அல்லாஹ் ஒருவனே துணை

யூசுப் (அலை) அவர்களின் சந்ததியினரான பனீ இஸ்ராயீலர்களின் ஆண் குழந்தைகளைக் கொன்று குவித்த ஃபிர்அவ்னின் வீட்டிலேயே வளர்ந்து ஆளாகி வாலிபத்தை அடைகிறார் மூஸா (அலை).

மூஸா (அலை) அவர்கள் பலசாலியாகவும், வலிமை மிக்கவராகவும், கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், ஞானமிக்கவராகவும் இருந்தார்கள். அவர் ஃபிர்அவ்னின் மகன் என்ற மரியாதையையும் நன்மதிப்பையும் பெற்றுவந்தாலும், மூஸா (அலை) அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது தாம் பனீ இஸ்ராயீலர்களைச் சேர்ந்தவரென்று.

ஒருநாள் மூஸா (அலை) அரண்மனையை விட்டு வெளியே நகரத்து வீதியில் நடந்து கொண்டிருந்த போது, ஓர் எகிப்தியரும்- பனீ இஸ்ராயீல் இனத்தைச் சேர்ந்த ஒருவரும் சண்டை போடுவதைக் கண்டார்கள். பனீ இஸ்ராயீல் இனத்தைச் சேர்ந்தவர் வழக்கம்போல எகிப்தியரிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தார். மூஸா (அலை) அவர்களைக் கண்டதும் அடிவாங்கிக் கொண்டிருந்த பனீ இஸ்ராயீலர், மூஸா (அலை) அவர்களை உதவிக்கு அழைத்தார். 

மூஸா (அலை) அவர்களும் இவர் அடிவாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததால் அவர்கள் வழக்கில் தலையிட்டுப் பேசிக் கொண்டிருந்தபோதே அந்த எகிப்தியர், தலையிடாதே போய்விடு என்பதாக மூஸா (அலை) அவர்களைத் தள்ளிவிட, கோபம் தலைக்கேறிய மூஸா (அலை) அந்த எகிப்தியரை ஒரு குத்துவிடுகிறார். ஒரே குத்தில் சுருண்டு விழுந்து மடிந்தார் அந்த எகிப்தியர்.

இதை எதிர்பாராத மூஸா (அலை) அவர்கள், ‘தான் வேண்டுமென்றே செய்யவில்லை, தவறு நடந்துவிட்டது, என்னை மன்னித்துவிடு இறைவா’ என்று அந்த இடத்திலேயே அல்லாஹ்விடம் மண்டியிட்டுக் கையேந்துகிறார்கள். அவருக்குள் சாந்தம் நிலவுகிறது. தான் இன்னும் நிதானமாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்று எண்ணியவர்களாக அங்கிருந்து உடனே கிளம்பிவிடுகிறார்கள்.

மறுநாள், நகரத்தின் வேறொரு வழியே நடந்து கொண்டிருந்தபோது முன்தினம் உதவி் கேட்ட அதே பனீ இஸ்ராயீலர் வேறொரு எகிப்தியருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். மூஸாவை கண்டதும் உதவிக்காகக் கூச்சலிட்டு அழைத்தார். அதற்கு மூஸா (அலை) “நீ பெரிய கலகக்காரனாக இருப்பாய்போலவே” என்று சொல்லிக் கொண்டு அவர்களை நெருங்கி, அந்த எகிப்தியரைப் பிடிக்க வரும்போது, அவர் தன்னையே தாக்க வருகிறார் என்று தவறாக எண்ணி அந்தப் பனீ இஸ்ராயீலர் “மூஸாவே! நேற்று ஒருவரைக் கொலை செய்தது போல் என்னையும் கொன்றுவிடலாம் என்று பார்க்கிறாயோ? சமாதானப்படுத்தி இணக்கம் ஏற்படுத்துபவராக நீர் தெரியவில்லை” என்று சொன்னார்.

அதைக் கேட்டு உறைந்து நின்றார் மூஸா (அலை). ஊர் மக்கள் எல்லாருக்கும் இவ்விஷயம் தெரிய வந்தது. பிர்அவ்னின் காதுகளுக்கும் இது எட்டியது. பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து ஒருவர் ஓடி வந்து “மூஸாவே! எகிப்தியர்களெல்லாம் சேர்ந்து உங்களை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார்கள். கொலைக்கான தண்டனை மரணம் ஆகையால் இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று கூறினார்.

இதைக் கேட்ட மூஸா (அலை) அவர்கள் பயந்தார்கள். மீண்டும் அரண்மனைக்குச் சென்று தன்னுடைய பயணத்திற்காகத் தயார்படுத்திக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. ஊர்விட்டு ஊர் செல்ல அவர்களிடம் எந்தக் கால்நடையுமில்லை. பிர்அவ்னிடமிருந்து தப்பித்து வெகுதூரம் செல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் மட்டும் ஓடினார்கள். அவர்கள் மத்யன் நகரத்துப் பக்கமாக விரைந்தார்கள்.

சூடான மணல் உள்ளங்கால்களை எரிக்க, பசியாற ஒரு புல்லுமில்லாத அந்தப் பாலைவன பயணத்தில் அவரது ஒரே துணை அல்லாஹ். அவர் பற்றிப்பிடித்து நடந்தது அவருடைய இறைநம்பிக்கையை மட்டும்.

By | 2017-05-07T07:26:10+00:00 May 26th, 2016|0 Comments

Leave A Comment