நாளை என்னவென்பதை இறைவனே அறிவான்

பல நாட்கள் நடந்து பயணம் செய்திருந்த களைப்பாலும், பசியின் சோர்வாலும் தளர்ந்திருந்த மூஸா (அலை) அவர்களுக்குத் தாகத்திற்குத் தண்ணீர் மட்டுமே கிடைத்தது.

மூஸா (அலை) அவர்களின் உதவியால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுத்துவிட்டு வழக்கத்தைவிட சீக்கிரம் வீடு திரும்பிய மகள்களிடம் காரணம் கேட்டார் அவர்களுடைய தந்தை. அந்த இரு பெண்களுடைய தந்தைதான் இறைத்தூதர் ஷுஐப் (அலை). நடந்தவற்றை விவரித்த மகள்களிடம், மூஸா (அலை) அவர்களை அழைத்து வரச் சொன்னார் ஷுஐப் (அலை).

தந்தை கேட்டுக் கொண்டதன் பேரில் இளைய மகள் மூஸா (அலை) இருக்கும் மரத்திற்கு அருகே வந்து நாணத்துடன் நின்றார். இறைவனிடம் உதவி வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த மூஸா (அலை) அவர்களிடம் “எங்களுக்காக நீங்கள் உதவியதற்கான கூலியைத் தர எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்றார் வெட்கப்பட்டுக் கொண்டே.

மூஸா (அலை), ஷுஐப் (அலை) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். மூஸா (அலை) பற்றி ஷுஐப் (அலை) விசாரித்தபோது, மூஸா (அலை) எதையும் மறைக்காமல் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை விவரித்தார்கள். “பயப்படாதீர்கள், நீங்கள் மிகவும் பாதுகாப்பான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள். அந்த நாட்டை விட்டு வெகுதூரம் வந்துவிட்டீர். இங்கு உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று கருணையின் வடிவாக ஆறுதல் சொன்னார்கள்.

மூஸா (அலை), அந்தப் பாறையை பலம்கொண்டு நகர்த்தியதைக் கண்ணுற்றதால் அவர் பலசாலி என்றும், தங்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டு உதவியதால் நம்பிக்கைக்குரியவர் என்றும் தெரிந்து கொண்ட மகள்களில் ஒருவர், தன் தந்தையிடம் மூஸா (அலை) அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளச் சொல்கிறார்.

அதைச் சரியென்று உணர்ந்த ஷுஐப் (அலை), மூஸா (அலை) அவர்களிடம் “உங்களைப் பார்த்தால் நல்லவராகத் தெரிகிறது. நீங்கள் விருப்பப்பட்டால் என்னிடமே வேலைக்குச் சேர்ந்து, எங்களுக்கு எட்டு ஆண்டுகள் உதவியாக இருந்தால் என்னுடைய மகள்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுப்பேன்” என்று வாக்குறுதியைத் தருகிறார்கள். மூஸாவும் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.

நாளை என்னவென்று தெரியாமல் இருந்த மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் பாதுகாப்பான இடத்தை அருளினான்.

By | 2017-05-07T07:17:53+00:00 May 28th, 2016|0 Comments

Leave A Comment