எகிப்து நாட்டு மன்னருடைய கனவிற்கு விளக்கம் அளித்தது யூசுப் (அலை) என்று அறிந்து கொண்ட மன்னர், யூசுப் (அலை) அவர்களை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். மன்னருடைய தூதுவன் யூசுப்பிடம் இச்செய்தியை மகிழ்ச்சியாகத் தெரிவிக்க, யூசுப் (அலை) சிறையிலிருந்து வெளியே வர மறுத்துவிட்டார். “என் மீது குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைக்கு வந்தேன். என் மீதான களங்கத்தை நிவர்த்தி செய்த பிறகே வெளியில் வருவேன்” என்று சொல்லி அரசரின் தூதுவனைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
இதைக் கேட்ட அரசருக்கு ஆச்சர்யமாகிவிட்டது. யூசுப் வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சரின் மனைவியையும் மற்ற பெண்களையும் விசாரணைக்கு உற்படுத்தினார். “யூசுப்பை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது என்ன நேர்ந்தது?” என்று விசாரிக்கப்பட்டபோது, அப்பெண்கள் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லிவிட்டனர். அமைச்சரின் மனைவி தம் தவறை ஒப்புக் கொண்டார் “உண்மை வெளிச்சத்திற்கு வந்தே தீரும். யூசுப்பை நான் தான் என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை” என்று பகிரங்கப்படுத்தினார்.
அமைச்சரின் மனைவியின் வாக்குமூலத்தைக் கேள்விப்பட்ட யூசுப் (அலை) இறைவனுக்கு நன்றி செலுத்தினார். அவ்விசாரணையை அவர் விரும்பியதன் காரணம், ‘தான் குற்றமற்றவர், தம் முதலாளிக்குத் தாம் எந்தத் துரோகமும் செய்யவில்லை’ என்பதை உலகிற்குப் புரிய வைப்பதோடு, அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெற அனுமதிப்பதில்லை என்பதையும் அனைவரும் அறிந்து கொள்வதற்காகவும்தான்.
யூசுப் (அலை) குற்றமற்றவர் என்று தீர்ப்பாகி விடுதலை செய்யப்பட்டார்.
“நான் என் மனது தூய்மையானது பரிசுத்தமானது என்று கூறவில்லை. ஏனென்றால் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியது இயல்புதான். ஆனால் இறைவன் எனக்கு அருள்புரிந்ததால் மட்டுமே என்னை நான் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது. இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” என்று யூசுப் (அலை) கூறினார்கள்.
விடுதலையான யூசுப் (அலை) அவர்களை அரசர் அழைத்துத் தன் நெருங்கிய ஆலோசகராக ஆக்கிக் கொள்ள முடிவெடுத்தார். யூசுப் (அலை) அவர்களைச் சந்தித்துப் பேசியபோது அவருடைய அறிவுத்திறனை அறிந்து கொண்ட அரசர் “இன்றிலிருந்து நீர் என்னிடம் பெரும் அந்துஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் உயர்ந்து நிற்கிறீர்” என்று வியந்து கூறினார். அதற்கு யூசுப் (அலை) “என்னை இந்தச் சாம்ராஜ்யத்தின் களஞ்சியத்திற்குப் பொறுப்பாளராக ஆக்கிவிடுங்கள். நான் நல்லபடியாக அறிவுபூர்வமாகப் பாதுகாக்கத் தெரிந்தவன்” என்றார்கள்.
அவருடைய விருப்பப்படியே அரசரும் யூசுப் (அலை) அவர்களைப் பொறுப்பில் அமர்த்தினார். இறைவன் யூசுப் (அலை) விரும்பிய விதத்தில் காரியங்களை நடைபெறச் செய்து, அந்நாட்டிற்கு நன்மைகள் செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தான்.

திருக்குர்ஆன் 12:50-57
Leave A Comment