தாவூத் (அலை) அவர்களின் மறைவுக்கு முன்பாகவே சுலைமான் (அலை) அவர்களை, தாவூத் (அலை) அரசராக்கினார்கள். இறைவன் சுலைமான் (அலை) அவர்களுக்குக் கல்வி ஞானத்தை முழுமையாகக் கொடுத்து, மிகவும் நியாயமான நேர்மையான முறையில் நல்லாட்சி புரியவும் அருளினான். சுலைமான் (அலை) அவர்களை இறைவன் தன்னுடைய தூதராக்கினான்.
சுலைமான் (அலை), “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தான், மூமின்களான தன் நல்லடியார்களில் நம்மை மேன்மையாக்கினான்” என்று இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார்கள். சுலைமான் (அலை) அவர்களின் காலத்தில் குதிரைகள்தான் பயணத்தில் நடைமுறையாக இருந்தன. ஒருநாள் பயிற்சியளிக்கப்பட்ட வசீகரமான குதிரையை, சுலைமான் (அலை) அவர்கள் அதன் அழகை வர்ணித்தபடி தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். மாலை நேரத் தொழுகையையே அது மறக்கடித்துவிட்டது.
“சூரியன் திரைக்குள் மறைந்து விடும்வரை அதை அறியாமல், இறைவனை நினைப்பதை மறந்து இதன் மேல் அதிக அன்பு பாராட்டிவிட்டேன்” என்று தமது நிலையை உணர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். “என் இறைவா, என்னை மன்னித்தருள்வாயாக. எக்காலத்திலும் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நீயே மிகப் பெருங்கொடையாளி” என்று கேட்டார்கள்
மேலும் தனக்குப் பறவைகளின் மொழியைக் கற்றுக் கொடுக்கும்படியும், ஜின்களை வசப்படுத்தும் வித்தையையும், கடுமையாக வீசும் காற்றைக் கட்டுப்படுத்தம் ஆற்றலையும், இன்னும் தான் விரும்பியவற்றை இறைவன் நிறைவேற்றித் தருமாறு பிரார்த்தித்தார்கள்.
இறைவனும் சுலைமான் (அலை) அவர்களுக்கு, தம் அருள் கொடையை விசாலமாக்கினான்.
அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
திருக்குர் ஆன் 27:15:19. 21:79-81, 38:30-40
Leave A Comment