் கூடுக்குள் ஒன்றுமில்லாமல் ஓசை தரக்கூடியதாக இருந்ததாம் அதைத்தான் வேதத்தில் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறான். அந்த மண்ணால் உருவாக்கிய மனிதரின் மீது இறைவன் தனது ஜீவசுவாசத்தை ஊதியதும் உயிர் பெற்றார் ஆதாம்.

விழித்த ஆதாம் ஒரு தும்மலைப் போட்டு ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொல்லி எழுந்திருக்கிறார். பூமி முழுவதிலிருந்தும் திரட்டப்பட்ட மண் என்பதாலேயே ஆதமின் மக்களான நமக்கு அந்தந்த பூமியின் நிறத்தின் தன்மைகளுக்கு ஏற்றாற்போல் சிலர் வெளிர்நிறத்திலும், சிலர் சிவப்பாகவும், சிலர் கறுப்பான தோற்றத்திலும், மண்ணின் தன்மைகளைப் போல் கடினமானவர், மென்மையானவர் என்று குணத்திலும் வேறுபடுகின்றார்கள் என்று அபூமூஸா (ரலி) அஹ்மத் நூலில் அறிவித்திருக்கிறார்.

ஆதமை இறைவன் பூமிக்கு தனது பிரதிநிதியாக அமைக்கப் போகிறதாக வானவர்களிடம் சொன்ன உடனேயே வானவர்கள் ‘பூமியில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவதற்காகவா அமைக்கப் போகிறாய்? உன்னைப் புகழ, துதிக்க, போற்ற நாங்கள் இருக்கிறோம்’ என்று சொன்னதற்கு இறைவன் ‘நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்’ என்று சொல்லிவிட்டான்.

ஆதமுக்கு இறைவனே தன்னால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறான். அதன்பின் அதனை வானவர்களுக்கு அதாவது மலக்குமார்களுக்கு விவரிக்குமாறு ஆதமைப் பணித்திருக்கிறான்.

இறைவன் தான் படைத்த மலக்குகளை, நபி ஆதம் (அலை) அவர்களுக்குச் சிரம் தாழ்த்த பணித்தான். அதன்படியே வானவர்களும் ஆதமுக்குச் சிரம் பணிந்து ஸுஜூது செய்தனர் – இப்லீஸை (சாத்தானை) தவிர.

“நெருப்பால் படைக்கப்பட்ட நான் மண்ணுக்கு மண்டியிடுவதா? முடியாது” என்று ஆணவம் கொண்டதோடு, “ஆதமுடைய மக்களைத் தவறான வழிக்கு அழைத்துச் சென்று அவர்களை நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்வதே என் வேலை” என்று முறுக்கிக் கொண்டு சென்றான் இப்லீஸ்.

இறைவன் ஆதமைத் தனித்துவிட மனமில்லாமல் அவனுடைய விலா எலும்பிலிருந்தே அவனுக்காக ஹவ்வாவை (ஏவாளை) படைத்தான். தூய்மையாக நன்மை தீமைகளை அறியாதவர்களாகப் படைக்கப்பட்டவர்களிடம் இறைவன் “இச்சோலையில் வசித்திருங்கள், நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் விரும்பியதையெல்லாம் தாராளமாகச் சாப்பிடுங்கள். ஆனால் ‘அந்த’ மரத்தை மட்டும் அணுகாதீர்கள்” என்று எச்சரித்தான். இப்லீஸ் சபதம் செய்தது போல் ஆதமை வழி கெடுக்க நினைத்து, மென்மையான குரலில் ஆதமிடம் “நீங்கள் அந்த மரத்தில் உள்ள கனியை உண்டால் இந்த சொர்க்கத்திலேயே தங்கிவிடுவீர்கள்” என்று ஆசை வார்த்தை காட்டினான்.

இறைவனின் கட்டளையை மாற்றமில்லாமல் அப்படியே செய்யக்கூடியவர்கள் வானவர்கள். ஆனால் மனிதனுக்கு இறைவன் அறிவைத் தந்திருக்கிறான். அந்த அறிவைக் கொண்டு யோசிக்காமல், பொய், ஏமாற்று வேலை, கள்ளம் என்று எதையுமே தெரியாத ஆதாம்- ஹவ்வா இறைவன் தடுத்திருந்ததையும் மறந்து அந்த நன்மை- தீமை அறியத் தரும் மரத்தின் கனியை சுவைத்து விட்டார்கள். உடனே அவர்கள் தங்களின் நிலையை அறிந்து கொண்டவர்களாக அங்கிருக்கும் இலைகளைக் கொண்டு தம்மை மறைத்துக் கொண்டார்கள்.

வழி தவறிய அவர்களை சொர்க்கத்தை விட்டு வெளியேற்றிவிட்டான் இறைவன். அவ்விருவரில் இருந்துதான் அநேக ஆண்களையும், பெண்களையும் வெளிப்படுத்தி உலகில் பரவச் செய்தான். மேலும்
இறைவன் எச்சரித்தது “உங்களில் சிலர் மற்றவருக்குப் பகைவராக இருப்பீர்கள். நீங்கள் பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தங்கிவிட்டு, வாழ்ந்து, உலக சுகம் அனுபவித்துவிட்டு அங்கேயே மரணமடைந்து பிறகு என்னால் மீண்டும் எழுப்பப்படுவீர்கள். இருக்கும் வரை இறைவனுக்குப் பயந்து உங்கள் இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் ஆதரியுங்கள், நன்மை புரியுங்கள்”.

இறைவன் தந்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் உலகப் பொருட்களின் மீது ஆசைப்பட்டு மயங்கி இறைவனுக்கே எதிராகப் பாவங்கள் செய்ததின் வினை. அதனாலேயே வாழ்நாள் முழுவதும் ஆதம்- ஹவ்வா இருவரும் தாம் செய்த பாவத்திற்காக இறைவனிடத்தில் மன்னிப்புக் கேட்டார்கள். மனிதன் தவறிழைத்தாலும் அத்தவறுக்காகப் பாவ மன்னிப்பு கேட்பதையே இறைவனும் விரும்புகிறான்.

நிச்சயமாக இறைவன் நம்மைக் கண்காணிப்பவனாகவே இருக்கிறான் என்று நம்பி, நாம் இழி செயல்களிலிருந்து விலகி இருப்போம். செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்போம். இறைவன் அருளிய திருமறையின் வழியில் சென்று ஈருலக நல்வாழ்வினைப் பெற்று, நன்மைகள் புரிவோம்.

(திருக்குர்ஆன் 2:29-38, 7:24-25, 4:1)

By | 2017-04-30T13:48:08+00:00 April 11th, 2016|0 Comments

Leave A Comment