நன்மை செய்பவர்களின் கூலி வீணாவதில்லை

ஓர் இரவு எகிப்து நாட்டு மன்னருக்கு ஒரு விசித்திரக் கனவு வந்தது. அந்தக் கனவில் ஏதோ அர்த்தம் இருப்பதாக மன்னர் நம்பினார். ஆனால் என்னவென்று அவருக்குப் புலப்படவில்லை. அவர் தம் ஆலோசகர்கள், அமைச்சர்கள், மாந்திரீகர்கள் என்று எல்லாரையும் அழைத்துத் தம் கனவுக்கு விளக்கம் அளிக்கும்படி கேட்டார்.

மன்னர் அவரது கனவை அவையில் விளக்கினார் “நான் ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதைக் கண்டேன், அதில் ஏழு பசுமையான கதிர்களையும், காய்ந்து சாயும் ஏழு கதிர்களையும் தெளிவாக நான் கனவில் கண்டேன். படித்தவர்கள் என் கனவுக்கு விளக்கம் அளிக்கட்டும்” என்றார்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக விளக்கம் அளிக்க முற்பட்டனர். யாருடைய விளக்கமும் மன்னருக்கு திருப்தி அளிக்கக் கூடியதாக இல்லை. சிலர் அந்தக் கனவு மிகவும் குழப்பமானது, விவரிக்க முடியாதது என்றனர். அந்த நொடியில் சிறையிலிருந்து குற்றமற்றவர் என்று விடுதலையாகி மீண்டும் மன்னருக்கே மது ஊற்றிக் கொடுக்கும் பணியாளருக்கு தம்முடன் சிறையில் இருந்த யூசுப் (அலை) பற்றிய நினைவு வந்தது.

யூசுப் (அலை) கனவுகளுக்கு விளக்கம் அளிப்பவர் என்பதால் மன்னரிடம் உத்தரவு பெற்று யூசுப் (அலை) அவர்களைச் சிறைக்குச் சென்று சந்தித்தார்.

யூசுப் (அலை) அவர்களிடம் மன்னரின் கனவு பற்றிப் பணியாளர் விவரித்தார். “நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் நல்லவிதமாக விவசாயம் செய்வீர்கள். விளைச்சல் அமோகமாக இருக்கும். உங்கள் கால்நடைகளும் விருத்தியடைந்து மிகவும் செழிப்பாக இருப்பீர்கள். அதன் பின் வரும் ஏழு ஆண்டுகளில் பஞ்சம் ஏற்படும், விளைச்சல் இருக்காது, கால்நடைகள் அழியும், மக்கள் பசியில் இறப்பார்கள்” என்று விளக்கிய யூசுப் (அலை) தொடர்ந்து “இது குறித்து நான் ஒரு யோசனை சொல்லட்டுமா” என்றார்கள். “முதல் ஏழு ஆண்டுகளில் கிடைக்கும் விளைச்சலில் இருந்து தேவைக்குப் போக மிச்சத்தைச் சேமித்து வையுங்கள் அதனைப் பஞ்சத்தில் பயன்படுத்துங்கள். அதற்குப் பிறகு மீண்டும் நல்ல மழை வரும், அதில் விளையும் கனிகளை உண்டு சுகமாக வாழுங்கள்” என்று கனவின் விளக்கம் பற்றியும் அதற்கான யோசனையையும் சேர்த்தே சொன்னார்கள் யூசுப் (அலை).

இதனை அப்படியே சென்று அரசருக்குத் தெரிவித்தார் அந்தப் பணியாளர். அரசருக்கு அதுவே சரியான விளக்கமாகப்பட்டது. யூசுப் (அலை) அவர்களை உடனே சிறையிலிருந்து அவைக்கு அழைத்து வரும்படி மன்னர் உத்தரவிட்டார்.

இறைவன் சோதனைகளைத் தந்தாலும் தாம் நாடியவருக்கு அவனது அருளை கிடைக்கும்படி செய்கின்றான். நன்மை செய்பவர்களின் கூலியை அவன் வீணாக்குவதில்லை.

திருக்குர்ஆன் 12:43-50
By | 2017-03-25T14:20:33+00:00 May 10th, 2016|0 Comments

Leave A Comment