இறைவேதத்தின் இலக்கியச் சிறப்பு

இறைவன் ஒவ்வொரு இறைத்தூதருக்கும் வெவ்வேறு ஆற்றல்களைத் தந்திருந்தான். இறுதித் தூதர் நபி முகமது (ஸல்) அவர்களுக்குத் தந்தது ‘திருக்குர்ஆனை’.

நபிகளாருக்கு ‘வஹி’யைத் (இறை அறிவிப்பு) தந்து மக்களை பிரமிக்க வைத்தான். காரணம் அந்தக் காலகட்டத்தில் கவிதைகளில் மக்கள் மனம் மயங்கியிருந்த தருணம். அந்த நேரத்தில் குர்ஆனின் இறை வசனங்களைக் கேட்கும் இலக்கியவாதிகள் வியந்தார்கள். படிப்பறிவில்லாத முகமது (ஸல்) எப்படி இப்படியான அழகிய மொழியில் வாழ்வில் வெற்றி பெற உதவும் கட்டளைகளையும், வாழ்ந்து மடிந்த மக்களைப் பற்றியும் சொல்ல முடிகிறது என்று ஆச்சர்யத்தில் இருந்தார்கள். இது இறைவனிடத்திலிருந்து வந்த செய்தி என்றால் யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால் அதே சமயம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. காரணம் அப்படியான இலக்கிய வடிவமாக குர்ஆன் இருந்தது.

“நீங்கள் உண்மையாளராக இருந்தால் உங்கள் கற்பனையால் பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள் ( குர்ஆன் 11:13)” என்று குர்-ஆனில் மனிதர்களை நோக்கி சவால் விடப்பட்டது.

இந்த சவாலை தேர்ந்த அரபி கவிஞர்களாலும் தோற்கடிக்க முடியவில்லை.முயன்று தோற்றார்கள். இன்றும் இந்த சவாலை முறியடிக்கும் சக்தி எவருக்கும் இல்லை என்பதே உண்மை.

அப்படியான குர்ஆனின் இறைவசனங்களின் மொழிப்பெயர்ப்பை படிக்கும் போது அரபி வடிவத்தில் இருக்கும் குர்ஆனின் அழகையும் நயத்தையும் நாம் தவறவிடுகிறோம் என்பதைப் பலர் அறிவதில்லை. குர்ஆனை எந்த மொழிகளிலும் முழுமையாக மொழிபெயர்க்க முடியாது என்பதே உண்மை.

எவ்வளவு பெரிய புலமை வாய்ந்த எழுத்தாளர்களும் தாம் சொல்ல வரும் விஷயத்திற்கு நடுவில் ஒரு வார்த்தைக்கு விளக்கம் தர நேர்ந்தால் அதனை அடைப்புக் குறியில் அல்லது அந்தப் பகுதிக்கு கீழே அடிக்குறிப்பில் தருவார்கள். ஆனால் கவிதை நடையில் இருக்கும் குர்ஆன், ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வரும்போது – வேறு ஒரு சொல்லுக்கு விரிவான விளக்கத்தை அதே இடத்தில் வேறு ஓசை நயத்தில் சொல்லிவிட்டு – மறுபடியும் முன்பிருந்த நயத்திற்குத் தொடர்கிறது.

விளக்கும்படியாகச் சொன்னால் ஓர் ஓசையில் ஒரு சூரா ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அதில் வரும் ஒரு வார்த்தையின் பொருளை வேறு நயத்தில் தந்து விளக்கிவிட்டு, பின்பு மீண்டும் சொல்லிக் கொண்டிருந்த ஓசைக்கே திரும்பிவிடுகிறது.

இதனை ‘கிராத்’ வடிவில் குர் ஆனை ஓதுபவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும் . திருக்குர்ஆன் ஒலி வடிவத்தில் இருப்பதாலேயே பலர் மனதில் அப்படியே பதிந்துவிடுகிறது.

இப்படியான சந்த நயத்துடன் பொருள் மாறாமல் ஒரே சூராவில் ஈரொலி வடிவத்தைக் கொண்டு வருவது இன்றுவரை எவராலும் முயன்றும் முடியாமல் போன விஷயம். குர்ஆனின் இந்த நடை பல இலக்கிய நயங்களை உள்ளடக்கியது. திருக்குர்ஆனின் இலக்கியச் சிறப்பிற்கு இது ஒரு சான்று மட்டுமே. குர்ஆனைப் போன்று வேறு ஒன்றை கொண்டுவர முடியாததற்கு இப்படிப் பலநூறு காரணங்கள் உண்டு, அதனால்தான்,

இந்த குர்ஆன் போன்றதைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்ற ஒன்றை கொண்டுவரமுடியாது (திருக்குர்ஆன் 17:88) என்கிறது திருக்குர்ஆன்.

By | 2017-03-25T14:22:31+00:00 April 6th, 2016|0 Comments

Leave A Comment