வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களான யூதர்களில் ஒரு பிரிவினர் அதனைப் புறக்கணித்து விலகிக் கொண்டாலும் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழப்படிந்து நடந்தனர். அதில் இம்ரான் என்பவரும் அவருடைய குடும்பத்தினரும் நல்லடியார்களாக இருந்தனர்.
இம்ரானின் மனைவி ஹன்னா கருவுற்றிருந்தபோது இறைவனிடம் பிரார்த்தித்தார், “என் இறைவா! என் கர்ப்பத்திலுள்ள குழந்தையை உனக்கு சேவை செய்ய முற்றிலும் அர்ப்பணிக்கிறேன்” என்று நேர்ச்சை செய்து கொண்டார்.
அந்தக் காலத்தில் ஆண் குழந்தையை இப்படி நேர்ச்சை செய்து இறைவழியில் நடக்கவும், இறைவனை வழிபடும் பள்ளியில் தங்கி இறைவனைத் தொழுது வணங்கவும் விட்டுவிடுவர். அந்த வழக்கத்தின்படியே ஹன்னாவும் பிரார்த்தனை செய்தார். ஹன்னா கருவுற்றிருந்தபோதே கணவர் இம்ரான் இறந்து விட்டார். ஹன்னாவும் பிள்ளையைப் பெற்றெடுத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி ஆண் குழந்தை பிறக்கவில்லை மாறாகப் பெண் குழந்தை பிறந்தது.
பெண் குழந்தையைப் பெற்றதும் ஹன்னா, “இறைவா! நீ எனக்குப் பெண் குழந்தையைத் தந்திருக்கிறாய். அவளுக்கு நான் ‘மர்யம்’ என்று பெயரிட்டுள்ளேன். அவளையும், அவள் சந்ததியையும் எல்லா வகையான தீங்குகளிலிருந்தும் காப்பாற்றுவாயாக” என்று பிரார்த்தித்தார்.
ஹன்னா நேர்ச்சை செய்திருந்தபடி அந்தக் குழந்தையை ‘பைத்துல் முகத்தஸு’க்கு எடுத்துச் சென்றார். ‘பைத்துல் முகத்தஸ்’ பள்ளியில் நம்பிக்கையாளர்கள் காலையிலும் மாலையிலும் தொழுகைகளை நடத்தி வந்தனர். பைத்துல் முகத்தஸின் பொறுப்பாளராக இருந்தது ஹன்னாவின் சகோதரியின் கணவர் ஜக்கரிய்யா (அலை).
பனீ இஸ்ராயீலர்களை நேர்வழிப்படுத்த ஜக்கரிய்யா (அலை) அவர்களை அல்லாஹ் நபியாக அனுப்பியிருந்தான். ஜக்கரிய்யா (அலை), நபி சுலைமான் (அலை) அவர்களின் சந்ததியில் வந்தவர்கள். தச்சு வேலை செய்து கொண்டே அதிகமான வணக்கத்திலும், மக்களுக்குப் போதனைகள் செய்வதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஜக்கரிய்யா (அலை) அவர்களிடம் ஹன்னா தன்னுடைய நேர்ச்சையைப் பற்றிச் சொல்லி தம் மகள் மர்யமை பைத்துல் முகத்தஸில் தங்கி, சேவை செய்ய அர்ப்பணிப்பதாக ஒப்படைக்கிறார். ஆனால் மர்யமிற்கான பொறுப்பை யார் ஏற்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.
அச்சத்தோடும் ஆசையோடும் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து நன்மை செய்வோருக்கு அவனுடைய அருள் மிகச் சமீபத்தில் இருக்கிறது.
திருக்குர்ஆன் 3:23, 3:33-36, 7:56
Leave A Comment