இஸ்லாம் பற்றிய புரிதல்

இஸ்லாமைப் பற்றிப் பல தவறான புரிதல்கள் நம்மிடையே உள்ளன. இஸ்லாம் போர் மூலம் பரவியது என்றும், இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றும், முஸ்லிம்கள் பல திருமணம் செய்பவர்கள் என்றெல்லாம் பல்வேறு தவறான புரிதல்கள் கொண்டுள்ளனர்.

இஸ்லாம் வாள் மூலம் பரவியிருந்தால் இன்றைய காலகட்டத்திலும் இஸ்லாமுக்குத் திரும்புகிறவர்கள் இருக்கிறார்களே? எனவே, அதன் காரணம் என்னவென்று யோசிக்க வேண்டும்.

இஸ்லாம் என்றால் சரணடைதல் என்று நேரடி பொருள் இருந்தாலும் ‘அமைதி’ என்ற பொருள் தரும் ‘சலாம்’ என்ற வார்த்தையிலிருந்து தான் ‘இஸ்லாம்’ என்ற சொல்லே பிறந்தது. இதிலிருந்தே இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி, நபிகள் நாயகம் முகமது (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையைக் கண்டும், அவர்களைப் பின்பற்றிய நபித்தோழர்களின் வாழ்க்கையை வியந்தும் பலர் இஸ்லாம் மார்க்கத்திற்குத் திரும்பியது சரித்திரம்.

முகமது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்திருந்தாலும் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு, முஸ்லிம்களைப் பாதுகாப்பதே அவர்களது பிரதான பணியாக இருந்து வந்தது. பணத்தால், செல்வாக்கால், அச்சுறுத்தலால் இஸ்லாம் பரவியிருந்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியான சவூதி அரேபியா, பாலஸ்தீன் போன்ற வளைகுடா பகுதியோடு நின்றிருக்கும், மாறாக ஒட்டுமொத்த மத்திய ஆசியாவிலும் மிகக்குறுகிய காலத்தில் இஸ்லாம் மார்க்கம் பிரபலமடைந்து முகம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகும் சில ஆண்டுகளிலேயே ஐரோப்பா, கிழக்காசியாவெனப் பரவி தற்போது உலகின் இரண்டாவது பெரிய மார்க்கமாக இஸ்லாம் காலூன்றியுள்ளதென்றால் அதற்கு முக்கியக் காரணம் நமக்கு அருட்கொடையாகக் கிடைத்த இறைவேதமும் அதில் பொதிந்துள்ள அதிசயங்களும், நபிகளார் வாழ்வின் தொகுப்பான ஹதீஸ்களுமே.
அமைதியான மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் பொய் சொல்லாதவர்களாக, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுபவர்களாக, உறவினருக்கும், நண்பர்களுக்கும், அண்டையளாருக்கும் தீங்கு இழைக்காதவர்களாக, சிறிய உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவர்களாக, ஓர் இறைக் கொள்கையைக் கொண்டவர்களாக இருப்பதை வலியுறுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தை சரியாகப் பின்பற்றும் ஒரு முஸ்லிம் எப்படித் தீவிரவாதியாக இருக்க முடியும்?

ஒருவரை நாம் கெட்டவராக, தீவிரவாதியாகக் கருதும் போதே அவர் எந்த மதத்தையும் சேராதவராகி விடுகிறார். அவர் ஒரு மனிதன் என்ற தகுதியையே இழந்துவிடுகிறார், அப்படியிருக்க எப்படி பொதுப்படையாக நாம் இஸ்லாமிய தீவிரவாதி என்று முத்திரையிட முடியும்?

அதேபோல், முஸ்லிம்கள் பல திருமணம் செய்பவர்கள் என்கிறார்கள். உங்களுக்குத் தெரிந்து எத்தனை இஸ்லாமியர்கள் பல திருமணம் புரிந்தவர்களாக இருக்கிறார்கள்? இஸ்லாம் அனுமதித்தும் ஏன் எல்லா முஸ்லிம் ஆண்களும் பல திருமணங்களைச் செய்து கொள்வதில்லை என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முந்தைய கால கட்டங்களில் பலதார திருமணங்களுக்குத் தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்; இத்தனைதான் என்ற வரையறை என்பது இல்லாமலிருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். பெண்களைப் போகப் பொருள் போல் கருதுபவர்களாகவும் இருந்தார்கள். அப்படியான வேளையில்தான் நபிகளார் அதனைக் கண்டித்து, பெண்களை மதிக்க வேண்டுமென்று கற்பித்ததோடு, ஒரு திருமணத்திற்கு மேல் செய்பவர்கள் தங்கள் மனைவியர்களைச் சமமாக அதாவது அன்பு, நேரம், பணம் என்று எல்லாவிதத்திலும் சமமாக உங்களால் நீதி செலுத்த முடிந்தால் மட்டுமே திருமணம் முடிக்க வேண்டுமென்ற கடுமையான நிபந்தனையோடுதான் பலதார மணத்திற்கு வரையறையுடன் கூடிய அனுமதியை அளித்தார்கள். அனுமதிதானே தவிர கட்டாயமன்று.

திருகுர்ஆன் 4:3-ஆம் வசனத்தில் ‘சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே மணந்து கொள்ளுங்கள்’ என்று கூறுவதன் மூலம் ஒரேயொரு பெண்ணை மணந்து கொள்ளுங்கள்’  என்று அறிவுறுத்துகின்றது. மேலும் 4:129 ஆவது வசனத்தில் ‘சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் எவ்வளவு விரும்பினாலும் உங்களால் முடியாது’ என்று கூறுவதன் மூலம் ஒரு பெண்ணையே மணந்து கொள்வதை அதிகமதிகம் வலியுறுத்துகின்றது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

இப்படியான பல முன் முடிவுகளிலிருந்து முதலில் வெளியில் வந்தால் மட்டுமே இஸ்லாம் என்ற வழிகாட்டுதலை பின்பற்ற முடியும். எல்லாம் வல்லோன் நம் அனைவரையும் இஸ்லாத்தை சரியாக புரிந்து அதன்படி நடக்க வழிவகை செய்வானாக!

By | 2017-03-25T14:22:31+00:00 April 8th, 2016|0 Comments

Leave A Comment