மீன் வயிற்றிலிருந்து வெளியேறிய யூனுஸ் (அலை)

யூனுஸ் (அலை) பொறுமை காக்காமல், அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமல் தம் சமூகத்தாரை விட்டு வெளியேறினார்கள் என்பதற்காக அவர்களுக்கு நெருக்கடியை அளித்தான் அல்லாஹ்.

யூனுஸ் (அலை) நைனுவாவைவிட்டு வெளியேறி கப்பலில் பயணிக்கும் போது, பலமான காற்றின் காரணமாக கப்பல் நடுக்கடலில் தடுமாற்றம் கண்டது. கப்பலை லேசாக்க வேண்டுமென்பதற்காக, கப்பலில் உள்ள பொருட்களைக் கடலில் வீசினர். ஒருவரையாவது கடலிலிருந்து வெளியேற்றினால்தான் மற்றவர்கள் தப்பிக்க முடியுமென்ற நிலை ஏற்பட்டது. சீட்டுக் குலுக்கிப் பார்த்ததில் யூனுஸ் (அலை) அவர்களின் பெயர் மும்முறையும் வந்ததால் அவர்களை கடலில் இருந்து வீசினார்கள்.

வீசப்பட்ட யூனுஸ் நபியை ஒரு பெரிய மீன் விழுங்கிவிட்டது. யூனூஸ் (அலை) அவர்களை உணவாக்கிக் கொள்ளக் கூடாதென்று அந்த மீனுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்.

மீனின் வயிற்றுக்குள் இருட்டில் இருந்ததால், தாம் இறந்து விட்டதாக யூனுஸ் (அலை) அவர்கள் தாமாகவே எண்ணிக் கொண்டார்கள். ஆனால்,  அந்நிலையிலும் அவர்கள் அல்லாஹ்வைத் துதித்த வண்ணம் இருந்தார்கள். பாவ மன்னிப்புக் கேட்டவர்களாக, அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக ஓதிக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் பிரார்த்தனையை இறைவன் மட்டும் செவிமடுக்கவில்லை, கடலிலிருந்த உயிரினங்களும் கேட்டன. கூடவே, அந்த உயிரினங்களும் சேர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து வணங்கின.

மீன் வயிற்றின் ஆழ்ந்த இருளிலிருந்து யூனுஸ் (அலை) “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ் அவர்களுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். யூனுஸ் (அலை) அவர்களை மன்னித்து, அந்த மீனை யூனுஸ் நபியை விடுவிக்கும்படி கட்டளையிட்டான். மீனும் கரையின் பக்கம் வந்து அவர்களை வயிற்றிலிருந்து விடுவித்தது.

மீன் வயிற்றிலிருந்த சூட்டின் காரணமாக யூனுஸ் (அலை) நோயுற்ற நிலையில் மீன் வயிற்றிலிருந்து வெளியேறி, வெட்ட வெளியில்  நிமிர்ந்து நிற்கவோ, உட்காரவோ முடியாத நிலையில் களைப்புடன் இருந்தார்கள்.

அல்லாஹ் அவர்கள் அருகில் ஒரு சுரைக் கொடியை முளைப்பித்து அவர்களுக்கு நிழல் கொடுக்கச் செய்தான். அந்த இடத்தில் அவர்களுக்கு உணவு கிடைக்கவும் அருள் புரிந்தான்.

பல நாட்களுக்குப் பிறகு உடல்நலம் சரியானதும்,  யூனுஸ் (அலை) நைனூவாவிற்குத் திரும்பியபோது மக்கள் இன்முகத்துடன் யூனுஸ் (அலை) அவர்களை வரவேற்றனர். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு யூனுஸ் (அலை) போதனைகளைச் செய்து அவர்களை நல்வழிப்படுத்தினார்கள். மக்களும் நம்பிக்கை கொண்டார்கள்.

அல்லாஹ் தாம் நாடியவரை நேர்வழியில் நடத்திச் செல்வான்.

திருக்குர்ஆன் 10:98, 21:87, 37:139-147

By | 2017-03-25T14:18:35+00:00 August 9th, 2016|0 Comments

Leave A Comment