யூனுஸ் (அலை) அவர்கள் நைனுவா என்னும் இடத்திற்கு நபியாக அனுப்பப்பட்டு, அந்த மக்கள் சிலைகளை வழிபடுவதைத் தடுக்கவும் அவர்களை நேர்வழிப்படுத்தவும் முயன்றார்கள். ஆனால் மக்கள் அவர்களை நிராகரித்தனர். யூனுஸ் (அலை) பொறுமை காக்காமல், அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமல் தம் சமூகத்தாரை விட்டு வெளியேறினார்கள். இதற்கிடையில் மக்கள் தங்களின் தவறுகளை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மன்றாடினர்.
இதை அறியாமல் யூனுஸ் (அலை) நைனுவாவைவிட்டு வெளியேறி கப்பலில் பயணிக்க ஏறினார்கள். அவர் பயணித்துக் கொண்டு இருக்கும் போது நடுக்கடலில் காற்று பலமாக வீசத் தொடங்கி, கப்பல் தடுமாற்றமடைந்தது. கப்பலை லேசாக்க வேண்டுமென்பதற்காக, கப்பலில் உள்ள பொருட்களை வீசினர். இருப்பினும் இன்னும் ஒருவரையாவது கடலிலிருந்து வெளியேற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருவர் இறங்கினால்தான் மற்றவர்கள் தப்பிக்க முடியுமென்ற நிலை ஏற்பட்டது.
அப்படி வெளியேற்றாவிட்டால் கப்பல் கவிழ்ந்துவிடுமென்று அஞ்சினார்கள். யாரை வெளியேற்றுவது என்று யோசித்து, அனைத்துப் பயணிகளின் பெயர்களையும் சீட்டில் எழுதி குலுக்கிப் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர கடலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்று ஒருமனதாகத் தீர்மானமானது.
சீட்டுக் குலுக்கிப் பார்த்ததில் யூனுஸ் (அலை) அவர்கள் பெயரே வந்தது. மறுபடியும் குலுக்கினர். மறுபடியும் அவர்களுடைய பெயரே வந்தது. மூன்றாவது முறை குலுக்கிய போதும் யூனுஸ் (அலை) பெயரே வந்ததால் அவர்கள் கடலில் இருந்து வீசப்பட்டார்கள்.
பொறுமை இழந்தவர்களை இறைவன் நெருக்கடிக்குள்ளாக்கவும் செய்வான், அவர்களை விடுவிக்கவும் செய்வான். ஆற்றல் மிக்கவன் அல்லாஹ் ஒருவனே.
திருக்குர்ஆன் 10:98, 21:87, 37:139-142
Leave A Comment