மூஸா (அலை) பல நாட்கள் மறைந்து மறைந்து பிரயாணம் செய்து பாலைவனத்தைக் கடந்து மத்யன் நகரத்தை வந்தடைந்தார்கள். அவர்களுக்கு மிகவும் களைப்பாகவும், பசியாகவும், தாகமாகவும் இருந்தது. சுடுமணலிலும், பாறைகளின் மீதும் நடந்து வந்ததால் தம் கால்கள் தேய்ந்துவிட்டதாக உணர்ந்தார்கள். அவர்களிடம் செருப்பு வாங்க பணமுமில்லை, பசியைத் தீர்த்துக் கொள்ள உணவுமில்லை.
மூஸா (அலை) ஒரு தண்ணீர்த் துறை அருகே வந்தபோது, பலர் தம் கால்நடைகளுக்குத் தண்ணீர்ப் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். அங்கே இரண்டு பெண்கள் தம் கால்நடைகளோடு ஒதுங்கி நின்றிருந்ததையும் கவனித்தார்கள். தாம் தாகமாக இருப்பதையும் மறந்து அந்தப் பெண்களிடம் சென்று ‘ஏதேனும் உதவி வேண்டுமா?’ என்று கேட்டார்கள். “நாங்கள் மற்ற மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர்க் கொடுத்து முடியட்டும் என்று காத்திருக்கிறோம். நாங்கள் ஆண்களைத் தள்ளிக் கொண்டு முந்த முடியாதல்லவா?” என்றார் அந்தப் பெண்களில் மூத்த சகோதரி.
“நீங்கள் ஏன் ஆடு மேய்க்கிறீர்கள். இது பெண்களுக்குக் கடினமான வேலையாயிற்றே?” என்று மூஸா (அலை) அப்பெண்களிடம் கேட்டார்கள். “எங்கள் தந்தை மிகவும் வயதானவர், உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்” என்று இருவரும் பதிலளித்தார்கள்.
மற்ற மேய்ப்பவர்கள் தண்ணீர் புகட்டிவிட்டு ஒரு பெரிய பாறையைக் கொண்டு தண்ணீர் ஊற்றின் வாயை அடைத்திருப்பதைக் கண்டார்கள். பத்து பேர் சேர்ந்து அகற்றக் கூடிய அந்தப் பாறையை, தம் நரம்புகள் புடைக்க, எல்லா பலத்தைக் கொண்டும் அகற்றி, அந்தப் பெண்களின் ஆடுகளுக்குத் தண்ணீர் தந்தார்கள். அவ்விரு சகோதரிகளும் நன்றி சொல்லிவிட்டு கால்நடையைக் கூட்டிக் கொண்டு நகர்ந்தார்கள்.
அவ்வூற்றில் தாமும் தண்ணீர் பருகிவிட்டு, ஒரு மர நிழலின் கீழ் உட்கார்ந்து, பசியோடும் சோர்வோடும் இருக்கும் மூஸா (அலை)இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். “என் இறைவா, நீ எனக்கு நல்லவற்றைத் தந்தருள்வாயாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன். எனக்கு வழிகாட்டுவாயாக”
தேவையுள்ளவர்களுக்கு இறைவன் தேவையானவற்றை சரியான நேரத்தில் தந்தருள்கிறான்.
Leave A Comment